Thursday, March 24, 2005

அறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்

[அறுபத்து மூவர் விழாவின் பின்னணி என்ன என்று ஹரி கிருஷ்ணனிடம் கேட்க, அவர் எழுதி அனுப்பியது.]

'தண்ணீரே! உனக்கு ஆகாயத்தில் உலவும்போது மேகம் என்று பெயர்; பூமியில் வந்து விழுந்தவுடன் நீர் என்று பெயர்; ஆய்ச்சியரின் கைக்கு வந்ததும், அவர்களுடைய பானையில் சேர்ந்ததும் மோர் என்று பெயர்' என்று காளமேகம் கிண்டலடித்த பாடல் ஒன்று இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்த போது அதற்குச் சமமான மொழி ஒன்று இருந்தது. 'என்னது இது! நீர்மோரா! நீருன்னாலும் நீரு சரியான அறவத்தி மூவர் தண்ணிப் பந்தல் நீரு' என்று கேலி செய்வார்கள்.

அறுபத்து மூவர் என்றால் அந்த நாளில் முதலில் நினைவுக்கு வந்தது அந்தத் தண்ணீர்ப் பந்தலும், நீர் மோரும்தான்.

தொன்மையான தொண்டை நாட்டுச் சைவத் திருப்பதிகள் ஏழு. (முப்பத்திரண்டு என்று ஒரு கணக்கும் உண்டு.) தொண்டை நாடு என்பது வேறு எதுவுமில்லை. நம்ம சென்னையும் அதைச் சுற்றியுள்ள இடங்களும்தான். அவற்றில் மிக முக்கியமான தலங்களில் ஒன்று மயிலை. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐம்பத்தோராவது இடம் வகிக்கும் வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம். வேளாளர் குடியில் பிறந்தவர் வாயிலார். சென்னையில் வேளாண்மை வேற பண்ணினாங்களா என்று கேட்பீர்கள். எனக்குத் தெரிந்தே ஆள்வார்பேட்டை மவுபரீஸ் சாலை (கவிஞர் பாரதிதாசன் சாலை என்றால்தான் இப்போது தெரியும்) வயலும் தென்னந்தோப்புமாக இருந்த இடம்தான். அதாவது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கூட.

இந்த மைலாப்பூரில் மட்டும்தான் 'அறுபத்து மூவர்' என்றழைக்கப்படும் திருவிழா கொண்டாடப்படுகிறது. வேறெந்த இடத்திலும் இப்படி ஓர் உற்சவம் நடப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் கொண்டாடுகிறார்கள். பத்து நாள் விழாவான பிரம்மோத்சவத்தின் எட்டாவது நாள் அறுபத்து மூவர். (பத்தாம் நாள் பங்குனி உத்திரம்.) அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய திருவுருவங்களையும் உலாச் செய்தாலும், இந்த நாள் நடப்பது என்னவோ சிவநேசஞ் செட்டியாரையும் அவர் மகள் அங்கம் பூம்பாவையையும் சுற்றிதான். திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் சிவநேசஞ் செட்டியார். தன் மகளைத் திருஞான சம்பந்தருக்கே அளிப்பதாக முடிவு செய்திருந்தவர்.

சுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துஉடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்

என்று சேக்கிழார் இதைச் சொல்கிறார். நமக்குத் தெரியும். அங்கம்பூம்பாவையைப் பாம்பு கடித்தது. அவளுடைய எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் சேமித்து வைத்திருந்தார் சிவநேசஞ் செட்டியார். பின்னொரு நாளில் திருஞான சம்பந்தர் மயிலாப்பூர் கபாலீச்சரத்துக்கு வந்த போது, அந்தக் குடம் அவர் முன் வைக்கப்பட்டது. திருஞான சம்பந்தர் அப்போது பாடிய பதிகத்தின் வலிமையால் அங்கம்பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். சாம்பலில் இருந்து.

அறுபத்து மூவர் உற்சவத்தின்போது அங்கம்பூம்பாவை மற்றும் சிவநேசஞ் செட்டியாருடைய திருவுருவங்களும் திருச்சுற்றாக எடுத்து வரப்படுகின்றன. கடைசியில் 'மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை' என்று தொடங்கும் - பூம்பாவையை உயிர்ப்பித்த - திருஞான சம்பந்தரின் பதிகம் படிக்கப்படுகிறது.

ஆமா, ஒண்ணு கேக்கறேன். சாம்பலில் இருந்து ஃபீனிக்ஸ் மாதிரி எழுந்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோமே, ஒரு மாறுதலுக்கு 'அங்கம் பூம்பாவையைப் போல' இல்லாவிட்டால் சுருக்கமாக 'பூம்பாவையைப் போல எழுந்தார்' என்று சொன்னால் என்ன? மரபுக்கு மரபும் ஆச்சு. புதுமைக்குப் புதுமையும் ஆச்சு. தையலை உயர்வும் செய்த மாதிரி ஆச்சு. மண்ணின் மணத்தைப் பரப்பியதும் ஆச்சு.

2 comments:

  1. பதிவைத்தொடங்கிய விதம் பிடித்திருந்து.

    ReplyDelete
  2. engaL kanchipuraram Ekambaranaathar kovil pangunith thiruvizhaavilum aRubaththumoovar nagar ulaa uNdu.

    balarajangeetha

    ReplyDelete