நேற்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச், காவலர்கள்-வழக்கறிஞர்கள் அடிதடி பிரச்னையில் இடைக்காலத் தீர்ப்பாக இரு காவல்துறை உயரதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.
காவலர்கள் வழக்கறிஞர்கள்மீது தாக்குதல் நடத்தியதில், அதற்குக் காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால், இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பு ஏதும் இன்னும் வரவில்லை. வழக்கறிஞர்கள்மீது எனக்குத் தெரிந்து கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் உள்ளன:
1. வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, திறந்திருந்த கடை ஒன்றைக் கடுமையாகத் தாக்கி அங்குள்ள பொருள்களுக்குச் சேதம் விளைவித்தது. இதைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.
2. வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அந்தப் பக்கமாக வண்டியில் சென்ற ஒருவரை அடித்து நொறுக்கியது.
3. சுப்ரமணியம் சுவாமியை நீதிமன்றத்துக்குள் நுழைந்து நீதிபதிகள் முன்னிலையிலேயே தாக்கியது.
4. நீதிமன்ற வளாகத்தை தங்களது போராட்டங்களுக்காக abuse செய்தது. இதற்கான அனுமதியை எந்தக் கட்டத்திலும் தலைமை நீதிபதியிடம் பெறவில்லை.
5. சம்பவம் நடந்த அன்று, காவலர்களைக் கல்லால் அடித்துத் தாக்கியது.
6. நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்துக்குத் தீ வைத்தது; அங்குள்ள ஆவணங்களை எரித்தது.
7. அடிதடிப் பிரச்னைகளுக்குப் பின்னாலும், இந்த வாரம், டிராஃபிக் ராமசாமியைத் தாக்கியது.
8. நீதிமன்றத்துக்குப் பிறரைச் செல்லவிடாமல் தடுப்பது.
9. நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைப் படம் பிடிக்க வந்த புகைப்பட நிருபர்களைத் தாக்கியது.
10. இன்றுவரை வேலைக்குச் செல்லாமல், தமிழக அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் ஏதும் நடத்தாது, அடாவடியாக, தங்களுக்குத் தாங்களே சட்டம் என்றவகையில் சண்டியர்தனமாக நடந்துகொள்வது.
இதற்கு எதிராக, காவல்துறைமீதான குற்றச்சாட்டுகள்:
1. தலைமை நீதிபதி அனுமதி இல்லாமல் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தது.
2. வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டபிறகு, அவர்கள்மீது mild ஆன தாக்குதல் நடத்தாமல் கடுமையான தாக்குதல் நடத்தியது.
3. கலவரத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை மட்டும் கட்டுப்படுத்தாது, நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து அங்குள்ள பல அமைதியான வழக்கறிஞர்களைத் தாக்கி, வழக்கறிஞர்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியது.
ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை விளக்கமாக வழக்கறிஞர்களின் குற்றங்களை எடுத்துவைத்துள்ளது. அதன்மீது எந்த கவனத்தையும் செலுத்தாத சென்னை உயர்நீதிமன்றம், அதிரடியாக காவல்துறை உயரதிகாரிகள் இருவர்மீது மட்டும் பாய்ந்திருப்பது ஏனோ? வழக்கறிஞர்களிடம் என்ன பயம்? வழக்கறிஞர்கள்மீது ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா அல்லது அவர்கள் காலில் விழுந்து வணங்கி அவர்கள் கேட்பதை நீதிபதிகள் செய்துகொடுக்கப்போகிறார்களா?
மேலும் பணிநீக்க தண்டனை பெற்றுள்ள இரண்டு அதிகாரிகள்தான் இந்த அடிதடிக்குக் காரணமா அல்லது தங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளுக்காக இவர்களது பதவிகள் தியாகம் செய்யப்படுகின்றனவா? இந்த அடிதடியை காவல்துறை உயரதிகாரிகள் முன்னின்று செய்தனரா அல்லது அமைச்சர்கள்/முதலமைச்சர்/அமைச்சகச் செயலர்கள் அனுமதியுடன் அடிதடி நிகழ்த்தப்பட்டதா?
தமிழக (இந்திய) காவலர்கள், மக்களை நடத்தும்விதத்தில் மாறுதல் வரவேண்டும் என்று நம்புபவன் நான். காவல்துறையினர், மக்களிடம் பணிவாக, அன்பாக நடந்துகொள்ளவேண்டும். ஆனால் அடிதடி, கலவரத்தில் ஈடுபடுவோரிடம் கனிவாக எப்படி நடந்துகொள்வது? கலவரத்தில் ஈடுபடும் வக்கீல்களிடம் காவலர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? தங்கள்மீது கல் எறியும் வக்கீல்களை எப்படி நடத்தவேண்டும்? காவல் நிலையத்தைக் கொளுத்தும் வக்கீல்களை என்ன செய்யலாம்?
இதைப்பற்றியும் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்!
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
Good Post.
ReplyDeleteஎனக்குப் புரியவில்லை. இனி எங்கு பிரச்சனை இருந்தாலும் போலீஸ் தடியடி நடத்தக் கூடாதா?
ReplyDeleteபோலீஸ் நீதிமன்றத்திற்குள் நுழையக் கூடாது, சட்டக்கல்லூரிக்குள் நுழையக்கூடாது. வேறு எங்கு எல்லாம் நுழையக்கூடாது?
போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட், அப்போ கலவரம் பண்ணின வக்கீல்களுக்கு எல்லாம் ப்ரமோஷனா?
ரொம்பவே பாரபட்சமா இருக்கு. ரெண்டு தரப்பிலும் பிரச்சனை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?
நீதி துறையின் நடு நிலை மற்றும் நேர்மை மீது இருந்த நம்பிக்கை தொலைந்து போய் விட்டது
ReplyDeletehttp://www.thehindu.com/thehindu/gallery/0990/images/gallerypic2.jpg செயலில் ஈடுபடும் காவலர்களின் உயரதிகாரிகளை இடைநீக்கம் செய்யாமல் பாரத் ரத்னாவா தர முடியும்
ReplyDeleteபத்ரி, இலவசக்கொத்தனார், அனானி கருத்து கூறவும்