Saturday, March 28, 2009

ராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்

ராமச்சந்திர குஹா, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாளர்களில் ஒருவர். சூழலியல், இடதுசாரியம், கிரிக்கெட், அம்பேத்கர், காந்தி என அவரது ஆர்வம் பல திசைகளில் செல்வது. மத்தியப் பிரதேசத்தில் கோண்டு பழங்குடி மக்களிடையே வேலை செய்த வெர்ரியர் எல்வின் என்ற சூழலியலாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தியாவின் முதல் ‘தீண்டப்படாத’ கிரிக்கெட் வீரர் பல்வாங்கர் பாலு பற்றி விரிவாக எழுதியுள்ளார். தி ஹிந்து பத்திரிகையில் தொடர் பத்திகள், கொல்கத்தா டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளிலும் பத்திகள் எழுதிவருபவர்.

கல்வித்துறைக்குள்ளாக மட்டுமே இருந்தவந்த குஹா சமீப காலமாக தொலைக்காட்சிகளில் இந்திய கலாசாரம், வரலாறு போன்ற பலவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கல்வித்துறைக்கு வெளியேயான பொதுமக்களுக்கு என இவர் எழுதிய மாபெரும் புத்தகம் India After Gandhi என்ற சமகால இந்தியாவைப் பற்றிய வரலாற்று நூல். ஆங்கிலத்தில் சக்கைப்போடு போடும் இந்நூல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது குஹா எழுதிவரும் புத்தகம் காந்தியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல். காந்தியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி நிறையவே எழுதியுள்ளார். ஆனால் குஹாவின் பார்வையும் எழுத்தும் அதை நிச்சயம் மிஞ்சும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 2004-ல், சென்னையில் குஹா காந்தி பற்றி ஆற்றிய உரையை இரண்டு பாகங்களாக வலைப்பதிவில் எழுதியிருந்தேன் [ஒன்று | இரண்டு].

இவர் எழுதிவரும் காந்தி புத்தகம் இரண்டு பாகங்களாக வெளியாகுமாம். முதல் பாகம் 2012-ல், இரண்டாம் பாகம் 2015-ல்! அதை யார் பதிப்பிப்பது என்பதில் கடுமையான போட்டி. இவருடைய பழைய புத்தகங்களையும் சேர்த்து, மொத்தமாகப் பதிப்பிப்பதற்கு ஹார்ப்பர் கால்லின்ஸ் இந்தியா, ராண்டம் ஹவுஸ் இந்தியா ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் முன்பணம் தருவதாகச் சொல்லியுள்ளனர். பெங்குவின் இந்தியா ரூ. 97 லட்சம் கொடுப்பதாகச் சொன்னது. ஆனால் அவர்கள் பழைய புத்தகங்களையும் சிறப்பாகப் பதிப்பிப்பார்கள் என்பதால் பெங்குவினுடன் செல்வதாக குஹா முடிவெடுத்துள்ளார்.

***

குஹா போன்ற சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு நல்ல பணம் கிடைப்பது இந்தியாவுக்கு நல்ல விஷயம்.

ஒரு சந்தோஷமான விஷயம். குஹாவின் ‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’ புத்தகம் இரண்டு பாகங்களாக தமிழில் வெளியாகும். கிழக்கு பதிப்பகம் இதற்கான உரிமையைப் பெற்று மொழிமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது. முதல் பாகம் மே 2009-ல் வெளியாகும். இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 2009-ல் வெளியாகும். கோடிகளில் இல்லாவிட்டாலும் லட்சங்களிலாவது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்:-)

தொடர்ந்து, குஹாவின் முந்தைய சில புத்தகங்களையும் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்குவோம்.

4 comments:

 1. வெர்ரியர் எல்வின் என்ற சூழலியலாளர்
  He was an anthropologist.

  ReplyDelete
 2. //
  ராமச்சந்திர குஹா, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாளர்களில் ஒருவர்.
  //

  அப்படியா ?

  http://offstumped.nationalinterest.in/2008/12/06/ramachandra-guhas-prejudices/

  ReplyDelete
 3. அவருடைய கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.

  அவர் ஒரு வரலாற்றாளார் என்று சொல்ல முடியாது. அவர் படித்தது economics மற்றும் sociology. பாடம் நடத்தியது எல்லாம் பெரும்பாலும் Environmental sciences துறையில்.

  இந்தியாவில் வரலாற்றாளர்கள் எல்லாம் மார்க்ஸ்வாதிகளாக இருப்பதாலும் அவர்கள் உளருவதையெல்லாம் நம்பும் அளவுக்கு யாரும் இல்லாத காரணத்தாலும் உருப்படியான வரலாறு எழுதும் niche காலியாகவே உள்ளது. அதை இவர் ஓரளவுக்கு நிரப்பி வருகிறார்.

  அவருடைய புத்தகத்தை வாங்கப்போனால் 1000 - 1500 ரூபாய் என்கிறார்கள், அவ்வளவு காசு போட்டு வாங்க மனம் இல்லை. என்ன தான் இருந்தாலும் அவர் ஒரு இடது சாரி ஆதரவாளர் அவர் எழுத்துக்கெல்லாம் இவ்வளவு காசு தேவையா ? என்று தோன்றுகிறது.

  தமிழில் வரும் மொழிபெயர்ப்புப் புத்தகம் விலை 300-400 ரூபாய்க்குள் வருமா ? வந்தால் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete