Thursday, March 17, 2005

அசைக்க முடியாத சுவர் - திராவிட்

கொல்கத்தா முதல் நாள், கங்குலி டாஸில் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியா ஜாகீர் கானுக்கு பதில் ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்திருந்தனர். பாகிஸ்தான் சல்மான் பட்டுக்கு பதில் ஷாஹீத் ஆஃப்ரீதியையும், நவீத்-உல்-ஹஸனுக்கு பதில் மொஹம்மத் கலீல் என்னும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரையும் கொண்டுவந்திருந்தனர்.

மொஹம்மத் சாமி, மொஹம்மத் கலீல் இருவருமே தொடக்கத்தில் வெகு சுமாராகப் பந்து வீசினர். அளவு குறைந்த பந்துகளாகவே வீசினர். விரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர் இருவருமே மிகச் சுலபமாக இந்தப் பந்துகளை எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் சிறிது புல் இருந்ததனால் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அப்படியொன்றும் இல்லை. மட்டையாட மிகவும் வசதியாகவே இருந்தது களம். மைதானத்தின் புல்தரையும் சீராக இருந்ததால் பந்து வேகமாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. சேவாக் எப்பொழுதும் போல பிரமாதமாக விளையாடினார். நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்த கம்பீர், 29 ரன்கள் எடுத்திருந்த போது, தனீஷ் கனேரியா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். (80/1)

அடுத்து உள்ளே நுழைந்த திராவிட் ஒன்று ஒரு தீர்மானத்துடனே வந்திருந்தது போல விளையாடினார். தொடக்கத்திலிருந்தே ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அடிப்பதை விட அதிகமாக நான்குகளையும் பெற்றார். உணவு இடைவேளைக்கு முன் சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றார். உணவு இடைவேளையைத் தாண்டியதும் தேவையற்று ஷாஹீத் ஆஃப்ரீதி பந்தில் தூக்கி அடிக்கப்போய் கவரில் நின்றிருந்த இன்ஸமாம்-உல்-ஹக் பின்னால் ஒடிச்சென்று கேட்சைப் பிடித்தார். சேவாக் 81, இந்தியா 156/2.

பெருத்த கரகோஷத்துடன் உள்ளே வந்த டெண்டுல்கர் சுமாராகத்தான் விளையாடினார். அவ்வப்போது அவரது மட்டையிலிருந்து ஒருசில நல்ல அடிகளும் வந்தன. தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் டெண்டுல்கர் தன் 10,000 ஆவது ரன்னைப் பெறுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகே அது அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து டெண்டுல்கர் தன் அரை சதத்தையும் பெற்றார். மறுமுனையில் திராவிட் சலனமேயின்றி தன் அரை சதத்தைத் தாண்டி 80களில் இருந்தார். இந்திய அணியின் எண்ணிக்கை 270ஐத் தாண்டி விட்டது.

இப்பொழுதுதான் பாகிஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைந்தது. ஆஃப்ரீதி வீசிய மோசமான பந்து - ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து லெக் பிரேக் ஆனது. டெண்டுல்கர் அதைத் துரத்திச் சென்று மொருதுவான ஒரு கேட்சை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்குக் கொடுத்தார். டெண்டுல்கர் 52, இந்தியா 272/3. அடுத்து வந்த கங்குலி தடாலடியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். அதிலொன்று ஸ்லிப் வழியாகச் சென்றது. அதையடுத்து அப்துல் ரஸாக் வீசிய வெளியே செல்லும் பந்தைத் தட்டி விக்கெட் கீப்பருக்குக் கேட்ச் கொடுத்தார். கங்குலி 12, இந்தியா 298/4. அதற்கடுத்த பந்திலேயே - ரிவர்ஸ் இன்ஸ்விங் ஆனது - விவிஎஸ் லக்ஷ்மண் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்தியா 298/5.

திராவிட் அமைதியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து ரன்கள் பெற்றார். அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் சதத்தைப் பெற்றார். கார்த்திக் மிகவும் தன்னம்பிக்கையுடன் ரன்கள் சேர்த்தார். இப்படியே நாளின் கடைசி ஓவர் - 90வது ஓவர் - வீச இருக்கும்போது இந்திய எண்ணிக்கை 344/5 என்று இருந்தது. தனீஷ் கனேரியா கடைசி ஓவரை வீச வந்தார். திராவிட் இந்த ஓவரை அமைதியாக விளையாடி அடுத்த நாள் வரவேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் விதிவசம்... நல்ல லெக் பிரேக் ஒன்றில் மெலிதாக விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சாக முடிந்தது. திராவிட் 110. இந்தியா 344/6.

இந்நிலையில் பாகிஸ்தான் மிகப் பலமாக ஆட்டத்தில் மீண்டு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். திராவிடின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவுட்டாகும் வரை அவர் எதையுமே தவறாகச் செய்யவில்லை. அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார். கவர் டிரைவ்கள், கட்கள், ஆன் டிரைவ்கள் என்று இரண்டு பக்கங்களிலும் ரன்கள் குவித்தார். சில சமயம் எழும்பி வரும் பந்துகளை ஹூக் செய்ய முனைந்தார். அப்பொழுதுதான் பார்க்க சற்றே சகிக்கவில்லை. ஆனால் முடிந்தவரை எழும்பிவரும் பந்துகளை மொத்தமாக விட்டுவிடுவதே சிறப்பு என்று விளையாடினார். தனீஷ் கனேரியா பந்துகளை - முக்கியமாக கூக்ளி - சரியாகக் கணித்தார்.

சேவாக், திராவிட் இருவரும்தான் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர்கள். டெண்டுல்கர் ஓரளவுக்குத்தான். கம்பீர் நிதானித்து நின்று தன் தொடக்கத்தை நல்ல ஸ்கோராக மாற்றாதது ஏமாற்றத்தைத் தருகிறது. இரண்டாம் நாள் எத்தனை ரன்கள் அதிகம் சேர்க்கும் இந்தியா என்பதிலிருந்துதான் ஆட்டத்தின் போக்கைக் கணிக்க முடியும்.

3 comments:

 1. பத்ரி,

  நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு பின்னோட்டம்.

  எனக்கென்னமோ தற்போதைய நிலையைப்பார்த்தால் ஆஸ்திரேலியாவுடன் நடந்த மெல்போர்ன் டெஸ்ட்தான் நினைவுக்கு வருகிறது.

  முதல் நாள் விரைவாக ரன்கள் குவித்தாலும் இறுதியில் நானூறுக்கும் குறைவாக ஆல் அவ்ட் ஆகிவிட்டோம். 500 ரன்களுக்கு சொற்பமாக எடுத்தால் வெற்றி வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.

  அன்புடன்

  ராஜ்குமார்

  ReplyDelete
 2. /பார்க்க சற்றே சகிக்கவில்லை//

  இந்த முழு வரியுமே படிக்க நன்றாக உள்ளது. ஆனால்புரியவில்லை. விளக்கவும்.

  ReplyDelete
 3. ஹூக் செய்யும்போது முழு கண்டிரோல் இருக்க வேண்டும். கண்களில் பயம் இருக்கக்கூடாது. பந்து எங்கே செல்கிறது என்று சரியாகப் பார்த்து மட்டையை பந்துக்கு மேலாகக் கொண்டுவந்து மணிக்கட்டைத் திருப்பி பந்தை உடனடியாகக் கீழே விழவைத்து தரஒயோடு செல்லுமாறு அடிக்க வேண்டும்.

  ஹூக் செய்யும்போது திராவிடின் கண்கள் பந்தை சரியாகக் கண்காணிக்காமல் வேறு எங்கோ பார்க்கிறது. ஒருவித அனுமானத்தில் பந்தை ஓரளவுக்குச் சரியாகக் கணிக்கிறார், அடிக்கவும் செய்கிறார், ஆனால் பார்க்க நன்றாக இல்லை. முழுவதுமான கண்டிரோலில் அவர் இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது. ஹூக் செய்வதில் இன்னமும் திறமையை திராவிட் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

  ====

  ராஜ்குமார்: பாகிஸ்தான் வலுவாகவே பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டது. நாள் முடிந்ததும் என்ன நிலைமை என்று பார்க்கலாம்.

  ReplyDelete