Sunday, March 01, 2009

நான் கடவுள்

சுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.

இசை பற்றி மிகவும் நுணுக்கமாகவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் கேட்டமட்டில் ஒரிஜினல் பாடல்களுக்கு இளையராஜாவின் இசை நன்றாகவே இருந்தது. குருட்டுப் பிச்சைக்காரி அம்சவல்லி பாடும்போது குரல் இயற்கையாக இல்லாமல் இருந்ததை நன்றாக இல்லை என்று சொல்லலாம் அல்லது பின்நவீனத்துவ அமர்க்களம் என்று சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் பார்வை.

திராவிடக் கருத்தாக்கத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது பலருக்கு இந்தப் படத்தின்மீது கோபம் வரும். நுணுக்கமான சில அரசியல், சமூகக் கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளனவோ என்று. உடனே பாலா, ஜெயமோகன் ஜாதிகள் பார்க்கப்படலாம். உதாரணத்துக்கு உடல் ஊனமுற்றவர்கள் தங்களுக்குள் ஒருவரையே - உடல் ஊனமில்லாதவரையே - சாமி என்று விழுந்து வேண்டுவார்கள். ஆனால் அந்த ‘சாமி’யே ஒரு கட்டத்தில், அம்சவல்லி வந்து கதறும்போது, ‘நான் சாமி இல்ல, அவந்தான் சாமி’ என்று வடநாட்டிலிருந்து வரும் ருத்ரனை (ஆர்யா - என்ன நகைமுரண்!:-) காண்பிப்பார். நாட்டார் தெய்வங்கள் காணாமல் போய், நாடு முழுமைக்குமான ஒற்றைக் கடவுள் வருவதைக் காண்பிப்பதாக ஆகுமல்லவா இது?

பலரும் சொல்வதைப் போல, இதை விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு கதை என்று என்னால் பார்க்கமுடியவில்லை. பிச்சைக்காரர்கள் இந்தப் படத்தைப் பொருத்தமட்டில் ஒரு prop. இதே இடத்தில் சராசரி தமிழ்ப் படம்/ ஹிந்திப் படத்தில் கிட்னி திருடுபவர்கள் (தி கிரேட் கஜினி), கஞ்சா கடத்துபவர்கள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தீவிரவாத (பெரும்பாலும் முஸ்லிமாக இருக்கவேண்டும்) பதர்கள் என்று இருக்கலாம். என்ன, கடைசியில் அவர்களை வதம் செய்யவேண்டும். அது போதும்.

ஆனால், இதனால் இந்தப் பிரச்னைக்கு எந்த விடிவும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் வாழும் ஊரில் இந்தக் கூத்து நடந்துகொண்டே இருக்கிறது. அந்த ஊரில் அரசியல்வாதிகள் யாருமே காணப்படவில்லையே? ஒன்று, அந்த ஊரில் அரசியல்வாதிகள் இருந்து அவர்களும் இதற்குக் கையாக இருக்கவேண்டும். அல்லது இதற்கு எதிராக இருக்கவேண்டும். அரசாங்கம் என்ற அமைப்பை இல்லாமல் காட்டும் சராசரித் தமிழ்ப் படமாகத்தான் இதுவும் இருக்கிறது.

காவலர்கள் யாரை எந்தப் பிரிவின்கீழ் கைது செய்து எந்த நீதிமன்றத்தின்முன் ஆஜர் செய்யலாம்? யார் அந்த வழக்குக்காக வாதாடவேண்டும்? நீதிமன்றக் காவல் (Judicial Custody) என்றால் என்ன? போலீஸ் கஸ்டடி என்றால் என்ன? போலீஸ் இன்ஸ்பெக்டர் கோர்ட் வந்து, பார்க்க செஷன்ஸ் நீதிபதி போலக்கூடத் தோற்றமளிக்காத ஒருவரிடம், “ஐயா, பாடி கிடைக்கலை, அதனால இந்தக் குத்தமே நடக்கலை” என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கலாமா? ஏன் விவாதங்களெல்லாம் நீதிபதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நடைபெறுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்பவர் டம்மியாகக் கூடக் கண்ணில் தென்படுவதில்லையே?

ஏதோ ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரை சும்மா போலீஸ் கையில் தூக்கிக்கொடுக்கிறார். போலீஸ் துணையோடு அந்த ஆசாமி ஜாலியாக தீர்த்தாடனம் போய், தலைகீழாக தவம் செய்து, தூள் கிளப்புகிறார். இந்தியாவில் எந்த ஊரில் இதெல்லாம் நடக்கும். பீகாரில்கூட கஷ்டம்.

பல நேரங்களில் இதுபோன்ற அபத்தக் காட்சி அமைப்புகள் ஒரு சீரியசான படத்தின்மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடுகின்றன. அந்த ஊரில் அந்தப் பத்து நாள்களில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் எந்த செய்தித்தாளின் நிருபரும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தினத்தந்தி நிருபர்கள் செய்தி சேகரிக்காத ஊரே கிடையாது. அதுவும் கொலை என்றால் அவர்களுக்கு அல்வா. படம் நடந்த காலகட்டத்தைச் சரியாக நான் கவனிக்கவில்லை. ஆனால் சிவாஜி கணேசன் இறப்புக்குப் பின் என்று புரிகிறது. அவர்கள் போட்ட ஆண்டுகளை சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் எப்படியும் 2001-க்குப் பிறகு. கேபிள் டிவி ஆசாமிகளே களத்தில் இறங்கி, “ஊரில் பயங்கரம். இமயமலைச் சாமியார் பிச்சைக்கார மாஃபியா ஆசாமிகளைக் கொன்று தண்டனை” என்று தலைப்புச் செய்தி சொல்லியிருப்பார்களே?

எனக்கு இவையெல்லாம்தான் எரிச்சல் தருகின்றன. என்னவோ “இவையெல்லாம் தமிழ் தெண்டப் பசங்களுக்குத் தேவையில்லை; நான் என் ‘கலை/வணிக’ காரணங்களுக்காக படம் எடுக்கிறேன். இஷ்டமிருந்தால் பார். லாஜிக்கெல்லாம் எதிர்பார்க்காதே. அந்த ஷாட் எப்படியிருந்தது. அதைப் பார்த்து அதிசயித்துவிட்டுப் போ. ஆஸ்கார் கொடு” என்ற ரேஞ்சுக்குத்தான் இவர்கள் நினைப்பார்கள் போல.

படத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.

டைரக்டர்கள், ஸ்லம்டாக் மில்லியனர் டேனி பாயிலைப் போல, தத்தம் திறமைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நம்மூரில் ஒரு ஃபேஷன். இது எந்தக் கலைப்பிதா சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய்ச்சேர்ந்தார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் கதை/திரைக்கதை/இயக்கம் என்றாவது ஓர் இயக்குனர் போட்டுக்கொள்ளவில்லை என்றால் அவர் பூஜ்யம் என்று தமிழர்கள் நினைத்துவிடுவார்கள் எனும் எண்ணம்.

வேறு யாராவது தேர்ந்த ஆளின் திரைக்கதையில் ஓட்டைகளை அடைத்து (என்ன அரசியல் இருந்தாலும் சரி), மேலும் நல்ல படமாக இதனை பாலா எடுத்திருக்கலாம்.

பொதுவாக, பகுத்தறிவுக்கு உட்படாத விஷயங்களைப் பற்றிச் சொல்லும் படங்களை அனைவரும் கவனத்துடனே அணுகவேண்டும். பிணத்தைப் புசிக்கும் அகோரிகள் எனக்கு அறுவருப்பை மட்டுமே உண்டுபண்ணுகிறார்கள். இதுபோன்றவை இன்னும் தொடர்ந்தால் அதை உடனடியாகத் தடுக்கவேண்டியது அரசின் கடமை. இறந்த உடலை இப்படி யாராவது தின்னப் போகிறார்கள் என்றால் அது இறந்தவரின் நினைவுக்குச் செய்யும் அவமரியாதை. பார்ஸிக்கள் உடல்களை பறவைகள் தின்ன என்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் இது சுற்றுப்புறத்தைக் கேடு செய்வது. அந்தப் பழக்கத்தையும் நிறுத்தவேண்டும். இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.

காசி போன்ற திறந்தவெளிச் சுடுகாடு எனக்கு அசிங்கத்தை மட்டும்தான் நினைவூட்டுகிறது. இந்தியா எங்கிலும் உள்ள மக்கள் பாவம், புண்ணியம், மோட்சம், நரகம் என்ற சில கட்டுக் கதைகளை நம்பி காசியில் போய்ச் சேர்ந்து புண்ணியம் தேடிக்கொள்வதாக நினைத்து, அந்த நகரத்தை ஒரு வசிக்கமுடியாத கேவலமான இடமாக மாற்றியுள்ளனர். என்றாவது ஒரு நாள், ஏதாவது ஓர் அரசு இந்தப் பழக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யும் தைரியத்தைப் பெறும் என்று நம்புவோம். காசிக்குச் சென்று ‘காரியம்’ செய்து முன்னோர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் அப்பாவிகளையும் அந்த தட்சணை கிடைத்தாலும் வாழ்வில் அதிகம் முன்னேறாத தரகர்களையும் பற்றி இங்கே பேசிப் பிரயோசனமில்லை.

கங்கை போன்ற நீர் ஆதாரத்தை - வாழ்வாதாரத்தை - அசிங்கமாக்கும் எந்தச் செயலையும் நாம் நிறுத்தவேண்டும்.

17 comments:

 1. நல்லவேளையா அடிக்கடி சினிமா மூலமா வரும் சிந்தனைகளையோ, விமர்சனங்களோ எழுதறது இல்ல பத்ரி நீங்க :)-

  ReplyDelete
 2. //படம் நடந்த காலகட்டத்தைச் சரியாக நான் கவனிக்கவில்லை.//

  அம்பானி செல்போன் விற்றப்பிறகு...

  ReplyDelete
 3. //படத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.//

  சாமி கும்பிடாதவர் பிரார்த்தித்தால், சாமி கேட்குமா? ;-)

  ஜெயமோகன் விடாமல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ( தொப்பி தொந்தி விகடன் மறக்கவில்லை போல) ... இப்போ ரஜினி .. அப்புறம் சின்ன பசங்க போடுற ஆட்டம் ( சிம்பு?) என்று சாடுவது, நல்லாவே இல்லை.

  ReplyDelete
 4. வாசித்தேன். நல்ல நுட்பமான பார்வை.

  ReplyDelete
 5. நிறைய பேர் படித்துப்பார்க்கும் உங்கள் தளத்தில் இப்படி ஒரு கருத்து வந்திருப்பது மகி்ழ்ச்சியாக இருக்கிறது பத்ரி!
  இந்தப் படத்தில் கலைநுணுக்கங்கள் பிரமாதமாக இருப்பது உண்மை தான்.ஆனால் சமூகப் பொறுப்பில்லையே !
  என் கவலை எல்லாம் இதற்கு நாலு அவார்டு வேறு கொடுத்து விடுவார்கள்,இப்படி படம் எடுத்தால் தான்அவார்டு கி்டைக்கும் என்று பல இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்களே என்பதுதான் !!

  ReplyDelete
 6. //“இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.”//

  //“இந்தியா எங்கிலும் உள்ள மக்கள் பாவம், புண்ணியம், மோட்சம், நரகம் என்ற சில கட்டுக் கதைகளை நம்பி காசியில் போய்ச் சேர்ந்து புண்ணியம் தேடிக்கொள்வதாக நினைத்து, அந்த நகரத்தை ஒரு வசிக்கமுடியாத கேவலமான இடமாக மாற்றியுள்ளனர். என்றாவது ஒரு நாள், ஏதாவது ஓர் அரசு இந்தப் பழக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யும் தைரியத்தைப் பெறும் என்று நம்புவோம். //

  //கங்கை போன்ற நீர் ஆதாரத்தை - வாழ்வாதாரத்தை - அசிங்கமாக்கும் எந்தச் செயலையும் நாம் நிறுத்தவேண்டும்.//

  எப்பொழுது திருந்தப்போகிறார்கள்? மூட நம்பிக்கைகளும் காட்டுமிராண்டித்தனமும் எப்பொழுது ஒழியும்.?

  கூவத்தை விட கங்கையை கேவலமாக ஆக்கியிருக்கிறார்கள்.

  இப்படிப்பட்டோர் இருக்கும் வரை, குடிதண்ணீருக்கு பெட்ரோலை விட அதிக விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும் !

  ReplyDelete
 7. நீங்கள் சொல்லுவது போல பாலா தன்னுடைய பங்கின் மீது அதிகம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்..
  இருந்தாலும் "அகோரி என்பவன் கொடூர செயல் உடையவன் என்றும்,இந்த நவீன யுகத்திலும் பலவீனமான மக்கள் அடிமை படுத்த படுகிறார்கள்" என்றும் ஓர் நிமிடத்தில் மனதில் ஆழமாக பதித்துள்ளார். இப்படிப்பட்ட கதா பாத்திரங்களை
  திரையில் கொண்டு வந்தந்தர்க்காகவே பாலாவை பாராட்ட வேண்டும்..
  விஜய் பிரசன்னா

  ReplyDelete
 8. //அம்பானி செல்போன் விற்றப்பிறகு...//

  !!!

  ReplyDelete
 9. காசி பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சிந்திக்கத்தக்க விஷயம்.
  நாகூர் ரூமி

  ReplyDelete
 10. //
  ஆனால் அந்த ‘சாமி’யே ஒரு கட்டத்தில், அம்சவல்லி வந்து கதறும்போது, ‘நான் சாமி இல்ல, அவந்தான் சாமி’ என்று வடநாட்டிலிருந்து வரும் ருத்ரனை (ஆர்யா - என்ன நகைமுரண்!:-) காண்பிப்பார். நாட்டார் தெய்வங்கள் காணாமல் போய், நாடு முழுமைக்குமான ஒற்றைக் கடவுள் வருவதைக் காண்பிப்பதாக ஆகுமல்லவா இது?
  //

  ஓ. திராவிட பிச்சைக்காரர்கள் ஆர்யா !! வைக் கும்பிடுவது பிரச்சனை என்கிறீர்களா ? என்ன கன்றாவி சார் இது.


  //
  இந்தப் படத்தில் கலைநுணுக்கங்கள் பிரமாதமாக இருப்பது உண்மை தான்.ஆனால் சமூகப் பொறுப்பில்லையே !
  //

  சமூகத்தைப் பற்றிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா ?
  படத்தில் சொல்லித்தான் மக்கள் உணரவேண்டும் என்ற அளவுக்கு மக்கள் என்ன முட்டாள்களா ?

  ஒரு ரூபாய் போட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகும் நமக்குப் பிச்சைக்காரர்களுக்கும் ஒரு உணர்வுண்டு, அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் ஆசா பாசம் உண்டு போன்ற விஷயங்களை புரியவைக்கிறார். எட்டாங்கிளாஸ் கூட தேர்ச்சிபெறாதவார்களுக்குப் புரியும் அளவுக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் படித்த படிப்பு உங்களை எப்படி முட்டாளாக்கியிருக்கிறது என்பதை உணரவும்.

  ReplyDelete
 11. //
  ிணத்தைப் புசிக்கும் அகோரிகள் எனக்கு அறுவருப்பை மட்டுமே உண்டுபண்ணுகிறார்கள். இதுபோன்றவை இன்னும் தொடர்ந்தால் அதை உடனடியாகத் தடுக்கவேண்டியது அரசின் கடமை.
  //

  அரசுக்கு வேறு வேலையே இல்லையா ?

  எனக்குப் பல்லிகளைக் கண்டாலே அறுவருப்பாக இருக்கிறது. அரசு பல்லிகளை எல்லாம் கண்ட இடத்தில் சுட உத்தரவு போடவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

  பிணங்களை கங்கையில் கொண்டு போய் ஆரைவேக்காடாக எரித்து நதியில் வீசுவது தவறு. அதை மக்கள் நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் தேவலை.

  ReplyDelete
 12. //இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.//
  சுஜாதாவை நினவிலிருத்திய சொற்பிரயோகம்!

  ReplyDelete
 13. //டைரக்டர்கள், ஸ்லம்டாக் மில்லியனர் டேனி பாயிலைப் போல, தத்தம் திறமைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.//

  Are you serious ? You were not able to find any flaws with the script and the direction in SDM ? What about the kids jumping out of the train exactly in front of taj mahal from mumbai and Jamaal after a night of violent interrogation turns out fresh and handsome for the game !! Not to mention the posh apartments they manage to live during the teens, who sold it to the teens ? :)

  I am not criticizing the movie, but questioning your reasons to suggest Bala to follow Danny Boyle. And also your belief that a person should focus on only one thing.

  ReplyDelete
 14. Pure nonsensical review.

  Not even in Bihar? What do you mean? The Week has done enough expose some years back how political criminals live a life of indulgence in and out of jails. This is a village where police officials fear curse of a powerful monk. Well...See the Mughal records to see how these subaltern Sadhus could evoke both respect and derision from authorities and also see British records ...British intelligence spent decades to 'exorcise' the influence of subaltern sadhus on peasants as they feared they were stirring unrest. The 'poli sammiar' imagery media people like you revel in was essentially creation of British police. Read if you find time the introductory chapter of 'Peasants and Monks in British India' by William Pinch (Oxford University Press) You will find that the court room drama - so diluted for general viewer consumption- does have a historical basis.

  As far as Kasi, well...do you have any empirical data as to how much the dead bodies are polluting the running water as against the modern day industrial sewage. And what the hell your secular establishment that is drooling over the money brought in by Hindu pilgrimages for now 70 years, is doing for the environment there? Have you gone to Kasi? Have you seen the Mahant there who was originally professor of Hydrology who has done yeomen service to protect environment for Kasi, by appealing to the traditional veneration Hindus have for Kasi? Have you read the Down to Earth magazine on Kasi?

  If you want to appease-tickle the anti-science Islamic fundamentalists then go ahead full steam by all means. But do not reveal your own hatred for Bala (i feel it is deep-rooted in bunch of you guys...i do not know the reason. i hope it is not caste.) who is trying to take Tamil cinema to another level. And he is not begging for Oscar as suggested by you not any more than Kizhakku is begging the govt for library orders (which I hope you don't)

  ReplyDelete
 15. மிகவும் குழம்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்கார் என்பது அமெரிக்கர்களால் தயாரிக்கப்படும் படங்களுக்கு அளிக்கப்படும் விருது. சிறந்த வேற்று நாட்டு படத்துக்கு ஒரே ஒரு விருது தான், அதுவும் சிறந்த வேற்று நாட்டு படம் என்ற ஒரு விருது மட்டுமே.

  பாலாவின் திறமையை Danny Boyle அவர்களின் திறமையோடு ஒப்பிட்டிருப்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் கடவுள் போன்றதொரு காவிய படைப்பை SDM போன்றொரு சாதாரண மசாலா படைப்போடு ஒப்பிடுவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

  thoughtsintamil என்றொரு தலைப்பை வைத்துவிட்டு இப்படி ஒரு விமர்சனமா?

  ReplyDelete
 16. Following is the program you have to run before giving any openion about a movie:

  if (the movie is appreciated by many people OR movie known to many people)

  if (the movie degrades hindus)
  print(MOVIE IS GOOD)
  elseif (the movie supports "minority")
  print(MOVIE IS GOOD)
  else
  print(MOVIE IS BAD)
  end

  elseif (movie NOT appreciated by many people OR movie NOT known to many people)
  if (the movie degrades hindus)
  print(MOVIE IS GOOD)
  elseif (the movie supports "minority")
  print(MOVIE IS GOOD)
  else
  print(MOVIE IS BAD)
  end

  else
  print(CANNOT DECIDE)
  end

  ReplyDelete
 17. உங்க விமர்சனம் நன்றாக இருந்தது

  ReplyDelete