சென்ற வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள என்-லாக் கணினி மையங்கள் சிலவற்றுக்குச் சென்றிருந்தேன். செங்குன்றத்தில் (அதாங்க... Red Hills) சுய உதவிக் குழு ஒன்றின் மையத்துக்கும் சென்றிருந்தேன்.
என்-லாக் கிராமப்புறங்களுக்கு இண்டெர்நெட் இணைப்புகளைக் கொண்டுவரும் பணியில் உள்ளது. ஒவ்வொரு பெரிய வட்டத்துக்கும் ஒரு உள்ளூர் சேவை அளிப்பவர் (Local Service Provider - LSP) இருக்கிறார். இவரிடமிருந்து சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ளவர்கள் வயர்லெஸ் மூலமான இணைப்பைப் பெற்று அந்த கிராம மக்களுக்கு சில சேவைகளை அளிக்கிறார்கள். இந்தக் கணினி மையத்துக்கு சிராக் (Chiraag) என்று பெயர்.
இதென்ன பெரிய விஷயம்? இப்பொழுதெல்லாம் பி.எஸ்.என்.எல் தான் மாதம் ரூ.500க்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தருகிறேன் என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் நகரங்களில் மட்டும்தான். அதுவும் நகரங்களின் வெளிப்புறங்களில் (சென்னை என்றால் குரோம்பேட்டிலோ, தாம்பரத்திலோ) இந்த பிராட்பேண்ட் இணைப்புகள் கிடைக்காது; அல்லது இன்னமும் சில வருடங்களாகலாம். சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலேயே மொபைல் சிக்னல்கள் முழுவதுமாகக் கிடைப்பதில்லை. பல கிராமங்களில் ஒரு தொலைபேசி இணைப்பு கூடக்கிடையாது.
சிராக் மையங்கள் இருக்கும் பல கிராமங்களில் அவர்கள் தொலைபேசியைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்கிறார் திருவள்ளூர் LSP வரதராஜன்.
ஆனால் சிராக்/என்-லாக் தொழில் கஷ்டமானதுதான். திருவள்ளூரிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் leased line மிகக்குறைந்த bandwidth உடையது. அதற்கான செலவோ அதிகம். இதனால் சிராக் மையத்தில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் உலாவுவது என்பது படு மோசமான அனுபவமாக இருக்கிறது. இதற்கான செலவும் நகரங்களில் உள்ள கணினி மையங்களைக் காட்டிலும் வெகு அதிகம். சென்னையில் இப்பொழுதெல்லாம் அதிவேக இணைய மையங்களில் ரூ. 10/- க்கு ஒரு மணிநேரம் உலாவலாம். ஆனால் சிராக் மணிக்கு ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்! இது தாங்காது. ரூ. 10 அல்லது 20க்குக் குறைக்க வேண்டும். அதேபோல bandwidthஐயும் அதிகரிக்க வேண்டும்.
அதற்கு மேலும் செய்யவேண்டும். சிராக், WiLL எனப்படும் wireless in the local loop தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இதன்வழியாக தொலைபேசி இணைப்புகளையும் கொடுக்கலாம். ஆனால் தொலைபேசி இணைப்புகளைக் கொடுக்க வேண்டுமானால் அதற்கென உரிமம் பெற்ற தொலைபேசி நிறுவனங்கள்தான் செய்யமுடியும். சில மாவட்டங்களில் - உதாரணமாக மயிலாடுதுறையில் - டாடா இண்டிகாம் வழியாக தொலைபேசி இணைப்புகளையும் சிராக் மையங்களில் வழங்குகிறார்களாம். ஆனால் டாடா இண்டிகாம், பார்த்தி (ஏர்டெல்) போன்றோர் தமிழகத்தில் (இந்தியாவில்) எல்லா இடங்களிலும் இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டும்தான் அனைத்து இடங்களிலும் உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனமோ என்-லாக் வழியாக தொலைபேசி இணைப்புகளை வழங்க விரும்புவதில்லை. அவர்களுக்கு எதையெடுத்தாலும் தாங்களே செய்யவேண்டும் (அதற்கு நூறாண்டுகள் ஆனாலும் பரவாயில்லை!).
இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
சில மையங்களில் சிறுவர்கள் கணினியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பத்துப் பதினைந்து சிறுவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, கம்ப்யூட்டரில் தடால் புடாலென்று ஆளைத் தூக்கி அடிக்கும் ஹீரோவை இயக்கிக் கொண்டிருந்தனர். இந்த ஹீரோவும் எதிரே நிற்கும் இருபது கெட்ட வில்லன்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்.
இப்படித் தொடங்கினாலும் இந்தச் சிறுவர்கள் வெகு சீக்கிரமே இணையத்தின் சூக்குமங்களைப் புரிந்துகொள்வார்கள். பிரவுசர் என்றால் என்ன என்று தடுமாற மாட்டார்கள். கூகிள் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மொழித் தகராறு இருக்கத்தான் செய்யும். தமிழில் விக்கிபீடியா, தரமான அகராதிகள் ஆகியனவும், பல்வேறு உருப்படியான இணையப்பக்கங்களும் எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதுதான் புரிகிறது!
நாள் ஒன்றுக்கு நம்மால் முடிந்த விஷயங்களை - உருப்படியானவற்றை - தமிழில் எழுதி இணையத்தில் சேமித்தால், எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைகள் அதைப் படிப்பார்கள்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
20 hours ago
//நாள் ஒன்றுக்கு நம்மால் முடிந்த விஷயங்களை - உருப்படியானவற்றை - தமிழில் எழுதி இணையத்தில் சேமித்தால், எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைகள் அதைப் படிப்பார்கள்//
ReplyDeleteunmai!
ரிலையன்ஸ் நிறுவனத்தினரை அணுகவில்லியா ? அவர்கள் பி எஸ் என் எல் அடுத்து எல்லா இடங்களிலும் வியாபித்து வருகிறார்களே ! ஒரு சிக்கல், அவர்களுக்கு இந்த திட்டம் பிடித்திருந்தால் என் லாஹ் நிறுவனத்தையே எடுத்துக் கொண்டு விடுவார்கள் :)
ReplyDeleteரிலையன்ஸ் இன்னமும் எல்லா இடங்களிலும் இல்லை. அவர்கள் வரும்போது பேண்ட்வித் விலையும் நிச்சயமாகக் குறையும். தொலைபேசி இணைப்புகளும் கிடைக்கலாம்.
ReplyDeleteஅதற்கும் காலம் நிறைய ஆகும் என்றுதான் தோன்றுகிறது.
நேற்று வெளியிடப்பட்ட அரசுக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: "இணையத் தொடர்பை கிராமங்களுக்கு விரிவாக்க அரசு ஓர் திட்டம் வகுத்துள்ளது. அதன்படி மூன்றாண்டுகளில் 40 சதவீத கிராமங்களில் இந்தத் தொடர்பு நிறைவேற்றப்படும். இப்போது நகரங்களில் அளிக்கப்படும் அகலக்கற்றை வசதியும் கிராமங்களுக்கு அளிக்கப்படும். இதில் தனியாரும் ஈடுபடுத்தப்படுவார்கள்."
ReplyDeleteபத்ரி இப்போதைக்கு ஆறுதல் அடையலாம்
மாலன்
பத்ரி, 50 ரூபாய் என்பது மிக அதிகம். நான் என் -லாகில் பேசியவரை 10 அல்லது 15 ரூபாய்கள் தான். இருப்பினும் விலை நிர்ணயம் செய்வது என்-லாகின் பிரச்சனை. ஆனால், தகவல் விசயங்களை பொறுத்த மட்டில் அது நம் அனைவரின் பிரச்சனை. எனக்குத்தெரிந்து தற்போது திசைகளில் செய்து வருவது போல், விஷயமுள்ள பதிவுகளை, தமிழ் வீக்கியாக மாற்ற முடியும் சாத்தியக்கூறுகளை காசியிடம் கேட்கலாம் என்று தோன்றுகிறது. ஏற்கனவே எழுதப்பட்டுள்ள விஷயங்களோடும், இனி எழுதும் விஷயங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஒரு நிரலியோ அல்லது மாற்று ஏற்பாடுகளோ இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கிராமத்து சிறுவர்களுக்கு பாடப்புத்தகம் தாண்டிய விரிவான வாசிப்பினை கொண்டு செல்ல இயலும்.
ReplyDelete