ஜெயித்தது இந்தியா ...
தொண்ணூறு ஓவர்களில் 327 ரன்கள் பெற வேண்டும், கையில் ஒன்பது விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு. அதுவும் ஐந்தாவது நாள் ஆடுகளத்தில். நிச்சயமாக இது முடியாத காரியம் என்று நேற்றே சொல்லியிருந்தேன்.
ஐந்தாம் நாள் காலை முதல் பந்திலேயே கும்ப்ளே ஒரு விக்கெட்டைப் பெற்றார். கும்ப்ளே வீசிய பந்து கால்திசையில் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. பந்து அளவு அதிகமாக, கிட்டத்தட்ட ஃபுல் டாஸ் ஆக வந்ததால், யூனுஸ் கான் முன்னால் வந்து தடுக்கவோ, அடிக்க்கவோ போனார். ஆனால் பந்தைத் தவற விட்டார். சற்றே தடுமாற்றத்துடன் பின்னால் திரும்புவதற்குள் தினேஷ் கார்த்திக் பந்தை அழகாகக் கைப்பற்றி விநாடியில் ஸ்டம்பைத் தட்டிவிட்டார். யூனுஸ் கான் 0, பாகிஸ்தான் 95/2. இப்படி முதல் பந்திலேயே விக்கெட்டைப் பெற்ற பின்னர் இந்தியப் பந்துவீச்சு நன்றாகப் பிரகாசித்தது. பாலாஜி ஒருமுனையிலும் கும்ப்ளே மறுமுனையிலும் அற்புதமாக வீசினர். ரன்கள் பெறும் வாய்ப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.
இன்ஸமாம்-உல்-ஹக் முன்னதாக ஆடவந்திருந்தார். இதுவரையில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த இன்ஸமாம் இந்த இன்னிங்ஸில் பந்தை சரியாகக் கணிக்கமுடியாமல் தடுமாறினார். கடைசியாக கும்ப்ளே வீசிய டாப் ஸ்பின்னரைத் தடுத்தாட, பந்து தரையில் விழுந்து, கால் காப்பில் பட்டு, உள்நோக்கித் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தட்டியது. இன்ஸமாம் 13, பாகிஸ்தான் 115/3. இந்த விக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் ஒரு கையை மறு கையால் குத்தி சந்தோஷத்தை வெளிக்காட்டியதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி நடு ஸ்டம்பில் விழுந்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இழுக்க, தவ்ஃபீக் உமர் சரியாக மாட்டிக்கொண்டார். மட்டையின் வெளி விளிம்பில் பட்டு இரண்டாம் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த சேவாக் கையில் எளிதான கேட்ச் ஆகப் போனது. உமர் 35, பாகிஸ்தான் 115/4.
நாளின் முதல் பந்தில் ஒரு விக்கெட். இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட். இனி இந்தியா எப்பொழுது ஜெயிக்கும், எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பது மட்டுமே சுவாரசியமாக விஷயங்களாக இருந்தன. ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. அசீம் கமால், யூசுஃப் யோஹானா இருவரும் மெதுவாக ரன்களை சேர்ப்பதும், அவுட்டாவதிலிருந்து தப்பிப்பதுமாக நேரத்தைக் கழித்தனர். உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் 174/4.
இடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன், கும்ப்ளே வீசிய அனைத்தையும் தடுத்து வந்த யோஹானா ஒரு டாப் ஸ்பின்னரில் மிக மெலிதான உரசல் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருந்த கவுதம் கம்பீரிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 22, பாகிஸ்தான் 178/5. அப்துல் ரஸாக் கும்ப்ளே வீசிய வேகமான பிளிப்பரில் ஏமாந்தார். பந்தும் சற்று உயரம் குறைந்து வந்தது. மட்டையைக் கீழே இறக்குவதற்கு முன்னால் ஸ்டம்ப்கள் பறந்தன. நிஜமாகவே பறந்தன. நடு ஸ்டம்ப் எகிறி இரண்டடி தள்ளி விழுந்தது. அந்த அளவுக்கு வேகமாக கும்ப்ளே பந்துவீசினார். ரஸாக் 6, பாகிஸ்தான் 188/6. இது கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட்.
ஆசீம் கமால் இப்பொழுது தோற்றுவிடுவோம் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் பொறுமையாக ஒரு முனையைக் காப்பதில் கவனத்தைச் செலுத்தினார். இப்பொழுது முதல்முறையாக ஹர்பஜன் தன் முழுத்திறமையைக் காட்டினார். கம்ரான் அக்மல் சென்ற டெஸ்டைக் காத்தவர். ஆனால் ஹர்பஜன் வீசிய ஓர் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ஆஃப் ஸ்பின்னர். அக்மல் அவற்றைத் தடுத்தாடினார். அடுத்த பந்து தூஸ்ரா. நேராக, வீசிய திசையிலேயே செல்வது. இந்தப் பந்தில் ஏமாந்தார். ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. அடுத்த இரண்டு பந்துகளும் மீண்டும் ஆஃப் பிரேக். இவற்றைத் தடுத்தாடினார். கடைசிப் பந்து மீண்டும் நேராகச் செல்லும் பந்து. முன்னால் வந்து தடுத்தாடியவர் முழுவதுமாக ஏமாந்தார். இம்முறை பந்து நடு ஸ்டம்பில் விழுந்தது. அக்மல் 7, பாகிஸ்தான் 203/7.
அசீம் கமால் தன் அரை சதத்தைப் பெற்றவுடன் கும்ப்ளே பந்துவீச்சில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். கமால் 50, பாகிஸ்தான் 214/8.
இங்கிருந்து தேநீர் இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் பந்திலேயே கும்ப்ளே மொஹம்மத் சாமியை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். சாமி 9, பாகிஸ்தான் 223/9. இது கும்ப்ளே இந்த டெஸ்டில் எடுக்கும் பத்தாவது விக்கெட். அதன்பின் ஏழு ஓவர்கள் கழித்து ஹர்பஜன் பந்துவீச்சில் கனேரியா பவுல்ட் ஆனார். பாகிஸ்தான் 226 ஆல் அவுட். இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. ராஹுல் திராவிட், தன் இரண்டு இன்னிங்ஸ் சதங்களினால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
அடுத்த டெஸ்ட் பெங்களூரில். இதைப் பார்க்க நேரில் செல்கிறேன்.
Anil Kumble should have been given the "Man of the Match" award for winning the match for India.
ReplyDeleteDravid did a great job , but I think Kumble deserved it .
திராவிட் தனது இன்னிங்ஸை விளையாடியிராவிட்டால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. முக்கியமாக இரண்டாம் இன்னிங்ஸ்.
ReplyDeleteலக்ஷ்மண் முகத்தில் அடிவாங்கிய நேரத்தில் திராவிடும் அவுட்டாகியிருந்தால் ..., கார்த்திக் கடைசி ஆசாமிகளுடன் சேர்ந்து 20-30 ரன்கள் பெற்றிருப்பார். இந்தியா 180-190க்குள் ஆல் அவுட் ஆகியிருக்கும். பாகிஸ்தானுக்கு 210 ரன்கள் தேவையாக இருந்திருக்கும்.
திராவிட் முதலில் இந்தியா தோல்வியுறாமல் இருக்கும்படிச் செய்தார். பின் வெற்றிக்கான அடிக்கல்லை நட்டார். கும்ப்ளே விக்கெட்டுகளைப் பெற்று வெற்றியைக் கொண்டுவந்தார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து அதிகபட்ச contribution திராவிடமிருந்துதான் வந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
வேறு வழியில்லை பத்ரி..நீங்கள் கும்ளேவைப் புகழ்ந்துதான் ஆகவேண்டும்
ReplyDelete-Purush
I will say Dinesh Kaarthick has made the difference. First with his batting and then with his stumping of younis khan in fifth day morning....
ReplyDeleteWell done " team " india!
// will say Dinesh Kaarthick has made the difference. //
ReplyDeleteமிகச் சரி. தினேஷ் கார்த்திக்கின் இன்னிங்ஸை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருந்தது. ( நாலாவது அம்ப்பயர் நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் மட்டும், கொஞ்சம் சிலாகித்துப் பேசினார்). திராவிடின் பேட்டிங் ஜொலித்ததே, கார்த்திக்கின் பார்டன்ர்ஷிப்பால் தான். 70 களில் இருந்த போது, கார்த்திக்கின் ஹ¥க் ஷாட்டில் அடித்த பவுண்டரியும். , எண்பத்து ஆறோ, ஏழோ இருந்த போது , அடித்த ரிவர்ஸ் ஸ்வீப்பும் பார்க்க சந்தோஷமாக இருந்தது. இன்னும் ஏழு ரன்கள் அடித்திருந்தால், ஹிந்துவின் முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டியவர். நீண்ட நாட்கள் கழித்து நல்ல மாட்ச் பார்த்ததில் திருப்தி. கார்த்திக், பெங்களூரில் எப்படி ஆடுகிறார் என்று பார்க்க வேண்டும்.
பிரகாஷ்: கார்த்திக் 93உடனே தி ஹிந்து முதல் பக்க்கத்தில் வந்தார். நீங்கள் சரியாகப் பார்க்கவில்லையா?
ReplyDeleteஅதிருக்கட்டும். நானும்தான் அவரை சிலாகித்து என் பதிவில் நான்காம் நாள் ரிப்போர்ட் எழுதும்போது எழுதியிருந்தேன். அதையும் கவனிக்கவில்லையா?
ஆனாலும் வரிசைப்படி, இந்த ஆட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் முக்கியமான செயல்களை ஆற்றியிருக்கிறார்கள்:
1. திராவிட் (இரண்டு சதங்கள் = 245 ரன்கள்)
2. கும்ப்ளே (பத்து விக்கெட்டுகள்)
3. கார்த்திக் (93 + 28 + சில டிஸ்மிஸ்ஸல்கள்)
4. டெண்டுல்கர் (இரண்டு அரை சதங்கள் = 104 ரன்கள்)
5. ஹர்பஜன் (5 விக்கெட்டுகள்)
6. சேவாக் (81 + 15)
7. பாலாஜி (3 விக்கெட்டுகள்)
போதுமா?