Friday, August 05, 2005

தமிழ்ச்சங்க விருதுகள் விழா

விருதுகள் கிடைத்தால் வாங்கிக்கொண்டு கொடுத்தவரை வாழ்த்திவிட்டு வருவதுதான் மரபு. ஆனால் அப்படி இருக்க மனம் இடங்கொடுக்கவில்லை.

திருப்பூர் தமிழ்ச்சங்கம் 1994-லிருந்து தமிழில் வெளிவரும் நூல்களுக்கு விருதுகளைக் கொடுத்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் விருதுகள் வெளியாகுமாம். 2003-ம் வருடத்துக்கான விருது அளிக்கும் விழா 2004 டிசம்பரில் நடக்க முடியாமல் தமிழகத்தில் சுனாமியின் சோகம். அதனால் 2003, 2004 வருடங்களுக்கான விழாவாக 2005 ஜூலை கடைசியில் நடத்த முடிவு செய்துள்ளனர். இம்முறை விழாவுடன் பத்து நாள்கள் நடக்குமாறு ஒரு புத்தகக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் திருப்பூரில் 500 பேருக்கு மேல் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது தெரியவில்லை போல.

திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலர் முறையே டாக்டர், ஆடிட்டர் ஆகியோர். எப்பொழுதாவதுதான் இவர்களது பெயர்களைச் சொல்கிறார்கள். மற்றபடி இவர்கள் டாக்டர் அய்யா, ஆடிட்டர் அய்யா ஆகியோர்தான். சில சமயம் தணிக்கையாளர் அய்யா அவர்கள்.

ஞாயிறு 31 ஜூலை அன்றுதான் விருது வழங்கும் நாள். அன்று காலை 'கருத்தரங்கம்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கம் என்று எதுவும் நடக்கவில்லை. ஆளாளுக்கு மைக்கைப் பிடித்துக்கொண்டு 'தான் யார்' என்று சொல்லவேண்டும். 2003, 2004 வருடங்களுக்காக விருதுகளைப் பெற்றவர்கள் சுமார் 38 பேர். ஒன்றிரண்டு பேர் வரவில்லை. மற்ற அனைவரும் தம்மைப் பற்றிப் பேசினர். பலருக்கு தன்னைப் பற்றிப் பேசப் பிடிக்கவில்லை. இன்னும் சிலருக்கோ 'இதுதான் வாய்ப்பு, போடு சாத்து' என்று விளையாடி விட்டனர். ஒருவர் தான் எப்படி கிட்டத்தட்ட 8000 பக்கங்களுக்கு மேல் எழுதிவிட்டேன் என்றும் ("இவரை உழைப்பாளர் தினத்தன்று நினைவு கூர்வோம்", நன்று சுந்தர ராமசாமி) தான் வாங்காத விருதுகளே இல்லை என்றும் சொன்னார். இவர் வயது 80க்கு மேல் என்பதால் மறந்து மன்னித்துவிடுவோம். நிறையப் பொறுமை இல்லாத காரணத்தால் சில நண்பர்களுடன் சற்றுத் தள்ளி அமர்ந்து வெட்டிக்கதை பேசி நேரத்தைப் போக்கினேன். லோக்கல் அரசியல்வாதி, முன்னாள் மந்திரி வேழவேந்தன் - காலையில் பேசித் தள்ளிவிட்டார். இவருக்கும் மாலையில் ஒரு இலக்கிய விருது காந்திருந்தது.

காலையில் பேசியவர்கள் பலரும் எப்படி டாக்டரும் ஆடிட்டரும் தம் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, அதனால் கிடைக்கும் காசையெல்லாம் விட்டுவிட்டு இப்படி தமிழ் இலக்கியத்துக்குச் சேவை ஆற்றுகின்றனர் என்று பேசினர். பின் தமக்கு விருது கொடுத்திருக்கும் தமிழ்ச்சங்கத்தை மனமாரப் பாராட்டினர். டாக்டர் - பி.சி.ராய் விருதுபெற்றவராம். அதையும் சொல்லி சொல்லி வாழ்த்தினர்.

மாலை 6.30க்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. சரியாக 6.00 மணிக்கு நானும் இரா.முருகனும் அங்கு போய் அமர்ந்தோம். என்ன முட்டாள்தனம்! மெதுவாக 7.00 மணி சமீபமாக பலரும் வந்தனர். இங்கும் பத்மஸ்ரீ, டாக்டர், நல்லி குப்புசாமி செட்டியார், ஏ.நடராஜன் குழுவினர் தலைமையில் விழா. இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் இலக்கிய விழாக்களே நடைபெறாது போலிருக்கிறது.

தலைவர், செயலர் இருவரும் மைக்கைக் கையில் எடுத்து ஒரு பிடி பிடித்தனர். பொருளாளரும் சேர்ந்துகொண்டார். தமிழ் கொஞ்சி விளையாடியது.

திருப்பூரில் இரண்டு புனிதப் பசுக்கள். ஒன்று கொடிகாத்த குமரன். இன்னொன்று நூல். அதாவது பஞ்சு நூல். கோபூஜை தொடர்ச்சியாக நடந்தது. 93 வயதான ஒரு மூதாட்டி, சுதந்தரப் போராட்டத்தின் போது காந்திக்கு தன் சொத்தில் பாதியை எழுதிக் கொடுத்தவராம். அவரை முன்னால் ஒரு நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள். அவரைப் புகழ்ந்து தள்ளிய தள்ளலில் அவருக்கே வெட்கம் தாங்க முடியவில்லை. அவர் திடீரென வீட்டுக்குக் கிளம்ப, கொஞ்ச நேரம் டிராமா. மேடையிலிருந்து நடராஜன் இறங்கிவந்து பொன்னாடை போர்த்தி, சிலர் உணர்ச்சி வசப்பட்டு அவரது காலில் விழுந்து ஆசி வாங்கி, அந்த மூதாட்டி impromptu-வாக ஒரு பேச்சளித்து, கொஞ்ச நேரம் இலக்கிய விழா வேறு திசையில் சென்றது.

மீண்டும் வழிக்கு வந்தது. இப்பொழுது நடராஜனும், நல்லி செட்டியாரும் பேசவேண்டும். நடராஜன் நேற்றுதான் தில்லியில் இருந்தாராம். இன்று திருப்பூரில் இருக்கவேண்டும். நடுவே நாகேஷின் புத்தகத்தை வெளியிடவேண்டும். கஷ்டம்தான். இலக்கியம் வளர்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லையே? திடீரென டாக்டர் அய்யா பத்மஸ்ரீ டாக்டர் நல்லி செட்டியாருக்கு 'பல்கலை பாதுகாவலர்' என்ற பட்டத்தைத் தந்தார். அந்தப் பட்டம் எழுதிய பட்டயத்தை அவர் படித்துத் தர, செட்டியாரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். அவ்வப்போது டாக்டர் கூடியிருந்த கூட்டத்தை நன்றாகக் கைதட்டுமாறு கடிந்துகொண்டிருந்தார்.

நடராஜன் பேச்சின்போது எழுத்தாளர்கள் எவ்வாறு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க இந்த விருதுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதைத் தான் நன்றாக உணர்ந்திருப்பதாகவும், தானும் முதல்வர் எம்.ஜி.ஆர் கையால் இப்படி ஒரு முதல் பரிசு வாங்கும்போது வள்ளுவர் கோட்டத்தில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தது ஞாபகத்தில் வருகிறது என்றும், இன்னமும் சற்று பொறுத்துக்கொள்ளுங்கள், விருது வந்துகொண்டே இருக்கிறது என்றும் சொன்னார். மற்றொரு முக்கியமான விஷயம்: நடராஜன் தூரதர்ஷன் தவிர வேறெந்த தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லையாம். அதனால் பா.ராகவனின் கெட்டிமேளம் சீரியலைப் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். கெட்டிமேளம் பார்க்காவிட்டால் யாருக்கும் குறையொன்றுமில்லை. ஆனால் தூரதர்ஷனைப் பார்த்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடாதோ?

நல்லி செட்டியார் தங்கள் வீட்டில் எந்த பிராண்ட் உள்ளாடைகள் வாங்கிவந்தோம் என்று விளக்கினார். பின் அந்த பிராண்ட் நிறுவனம் உள்ளாடைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாம். அதனால் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் உள்ளாடைகளை வாங்க ஆரம்பித்தார்களாம். அப்படி நெருக்கமானதாம் திருப்பூர் அவருக்கு.

எனக்கும் கூடத்தான்.

அடுத்து 2003, 2004 நடுவர்கள் தங்கள் கருத்துகளைப் பற்றிப் பேச வேண்டும். இரா.முருகன், பா.ராகவன் இருவரும் அன்று இரவே புறப்படுவதற்காக டிக்கெட் வாங்கி வைத்திருந்தனர். போனவுடனே விருதைக் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று இவர்கள் எப்படி நினைக்கலாம்? முருகன் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அவருக்கு பதில் என்னை விருதை வாங்கச்சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ராகவனுக்கு அதற்குப் பிந்தைய ரயில்தான். அதனால் இன்னமும் சிறிது நேரம் பொறுத்திருந்தார்.

2004 நடுவர் குழுவின் தலைவர் செ.கணேசலிங்கம் பேசினார். தங்களிடம் வந்திருந்த புத்தகங்கள், அந்தப் புத்தகங்களைப் பற்றிய பார்வை என்று - அந்த மாலையில் ஒரே உருப்படியான பேச்சு இவரிடமிருந்துதான் வந்தது. நிரம்ப வயதாகிவிட்டது அவருக்கு. அவர் பேசிய இலங்கை accent பலருக்குப் புரியவில்லை. மேலும் இவர் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதால் பலருக்கும் அலுப்பாக இருந்தது. மேடையில் அமர்ந்திருந்த சில கனவான்கள் துண்டுச் சீட்டு கொடுத்து இவரை சீக்கிரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளச் சொல்லியதாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் நினைத்தது தவறாகவும் இருக்கலாம். ஆனால் கணேசலிங்கம் தான் சொல்ல வந்ததைப் பொறுமையாகச் சொன்னார். நன்றாகச் சொன்னார். ஒரு ஐந்து பேராவது அவர் சொன்னதை விரும்பிக் கேட்டிருப்போம். பேச்சை முடித்து அவர் மெதுவாக இறங்கி வந்து தண்ணீர் குடிக்கப் போனார். அப்பொழுது அவரிடம் சென்று எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். அவர் எழுதி வைத்திருந்த தாள்களை ராகவன் வாங்கிக்கொண்டார். ஒரே பிரதிதான் இருக்கிறது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார் கணேசலிங்கம்.

அடுத்து இன்னமும் சில நடுவர்கள் பேசி முடிக்க, ஒருவழியாக பரிசு வழங்கல்.

இரா.முருகனுக்குப் பதில் நான் மேடையேற, தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூட்டுதான், சால்வை எல்லாம் வேண்டாம், போட்டோவும் வேண்டாம்" என்று சற்று சத்தமாகவே சொன்னார். பாவம் முருகன், எல்லோருக்கும் கிடைத்த சால்வை, இவருக்குக் கிடைக்காமல் போனது.

விழா இனிதே நடந்து முடிந்தது.

17 comments:

  1. Badri,
    This is hilarious stuff!! laughed many times while reading this ...your writing is getting better and better...keep it up!!

    ReplyDelete
  2. //கெட்டிமேளம் பார்க்காவிட்டால் யாருக்கும் குறையொன்றுமில்லை. ஆனால் தூரதர்ஷனைப் பார்த்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடாதோ?
    //

    :))

    ReplyDelete
  3. பத்ரி,

    ஃபுல் ஃபார்மில் இருக்கிறீர்கள் போல..

    ReplyDelete
  4. இரா.முருகனுக்குப் பதில் நான் மேடையேற, தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூட்டுதான், சால்வை எல்லாம் வேண்டாம், போட்டோவும் வேண்டாம்" என்று சற்று சத்தமாகவே சொன்னார். பாவம் முருகன், எல்லோருக்கும் கிடைத்த சால்வை, இவருக்குக் கிடைக்காமல் போனது.

    விழா இனிதே நடந்து முடிந்தது.

    i understand their respect and regards for authors :)
    :)

    ReplyDelete
  5. அவர் எழுதி வைத்திருந்த தாள்களை ராகவன் வாங்கிக்கொண்டார். ஒரே பிரதிதான் இருக்கிறது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார் கணேசலிங்கம்.

    ithu point

    ReplyDelete
  6. //எனக்கும் கூடத்தான்.//

    எனக்கும் கூடத்தான். :-)

    ReplyDelete
  7. Badri,
    This is one of the best description of some of Award ceremonies in India especially Tamilnadu. Very good write up!

    ReplyDelete
  8. வயிறு வலிக்க சிரித்தேன்.
    .:dYNo:.

    ReplyDelete
  9. >>>
    திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலர் முறையே டாக்டர், ஆடிட்டர் ஆகியோர். எப்பொழுதாவதுதான் இவர்களது பெயர்களைச் சொல்கிறார்கள். மற்றபடி இவர்கள் டாக்டர் அய்யா, ஆடிட்டர் அய்யா ஆகியோர்தான். சில சமயம் தணிக்கையாளர் அய்யா அவர்கள்.
    >>>>
    பெயரைச் சொல்வது மரியாதைக்குறைவு என்பது தமிழ்(இந்திய?) "மரபு" தானே? அதெப்படி மாறும்னு எதிர்பார்க்கறீங்க?
    ஐயா இல்லேன்னா இருக்கவே இருக்கு "ஸார்", அடப்போங்க பத்ரி ஸார் :-)

    >>>
    காலையில் பேசியவர்கள் பலரும் எப்படி டாக்டரும் ஆடிட்டரும் தம் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, அதனால் கிடைக்கும் காசையெல்லாம் விட்டுவிட்டு இப்படி தமிழ் இலக்கியத்துக்குச் சேவை ஆற்றுகின்றனர் என்று பேசினர்.
    >>>>
    இப்டியெல்லாம் பேசலேன்னா அடுத்த விழாவுக்கு இந்த ஐயாக்கள் எல்லாம் எப்டி வருவாங்க? :-)

    >>>
    நல்லி செட்டியார் தங்கள் வீட்டில் எந்த பிராண்ட் உள்ளாடைகள் வாங்கிவந்தோம் என்று விளக்கினார். பின் அந்த பிராண்ட் நிறுவனம் உள்ளாடைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாம். அதனால் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் உள்ளாடைகளை வாங்க ஆரம்பித்தார்களாம். அப்படி நெருக்கமானதாம் திருப்பூர் அவருக்கு.
    >>>
    ரொம்ப நெருக்கம் :-)

    தமிழ்நாட்டு மக்கள்ல 90%க்கும் மேல திருப்பூரோட நெருக்கம் இருக்கணும் :-)


    [கொஞ்ச நாளா பின்னிப் பெடலெடுக்கிறீங்க. நடத்துங்க.]

    ReplyDelete
  10. உண்மையைச் சொல்லணுமுன்னா, இந்தப் பதிவை வெளியே கிளம்பற அவசரத்துலே தலைப்பை மட்டும் படிச்சுட்டு, தெரிஞ்ச கதைதானே, என்ன பெரிசா எழுதியிருக்கப் போறீங்க... வந்தாங்க, விருது குடுத்தாங்க, போனாங்கன்னு matter-of-fact ஆ எழுதியிருப்பீங்கன்னு நெனைச்சு, முழுசா படிக்காமலேயே போயிட்டேன். இப்பத்தான் படிச்சேன். ஆனாலும் நக்கல் ஜாஸ்திங்கோ...

    ReplyDelete
  11. //மேலும் இவர் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதால் பலருக்கும் அலுப்பாக இருந்தது//
    இது.. இது இலக்கிய விழா..
    வாழ்த்துக்கள்..அதுவா வருது.. பார்த்தேன்.படித்தேன்.ரசித்தேன்.சிரித்தேன்.

    ReplyDelete
  12. ஹி ஹி இதையும் பார்த்து கொஞ்சம் சிரியுங்க.
    http://peyarili.blogdrive.com/archive/cm-07_cy-2005_m-07_d-17_y-2005_o-0.html

    ReplyDelete
  13. Vaangu Vaangunnu vaangeeteenga. I couldn't stop laughing :)

    ReplyDelete
  14. // தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூட்டுதான், சால்வை எல்லாம் வேண்டாம், போட்டோவும் வேண்டாம்" என்று சற்று சத்தமாகவே சொன்னார். // தலைவர் டாக்டர் அய்யானாலே இப்படித்தான் போல

    ReplyDelete
  15. Have a nice meeting at tirupur.But i miss it.nandrarka eluthiyullirgal.
    thank u
    By
    P.Radha Krishnan.

    ReplyDelete
  16. அன்புள்ள பத்ரி,

    படித்தேன், ரசித்தேன், இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  17. பத்மஸ்ரீ, டாக்டர், நல்லி குப்புசாமி செட்டியார், ஏ.நடராஜன் குழுவினர் தலைமையில் விழா. இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் இலக்கிய விழாக்களே நடைபெறாது போலிருக்கிறது.

    How True :-)

    ReplyDelete