Sunday, March 20, 2005

திராவிட் சாதனையில் ...

இந்தியா வெற்றியை நோக்கி...


எப்பொழுதெல்லாம் கவலைகள் வருகின்றனவோ அப்பொழுது பக்தர்கள் கடவுளை துணைக்கு அழைப்பதைப் போல இந்திய அணியினர் திராவிடை அழைக்கிறார்கள். அவரும் அருள் பாலிக்கிறார்.

மூன்றாம் நாள் இறுதியில் டெண்டுல்கர் தவறாக அவுட் கொடுக்கப்பட்டதும் ஆட்டம் சமநிலைக்குத் திரும்பியது. ஆனால் நான்காவது நாள் காலை மொஹம்மத் சாமியின் பந்துவீச்சால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கங்குலி எழும்பி வரும் சாமியின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளாமல் புல் செய்யப்போய் பந்தை வானில் தூக்கி அடித்தார். பந்துவீச்சாளரே ஓடிச்சென்று அதைப் பிடிக்க இந்தியா 154/4, கங்குலி 12. தொடர்ந்து சாமி அளவு குறைந்த பந்துகளாகவே வீசிக்கொண்டிருந்தார். ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் பந்துகள் ஒரே சீராக எழும்பவில்லை. ஒரே இடத்தில் குத்திய பந்துகள் சில தலைக்கு மேலும், சில கழுத்தளவிலும், சில மார்பளவிலும் எழும்பின. புதிதாக உள்ளே வந்த லக்ஷ்மண் எதிர்கொண்ட ஒரு பந்து எதிர்பார்த்ததை விட எழும்பி மட்டைக்கு மேலாக வந்து ஹெல்மெட்டின் கிரில் மீது ஓங்கி அடித்தது. ஹெல்மெட்டின் உள்பகுதி இடது கண்ணின் மீது அழுத்திக் குத்தியதால் லக்ஷ்மண் சில நிமிடங்களுக்கு அதிர்ந்து போய்விட்டார். இடதுகண் வீங்கி விட்டது. உடனே களத்தை விட்டு வெளியே செல்லவேண்டியதாகி விட்டது. அவரது எண்ணிக்கை அப்பொழுது 2. இந்தியாவோ 156/4.

உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாட வேண்டிய கட்டாயம். சாமி நெருப்பைக் கக்கிக்கொண்டு வீசுகிறார். வெளியே பார்த்திவ் படேல் ரெடியாக உள்ளே நுழையக் காத்திருக்கிறார். விக்கெட் போனால் பாகிஸ்தான் ஆட்டத்தை நிச்சயமாக ஜெயித்து விடும். சாமி தனக்கு வீசிய முதல் பந்தை அற்புதமாக ஸ்கொயர் டிரைவ் செய்து நான்கைப் பெறுகிறார். ஆனால் தொடர்ந்து ஒரு பக்கம் சாமி, மறுபக்கம் தனீஷ் கனேரியா வீச்சை சமாளிக்க வேண்டும்.

திராவிடும் சாமியின் பந்துவீச்சில் வெகுவாகத் தடுமாறினார். பின் தற்போதைய ஒரே நோக்கம் சாமியை பந்துவீச்சிலிருந்து விடுவிக்க வைப்பது என்று அவரது பந்துகளைத் தடுத்தாடத் தொடங்கினார். கனேரியாவின் பந்துவீச்சில் ரன்கள் எளிதாகக் கிடைத்தன. சாமி ஒரு மணிநேரம் ஓயாமல் வீசியபின் ஓய்வெடுத்துக் கொண்டார். அப்பொழுதுதான் இந்தியாவின் மறுமலர்ச்சி தொடங்கியது. தினேஷ் கார்த்திக்கின் ஆக்ரோஷமான ரன் சேகரிப்பு திராவிடுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ரன்கள் வேகமாக வந்தன. உணவு இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.

இந்தியா 350 ரன்கள் முன்னிலை வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கார்த்திக்-திராவிட் ஜோடி மிக எளிதாக ரன்களைப் பெற்றது. எனவே நான்காவது நாள் அன்று கடைசி ஒரு மணிநேரத்தை மட்டும் வைத்துவிட்டு டிக்ளேர் செய்யலாம் என்று கங்குலி எதிர்பார்த்திருக்கலாம். ஒவ்வொரு ரன்னாகச் சேர்த்து திராவிட் மதியம் தனது சதத்தைப் பெற்றார். எத்தனையோ ஆட்டங்களை இந்தியாவுக்காக திராவிட் வென்று தந்துள்ளார். இந்த மேட்சில் இந்தியா ஜெயித்தால் அதற்கும் திராவிட்தான் முக்கியக் காரணமாக இருப்பார். சதத்துக்குப் பிறகு வேகமாக ரன்கள் சேர்க்க முயற்சி செய்து கனேரியா பந்துவீச்சில் லாங் ஆஃப் அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் 135. இந்தியா 321/5. கார்த்திக்கும், திராவிடும் சேர்ந்து 165 ரன்கள் சேர்த்தனர். இடது கண்ணை இடுக்கிக் கொண்டே லக்ஷ்மண் விளையாட வந்தார். இப்பொழுது வேக வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். கார்த்திக் கனேரியாவை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து 90களுக்கு வந்தார். ஆனால் அதே ஓவரில் கால்களுக்கு பின்னால் பவுல்ட் ஆனார். கார்த்திக் 93, இந்தியா 331/6. அத்துடன் தேநீர் இடைவேளை.

இடைவேளைக்குப் பின்னர் இந்தியா ஒரு மணிநேரம் விளையாட முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும். லக்ஷ்மண் சில ரன்களைப் பெற்றார். ஆனால் கனேரியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். லக்ஷ்மண் 24, இந்தியா 377/7. அடுத்து உள்ளே வந்த ஹர்பஜன் சிங், பாலாஜி இருவரும் ரன்கள் பெறாமலேயே ஆட்டமிழந்தனர். ஆனால் இர்ஃபான் பதானும் கும்ப்ளேயும் ரன்களைச் சேர்த்தனர். பத்தாவது விக்கெட்டுக்காக இருவரும் 29 ரன்களைப் பெற்றனர். கடைசி ஒரு மணிநேரம் இருக்கும்போது கங்குலி டிக்ளேர் செய்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரும் 407. ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு.

பாகிஸ்தான் வெற்றி பெற ஒரு நாளும் (குறைந்தது 90 ஓவர்கள்) 20 ஓவர்களும் இருந்தன. தேவை 422 ரன்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே தடாலடியாக ஆரம்பித்தார். நல்ல பந்துகளும் கெட்ட பந்துகளும் சமமாகவே உதை வாங்கின. அரை மணி நேரத்துக்குள் இந்தியாவுக்கு குலை நடுங்கிப் போயிருக்க வேண்டும். ஓவருக்கு 5-6 ரன்கள் வேகத்தில் பாகிஸ்தான் ரன்களைச் சேகரித்தது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் 100 ரன்களைப் பெற்றுவிடும் போலிருந்தது. விக்கெட்டோ விழுவதைப் போலத் தெரியவில்லை. ஆனால் ஆட்டத்தில் கடைசி நிமிடங்களில் கும்ப்ளே கால்திசையில் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆனதால் ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றிருந்த கங்குலி கையில் எளிதான கேட்ச் கிடைத்தது. அவருக்கும் நிம்மதி, இந்தியாவுக்கும் நிம்மதி. அதற்குள்ளாக ஆஃப்ரீதி 59 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். 9 நான்குகள், 2 ஆறுகள்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும். இன்னமும் 327 ரன்கள் தேவை. ஆஃப்ரீதியைப் போல் வேகமாக ரன்கள் எடுக்க யாரும் இல்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக - கொஞ்சமாவது - இருக்கும். பாலாஜி - ஆஃப்ரீதியால் கடுமையாக தண்டிக்கப்பட்டவர் - நிச்சயமாகத் திரும்பி வந்து நன்றாக வீசுவார். பாகிஸ்தானின் பேட்டிங் நீண்டது. எட்டாவது இடத்தில் விளையாடும் கம்ரான் அக்மல் வரை நன்றாக விளையாடுவார்கள். ஆனால் 90 ஓவர்களில் 327 ரன்கள் பெறுவார்களா, அத்தனை விக்கெட்டுகளையும் தக்க வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. டிராவும் நடைபெறலாம்... ஆனால் சாத்தியங்கள் அத்தனையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளன என்று எனக்குத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment