Saturday, March 19, 2005

இந்தியா டிவியின் அத்துமீறல்கள்

கடந்த சில தினங்களாக இந்தியா டிவி என்னும் தொலைக்காட்சி சானல் சில பலான விஷயங்களை, புலனாய்வுச் செய்திகள் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது.

ரஜத் ஷர்மா என்று முன்னர் 'ஆப் கி அதாலத்' என்னும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர்தான் இந்தியா டிவியின் முக்கிய எடிட்டர் என்று கேள்விப்படுகிறேன்.

ஜார்க்கண்ட், பிஹார், ஹரியானா தேர்தல்கள் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று எல்லாத் தொலைக்காட்சிகளும் அந்த முடிவுகளைப் பற்றி அலசிக்கொண்டிருக்கும்போது, இந்தியா டிவி மட்டும் ரகசிய கேமராக்களினால் பிடிக்கப்பட்ட சில படங்களைக் காட்டினராம். (எனக்கு இந்த சானல் கிடைப்பதில்லை.) அதில் தற்போதைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம் மனைவியல்லாத பிறருடன் உடலுறவு கொள்வதைப் போன்ற காட்சிகள் இருந்தனவாம். இதை முன்வைத்து நம் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படித் தரங்கெட்டு நடந்துகொள்கின்றனர் என்பதை முன்வைத்து அந்த சானலில் விவாதங்கள் நடந்தனவாம். இந்த சானலின் நிருபர்கள் தெருவில் போகும் மக்களைப் பிடித்து அவர்களிடம் கருத்து கேட்டனர். மக்களும் நேரடியாகவும், மொபைல் குறுஞ்செய்திகள் மூலமும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், ஆணுறுப்பை அறுக்க வேண்டும் போன்ற காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். [இதுபற்றி தி ஹிந்துவில் செவந்தி நினான் எழுதியுள்ள பத்தி.]

இந்த சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் சிலரின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்தியுள்ளது இந்த சானல். ஷக்தி கபூர் என்னும் ஹிந்தி வில்லன் நடிகர். அவரை சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்பது போல இந்தியா டிவி பெண் நிருபர் ஒருவர் அணுகியுள்ளார். ரகசிய கேமரா இதைப் படம் பிடிக்கிறது. கபூர் அந்தப் பெண்ணைப் படுக்கைக்கு வருமாறு அழைக்கிறார். அத்துடன் எந்தெந்த பாலிவுட் நடிகைகள் யார் யாருடன் casting couchல் கிடந்தார்கள்; அதனால் எப்படி வாழ்க்கையில் முன்னேறினார்கள் என்ற உபதேசம் வேறு. [ஐஷ்வர்யா ராய், பிரீத்தி ஜிந்தா என்று யார் பெயரையும் விட்டுவைக்கவில்லை.]

இந்தியா டிவி அதையும் ஒளிபரப்பியது. [பிரகாஷ் தன் வலைப்பதிவில் இதை மிகவும் சிலாகித்து "ம், போடு சாத்து!" என்று புகழ்ந்துள்ளார்.]

அதைத்தொடர்ந்து இன்னமும் பல புள்ளிகள் இந்தியா டிவியின் வலையில் சிக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தெஹெல்கா இணையத்தளம் [இப்பொழுது வாரமொருமுறை டாப்லாய்ட் ஆக மலர்ந்திருக்கிறது.] சில விவகாரங்களில் ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தியிருந்தது. அதில் ஒன்று கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பானது. மனோஜ் பிரபாகரைப் பயன்படுத்தி அவர் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களுடன் பேசும்போது படம் பிடித்து அந்த டிரான்ஸ்கிரிப்ட்களை தெஹெல்கா வெளியிட்டது. அதைப்போலவே ராணுவத்தில் நடக்கும் சில ஊழல்களை அம்பலப்படுத்த ஆயுதப் பேரம் பேசும் ஆசாமிகளாக இரண்டு நிருபர்கள் பலருடன் பேசி அதைப் படம் பிடித்திருந்தனர். அத்துடன் சில இடங்களில் செக்ஸ் தொழிலாளர்களை ஈடுபடவைத்து சில ராணுவ அதிகாரிகளைப் பேசவைத்து சில படங்களும் எடுத்திருந்தனர்.

இதில் ராணுவ ஊழலை அம்பலப்படுத்தும் ரகசியப் படப்பிடிப்புகளை ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். அதிலும் செக்ஸ் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி எடுத்த படப்பிடிப்புகள் மீது பலரும் கவலை தெரிவித்திருந்தனர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஒலி/ஒளிப்பிடிப்புகள் ஓரளவுக்காவது நியாயப்படுத்தக் கூடியவை. நாட்டில் பலரும் இந்த விவகாரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கிய வகையில் சில கிரிக்கெட் வீரர்கள் பெயர் அடிபட்டது. இரண்டு நாடுகளிலும் விசாரணைக் கமிஷன், காவல்துறை ஆய்வுகள் நடந்தன. உண்மைகளை முழுவதுமாக வெளிக்கொணர்வது அவசியமானது. எனவே ஒரு பத்திரிகை இதில் ஈடுபடலாம் (ஆனால் சட்ட விதிகளுக்குள்ளாக) என்று நம்மால் சொல்ல முடிந்தது.

ஆனால் தற்போது இந்தியா டிவி செய்வது தனி மனிதரது அந்தரங்கத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ஷக்தி கபூர் தன் சக சினிமா ஊழியர்களைப் பற்றி புறம்பேசக் கூடாது என்று இந்தியச் சட்டங்களில் ஏதேனும் இருக்கிறதா? அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது? அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா? அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது? அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும், அவர்களைத் தெருவில் நிற்க வைத்துக் கல்லால் அடிக்க வேண்டும் என்றும் சொல்லும் அளவுக்கு நம் மக்களின் மூளை குழம்பிப்போய் உள்ளது!

அடுத்து தொழிலதிபர்கள் ரகசியமாகப் படம் பிடிக்கப்படுவார்கள். பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும். பின்னர் நானும் நீங்களும் படம் பிடிக்கப்படுவோம். ஐந்து வயதுக் குழந்தை வீட்டில் ஐம்பது காசு திருடியது என்பது ரகசிய கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்தக் குழந்தையை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

நிச்சயம் இந்தத் தொலைக்காட்சி பத்திரிகை தர்மத்தை மீறியுள்ளதோடு, நாட்டின் சட்டங்களுக்கும் புறம்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தியா டிவியால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தத் தொலைக்காட்சியின் மீது கடுமையான வழக்குப் போட்டு நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து அந்த நிறுவனத்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

15 comments:

 1. ஏற்கனவே பிரகாஷின் பதிவில் எழுதியிருந்தேன். 3-4 விஷயங்களெனில் இது சமூகத்தின் அவலங்களை வெளிக்கொணர முக்கியமான நிகழ்வாயிருக்கும். ஆனால், இதையே தொழிலாக நிகழ்ச்சியாக இருந்தால், மக்கள் இதையும், கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு பார்ப்பது போல், நட்சத்திர இரவுகள் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, பெப்சியின் கார்டுகளை எடுத்து கொண்டு நீலநிற பின்புலம் நோக்கி ஒடி விடுவார்கள். அவ்வளவுதான் நடக்கும். ஒரு தனிநபரின் பாலியல் அந்தரங்களுக்கு உள்ளே போவது இந்தியாவுக்கு புதுசு கண்ணா புதுசு. அதனால் மக்களும் ரிமோட்டின் மீதிருக்கும் தங்களின் ஆளுமையை சற்றே காட்ட மாட்டார்கள் என்பதால் நிகழ்வதிது. இன்னும் 6 மாதத்தில் இதுவும் பழகிவிடும்.இதெல்லாம் கொஞ்சநாள் கூத்து, இந்தியா டிவியின் நிலை எனக்கு புரிகிறது. பாவம் டிஆர்பி ரேட்டிங்கில் என்.டி.டிவியையும், ஆஜ்தக்கையும் மிஞ்ச வேண்டும் அப்போது தான் விளம்பரதாரர்கள் விளம்பரம் தருவார்கள்.

  நஷ்ட ஈடு கேட்கும் அதேசமயத்தில் கொஞ்சம், தமிழ்நாட்டுக்கு வந்து எடுக்கச் சொல்லுங்கள். மொத்த குழுவும், அந்த தொலைக்காட்சி சேனலும், ஆட்டோவோடு பரலோக ப்ராப்தி ரஸ்து!

  ReplyDelete
 2. ///அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? ////

  நிச்சயம் இதைச் செய்யக்கூடாது என எங்கும் சொல்லப்படவில்லை, இது தவறே இல்லை, மிகச்சரியான செயல்தான். இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியக்கலாச்சாரம், புண்ணாக்கு,பண்பாடு என்று மேற்கத்தியர்களிடம் நாம் பீத்திக்கொள்வது சரியா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன் :-( .

  ReplyDelete
 3. இந்தியா டிவி பெயரென்னவோ நல்லாத்தான் இருக்கு,... பண்ற விஷயம் எதுவும் சரியாக இல்லையே.. அப்டீங்கறீங்க....

  ///அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? ////

  கண்டிப்பாக இல்லை ஆனா இப்படி கூப்பிட்ட உடனே போற பெண்ணை பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார்கள்...

  சார்... ஒண்ணு மட்டும் உறுதி இன்னைய தேதியில பகிரங்கப்படுத்தாம (மக்களுக்கு தெரிவிக்காம) எந்தக் குற்றமும் குறையாது என்பது என் கருத்து. இப்போ இந்த மாதிரி
  நிகழ்ச்சிகள் தான் இந்தியாவுக்கு தேவையாக இருக்கு சார்....

  ReplyDelete
 4. இந்தியா டிவி பெயரென்னவோ நல்லாத்தான் இருக்கு,... பண்ற விஷயம் எதுவும் சரியாக இல்லையே.. அப்டீங்கறீங்க....

  ///அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? ////

  கண்டிப்பாக இல்லை ஆனா இப்படி கூப்பிட்ட உடனே போற பெண்ணை பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார்கள்...

  சார்... ஒண்ணு மட்டும் உறுதி இன்னைய தேதியில பகிரங்கப்படுத்தாம (மக்களுக்கு தெரிவிக்காம) எந்தக் குற்றமும் குறையாது என்பது என் கருத்து. இப்போ இந்த மாதிரி
  நிகழ்ச்சிகள் தான் இந்தியாவுக்கு தேவையாக இருக்கு சார்....

  ReplyDelete
 5. எந்த வித தளையுமற்ற சமுதாயமாய், யாரையும் யாரும் (ஆண் பெண்ணையும், பெண் ஆணையும்) படுக்கைக்கு அழைக்கவும், அதை அதே விதத்தில் மறுக்கவும் உரிமை இருக்க வேண்டும் எனப்துதான் என் கருத்து. எனினும பத்ரி பல விஷயங்களை மறந்துவிட்டார். இங்கே சூழலில் பல விதங்களில் கட்டாயப்படுத்த அப்டுகிறது. படுக்கைக்கு அழைப்பவர்ரிடன் (ஆணாக இருக்கும் காரணத்தினால் மட்டும்) ஒரு அதிகாரமும், படுக்கைக்குச் சென்றால் மட்டுமே காரியத்தை சாதித்து கொள்ளமுடியும் என்ற் கட்டாயம் பெண்ணுக்கும் இருக்கிறது. இன்னும் பல பல பிரச்சனைகள் இருக்கிறது. இப்படி எதையும் புரிந்துகொள்ளாமல், கவனத்தில் கொள்ளாமல் "அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா" என்று பத்ரி கேட்பது பொறுப்பற்றதாகவும் கண்டிக்கதக்கதாகவும் எனக்கு தெரிகிறது. கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 6. தனி மனித வாழ்க்கைக்குள் இருக்கும் ஊழல்களை - அது தனிமனிதர் சார்பானதாக இருக்கும்வரையில் அம்பலப்படுத்துவது அந்தரங்கத்தை மீறுவது.

  பொதுவாழ்க்கையின் ஊழல்களை மட்டும்தான் அம்பலப்படுத்தக் கூடிய ஒருவித தார்மீக உரிமை பத்திரிகைகளிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

  ====

  மற்றபடி நான் சொல்ல வந்ததை சற்றே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்ல வந்த கருத்து அதேதான். அந்த நடிகர் தனக்குத் தேவையான எதையும் முன்வைக்கலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் நடிகையாக விரும்புபவரின் தனி விருப்பம். அந்தப் பெண் அழைப்பால் பாதிப்படைந்தால் அதைப் பிறவகைகளில் சந்தித்திருக்கலாம்.

  ReplyDelete
 7. ஒரு வேலை கிடைப்பதற்கான அடிப்படைத் தகுதி அந்த வேலையைச் செய்வதற்கான திறமை என்பதை விடுத்து, வேறு தகுதிகளின் மூலம் (வேலை கொடுப்பவரின் உடல் தேவையைப் பூர்த்தி செய்ய முடிவது) என்று நிர்ணயிப்பது சரியே என்று நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

  ஆண்களை விபசாரத்துக்கு அழைத்ததாக அழகிகளை அடிக்கடி கைது செய்கிறார்கள். பெண்களை இப்படி விபசாரத்துக்கு அழைக்கும் (வா படுத்துக்கலாம். அப்புறமா உனக்கு நான் வேலை தர்றேன்.) ஆண்களை எப்போது யார் கைது செய்வது? குறைந்தபட்சம் வெளிச்சம் போட்டாவது காட்ட வேண்டும்.

  - சத்யராஜ்குமார்

  ReplyDelete
 8. சத்யாராஜ்குமார்: நான் சொன்னதாக நீங்கள் சொல்வது தவறு. தனிமனித ஊழல்களை அம்பலப்படுத்த மீடியாக்களுக்கு எந்தவித அதிகாரமும், உரிமையும் இல்லை என்றுதான் நான் சொல்கிறேன்.

  தனிமனித ஒழுக்கம் சார்ந்த எனது கோட்பாடுகள் பற்றி நான் இங்கே எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஷக்தி கபூர் ஒழுக்கம் தவறிதான் நடந்துகொண்டுள்ளார் என்று நான் நினைக்கலாம். வேறு சிலரது ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகளின்படி ஷக்தி கபூர் செய்ததில் தவறொன்றுமில்லை என்றும் கருதலாம். எது எப்படியாயினும் அதை வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு டிவிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

  சட்டப்படி இந்தியா டிவி செய்தது குற்றமாகவும் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

  ReplyDelete
 9. யோசிக்க வைத்துவிட்டீர். நமது சமுதாயத்தில் accountability குறைவாக உள்ளதற்குக் காரணம் கண்டுகொள்வாரில்லை, கேட்பாரில்லை என்றாகி விட்ட நிலை. செய்யும் அநீதிகள் வெட்டவெளிச்சமாகலாம் என்னும் நிலையிருந்தால், குற்றம் புரிவோரிடத்தில் கொஞ்சம் பயமாவது மிஞ்சும். checks and balances இல்லாத சூழ்நிலையில் (எவ்வளவு Anti-Corruption Bureauக்களைப் பார்த்துவிட்டோம்?) பதவியில் / உயர்ந்த நிலையில் இருப்போரின் மேல் யாரேனும் ஒரு கண் வைத்திருப்பது, நாட்டு நலனுக்கு வழிவகுப்பதே. ஆகையால், இந்தியா TV செய்தது ஒருவித extreme reporting எனலாமே ஒழிய, சட்டவிரோதமான செயல் எனக் கூற இயலாது.

  மற்றபடி, ஐம்பது பைசா திருடும் குழந்தையென்றெல்லாம் trivialise செய்து, நம் ஜனங்கள் ஏதோ discretionஏ இல்லாதவர்கள் போல தோற்றுவிப்பதெல்லாம் கொஞ்சம் over. வெட்டவெளிச்சமாகும் நிகழ்வுகள் கவலையேற்படுத்தும் விஷயங்களாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது, இல்லையேல் TRPக்கள் அடிபடும் அபாயமிருப்பதால்.

  ReplyDelete
 10. பத்ரி,

  //மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஒலி/ஒளிப்பிடிப்புகள் ஓரளவுக்காவது நியாயப்படுத்தக் கூடியவை. நாட்டில் பலரும் இந்த விவகாரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர்.//

  நீங்கள் தெஹெல்கா விவகாரத்தில் மேட்ச் ஃபிக்சிங் குறித்தான புலனாய்வை நியாயப்படுத்துகிறீர்கள். இதேவகையில் இந்தியா டீவி ஒளிபரப்பிய பலான விடயங்களையும் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு ஆர்வமிருப்பதால் அதுவும் சரிதானே! மக்கள் பிரதிநிதிகளின் ஒழுக்கக்கேடை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது சட்டத்துக்கு புறம்பானதாக இருக்கலாம். எனக்கு சட்டம் தெரியாது. ஆனால், இதே புலனாய்வில் இப்பிரதிநிதிகள் வயது குறைவான பெண்களுடனோ அல்லது சிறுவர்/சிறுமியுடனோ தவறான முறையில் பழகியிருந்தால் உங்கள் வாதம் என்னவாகும்? தற்பொழுது இந்தியா டீவி ஒளிபரப்பிய விடயங்கள் முற்றிலும் சரி என நான் வாதிடவில்லை. அதே சமயம் மக்கள் பிரதிநிதிகளின் தனிமனித ஒழுக்கக்கேடுகளை வெளியிடுவதை தற்பொழுது ஒத்துமொத்தமாக நிராகரிப்பது சரியல்ல. ஏனெனில், இந்திய சூழலில், இவ்வகை உறவுகளில் அங்கம் பெரும் மக்கள் இப்பிரதிநிதிகளின் தயவால் பல சட்டவிரோத சலுகைகளை அனுபவிப்பது சகஜம்.

  இந்தியா டீவி செய்துள்ள புலனாய்வு போன்று, மேற்கத்திய பத்திரிக்கைகளும், டீவி ஊடகங்களும் நித்தமும் செய்துவருகின்றன. பிரிட்டனில் தினமும் டாப்லாய்ட் இதழ்கள் இதைத்தான் செய்கின்றன. இதில் முக்கியமாக சிக்குவது மக்கள் பிரதிநிதிகளே. இப்படிப்பட்ட வகையில் லேபர் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த டேவிட் பிளங்கெட்டின் ரகசிய உறவினை முதலில் அம்பலப்படுத்தி, அவ்வுறவில் அங்கம்வகித்த பெண்ணிற்கு சாதகமாக சில அரசாங்க சலுகைகளை வழங்கிய விடயத்தில் சிக்கி பதவி இழக்க வேண்டியிருந்தது. பில் கிளின்ட்டன் சமாச்சாரமும் இதே வகைதான். சில வருடங்களுக்குமுன் பிரிட்டனில் பொது இடங்களில் CCTV கேமரா வைப்பதை மனித உரிமை இயக்கங்கள் எதிர்த்தன. ஆனால், இதன்மூலம் தெரியவந்த சமுதாயச் சீர்கேடுகள் கணக்கிலடங்கா.

  இப்படியே போனால், தொழிலதிபர்கள், ஏன், நீங்களும் நானும் இதற்கு பலியாவோம் என்ற உங்கள் பயம் நியாயமே. ஆனால், பொதுமக்களின் பிரதிநிதிகளின் ஒழுக்கம் எதாவது ஒருவகையில் மக்களை பாதிக்கத்தான் செய்யும். எனவே அவர்கள் ரகசிய காமராவில் இடம்பெறுவது சட்டத்தின் பார்வையில் சரியோ தவரோ, தார்மீக அடிப்படையில் சரியாகத்தான் எனக்குபடுகிறது.

  ReplyDelete
 11. //அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது?//

  It is not told anywhere, by the same logic it is not told anywhere that what Kapoor talks should not be RECORDED! By telecasting this, it instils a fear in people who have such malicious tendencies. That is all!

  //அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா? அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது? //

  In countries like US and UK, ministers have been made to resign for having affairs, because an elected member (or a public servant) needs to have some moral values (if not be role models) in a democracy!

  enRenRum anbudan
  BALA

  ReplyDelete
 12. //அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?//
  இல்லை. நடிக்க வாய்ப்பு தேடிவந்த ஒரு பெண்ணை அழைத்தால், அது குற்றமே. சினிமாக்காரர்கள் இந்தமாதிரி விஷயங்களில் மாட்டுவது புதிதல்ல - அதற்கு இவ்வளவு தூரம் விளம்பரம் கிடைப்பது அவர்களின் பிரபலத்தால். சிலகாலம் முன்பு மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் கூட பாலியல் வழக்கில் சிக்கினார். நிகழ்ச்சியைப் பார்க்க எனக்கு வாய்ப்பில்லை எனினும், ஊடகங்களில் கிடைக்கும் செய்தி வழி பார்க்கும்போது, குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், திட்டமிட்டுப் பெண்ணை அனுப்புவதில், "குற்றம் நிகழ உள்ள" வாய்ப்பைவிட "குற்றம் நிகழ உருவாக்கித்தரும்" வாய்ப்புக்களே அதிகம் உள்ளதாகப் படுவதால், இந்தியா டிவி செய்ததையும் முற்றுமுழுதாக எவ்வளவுதூரம் நியாயம் எனக் கொள்ளமுடியும் என்று தெரியவில்லை. இந்தக் கண்ணோட்டத்தில்தான் பத்ரி சொல்லியிருக்கக்கூடுமென்று அனுமானித்துக்கொள்கிறேன். டெஹல்காவிற்கும் முன்பு இதேபோன்ற விமர்சனங்கள் எழுந்ததென்று நினைக்கிறேன். நடக்காத குற்றத்துக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்து, குற்றம் செய்கிறானா இல்லையா என்று futuristic ஆக ஊகித்துப் பார்க்க இது என்ன "மைனாரிட்டி ரிப்போர்ட்" படமா? உணர்ச்சிவசப்படாமல், பாலியல் என்ற விஷயத்தைத் தவிர்த்துவிட்டு பிற குற்றங்களுக்கும் இதைப் பொருத்திப் பார்க்கவும் - ஒரு பேனா திருட்டு, ஒரு சிறுவனுக்குக் கிரிக்கெட் மட்டை திருடும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து சோதனை செய்வது என்று. இதே ஷக்தி கபூருக்குப் பதிலாக இவர்கள் யாரோ ஒரு தெருவில் போகும் சாதாரண ஆசாமியை ஏன் இப்படித் துப்பறிய முயலவில்லை? இப்போது அமன் வர்மா என்ற இன்னொரு ஆசாமியும் மாட்டியிருப்பதாகப் படிக்கிறேன். இதுவரை உத்தமபுத்திரனாக இருந்த ஆசாமிக்கு இதுமாதிரி ஒரு lure கொடுத்து, அவன் வழிதப்பினால் படம்பிடித்து ஊருக்கெல்லாம் காட்டுவதா? உத்தமபுத்திரனாக இருந்தால் உத்தமபுத்திரனாகவே இருக்கவேண்டும், சிந்தனை பிறழவே வாய்ப்பில்லை என்பதெல்லாம் பிரயோஜனமற்ற வறட்டு வாதம். வாய்ப்புத் தேடிவரும் கலைஞர்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வது தவறே. இதை ஊடகங்களின் sting operation என்றால், நடிக நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் படம்பிடித்துப் போடுவதும் தனிமனித உரிமைமீறல் என்றுதான் கொள்ளவேண்டும். பம்பாயின் Mid-day, ஷாஹித்-கரீனா கபூர் முத்தமிட்டுக்கொண்டிருந்ததைப் பிரசுரித்ததை என்ன சொல்ல அப்போது? மேலும், ரவிக்குமார் கூறியிருக்கும் "பொதுமக்களின் பிரதிநிதிகள்" என்பதற்குள் நடிக நடிகையரும் அடங்குவார்கள் என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. அவர்களை ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுப்பதில்லை, தானாகத் தொழில் செய்யும் ஒருவருக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதே என் அபிப்ராயம். மேலும், இவ்வித ஊடக நிகழ்வுகள் வரவேற்கத்தக்கதல்ல. இதுபோன்ற ஒரு களனைக்கொண்ட The Experiment என்ற ஒரு ஜெர்மானியப் படம் கிடைத்தால் பாருங்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் நடத்தப்பட்ட நிஜ ஆராய்ச்சியைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று நினைவு.

  //அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா? அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது?//
  இது சிக்கலான விஷயம்தான். ஒத்துக்கொள்வதா இல்லையா என்று தெரியவில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்து உறவு வைத்துக்கொண்டால் அது தவறே. மற்றபடி ஆண் அரசியல்வாதியோ பெண் அரசியல்வாதியோ, துஷ்பிரயோகமின்றி அவரவர் விருப்பப்படி இருந்தால், பொதுமக்களைப் பாதிக்காத வரை யாருக்கு என்ன கவலை? இதுபோன்ற sting operationsஐ விட, பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பேற்படுத்தியவர்களை பயமின்றி எதிர்கொள்ளத் தேவையான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் ஊடகங்களுக்கு முக்கியம் என்றுதான் எனக்குப் படுகிறது.

  ReplyDelete
 13. மாண்ட்ரீஸர்: உங்களது சுட்டிகள் திகிலை வரவழைக்கின்றன.

  இதுபோன்ற சோதனைகள் ஒருபுறம் இருக்கட்டும். நிஜமாகவே சிறைகள் அங்கு வரும் கைதிகளை - நிஜக் குற்றவாளிகளை, சூழ்நிலைக் குற்றவாளிகளை, குற்றமே செய்யாதவர்களை - எப்படி மாற்றுகின்றன, அழிக்கின்றன என்பது பயத்தை வரவழைக்கிறது.

  ReplyDelete
 14. மனோஜ் பிரபாகரை வைத்து கபிலையும் மற்றவர்களையும் பிடித்தார்கள். சரி. ஆனால் அதன் மூலம் வந்த அமளியில் மனோஜ் பிரபாகரே மாட்டிக் கொண்டதில் அவருக்கு யாரும் அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? எது எப்படியிருந்தாலும் ஆஃப் தி ரெகார்டாகச் சொல்லப்பட்ட விஷயங்களை டேப் செய்தது நம்பிக்கை துரோகம்தானே.
  இந்தியா டி.வி. ஏதோ மக்கள் சேவையாகவா செய்தது? ஒரு புண்ணாக்கும் இல்லை. அதன் நிறுவனரையோ அவர் மகனையோ ஒரு அழகியப் பெண்ணை அனுப்பி மாட்டி வைக்க முடியாதா? சந்தர்ப்பம் கிடைத்தால் யாருமே தப்பு செய்யாமல் இருக்க மாட்டார்கள். என்ன அவர் பலவீனம் என்றுத் தெரிந்தால் போதும். போலீஸார் கூட சில சமயம் இம்மாதிரிரிப் பொறி வைத்துப் பிடிப்பதுண்டு. அதைப் பற்றி "provocations policieres" என்றத் தலைப்பில் ஒரு ஃபிரெஞ்சுப் புத்தகம் படித்துள்ளேன். நல்ல வேளை நாம் பிரான்சில் பிறக்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete