Monday, August 22, 2005

சென்னைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று சென்னைக்குப் பிறந்தநாள்! ஆமாம்... 1639, ஆகஸ்ட் 22 அன்று விஜயநகர அரசிடமிருந்து சில இடங்களை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி வாடகைக்கு எடுத்துக்கொள்வதற்காக, விஜயநகர ஆட்சியின் கவர்னரும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆண்டிரு கோஹெனும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி இப்பொழுது ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தில் சுமார் மூன்று ஸ்கொயர் மைல் அளவுள்ள இடம் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கிடைத்தது. தொடர்ந்து சில மாதங்கள் வேலைகளுக்குப் பின்னர் ஏப்ரல் 1640-ல் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் உருவானது (சிறிய அளவில்).

அதன்பின் சிறிது சிறிதாகச் சென்னை மாநகரம் உருவானது. சென்னை வரலாற்றாளர் முத்தையாவின் பார்வையில் நவீன இந்தியாவே இந்தச் சமயத்திலிருந்துதான் தொடங்குகிறது.

இந்த நாளை முன்னிட்டு சென்னை ஆல் இந்தியா ரேடியோ 107.1 MHz பண்பலை வானொலியில் சென்னையின் வரலாறு பற்றி இன்று காலை சிலருடன் நேர்காணல்கள் நடந்தன. வரலாற்றாளர் எஸ்.முத்தையா, கிரிக்கெட் (தமிழ்) வானொலி வர்ணனையாளரும் ஓய்வு பெற்ற இ.ஆ.ப-வுமான வி.ராமமூர்த்தி, எழுத்தாளர் மூ.சு.சம்பந்தம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் வின்செண்ட் டிசோசா ஆகியோர் பேசினர். (இடையிடையே அபத்தமான தமிழ் சினிமாப் பாடல்களும் சில விளம்பரங்களும் வந்தன, அவற்றைத் தணிக்கை செய்து விட்டேன்.) இந்த நேர்காணல்களில் அசோகமித்திரனும் பங்குபெறுவதாக இருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக எங்கோ சென்றுள்ளார். (எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசன அரங்கிலும் பங்குபெறுவதாக இருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார்.)

நேர்காணல் ஒலித்துண்டு (4.2 MB, 35 நிமிடங்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், ஆல் இந்தியா ரேடியோவிடம் அனுமதி பெறாமல் இங்கு இடுகிறேன்.)

5 comments:

  1. எங்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், சென்னை!!!!

    என்றும் அன்புடன்,
    துளசி

    ReplyDelete
  2. எழுத வேண்டுமென்று நினைத்திருந்தது. சென்னையின் வரலாற்றினை என் பன்னூடக ப்ரொஜெக்டிற்காக ஆய்ந்திருந்தேன். சென்னையின் வரலாறு இன்னமும், சிதறி கிடக்கும் வரலாறு. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்டுரூ கோஹென் இருவர் தான் சென்னையினை விஜய நகர பேராசிடமிருந்து வாங்கினார்கள். அப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருந்த இடத்தின் குத்தகையாளன் பெயர் சென்னப்ப நாயகன். அவருடைய பெயரில் உருவாக்கப்பட்டது தான் சென்னப் பட்டினம். இன்றைக்கு "பார்க் ஹோட்டல்" இருக்குமிடத்தில் தான், பிரபலமான சந்திரலேகா முரசு நடனம் எடுத்தார்கள். கோட்டையினுள் ஒரு ம்யுசியம் இருக்கிறது. அங்கே படமெடுக்க அனுமதியில்லை. அதனால், ஒரு ஒவியரோடு போய் உட்கார்ந்து மொத்தத்தையும் வரைந்து கொண்டு வந்தோம். ம்ஹூம் அது ஒரு கனாக் காலம். இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம், சென்னைப் பற்றி. ரிட்டையர் ஆனவுடன் முழுமையாக ஒரு வரலாறு எழுதும் எண்ணமிருக்கிறது. பார்ப்போம் ;-)

    ReplyDelete
  3. சொல்ல மறந்தது. உங்கள் அலுவலகத்தின் அடுத்த் தெருவில் இருக்கும் தேவாலயம் தான் இந்தியாவில் இருக்கும் பழமையான கிறிஸ்துவ தேவாயங்களில் ஒன்று. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சென்னையின் சிறப்பு அதிலும் உண்டு. போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட சர்ச் அது.

    சென்னையின் வரலாறு என்பது இன்றைய வடசென்னையின் தான் தொடங்கும். ஒத்தவாடை சாலை (wall tax road) சென்ட்ரலுக்கு அருகில் மூத்திர நாற்றமடிக்கும் சாலைதான், முதலில் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்ட இடம். பிரபுகளும், வெள்ளை அம்மணிகளும் கோட்டையில் நடனமாடுகையில், மறுநாள் காலை துணி தோய்க்கும் "கறுப்பர்கள்" இருந்த இடம் தான் இன்றைய வால்டாக்ஸ் சாலை. நானிருந்த கொண்டித்தோப்பு ஒரு காலத்தில் குதிரைலாயமாக இருந்தது என்று பல்கலைக் கழக நூலகத்தில் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. சென்னை ஏன் மதறாஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?

    ReplyDelete
  5. வெள்ளையன் தமிழனை யூ மேட் ராஸ்கல் என்திட்டியிருப்பான்(வைது)

    என்னார்

    ReplyDelete