நாளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம். நேற்றே மழை பெய்துவிட்டது என்பதால் இனி மழை இருக்காது என்பது பிரசன்னாவின் கருத்து. அதுவும் நாளை அனுமத் ஜெயந்தியாம்! அதனால் அனுமன் எந்தவித இடையூறும் இல்லாமல் காப்பாராம். பொதுவாக புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு நான் போகமாட்டேன். ஒன்று மழை பெய்யும். அல்லது கருணாநிதி வருவதால் தாங்கமுடியாத கெடுபிடியாக இருக்கும். இம்முறை போகலாம் என்றிருக்கிறேன். சென்றமுறை கருணாநிதி ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகத்தைத் திட்டி அதற்கு பிரசித்தி தேடித் தந்தார். அதற்கு முந்தைய ஆண்டு, சென்னைக் காவல்துறையினர், பிரபாகரன் புத்தகத்தை அரங்கில் வைத்து விற்கக்கூடாது என்று தடைபோட்டுவிட்டுப் போனார்கள். இம்முறை சர்ச்சைகள் இல்லாத ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். நானே ஒரு நாள் (10 ஜனவரி 2011) அரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
இம்முறை தினம் ஒரு வீடியோ என்று புத்தகக் கண்காட்சியைப் படமெடுத்துப் போடலாம் என்றும் நினைத்துள்ளேன்.
***
குறிப்பிடவேண்டிய பல புத்தகங்கள் உள்ளன. எனவே புத்தகக் கண்காட்சி தொடங்கினாலும், என் புத்தகக் குறிப்புகள் தொடரும்.
பேய்! பேயை நம்பும் ஒரு சமூகமாகவே நாம் உள்ளோம். இப்போது நிறைய வயதானதற்குப்பின், பகுத்தறிவுத் திறன் வளர்ந்துள்ளது என்பதால் நான் பேயை நம்புவதில்லை. அமானுஷ்யம் என்பதே கிடையாது என்பது என் இப்போதைய கருத்து. ஆனால் எங்கள் அலுவலகத்தில் பேய் என்னும் கருத்தை நம்புபவர்கள்தான் அதிகம் என்று பா.ராகவன் ஒரு நாள் மதிய உணவின்போது கண்டுபிடித்தார். அதிலிருந்தே பேய் பற்றி ஒரு புத்தகம் வேண்டும் என்று முயற்சி செய்து சஞ்சீவி என்பவரைக் கொண்டு எழுதவைத்தார். சஞ்சீவி, பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்தவராம். புத்தகத்தின் அட்டையைப் பற்றி மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அட்டையைப் பார்த்தாலே பகீர் என்று பயமாக இருக்கிறது; இதை வாங்க மக்கள் பயப்படலாம் என்கிறார்கள். எனக்கு இது விசித்திரமாகத் தோன்றுகிறது. அட்டையப் பார்த்தால் நீங்கள் பயந்தா நடுங்குகிறீர்கள்? பேயை நம்புபவரா நீங்கள்? நம்பினாலும் நம்பாவிட்டாலும் வாங்கிப் படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்!
மாமல்லபுரத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் 20 முறையாவது சென்று வந்திருப்பேன். அதுதவிர தமிழகத்தின் வேறு சில கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்றுவந்திருப்பேன். தஞ்சாவூரோ, கங்கைகொண்ட சோழபுரமோ, புகளூரோ, புதுக்கோட்டையின் எண்ணற்ற சிற்பக் களஞ்சியங்களோ, முத்தரையர்கள், அதியமான்கள் உருவாக்கிய திருச்சி, சேலம் மாவட்டக் கலைச்செல்வங்களோ, எதுவாக இருந்தாலும் அதுபற்றிய தகவல் அந்த இடங்களில் துளிக்கூட உருப்படியாக இருக்காது. ஓர் ஊருக்குப் போனால் அந்த ஊரில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது பற்றிய தகவல் சொற்பமே. இதில் ஒரு சிறு முயற்சியாக, மிக மிக அடிப்படை முயற்சியாக, ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளோம். தமிழக சுற்றுலா வழிகாட்டி எனப்படும் இந்தப் புத்தகம் எங்கள் அலுவலகத்தின் ப்ராடிஜி தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருக்கும் தமிழ் சுஜாதா எழுதியது. (தமிழ்பேப்பரில் பெண் மனம் தொடரை எழுதுபவர்.) இனி வரும் நாள்களில் தனித்தனியாக, பல்வேறு தமிழக சுற்றுலா இடங்கள் பற்றி மிக விரிவான புத்தகங்கள் வெளியாகும். இந்தப் புத்தகத்தில் மேற்கொண்டு என்ன சேர்க்கலாம், எப்படி விரிவாக்கலாம் என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம்.
அரவிந்தன் நீலகண்டனின் நம்பக்கூடாத கடவுள், தமிழ்பேப்பரில் தினசரி வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. பொதுவாக எனக்கு தனிப்பட்ட முறையில் கட்டுரைத் தொகுப்புகள் வெளியிடுவதில் நம்பிக்கை குறைவு. எனக்குப் படிக்கப் பிடிக்கும் என்றாலும், பொதுவாக வாசகர்கள் கட்டுரைத் தொகுப்புகளை வாங்குவதில்லை என்பது வணிக நிதர்சனம். இலக்கியவாதிகள் எழுதும் கட்டுரைத் தொகுப்புகள் விற்பனை ஆவதுண்டு. ஆனால் அ-இலக்கியவாதிகள் விஷயம் அப்படி இல்லை. அரவிந்தன் நீலகண்டன் விஷயத்தில் வேறுவிதமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். தமிழ்பேப்பரின் கட்டுரைகள் வெளியானபோது மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணிய கட்டுரைகள் இவை. அரவிந்தன் நீலகண்டன், இந்துத்துவச் சிந்தனையாளர். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனை ஓர் இந்துத்துவப் பார்வையுடன் விமரிசிப்பவர். அவருடைய பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையல்ல. என் பல கருத்துகளுக்கு காட்டமான முதல் வினை அவரிடமிருந்து வந்துள்ளது. ஆனால் பொருட்படுத்திப் படிக்கவேண்டிய சிந்தனைகள் அவருடையவை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. (இப்போது ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இருவரும் எழுதியுள்ள ஒரு பெரிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கத்தை எடிட் செய்துகொண்டிருக்கிறேன். ஜனவரியில் வெளியாகவேண்டும்.) தமிழ்பேப்பரின் கட்டுரைகள் அடங்கிய அரவிந்தனின் புத்தகம் ‘நம்பக்கூடாத கடவுள்’ என்ற பெயரில் வெளியாகிறது.
பாலா ஜெயராமன். இவரும் தமிழ்பேப்பரில் பத்தி எழுதுகிறார் (உலக மகா வில்லன்கள் பற்றி). அது அவரது மூன்றாவது கிழக்கு வெளியீடாக வெளியாகும். அதற்குமுன் இரண்டு, முழுமையான புத்தகமாக எழுதி வெளியாகியுள்ளன. ஒன்று: கடல் கொள்ளையர் வரலாறு. அடுத்தது அணுகுண்டின் அரசியல் வரலாறு. அவர் எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் என்.எச்.எம் வெளியீடாக 2011-ல் வெளிவரும்.
சமையல் புத்தகங்கள் பலவற்றை 2009-ல் பதிப்பித்தோம். 2010-ல் கொஞ்சமாக விடுமுறை. வெகுசில புத்தகங்கள்தான் கொண்டுவந்துள்ளோம். ஆனால், நேரடியான சமையல் புத்தகமாக இல்லாமல், மிக சுவாரசியமான புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளோம். சமையல் சுல்தான் என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஃபைவ் ஸ்டார் செஃப் சுல்தான் என்பவர். இது தொடராக 1990-களில் ஆனந்தவிகடனில் வெளியானது. 2010-ல் ஒரு நாள் மதியம் சுல்தான் என்னைப் பார்க்க வந்தார். தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் ஷெராடன் குழுமத்தின் பணியாற்றியதாகவும் இப்போது தனியாளாக காண்ட்ராக்ட் வேலைகள் செய்வதாகவும் சொன்னார். உதாரணமாக தில்லி காமன்வெல்த் போட்டிகளின்போது சமையல் ஒப்பந்தம் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். பில் கிளிண்டன், சதாம் ஹுசேன் போன்ற வெளிநாட்டுப் பிரபலங்கள் முதல், சென்னையின் பல அரசியல்வாதிகள், மந்திரிகள், நடிகர்கள் என்று பலருக்குச் சமையல் செய்துபோட்டிருக்கிறார். திப்பு சுல்தான் காலத்துச் சமையல் குறித்தும் பாண்டியர் காலத்துச் சமையல் குறித்தும் ஆராய்ச்சிகள் செய்துவருகிறார். அவ்வளவு சுவாரசியமான மனிதர். தன் அனுபவம் ஒவ்வொன்றுடன் ஒரு பிரத்யேக ரெசிப்பியும் சேர்த்துக் கொடுத்துள்ளார் இவர். சமைக்கத் தெரியுமோ அல்லது சாப்பிட மட்டும் தெரியுமோ, எப்படியாயினும் இந்தப் புத்தக்த்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.
(தொடரும்)
அனைத்து நூல்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் புத்தக கண்காட்சி அப்டேட்டுக்கு காத்திருக்கிறோம்
ReplyDelete//இம்முறை தினம் ஒரு வீடியோ என்று புத்தகக் கண்காட்சியைப் படமெடுத்துப் போடலாம் என்றும் நினைத்துள்ளேன்//
ReplyDeletePlease do! For people living away from Chennai, it will be a treat.
//தமிழக சுற்றுலா வழிகாட்டி எனப்படும் இந்தப் புத்தகம் எங்கள் அலுவலகத்தின் ப்ராடிஜி தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருக்கும் தமிழ் சுஜாதா எழுதியது. (தமிழ்பேப்பரில் பெண் மனம் தொடரை எழுதுபவர்.) இனி வரும் நாள்களில் தனித்தனியாக, பல்வேறு தமிழக சுற்றுலா இடங்கள் பற்றி மிக விரிவான புத்தகங்கள் வெளியாகும். இந்தப் புத்தகத்தில் மேற்கொண்டு என்ன சேர்க்கலாம், எப்படி விரிவாக்கலாம் என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம்.//
This is too good to be true. Please also include how to get to those places. For a bdget traveller, middle income traveller and hing end ones. taht will be really useful for people outside Tamizh nadu.
Looking forward eagerly to all your new ventrues..
//அமானுஷ்யம் என்பதே கிடையாது என்பது என் இப்போதைய கருத்து. //
ReplyDeleteநல்ல கருத்து. ஒருமுறை இந்தத் தளத்திற்குச் சென்று இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்தால், அல்லது அதில் இருக்கும் பிற அமானுஷ்யக் கட்டுரைகளைப் படித்தால் உங்கள் கருத்து மாறக் கூடுமோ?