Sunday, March 15, 2009

மாணவர் சங்கங்கள்

சார்லஸ் டார்வின் பற்றிய முழுமையான, விரிவான, ஆழமான, இரண்டு தொகுதிகள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் படித்து வருகிறேன். ஜேனட் பிரவுன் (Janet Browne) என்பவர் எழுதியது.

சார்லஸ் டார்வினும் அவரது அண்ணன் எராஸ்மஸ் டார்வினும் மருத்துவம் படிப்பதற்காக எடின்பரோவுக்குச் செல்கின்றனர். எடின்பரோவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு professional society ஒன்றை உருவாக்குகிறார்கள். பிரிட்டனின் பிற கல்வி நகரங்களிலும் 19-ம் நூற்றாண்டில் மாணவர்கள் இதுபோன்ற அறிவு சார்ந்த சங்கங்களை உருவாக்குவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. இந்தச் சங்கங்களில் ஆசிரியர்கள் பெரிதாகக் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.

இந்தச் சங்கங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆய்வறிக்கைகளைப் படிக்கிறார்கள். கட்டுரைகள் எழுதி வாசிக்கிறார்கள். அவற்றைத் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடுவதும் நடக்கிறது.

ஐஐடியில் படித்தபோது நாங்கள் இதுபோன்ற அறிவுசார் சங்கங்கள் எதையும் உருவாக்கவில்லை. அறிவியல், பொறியியல் விஷயங்களைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கவில்லை. IEEE, SME போன்ற அமைப்புகள் இருந்தன. ஆனால் இதில் மாணவர்களின் ஈடுபாடு பெரிய அளவுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை. எனக்குத் தெரிந்தவரை தமிழகக் கல்லூரிகளில் மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

19-ம் நூற்றாண்டு பிரிட்டன் மாணவர்களிடையே இருந்த அறிவை நோக்கி விழையும் ஆர்வம் 21-ம் நூற்றாண்டில் இந்திய மாணவர்களிடம் ஏன் இல்லை? இது அறிவியல் அல்லது கணிதம் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சமூக அறிவியல், சூழலியல், பொருளாதாரம், தொழில் முனைதல், சட்டம், மொழி என்று இதுவென்றுதான் இருக்கவேண்டும் என்பதில்லை. எதுவாகவும் இருக்கலாம்.

கல்லூரிக்கு வரும் மாணவர்களில் அடிதடிகளில் ஈடுபடும் ரவுடிகள் போக, அறிவு வேட்கையில் ஆர்வம் உள்ள ஒரு சிலராவது ஏன் இதைப்போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லை. இந்த ஆர்வத்தைத் தூண்ட என்ன செய்யவேண்டும்? எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்?

உங்களுக்கு ஏதேனும் சிந்தனைகள் உள்ளனவா?

***

டார்வின் வாழ்க்கையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக:

1. Charles Darwin: Voyaging, Janet Browne, Princeton University Press, Pages 624, Year 1995
2. Charles Darwin: The Power of Place, Janet Browne, Princeton University Press, Pages 600, Year 2002

22 comments:

  1. மேலை நாடுகளைப் போல, மிகப் பரந்த கல்லூரி / பல்கலைக்கழக வளாகங்கள் இருந்தாலேயொழிய இத்தகைய சங்கங்களுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. உருப்படியான நூலகங்களே இல்லாத தமிழகக் கல்விச் சூழலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. லட்சக்கணக்கில் கடன் வாங்கியாவது அமெரிக்காவுக்குப் படிக்கப்போகும் அத்தனை பேருக்கும் பின்னர் கிடைக்கப்போகும் சம்பாத்தியம் மட்டுமே இலக்கு என்று சொல்லிவிட முடியாது. அங்கு நிலவும் Campus Cultureரும் மிக முக்கியமான ஈர்ப்பே.

    ReplyDelete
  2. முக்கியமாக இக்காலத்து மாணவர்களை ரொம்பவும் குரை சொல்ல வேண்டாம். டார்வின் 1830 களில் மாணவராக இருந்தார். அக்காலத்தில் மாணவர்கள் கிரகிக்க வேண்டிய அறிவுகளும், கோட்பாடுகளும் தற்காலத்தினிடன் ஒப்பிடும் போது இருபதில் ஒரு பங்கு கூட இருக்காது. மருத்துவத்திலோ, கணிதத்திலோ, விஞ்ஞானத்திலோ அக்காலத்தில் தெரிந்த அறிவு ஒரிரண்டு புத்தகங்களில் அடக்கி விடலாம். தற்காலத்தில் இதே துறைகளில் ஒரு மாணவன் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது பல புத்தகங்கள் ஆகும். அதனால், மாணவர்களுக்கு பரீக்ஷைக்கு படிப்பதற்கு நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது, அதனால் மற்றபடி ஆர்வத்தோடு விளிம்பு நிலையில் விவாதிக்க நேரம் இல்லை. அது டார்வின் காலத்திய மாணவர்களுக்கு இருந்தது.

    ஆனால் இது பல அறிவு, சமுதாய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடாததற்க்கு சாக்கில்லை. படிக்கும் இடங்களில் பல் வேறு ஆர்வங்களில் society களை உண்டுபண்ணி, கல்லூரி நிர்வாகமும், புரொபசர்களும், லெக்சரர்களும் முன்னிலையில் நின்று ஊக்கமளித்தால், மாணவர்களும் நல்ல பங்கு ஏற்று, ஆக்க பூர்வமான சாதனைகளை செய்வர்.

    பல வருடங்களுக்கு முன் நான் சென்னை கிருத்துவ கல்லூரியில் படித்த போது, ஒரளவு, அப்படிப்பட்ட ஊக்குவிக்கும் சூழ்நிலையை பார்த்திருக்கிறேன்.

    விஜயராகவன்

    ReplyDelete
  3. அண்ணா பல்கலை வளாகத்துக்குள் கணினி அறிவியல் சங்கங்கள் போன்றவை உண்டு. பெரிய ஆராய்ச்சி நடவடிக்கைகள் இல்லாவிட்டாலும், தங்களுக்குள் விசயங்களைப் பகிர்வர். ஒவ்வொரு கல்லூரியிலும் இது போன்ற சங்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஒட்டு மொத்தமாக மாணவர்கள் சோம்பித் திரிகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. ஆனால், ஒரு மாவட்ட, மாநில அளவில் கல்லூரிகளிடை ஒருங்கிணைப்பு, கருத்துப் பகிர்வு என்பது அறவே இல்லை தான்.

    19ஆம் நூற்றாண்டை விட்டு விடலாம். தற்காலத்தில் இது போன்று உலகளவில் அறியப்படும் மாணவர் அமைப்புகள் இருந்தால் குறிப்பிடுவது நன்று.

    ReplyDelete
  4. ரெங்கதுரை: 19-ம் நூற்றாண்டின் எடின்பரோவில் கேம்பஸ் என்ற ஒன்றும் இல்லை. ஹாஸ்டல் கிடையாது. மாணவர்கள் அவரவர்களாக வீடுகளைப் பார்த்துத் தங்கி, தேவையான அளவுக்கு வகுப்புகளைத் தேடிப் பிடித்து கிரெடிட்கள் வாங்கி, படிப்பை முடிக்கவேண்டும். அவர்கள் படித்த கல்லூரி, அடிப்படைக் கட்டமைப்பில் மிக மோசமாக இருந்துள்ளது. அருமையான கட்டடம், நூலகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் இதனையும் மீறி மாணவர்கள் அறிவுசார் சங்கங்கள் அமைத்து, மிக முக்கியமான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர். அதுதான் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இன்று வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கும்போது ஏன் நம் மாணவர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) இதனைச் செய்யவில்லை? அதற்கான DNA நம்மிடையே இல்லையா? எப்படிக் கொண்டுவருவது? அதுதான் கேள்வி.

    ReplyDelete
  5. துட்டுதான் சார் காரணம்.

    ஒரு பாலிடெக்னிக்கில் டிப்ளமா படிக்கிற மாணவனின் இலக்கு என்ன? அடுத்து பி.ஈ. படிக்கணும் அல்லது ஒரு நல்ல கம்பெனியில் அப்ரண்டீஸாக வேலைக்குச் சேர்ந்து பர்மனண்ட் ஆகணும். சம்பாதிச்சு செட்டில் ஆகணும்.

    பச்சயப்பா / பிரெசிடென்ஸி கலைக்கல்லூரிலே பி.ஏ.எகனகாமிஸ் அல்லது ஹிஸ்டரி படிக்கிற மாணவனின் அடுத்த இலக்கு - இங்கீலிஸ் பேசத் தெரிந்தால் கால்செண்டரில் வேலை அல்லது செல்ஃபோன் க்ரெடிட் கார்ட் இன்சூரன்ஸ் விற்பனை வேலை.

    தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் கணிப்பொறி, ஜர்னலிசம், உயிர்வேதியல் போன்றவற்றைப் படிக்கும் , 'இருக்கப்பட்ட' வர்களின் அடுத்த இலக்கு - எம்சியே, எம்.எம்ஸ்ஸி போன்ற உயர் படிப்பு. பின் நல்ல வேலை.

    ஐஐடி ஆர்ஈசி போன்ற ஐவி லீகில் படிப்பவர்களின் கனவுகள் / இலக்குகள் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

    இந்த மாதிரியான காலகட்டத்தில், கல்லூரியில் பட்டப்படிப்பின் போதே, அடுத்து என்ன செய்யவேணும், படிக்கிற படிப்புக்கு என்ன மாதிரியான வேலை கிடைக்கும், கிடைக்கிற வேலைக்கு என்ன சம்பளம் கிடைக்கும் போன்ற விஷயங்கள் தெளிவாகத் தெரிந்து விடுகின்றன. அந்தப் பாதையில் நடக்கும் பொழுது, சங்கங்கள், அறிவுத்தேடல் போன்ற விஷயங்கள் எல்லாம் பெரிய டிஸ்ட்ராக்ஷன். இவை நம் ஆளுமையை, கேரீயரை மேம்படுத்த உதவும் என்பது அப்போது புரியாது. ஒரு மாதிரி செட்டில் ஆனபிறகு, இந்த உண்மை உறைக்கும் பொழுது, மாணவப்பருவம் கடந்து விடுகிறது.

    சரி, என்ன இப்ப, ஒரு ப்ளாக் ஆரம்பித்து ஆதங்கத்தைக் கொட்டினால் போச்சு :-)

    ReplyDelete
  6. வன்பாக்கம் விஜயராகவன்: நான் சொன்னதில் ஒன்றை நீங்கள் முக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஆசிரியர்களின் ஈடுபாடு இல்லாமல் மாணவர்களாகவே சங்கங்களை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்களை எதிர்பார்க்காமல் மாணவர்களாகவே இதில் ஈடுபடவேண்டும் என்று நம்புகிறேன்.

    டார்வின் காலத்தில் ஒன்றுமே அறிவியலில் இல்லை; இரண்டு புத்தகங்களில் அடக்கிவிடலாம் என்று நீங்கள் சொல்வதை முற்றிலுமாக மறுக்கிறேன். அதற்குள்ளாக நியூட்டன், ஆய்லர், கவுஸ், லாக்ராஞ்ச், லப்ளாஸ், ஃபூரியே, பல உயிரியல் அறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து முடிக்க இன்றுகூட நூறு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டிருக்கும்.

    அறிவைத் தேடுவது என்பது ஒரு மனநிலை. அதில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்று விரும்புவது ஒரு மனநிலை. அது நம் மாணவர்களிடம் அடிப்படையிலேயே இல்லையோ என்ற பயம் வருகிறது. எனவே இதை உடைக்க, மாணவர்கள் மனநிலையை மாற்ற எங்காவது நாம் முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும்.

    ReplyDelete
  7. ரவிசங்கர்: அமெரிக்காவில் பொறியியல், அறிவியலில் நிறைய மாணவர் சங்கங்கள் உள்ளன. கிரேக்க எழுத்துகளை மாற்றி மாற்றிப் போட்டிருப்பார்கள். மெக்கானிகல் எஞ்சினியரிங்குக்கு ‘பை டவ் சிக்மா’ என்று பெயர். எல்லா அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் சாப்டர்கள் உண்டு. இளநிலை, முதுநிலை மாணவர்கள் சேர்ந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தெரிந்து பொதுவாக இளநிலை மாணவர்கள்தான் அதிகமாக இதில் சேருவார்கள். (நான் முதுநிலை மாணவனாக இருந்தபோது சேரவில்லை.)

    பிற எஞ்சினியரிங் துறைகளுக்கும் தனித்தனி அமைப்புகள் உண்டு.

    இந்தியாவில் இப்படி நாடு தழுவிய அமைப்பும் கல்லூரிகளில் சாப்டர்களும் இல்லை என்றே நினைக்கிறேன். மேலும் பொறியியல் தாண்டி, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இப்படியான அமைப்புகள் தேவை.

    ReplyDelete
  8. பிரகாஷ்: வாழ்க்கையை முற்றிலுமாக ‘வேலை’ என்பதற்குள் மட்டுமே சுருக்கிவிடலாமா? யாரிடம் எதைப்பற்றிப் பேசினாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவு இன்று வேலைகள் அதிகமாகியுள்ளன. நன்கு படித்த, அறிவுள்ள மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் இன்று பிரச்னையே இல்லை.

    ஒழுங்காகப் பேசவும், எழுதவும் தெரிந்தால் போதும். (அதையே ஆங்கிலத்தில் செய்தால் வேலை வாய்ப்புகள் எட்டு மடங்கு அதிகரிக்கும்.) எக்கச்சக்க வேலைகள் உள்ளன. எனவே நான் வேலை, துட்டு போன்றவற்றைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

    பெரும்பாலும் இந்த மாணவர் சங்கங்களை நடத்தப் பணம் அதிகம் தேவையிருக்காது. நல்ல பேச்சாளர்களை வெளியிலிருந்து அழைத்துவந்து பேசச் சொல்லவேண்டும். சிறந்த மாணவர்கள் மற்ற நாள்களில் பேசவேண்டும். புதிது புதிதான விஷயங்களைப் பற்றி கருத்தரங்கு நடத்தி, விவாதம் செய்து, முடிவுகளை அழகாக எழுதி வெளியிடவேண்டும். இதற்கான பணச்செலவு குறைவுதான். மனம் போதும். மார்க்கம் உண்டு.

    இப்படி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து பழகும்போது, வேலை வாய்ப்புகள் பற்றிய விவாதமும், எங்கெல்லாம் வேலைகள் கிடைக்கும் என்பது பற்றிய புரிதலும்கூடக் கிடைக்கும். எனவே வேலைப் பிரச்னையையும் எதிர்கொள்வதும் எளிதாகும்.

    இதுபோன்ற சங்கங்கள் உருவாவதால் என்ன நன்மை என்று மாணவர்களுக்குத் தெரிய வந்தாலே அவர்கள் இதில் அதிகமாக ஈடுபடக்கூடும் என்று தோன்றுகிறது.

    வலைப்பதிவுகளில் புலம்பி நேரத்தை வீணடிக்கிறோம் என்று நான் கருதவில்லை. இந்தப் புலம்பல்களை பாசிடிவாக, உபயோகமானவையாக மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    ReplyDelete
  9. பத்ரி, நீங்கள் எந்த சப்ஜெக்ட் டெக்ஸ்ட் புக்கை புரட்டி பாருங்கள். உதாரனமாக, என் பௌதீக புத்தகங்களில் 95% கருத்துகள், கடந்த 150 ஆண்டுகளில் உண்டுபண்ணிய கோட்பாடுகள். நியூட்டன் விதிகளை பள்ளி மாணவர்களே படிக்கின்றனர். கடந்த 200 ஆண்டுகளில் அறிவு exponential growth ஐ பார்த்துள்ளது. உதாரணமாக , அமெரிக்க பேடண்ட் அலுவலகம் 1837ல் 100 பேடண்டுகளை கொடுத்தது. போன வருடம் 7 மில்லியன் மேலாக பேடண்டுகளை கொடுத்தது.

    http://www.uspto.gov/web/offices/ac/ido/oeip/taf/issuyear.htm

    இந்த எண்ணிக்கை பெருக்கம் ஓரளவு அறிவு சம்பந்ததையும் பிரதிபலிக்கிறது.

    நீங்கள் ஆசிரியர்களை எதிர்பார்க்காமல் மாணவர்களாகவே இதில் ஈடுபடவேண்டும் என விரும்புகிறீர்கள். கல்லூரி, பல்கலை கழகங்களில் அதிகாரத்திலேயே ஊக்கம் வந்தால், அது மேலும் பல தன்னுந்து ஆர்வங்களையும், தன்னுந்து சபைகளையும் (voluntary associations) ஊக்குவிக்கிறது. மேலும் கல்லூரிகளில் பல விதமான அறிவு போட்டிகளும், இதழ்களும் இருந்தால், அது மாணவர்களை இழுக்கும்.


    விஜயராகவன்

    ReplyDelete
  10. http://tamil.techsatish.net/file/neeya-naana-24/


    neenga pesina neeya naanaa

    ReplyDelete
  11. #1) அறிவைத் தேடுவது என்பது ஒரு மனநிலை. அதில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்று விரும்புவது ஒரு மனநிலை. அது நம் மாணவர்களிடம் அடிப்படையிலேயே இல்லையோ என்ற பயம் வருகிறது.

    #2) எனவே இதை உடைக்க, மாணவர்கள் மனநிலையை மாற்ற எங்காவது நாம் முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும்.
    -Badri
    -----------------

    #1-ஐ அப்படியே ஏற்கும், ஒத்த (பயம் கொண்ட) கருத்துள்ளவன் நான்.
    #2-இல் மறுக்க ஏதுமில்லை.

    இது ஒவ்வொரு progressive எழுத்தாளரின் சிக்கல்.

    முதல் கருத்தைச் சொல்லாமல், இரண்டாவது கருத்தை மட்டும் சொல்லியிருந்தால் பிரச்னை இருக்காது. அதே சமயம், இரண்டாவது கருத்தின் ஆழமும், வீரியமும், அவசியமும் எடுபட, புரிபட முதல் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டும். என்ன செய்ய.... அனைத்தையும் சொல்லி விட்டு, விளக்கம் கொடுத்து பின், ஒதுங்கி விட வேண்டியது தான்.

    மேலும், அறிவைத் தேடுபவர்கள், அடிப்படையில் உள்ள குறையை அடையாளம் காண்பார்கள். அதையே கண்டீர்கள். விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வமுள்ள மன நிலையை உருவாக்க, குறிப்பாக குழந்தைகளிடம் உருவாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டியது தான். Popularization of science, biographies of scientists, beaming How-things-work through mass-media etc. can be done through effective story-telling. At least there lies the solution, in my view.

    -vikadakavi

    ReplyDelete
  12. வன்பாக்கம் விசயராகவன், உங்கள் கருத்து தவறு. பத்ரி சொல்வது போல், அந்தக் காலத்தில் அறியப்பட்டவற்றைப் படிக்கவே ஒரு நூற்றாண்டு பத்தாது. 15,16 ஆம் நூற்றாண்டுகளிலேயே அறிவியல் மறுமலர்ச்சி உருவாகி இருந்தது.

    பத்ரி, பிரகாசு சொல்வதில் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. என்ன பெரிய வேலை, பணம் என்று ஒதுக்க முடியாது. இன்றைய இளைஞர்களுக்கான சமூக, பொருளாதார அழுத்தம் மிக அதிகமானது. முதலில் ஏதாவது ஒரு வேலை, பிறகு கூடுதல் பணம், பிறகு மதிப்பான நிறுவனத்தில் நல்ல பொறுப்பு என்று எதிர்ப்பார்ப்புகள் கூடுகிறது. போன தலைமுறை வேலை ஓய்வு பெற்ற பிறகு வீடு கட்டினால், இந்தத் தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே வீடு, car என்று மணமகன் settle ஆகி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறது. மிக முக்கியமாக மேலை நாடுகளில் உள்ளது போல் நம்மவர்களுக்கு social security கிடையாது. அது இருந்தால் தான் விருப்பமான படிப்பில் சேருதல், அறிவுத் தேடல் போன்றவை வரும்.

    ReplyDelete
  13. பத்ரி,

    21ம் நூற்றாண்டு இந்திய மாணவர்களிடம் இந்தத் தாகம் இல்லை. மற்ற யூரோப்பிய, சீன, அமெரிக்க மாணவர்களிடம் இந்தத் தாகம் இருக்கிறதா?

    இல்லாவிட்டால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தேக்கம் இது என்று முடிவு கட்டவேண்டும். வருத்தமான விஷயம்.

    ReplyDelete
  14. //அதனால், மாணவர்களுக்கு பரீக்ஷைக்கு படிப்பதற்கு நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது, அதனால் மற்றபடி ஆர்வத்தோடு விளிம்பு நிலையில் விவாதிக்க நேரம் இல்லை. அது டார்வின் காலத்திய மாணவர்களுக்கு இருந்தது.
    //

    ஒரு விதத்தில் சரி

    //ஆனால் இதனையும் மீறி மாணவர்கள் அறிவுசார் சங்கங்கள் அமைத்து, மிக முக்கியமான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர். அதுதான் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இன்று வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கும்போது ஏன் நம் மாணவர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) இதனைச் செய்யவில்லை? அதற்கான DNA நம்மிடையே இல்லையா? எப்படிக் கொண்டுவருவது? அதுதான் கேள்வி.//

    பத்ரி

    www.rxpgonline.com www.aippg.net ஆகிய தளங்களை பாருங்கள். இது மருத்துவ மாணவர்களின் பங்களிப்பால் உருவான தளம்.

    இதை எந்த பட்டியலில் சேர்க்கலாம்

    ReplyDelete
  15. //இந்த மாதிரியான காலகட்டத்தில், கல்லூரியில் பட்டப்படிப்பின் போதே, அடுத்து என்ன செய்யவேணும், படிக்கிற படிப்புக்கு என்ன மாதிரியான வேலை கிடைக்கும், கிடைக்கிற வேலைக்கு என்ன சம்பளம் கிடைக்கும் போன்ற விஷயங்கள் தெளிவாகத் தெரிந்து விடுகின்றன. //

    அதில் பரவலாக தெரியாத விஷயங்கள் பற்றி தான் http:// www.pgmed.org http://www.dnbpg.com/ போன்ற தளங்கள் கருத்து பரிமாற்றத்திற்கு உதவுகின்றன

    ReplyDelete
  16. பத்ரி

    இன்றும் மாணவர்கள் சங்கங்கள் / குழுமங்கள் இருக்கின்றன, ஆனால் அங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவு தேடல் அல்ல வேலை தேடல், மேல் படிப்பு தேடல் , பணத்தேடல்

    உதாரணமாக சென்ற ஞாயிறு சென்னை மருத்துவக்கல்லூரியில் நடந்த மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசப்பட்ட தலைப்புகள்
    "ACING THE USMLE AND THE MATCH" - for International Medical Graduates who want to pursue Residency Training in the United States.

    ---

    பிரகாஷ் சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  17. //ஒழுங்காகப் பேசவும், எழுதவும் தெரிந்தால் போதும். (அதையே ஆங்கிலத்தில் செய்தால் வேலை வாய்ப்புகள் எட்டு மடங்கு அதிகரிக்கும்.) எக்கச்சக்க வேலைகள் உள்ளன. எனவே நான் வேலை, துட்டு போன்றவற்றைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.//

    யதார்த்தம் என்ன என்றால், நீங்க இப்ப சொல்ற விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு, புரிந்து செயல்படக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை விட, ' என்னமோ,சொல்றார்' என்று புரிந்தும் புரியாமலும் தவறாகவும் புரிந்து கொள்கிற மாணவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். மீடியாக்ரிடி இஸ் தி மெஜாரிட்டி. ஒழுங்காக எழுதப் படிக்க, புரிந்து கொள்ளப் பழகி இருந்தால், அவன் யாரிடமும் ஆலோசனை கேட்கிற நிலையிலயே இருக்க மாட்டான். இப்படி அடிப்படையிலே ( கல்விமுறை) தவறு இருக்கும் பொழுது, சீர்திருத்தத்தை, பாதிக் கிணற்றைக் கடந்து கொண்டிருப்பவனிடம் இருந்து துவங்கக் கூடாது.

    வேலை, துட்டு போன்றவை பெரிய விஷயம் இல்லை. யாருக்கு என்றால், நன்றாக அல்லது சுமாராகப் படித்து, தெளிவாகக் கம்யூனிகேட் செய்யும் அளவுக்கு எழுத்து/ வாசிப்பு ஆகிய மென் திறன்கள் கொண்டவர்களுக்கு. இவை இல்லாத, இவற்றை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தரப்படாத, கிடைத்த வாய்ப்புகளை பிறர் உதவியின்றி வளர்த்துக் கொள்ளத் தெரியாத சப்ஸ்டாண்டர்ட் மாணவர்களுக்கு, வேலையும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவமும், பணமும் தான் முதல் குறிக்கோள். அதன் மூலம் கிடைக்கும் சமூக அந்தஸ்துதான், அந்த பெரும்பான்மையான மீடியாக்கர் மாணவர்களுக்கு தங்கள் மாணவப் பருவத்தில் இழந்த அடையாளங்களை , மரியாதையை ( 30 ஆவது ராங்க் மாணவன், சுட்டுப் போட்டாலும் அல்ஜீப்ரா வராது, பத்தாங்கிளாஸ் படிக்கிறவனுக்கு ப்ரெசெண்ட் டென்ஸ் பாஸ்ட் டென்ஸ் வித்தியாசம் தெரியாதா போன்ற வசைகள்) மீட்டெடுக்க உதவுகின்றன.

    நான் நீங்கள் சொல்கிற விஷயத்துடன் முரண்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாணவச் சமுதாயம், ஒரு அறிவுக்குழுவாக, சுய சிந்தனையுடன்
    இயங்கக்கூடிய சமூகமாக, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வல்ல சக்தியாக ஆகவேண்டும் என்பதில் எனக்கு ஏதும் மறுப்பில்லை. அப்படி மாறக் கூடிய
    சமூக-அரசியற்-பொருளாதாரச் சூழல் இப்பொழுது இருக்கிறதா என்பதை முதலிலே யோசிக்க வேண்டும்.

    இதற்குப் பின்னும் ஒரு நாலைந்து பத்திகள் எழுதி அடித்து விட்டேன். தெளிவாக எழுத வரவில்லை ( மொழி போதாமை :-)). அடுத்த முறை நேரில் சந்திக்கும் பொழுது, நேரம் கிடைப்பின் விரிவாகப் பேசுகிறேன்.

    ReplyDelete
  18. பத்ரி -

    ரொம்ப வருத்தப்படிகீறார் என்று நினைக்கிறேன்.

    பணத்தைக் கொட்டி எல்லா வசதிகள் செய்து கொடுக்கப்படும் .ஐ.எஸ்.ஆர்.ஓ என்ன செய்கிறது ? கலைகளில் உயர்ந்த இசைத் துறையில் என்ன நடக்கிறது ? Fundamental Research நடத்தும் டாடாவில் என்ன நடக்கிறது ? முதுகலைப் பட்டம் வாங்க விழையும் மாணவர்கள் அவர்களது ஆய்வை எவ்வளவு நேர்த்தியாக செய்ய முடிகிறது ?

    பதில்: கடன் பெறுதல். எவனாவது செய்வான் நாம அது டக்குனு இங்க காப்பி அடிச்சு பணம் பண்ணலாம். Thats it!

    அவ்வளவு ஏன் வலையில் தொழில் முணைவோரின் தொழிற் திட்டத்தைப் பாருங்கள் - அட்ட காப்பி. Digg போல் செய்வதா இல்லை orkut போல் செய்வதா என்று தான் சிந்திக்கிறார்கள். காப்பி அடிப்பது தப்பு சரி என்று சொல்லவில்லை. நடப்பதை சொல்கிறேன்.

    சிந்தனைகள் மாணவப் பருவத்தில் வருவில்லை என்று எண்ணிய இந்த பதிவிற்கும் முந்தையப் பதிவான என் பெண் படிப்பதெல்லாம் அந்நியம் என்கிற வருத்தத்தையும் நாம் தொடர்பு படுத்தலாம்.

    ReplyDelete
  19. /*
    பத்ரி, பிரகாசு சொல்வதில் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. என்ன பெரிய வேலை, பணம் என்று ஒதுக்க முடியாது. இன்றைய இளைஞர்களுக்கான சமூக, பொருளாதார அழுத்தம் மிக அதிகமானது. முதலில் ஏதாவது ஒரு வேலை, பிறகு கூடுதல் பணம், பிறகு மதிப்பான நிறுவனத்தில் நல்ல பொறுப்பு என்று எதிர்ப்பார்ப்புகள் கூடுகிறது. போன தலைமுறை வேலை ஓய்வு பெற்ற பிறகு வீடு கட்டினால், இந்தத் தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே வீடு, car என்று மணமகன் settle ஆகி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறது. மிக முக்கியமாக மேலை நாடுகளில் உள்ளது போல் நம்மவர்களுக்கு social security கிடையாது. அது இருந்தால் தான் விருப்பமான படிப்பில் சேருதல், அறிவுத் தேடல் போன்றவை வரும்.
    */

    100 சதவிகிதம் சரி. மற்ற உயிரினங்கள் பருவமடைந்தவுடன் செய்கின்ற ஓர் காரியத்தை செய்ய இந்திய ஆண்கள் சுமார் 15 வருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வீடு கார் வாங்கினால்தான் நடுத்தட்டு ஆணுக்கு பெண் கொடுக்கிறார்கள். அதற்குள் நம்மாளுக்கு சொட்டை விழுந்து ‘சக்தி’யே போய்விடுகிறது :-) என்ன கொடுமை சரவணன் இது? அந்த பதினைந்து வருடங்கள் ‘அதை’ பற்றி பேசி,கற்பனைசெய்து, படம்பார்த்து இதிலேயே பல மணி நேரங்கள் வீணடிக்கப் படுகின்றன. மேலை நாடுகளில் இப்படி நேரத்தை வீணடிப்பதில்லை என நினைக்கிறேன்.

    நீங்கள் குறிப்பிடும் அறிவுத்தேடல் இங்கு ‘symposium'-களிலும் ‘paper presentation'-களிலும் ஓரளவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் கலந்துகொள்பவர்கள் மொத்த மாணவர்களில் ஓரிரு சதவிகிதம் மட்டுமே!

    ReplyDelete
  20. I think the basic reason is, life has gotten a lot more easier for people who are reasonably educated. One doesn't have to work as hard as one would in the past to achieve fame, material wealth, and happiness in general. The investment on knowledge seems like a steep price to pay for what may or may not translate to a slightly better life. It is the same world over. I'd like you to hold that image of 19th century Edinburgh forever, for you'd be surprised to see it today.

    ReplyDelete
  21. TV, Internet, Cinema, Shopping Maals, Two wheelers & Cars I guess.

    ReplyDelete
  22. மாணவர்கள் என்றில்லை. வேலைக்குக் செல்வோர், வீட்டுப் பெண்கள் என்று எல்லோரையும் கட்டிப் போட்டிருப்பது சினிமா மற்றும் தொலைக் காட்சியேயாகும். பெரும்பாலோனோர் தமது ஒய்வு நேரங்களில் கிட்டத்தட்ட 75% செலவழிப்பது சினிமா மற்றும் டி.வி என்றால் மிகையில்லை. ஒன்று சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்கள். அல்லது அது குறித்து விவாதித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதற்கான் காரணம் என்னெவென்று யூகிக்க முடியவில்லை.

    - சிமுலேஷன்

    ReplyDelete