இவையெல்லாம் சொந்த வாழ்க்கைக்கு. தொழில் வாழ்க்கை சமாசாரங்கள் நாளை.
1. உடலைக் குறைத்தல்
இந்த ஆண்டு டார்கெட் 67 கிலோ. உடல் நலம் மட்டும் காரணமல்ல. குண்டானவர்கள் எந்த அளவுக்கு இந்த சமுதாயத்தின் வளங்கள்மீது அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பது திகிலடைய வைக்கிறது.
கடந்த சில தினங்களாக சென்னையின் குண்டு ஆண்களையும் பெண்களையும் பார்த்து திகிலடைந்துள்ளேன். ஆனால் இந்த குண்டர்கள் நகரங்களில்தான் உள்ளனர். கிராமங்களின் வத்தக்காய்ச்சிகள்தான். என் நண்பர் ஒருவரிடம் நாங்கள் கொண்டுவந்துள்ள குழந்தைகள் புத்தகம் ஒன்றைக் காட்டினேன். அதில் விக்கி என்ற குண்டுப்பையன் கேரக்டர் வருகிறது. அவர் சொன்னார்: “கிராமச் சிறுவர்களுக்கு இதுபோன்ற கேரக்டர்கள் அந்நியம். அவர்கள் யாருமே குண்டாக இருப்பதில்லை.” ஓரிரு விலக்குகள் இருந்தாலும் பெரும்பாலும் இது உண்மையே.
ஹார்மோன் பிரச்னை இல்லாமல், தின்பதால் மட்டுமே குண்டாகும், குண்டர்கள் அதிக உணவை மட்டுமல்ல, அதிகப் பெட்ரோலைச் சாப்பிடுகிறார்கள். அதிக மின்சாரத்தை விழுங்குகிறார்கள். எதிர்காலச் சந்ததியினரிடமிருந்து அதிகம் திருடுகிறார்கள். அவர்களது வேலைத் திறன் நிச்சயம் மோசமாகத்தான் இருக்கும்.
நான் அதிகம் தின்றுவிட்டு, அங்கும் இங்கும் ஓடி, ஜிம் சென்று உடலைக் குறைக்கப் போவதில்லை. உணவு உட்கொள்ளுதலை கடந்த சில மாதங்களில் வெகுவாக மாற்றி அமைத்துள்ளேன். இதைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
2. பெட்ரோலைக் குறைத்தல்
பெட்ரோல் விலை சரசரவென ஏற்றம் கண்ட சில மாதங்களுக்குமுன் எடுத்த முடிவு, காரைப் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைப்பது. இப்போது தினம் ஸ்கூட்டர்தான். அதிலும் சில மாற்றங்கள் செய்யவேண்டும். குளிர்காலம் முடிந்ததும் சைக்கிளைப் பயன்படுத்தலாம் என்று எண்ணம். லாப்டாப்பை வைத்துக்கொண்டு வருமாறு வசதிகள் கொண்ட ஒரு நல்ல சைக்கிள் வாங்கவேண்டும்.
சில நீண்டதூரப் பயணங்களுக்கு காரை எடுத்துச் சென்றுள்ளேன். இனி அது எப்போதும் கிடையாது. பஸ் அல்லது ரயில். தேவை என்றால் மட்டுமே விமானம்.
உள்ளூரில் விடுமுறை தினங்களில் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்குச் செல்ல, மாநகரப் பேருந்து அல்லது மின்ரயிலைப் பயன்படுத்துதல்.
பெட்ரோல் விலை கணிசமாகக் குறைந்தாலும் மேற்கண்டவற்றைச் செய்யவேண்டும் என்ற முடிவு.
3. மாணவர்களுடன் உறவாடுதல்
கடந்த சில தினங்களில் சில பள்ளிக்கூடங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் பேசிவருகிறேன். இதனை அதிகப்படுத்தவேண்டும். மாதம் குறைந்தது இரண்டு முறையாவது ஏதேனும் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் பேசவேண்டும்.
வரும் ஆண்டு, அறிவியல், கணிதம் பயிற்றுவித்தல் தொடர்பாக (எப்படிப் பயிற்றுவித்தால் பள்ளி மாணவர்கள் சுவாரசியமாகக் கற்பார்கள் என்று) சில பள்ளிக்கூடங்களில் சோதனை செய்ய உள்ளேன்.
4. பத்திரிகைகளுக்கு எழுதுதல்
அம்ருதா மாத இதழில் அறிவியல் பத்தி எழுத ஆரம்பித்துள்ளேன். இரண்டு எழுதியுள்ளேன். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் எழுத உத்தேசம். இது தவிர, ப்ராடிஜி மேதை (உள்நாட்டுப் பத்திரிகை - பள்ளி மாணவர்களுக்கானது) தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அறிவியல் கட்டுரைகள் எழுதப்போகிறேன்.
முடிந்தால் இதைச் சற்றே அதிகமாக்கவேண்டும்.
5. புத்தகம் எழுதுதல், மொழிபெயர்ப்பு
புத்தகம் எழுதுவதில் ஆர்வம் இல்லை. மொழிபெயர்ப்பில்தான் அதிக ஆர்வம் உள்ளது. 2009-ல் சில சுவாரசியமான புத்தகங்களை மொழிபெயர்க்கப் போகிறேன். ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டேன். சில ப்ராடிஜி புத்தகங்கள் எழுதலாம். சில மினிமேக்ஸ் புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவுதான்.
6. புதிய இந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல், இந்தியைத் தூசு தட்டுதல்
இது வெகு நாள்களாக நடக்காமல் இருக்கும் ஓர் ஆசை. தீவிரமான முயற்சிகள் எடுக்க வாய்ப்புகள் சென்னையில் இல்லை. மலையாளமா, தெலுங்கா என்று உடனடியாக முடிவெடுத்து, மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் ஏதேனும் இருந்தால் போகவேண்டும்.
தெலுங்கு அல்லது மலையாளம் கற்றுத்தரும் (படிக்க, எழுத, பேச) வகுப்புகள் சென்னையில் இருந்தால் யாராவது தெரியப்படுத்தவும்.
எப்போதே படித்து மறந்துபோன இந்தியைக் கொஞ்சம் மேம்படுத்தவேண்டும். இப்போது தொலைக்காட்சிச் செய்திகள், சினிமா ஆகியவற்றை மட்டும்தான் பின்பற்ற முடிகிறது. படிக்க முடியும். பேச சுத்தமாக முடியாத நிலை. டில்லியிலோ மும்பையிலோ ஆட்டோ, டாக்ஸி ஆட்களுடன் ஏதோ நாலு வார்த்தை பேசினால் உண்டு. உருப்படியாகப் படிக்க ஆரம்பித்துவிட்டால் மீண்டும் பேசுவது அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்று நினைக்கிறேன்.
7. கர்நாடக இசையைப் புரிந்துகொள்ளுதல்
சும்மா தலையாட்டிக்கொண்டு இருக்காமல், ராகத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதில் இறங்குவது. கொஞ்சம் மேற்கொண்டு இசையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது.
8. சென்னைக்கு வெளியே தமிழகத்தைச் சுற்றி வருவது
குறைந்தது 10 மாவட்டத் தலைநகரங்கள், 20 சிறு நகரங்கள் கிராமங்களுக்கு 2009-ல் போய்வரவேண்டும்.
என்ன ஏது என்ற இலக்கில்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருதல்.
9. கணிதம், அறிவியலுக்கான வலைப்பதிவு (தனி + கூட்டு) - கணிதச் சமன்பாடுகளுடன் கூடியதாக உருவாக்கி, எழுதுதல்.
ஏற்கெனவே தொடங்கி, வடிவம் சரியாக வராததால் தங்கி நிற்கிறது. இந்த ஆண்டு அதனை நிச்சயமாகச் சரி செய்து எழுதுவேன்.
10. ஆங்கில வலைப்பதிவுக்கு மறுவாழ்வு தருவது
ஒட்டுமொத்தமாகக் கைவிட்டுவிட்ட ஆங்கில வலைப்பதிவை உருப்படியாக்கி, சில குறிப்பிட்ட விஷயங்களைத் தொடர்ந்து எழுதுவது. முக்கியமாக தமிழக அரசியல், கல்வி போன்றவை தொடர்பாக, தொடர்ந்து எழுதுவது.
Wednesday, December 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் பத்ரி
ReplyDelete//உணவு உட்கொள்ளுதலை கடந்த சில மாதங்களில் வெகுவாக மாற்றி அமைத்துள்ளேன்.//
ReplyDeleteதயவு செய்து பகிர்ந்து கொள்ள முடியுமா? தனி மடலிலாவது!
அன்புடன்
வெங்கட்ரமணன்
மிகவும் நல்ல கருத்துக்கள்...
ReplyDeleteநானும் ஒரு To Do List போட வேண்டும்.
உங்கள் எண்ணங்கள் செயலாகிட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் எடைகுறைப்பில் ஈடுபட போகிறேன் :-))
//உணவு உட்கொள்ளுதலை கடந்த சில மாதங்களில் வெகுவாக மாற்றி அமைத்துள்ளேன்.//
ReplyDeleteஒரு வேண்டுகோள்
அதையும் ஒரு பதிவாகவே வெளியிடலாமே.
Really an impressive list....i would rather think of investing in a good back pack specialised for carrying laptops while biking...carrying the laptop on bicycle has ruined one of mine!
ReplyDeleteஇவையெல்லாம் உங்கள் பிசினசை ஒட்டி தான் உள்ளன. குடும்பத்தை... குழந்தைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteஉதாரணம், மனைவி குழந்தைகளுடன் சில மணி நேரம் தினமும் செலவிடுவது!
நல்ல உறுதிமொழிகள் பத்ரி. உறுதி மொழிகள் ஒன்றும் இரண்டும் மிகவும் அருமை. எட்டவாதை நானும் முயன்று பார்ப்பேன்.
ReplyDeleteBadri, nice resolutions, wishing you all the best for the coming new year.
ReplyDeleteI will get back to You next Year, marked this Note at my Oraganiser..
ReplyDeleteபத்ரி,
ReplyDelete1)சுவாச பயிற்ச்சி 20 நிமிடமாவது செய்யவும் (காற்று).
2) 3-4 லிட்டர் தண்ணிர் தினமும் அருந்தவும் (நீர்).
3) உடல் வெட்பம் 98.7 லிருந்து மாறாமல் இருக்கு மாறு பார்த்துக் கொள்ளவும். 1),2)& யோக பயிற்ச்சி இதற்கு உதவும்.(நெருப்பு)
4)அ) உணவு விடுதியிலிருந்து வாங்கி உண்பதை கண்டிப்பாக நிருத்தவும்.
ஆ) பச்சை காய்கறிகளும், பழங்களும் 80%மும், இதர உணவுகள் 20% இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
இ) சர்கரை, மைதா மாவு போன்றவற்றை முழுவதுமாக தவிர்கவும்.
(பூமி)
5)அ) வயிறு குலுங்க 20 நிமிடம் சிரிக்கவும்.
ஆ) தியானம் 20 நிமிடமாவது செய்யவும்.
இ) 65%க்கு மேல் வயிற்றை நிரப்ப வேண்டாம்.
ஈ) நல்ல எண்ணங்களில் மனதை திசை திருப்பவும்.
(ஆகாயம்)
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே அதை சரியாக பராமரிப்பதன் மூலம் நம் உடலை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் பத்ரி! நல்ல உறுதிமொழிகள். பெட்ரோலின் உபயோகத்தைக் குறைக்க நானும் முயற்சிக்க வேண்டும். மிக அருகில் இருக்கக் கூடிய இடங்களுக்குக் கூட வண்டியில் செல்வது வழக்கமாகி விட்டது.
ReplyDeleteமிக நல்ல பயனுள்ள உறுதிமொழிகள், யோசித்து எடுத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது :)
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!
முதலில் உங்களுக்கும், உற்றாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். அத்தனையும் அருமையான விசயங்கள் பத்ரி! அதிலும் சில விசயங்கள் எனது "புத்தாண்டு ஆர்வங்கள்" -ஓடு ஒத்துப்போகிறது! ( உறுதிமொழி என்பது சிறிது லா ஆஃப் ரிவர்ஸ் எஃபக்ட் ஓடு சன்னமான சம்பந்தம் கொண்ட வார்த்தை என்று ஒரு சில உளவியலாளர்கள் சொல்வது உண்டு!)
ReplyDeleteஎன்னவற்றில் சில..
1. கிடார் க்ளாசை தொடர்வது
2. B# க்கும் C Note க்கும் காதால் வித்தியாசம் காண/ சாரி கேட்க பழகுதல்!
3. காருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஓய்வு கொடுத்தல் ( பொருளாதாரம் + இயற்கை மாசுபாடு காரணங்கள்)
4. ஒரு ஆளுக்காக காலை மற்றும் மாலை ரோட்டில் சுமாராக 40 சதுர அடியை காரால் ஆக்கிரமிக்காமல் பேருந்தில் 4 சதுர அடி மட்டுமே ஆக்கிரமித்து அலுவலகம் பயணித்தல்! (இடப்பிரச்சினை + பொருளாதாரம்)
5. விடுபட்ட ஆங்கில வலைப்பதிவு மற்றும் யாகூ குழுமங்களில் எழுதுவது மூலம் சிறுது புது சுவாசம் + உறவு புதிப்பித்தல்
6. ஓசோ டைனமிக் தியானம் ( உங்கள் எடைக்குறைப்பு 3 மாதத்தில் சாத்தியம்! நமது மனவழுத்தங்கள் கூட இலகுவாகிவிடும்!)
7. விட்டுப்போன ட்ரெக்கிங் வாக் குரூப் நண்பர்களை மீண்டும் சந்த்தித்து நடத்தல் (உங்கள் கிராமப் பயணம் போல!)
8. துக்கடா பதிவுகளுக்கு ஓய்வுகொடுத்து மின்னூல் புத்தகம் ஒன்றாவது எழுதுதல் ( அறிவியல் பொருளாதார சமூக ஃபியூடிரிஸ்டிக் ..தமிழில் என்ன!? கதையாக அது இருக்கலாம்!
அன்புடன்
ஓசை செல்லா
//உள்ளூரில் விடுமுறை தினங்களில் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்குச் செல்ல, மாநகரப் பேருந்து அல்லது மின்ரயிலைப் பயன்படுத்துதல்.//
ReplyDeleteஇது நல்ல யோசனை, நானும் தமிழகம் வரும்பொழுது போதிய நேரம் இருக்கும் பொழுதெல்லாம் பேருந்தையும், இரயிலையும் பயன்படுத்துவதுண்டு. நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திய காலங்களில் சென்னை நன்றாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வண்டிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது சென்னையை எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக்கி விட்டது. கூடுமானவரை மக்கள் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தால் எரிபொருள் நெருக்கடியையும், பொருட்செலவையும், போக்குவரத்து நெரிசல்களயும், சூழலியல் கேடுகளையும் தவிர்க்கலாம்.
வாழ்த்துகள் பத்ரி.
நன்றி - சொ.சங்கரபாண்டி
உங்கள் பதிப்பகம் குறும்படங்களுக்கும், ஆவணப்படங்களுக்கும் வினியோக உரிமை பெற்று விற்கலாம். வெளிநாட்டுத் தமிழர்கள் ஒரே இடத்தில் குறும்படங்களை வாங்க வசதியாக இருக்கும். புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇவற்றோடு இத்தனை விஷயங்களையும் நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள் என்பது குறித்த டிப்ஸ்களை வழங்கினால் மிக உபயோகமாக இருக்கும்.
ReplyDeleteஉதாரணமாக, பிரச்சினைகளை எப்படி கையாண்டீர்கள் என்பது பற்றிய விஷயங்கள் நாங்கள் பின்பற்ற லகுவாக இருக்கும்.
மாணவர்களுடன் entrepreneurship குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்.
ReplyDeleteசில சுவாரசியமான புத்தகங்களை மொழிபெயர்க்கப் போகிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி சார்.கீழ்கண்ட புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளனவா? இருந்தால் தெரிவியுங்கள்.இல்லை எனில் மொழிபெயர்க்கலாமே?
ஆறு பாகங்களாக பிரித்து எழுதப்பட்ட நிகொலஸ் கோபர்நிகஸின் புத்தகம்.(ஓஸியாண்டர் எழுதிய முகவுரையுடன்)
பூமி சூரியனை சுற்றுகிறது என்றதால் உயிருடன் கொளுத்தப்பட்ட "ஜியார்டினோ ப்ரூனோ" பற்றி தமிழில்
கலீலியோ,டைகொப்ராஹி,கெப்ளர்,நியூடன், ஆகியோர் பற்றிய நூல்.
இத்தாலியின் மாக்யவல்லி எழுதிய "இளவரசன்"(பிரின்ஸ்)
தாமஸ் பெயினின் "பொது அறிவு"( காமன் சென்ஸ்)
வில்லியம் காட்வின்னின் "அரசியல் நீதி"
தாமஸ் ராபர்ட் மால்தஸின் "மக்கள் தொகையின் தத்துவம்"
ஹென்றி டேவிட் தோரா அவர்களின் "சட்டமறுப்பு"
ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் அங்கிள் டோம்ஸ் கேபின்
ஹிட்லரின் மெயின் கேம்ப்
குண்டர்கள் பற்றி பேசும் பொழுது அவர்கள் வர வர நம் சமூகத்தில் தொழு நோயாளிகள் போல பாவிக்கப் படுகிறார்களோ என்று தோன்றுகிறது. இப்பதிவில் வெளிப்படுத்திய குண்டர்கள் பற்றிய சில விஷயங்கள் எனக்கு super size me என்ற ஆவண படத்தை நினைவுபடுத்தியது. அதில் ஒருவர் கேட்பார் "என்று நாம் குண்டானவர்களை புகைப்பவர்களுடன் ஒப்பிடுவோம் ?" அதே போல் கார்பன் புட்பிரிண்ட் என்று சொல்லாமல் சொல்லியுள்ள சில வலது சாய்வான எண்ணங்கள் இங்கு மறைமுகமாக தொணிப்பதில் ஆச்சரியமில்லை.
ReplyDelete***
சென்னையில் சைக்கிளில் செல்வது அவ்வளவாக சேப் ஆப்ஷன் கிடையாது. குறிப்பாக ஒரு நிறுவனத்தை நடத்துபவர் என்ற முறையில்...அதிலும் குளிர்காலத்தில் காலை வேளையில் பனியில்...
***
’சொந்த’ப் பட்டியலுக்கு நன்றி பத்ரி!
ReplyDeleteதொழில் வாழ்க்கை சமாசாரங்களைச் சொல்வதற்கு இன்னும் வேளை வரவில்லையோ? ;)
தொழில் - உள்சுற்றுக்கு ஒரு பட்டியல், வெளிச்சுற்றுக்கு ஒரு பட்டியல் என இரண்டு பட்டியல் உண்டு. ஆனால் இப்போதைக்கு புத்தக சீரிஸை முடித்துவிட்டுத்தான் அதை பதியப்போகிறேன்.
ReplyDeleteஎன்னுடைய இந்தப் பதிவு உங்களுக்கு உதவுமா என்று சொல்லவும்.
ReplyDeleteஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி?
http://simulationpadaippugal.blogspot.com/2006/12/blog-post_22.html
"7. கர்நாடக இசையைப் புரிந்துகொள்ளுதல்
சும்மா தலையாட்டிக்கொண்டு இருக்காமல், ராகத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதில் இறங்குவது. கொஞ்சம் மேற்கொண்டு இசையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது."