Thursday, March 24, 2005

அறுபத்து மூவர் 2005

நேற்று திசைகள் இயக்கம், சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு (அது ஏற்கெனவே முடிந்து போனாலும்) (பெண்) எழுத்தாளர்கள் மூவருடைய நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தை மயிலை பாரதீய வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பற்றி பிறகு...

மயிலாப்பூரில் நேற்று அறுபத்து மூவர் விழா. கூட்டம் அதிகம் இருக்கும் என்று எழுதியிருந்தேன். அது எப்பேற்பட்ட கூட்டம் என்பதை நேரில் சென்று பார்த்திருந்தால்தான் உங்களுக்குத் தெரியும்.

மயிலாப்பூர் லஸ் தாண்டியவுடனேயே இந்த இடத்தில் ஏதோ விசேஷம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எப்பொழுதும் பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் சாலைகளை மறித்து மக்கள் நடமாடுவதற்கு மட்டும் அனுமதி கொடுத்தனர்.

அன்னதானம் என்றால் நமக்கெல்லாம் தெரிந்தது ஏதோ கலந்த சாதம் தருவார்கள் என்பதுதான். ஆனால் மயிலை மக்கள் அதை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். சர்க்கரைப் பொங்கல், பார்லே ஜி பிஸ்கெட்டுகள், பலாச்சுளை, வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம், (தண்ணி மோரும் உண்டு!), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா? (அல்லது கிச்சடி என்று நினைக்கிறேன்), இன்னும் என்னென்னமோ அய்ட்டங்கள். கூடை கூடையாக மக்கள் வைத்துக்கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மக்கள் உணவுப் பதார்த்தங்களை வாங்கி ருசித்துக்கொண்டே, அடுத்த பந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

தெருவில் பொருள்களைப் பரப்பி பலர் கடைகள் வைத்திருந்தனர். பலூன்கள், கிலுகிலுப்பைகள், குதிக்கும் குட்டி நாய்கள், நெற்றியில் ஒட்ட விதவிதமான பொட்டுகள், சோப்புக் குமிழைக் கிளப்பும் ஊதுவான், ஊதுகுழல்கள்... இப்படி என்னென்னவோ விஷயங்கள் அங்கே விற்கப்பட்டன.

கிரிமினல்கள் ஜாக்கிரதை!

ஒவ்வொரு மாடவீதியிலும் உயரமான மேடையமைத்து அங்கு இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் கையில் பைனாகுலரை வைத்துக்கொண்டு தெருவில் கெட்ட நபர்கள் ஜேப்படி செய்கின்றனரா, கழுத்துச் சங்கிலியை அறுக்கின்றனரா என்று கவனித்துக்கொண்டிருந்தார். மற்றவர் கையில் மெகாபோனை வைத்துக்கொண்டு ஓயாது ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

ஆங்காங்கு, "கூட்டங்களில் செயினைத் திருடுபவர்கள் இவர்கள்" என்று நாமகரணம் சூட்டப்பட்டு பலரது உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதையெல்லாம் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. அவ்வப்போது காவலரும் தன் மெகாபோனில், சந்தேகப்படுமாறு யாராவது ஏதாவது செய்தால் அவர்களைப் பற்றி உடனே காவலர்களிடம் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.

சமீபத்தில் ஞானக்கூத்தன் அசோகமித்திரன்-50 கூட்டத்தில் பேசும்போது தஞ்சைப் பகுதிகளில் ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது ஒருவர் வீட்டைவிட்டு ஓடிப்போயிருப்பார்கள் என்று சொன்னார். அதைப்போல அறுபத்து மூவர் கூட்டத்துக்கு வந்திருக்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது கூட்டத்தில் தொலைந்துபோயிருப்பார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாட வீதியிலும் காணாமல் போனவர்கள் யாரை எங்கு வந்து சந்திக்கவேண்டும் என்று காவலர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர். கூட்டம் அப்படிப்பட்டது.

பிரமன் ஓட்டிய தேர்

நான்கு தலை பிரமன் ஓட்டிய தேர் (முந்தைய நாள் போலிருக்கிறது), ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது.அறுபத்து மூவரும் வலம் வர இத்தனை பெரிய தேர் கிடையாது. சிறு சப்பரங்கள்தான் என நினைக்கிறேன். அதுவும் கூட அறுபத்து மூன்று குட்டிச் சப்பரங்களா, இல்லை சிறு பல்லக்குகளா என்றும் தெரியவில்லை. அறுபத்து மூவரும் வலம் வருவது எப்பொழுது... எதையும் அருகில் இருந்து பார்க்க நேரமில்லை. திசைகள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, இரவி ரயில்வண்டியைப் பிடித்து பெங்களூர் வந்துவிட்டேன்.அடுத்த வருடம் இந்நிகழ்ச்சியின் பல படங்களோடும், விடியோவோடும் சந்திப்போம்!

2 comments:

 1. பத்ரி, ஒரு மினி சுற்றுலாவிற்கு சென்றுவந்த திருப்தி கிடைத்தது.

  ஒரு விண்ணப்பம். நான் படிக்கும் வலைதளங்கள் பகுதியில் பா.ரா வின் வலைப்பகுதியும் இருக்கிறது.
  அதை க்ளிக் செய்தால் அந்த வலைதளத்தில் ஒன்றும் இல்லையே!! நீங்கள் அதனை டெலீட் செய்யலாம் அல்லவா?

  ReplyDelete
 2. நன்றி பத்ரி. நேரிலே இல்லாத குறையை ஓரளவு தீர்த்தது.

  குழந்தைகள் தொலையாதிருக்க செயின் போட்டுக் கட்டியிழுத்துச் செல்வதாக 'முன்ஜாக்கிரதை முத்தண்ணா' கார்ட்டூனில் மதன் முன்பு எப்பொழுதோ வரைந்திருந்தார். கூட்டத்தில் தொலையாமலிருக்க அது ரொம்பப் பயனுள்ள உபாயம்.

  அமெரிக்காவில் குழந்தைகளுக்கு சங்கிலிகள் நிஜமாகவே விற்கிறார்கள். Madan was a real visionary ;-)

  ReplyDelete