Thursday, March 31, 2005

இந்த வார தெஹெல்காவிலிருந்து

தெஹெல்கா என்றொரு வாரப் பத்திரிகை வெளிவருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பொதுவாக பிற செய்தித்தாள்கள், பத்திரிகைகள் கவனிக்காத விஷயங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்த வார இதழிலிருந்து (ஏப்ரல் 2, 2005) சிலவற்றை சுருக்கமாக இங்கு தருகிறேன்.

*** கனிஷ்கா விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சதியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீக்கியர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி, இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

*** உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், தன் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் நடத்தும் தனியார் கல்லூரிக்கு ரூ. 69 கோடி மான்யம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் உயர் கல்விக்கான இந்த வருடத்தைய மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 71 கோடி என்பது கவனிக்கத்தக்கது.

*** குவஹாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி B.K.ராய், 18 வயதுக்குக் கீழான பெண்கள் வன்புணர்ச்சிக் கொடுமையால் கருவுற்றால், பெண்ணின் பாதுகாவலர்கள் வேண்டினால், அந்தக் கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளார். ஒரு வழக்கின் மீதான அவரது ஆணையில் இவ்வாறு கூறுகிறார்: "Whether the allegations against the accused are true or not is not material in the present writ petition; what is material is the fact that she presently carries pregnancy caused as a result of the alleged rape committed on her by the accused. In such a situation, when the victim suffers from anguish, it would constitute a grave injury to her mental health and in such circumstances, termination of her pregnancy by a registered medical practitioner is permitted and will not constitute any offence."

[இந்த நீதிபதி B.K.ராய் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்பொழுது பிற உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களில் உள்ள பிற உயரதிகாரிகள் ஆகியோர் ஊழல்கள் செய்வது போலத் தெரிந்ததால் அதை வெகுவாகக் கண்டித்து அலுவலக ஆணைகள் பலவற்றை பிறப்பித்தார். இதனால் பிற நீதிபதிகள் அனைவரும் விடுப்பில் சென்றனர் - அதாவது ஸ்டிரைக் செய்தனர். பின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராயை அவர் பிறந்த மாநிலமான பிஹாருக்கே மாற்ற முடிவு செய்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. அதனால் ராயின் விருப்பத்துக்கு மாறாக அவரை அஸாம் மாநிலத்துக்கு மாற்றி விட்டார். இதைப்பற்றிய கட்டுரை ஒன்றும் தெஹெல்காவில் உள்ளது.]

*** 'இண்டியா டிவி'யின் விடியோ அம்பலங்களை திட்டம் போட்டு படம் பிடித்தவர் சுஹாயிப் இல்யாசி. இவர் "India's Most Wanted" என்று ஜீ டிவியின் வந்த தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர். பின் தனது மனைவியின் கொலைக்குக் காரணமானவர் என்று சந்தேகத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் சில மாதங்கள் இருந்தவர். அந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

 1. தகவலுக்கு நன்றி! இதில், தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி குறித்து தெஹொல்கா எப்படி அணுகியிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லையோ! தகவல் தெரிந்தவர்கள் விபரம் சொல்லவும். நான் தவறவிட்டுவிட்டேன். அடுத்த முக்கிய விஷயம் - B.K.ராய் பற்றியது. ஜார்க்கண்ட் விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு குறித்து பாராளுமன்ற சபாநாயகர் 'கூவி'யதை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், அப்போது நீதிமன்றங்களின் சார்பில் நிற்க முடியாமல் இருப்பதாக நினைக்க இரண்டாவது முக்கிய காரணம் இதுதான். இன்னும் கூட அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் மிக தாமதமாகிவிட்டதோ என்று நினைக்கிறேன். தெஹொல்கா வாங்கிப் பார்க்கிறேன்.

  - சந்திரன்.

  ReplyDelete
 2. தர்லோச்சன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறது தெஹெல்கா. தர்லோச்சன் சிங் எப்படிப் பிறருக்கு ஜால்ரா அடித்தே முன்னுக்கு வந்தார் என்று விவரிக்கிறது.

  முதலில் ஜெயில் சிங்குக்கு ஜால்ரா. பின் அகாலி தள் பர்காஷ் சிங் பாதலுக்கு ஜால்ரா. பின் பாஜக எப்படியாவது முஸ்லிமல்லாத ஒருவரை மைனாரிட்டி கமிஷனுக்குத் தலைவராகப் போடவேண்டும் என்று முடிவு செய்ததும் பாதல் மூலமாக அந்தப் பதவியைப் பெற்றார் என்றும், பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்றும் தெஹெல்கா சொல்கிறது.

  ====

  B.K.ராய் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது கொடுத்த சில தீர்ப்புகளைப் பற்றியும், B.K.ராய், மனம் நொந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி R.K.லாஹோதிக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளையும் தெஹெல்காவின் பார்க்கலாம்.

  ReplyDelete