டாஸில் ஜெயித்தால் கண்ணை மூடிக்கொண்டு முதலில் ஆஸ்திரேலிய அணி செய்வது பேட்டிங்தான். அது எந்த மாதிரியான ஆடுகளமாக இருந்தாலும் சரி. பெர்த் ஆனாலுமே முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங்தான் பிடிப்பார்கள். முதலில் பந்துவீசுவது என்பது தம்முடைய பலவீனத்தைக் காட்டுவது என்று அவர்கள் நினைப்பதுவே காரணம். மேலும் அவர்களுக்கு தமது பேட்டிங் மீது அளவு கடந்த நம்பிக்கை.
ஆனால் இந்தியா இன்று டாஸ் வென்றது என்றதுமே பந்துவீச்சைத்தான் கையில் எடுப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். இதற்குக் காரணம் கங்குலிக்கு தன் பந்துவீச்சின் மீது உள்ள அளவுகடந்த நம்பிக்கை அல்ல. பந்துவீச்சின் மீது உள்ள நம்பிக்கைக்குறைவுதான் காரணம்! முதலில் பந்துவீசினால் அதனால் ஆடுகளத்தில் கிடைக்கும் சற்று அதிகபட்ச உதவியைக் கொண்டு சில விக்கெட்டுகளை எடுப்பதன்மூலம் ஆட்டத்தை ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை. இந்த உதவி இல்லாவிட்டால் தன் பந்துவீச்சு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற அவநம்பிக்கை.
இப்பொழுதெல்லாம் மொஹாலி ஆடுகளம் முந்தையது போன்று இல்லை. ஓரளவுக்குத்தான் வேகப்பந்து வீச்சுக்கு உதவுகிறது. பெர்த் போல 'perfume' பந்துகள் வீச முடியாது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை இந்தியா நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. அவ்வப்போது பாகிஸ்தான் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன.
ஐந்து விக்கெட்டுகளை 156க்கு இழந்த நிலையில் பாகிஸ்தான் இருந்தபோது 260க்குள்ளாக எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம் என்று இந்தியா நினைத்திருக்கலாம். ஆனால் ஆசீம் கமால் தனது நிதானமான 91 ரன்களால் அணி எண்ணிக்கையை 300க்கு மேல் கொண்டு சென்றார். ஆசீம் கமாலைத் தவிர இன்ஸமாம்-உல்-ஹக், தவ்ஃபீக் உமர் ஆகிய இருவரும் நன்றாக விளையாடினர். பிறர் அனைவரும் பெருத்த ஏமாற்றத்தையே தந்தனர்.
பதான் எப்பொழுதும் போல நன்றாகப் பந்து வீசினார். முதல் விக்கெட்டாக சல்மான் பட்டை அவுட்டாக்கிய அற்புதமான பந்துதான் இன்றைய விக்கெட்டுகளில் மிக அற்புதமானது. ஆஃப்/நடு ஸ்டம்பில் விழுந்த பந்து சற்றே வெளியே போய் ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் சென்றது. முன்காலில் வந்து தடுத்தாடிய சல்மான் பட்டின் மட்டையை ஏமாற்றி பந்து ஆஃப் ஸ்டம்பின் வெளிப்புறத்தில் உரசிச் சென்றது.
பாலாஜி நீண்ட விடுமுறைக்குப் பின் - குணமாகிய பின் - விளையாடும் முதல் டெஸ்ட் இது. தன் டெஸ்ட் வாழ்க்கையின் முதல் ஐந்து விக்கெட் இன்னிங்ஸைப் பெற்றார். மொஹாலியாக இருந்ததால் பிழைத்தார். விளையாட வாய்ப்பு கிடைத்தது. நன்றாகவே பந்து வீசினார். பின்பாதி ஆட்டக்காரர்கள் கையில் அடிவாங்கி நிறைய ரன்களைக் கொடுத்திருந்தாலும் விக்கெட் எடுக்கும் பந்துகளை விடாது வீசிக்கொண்டிருந்தார். அடுத்த டெஸ்டில் ஜாகீர் கான் உட்கார வேண்டியிருக்கும்.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 312 ஆல் அவுட். பாகிஸ்தான் சந்தோஷப்படவேண்டிய ஸ்கோர் இது. நிலைமை இன்னமுமே மோசமாக இருந்திருக்கலாம். இந்த பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நொறுங்கி விழக்கூடிய நிலையில்தான் உள்ளது.
இந்தியாவின் தரைத் தடுப்பு மோசமாகத்தான் இருந்தது. பந்துகளை சரியாகத் தடுப்பதன் மூலம் 30 ரன்களையாவது சேமித்திருக்கலாம். கங்குலி மிட் ஆனில் ஒரு கேட்ச் பிடிக்கக் கூடிய நிலையில் இருந்து விட்டார். அவரைப் பெரிதாகக் குறை கூறிய லக்ஷ்மண் கவர் திசையில் ஒரு கேட்சை விட்டார். நல்ல வேளையாக ஏழு விக்கெட்டுகள் பந்துவீச்சாளர்களுக்கு நேரிடையாகவே (எல்.பி.டபிள்யூ, பவுல்ட்) கிடைத்தன. மிச்சத்தில் இரண்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச், மூன்றாவது முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிடுக்கு கேட்ச்.
நாளைக் காலை இந்தியாவின் பெருமை வாய்ந்த மட்டை வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதைக் கவனிப்போம்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
3 hours ago
சூளைமேட்டுச் சிங்கம்னா சும்மாவா?
ReplyDelete