சொக்கன் எங்கள் ஆஸ்தான எழுத்தாளர். அவர் எந்த நிறுவனத்திலாவது வேலை செய்கிறாரா அல்லது முழு நேர எழுத்தாளரா என்று நான் பல நேரங்களில் சந்தேகப்பட்டதுண்டு.
இந்த ஆண்டு அவர் எங்களுக்கு எழுதிய புத்தகங்கள் முன் ஆண்டுகளைவிடக் குறைவுதான். அவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.
2010-ல் சொக்கனின் முதல் புத்தகம் மணிமேகலை. கோவை செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக சில புத்தகங்களைச் செய்தோம். அதில் ஐம்பெருங்காப்பியங்களில் கதை அறியத் தெரிந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய மூன்றையும் முதலில் கொண்டுவர முடிவெடுத்தோம். சொக்கன் தவிர மீதி இருவரும் முதல்முறை எழுத்தாளர்கள். கே.ஜி.ஜவர்லால் சிலப்பதிகாரத்தையும், சொக்கன் மணிமேகலையையும் ராம் சுரேஷ் (எனப்படும் பெனாத்தலார்) சீவக சிந்தாமணியையும் எளிய தமிழில் கொண்டுவந்தனர். பாராட்டையும் பெற்றதோடு இந்தப் புத்தகங்கள் வேகமாக விற்பனையும் ஆயின என்பது சந்தோஷமான செய்தி. சொக்கன் ஏற்கெனவே முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய தமிழில் எழுதிவந்தார். அது மடலாடற்குழுக்களிலா அல்லது தினம் ஒரு கவிதை குழுவிலா, எதில் வந்தது என்று இப்போது ஞாபகம் இல்லை. (உலா என்னும் தமிழ் பிரபந்த வகையின் ஆரம்பம் இதில்தான் உள்ளது.) பின்னர் ஜவர்லால் திருக்குறளை எளிய உரைநடை மாதிரியில் எழுதினார்.
இந்தப் புத்தகங்கள் ஒரு பியூரிடனுக்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் எங்கள் நோக்கம், தமிழர்கள் தம் இலக்கிய வகைகளை சம்பிரதாயமான முறையில் அணுகாமல் அவற்றின் சுவைக்காகவும் கருத்துக்காகவும் அணுகவேண்டும் என்பது. அதற்கு, அதன் முந்தைய பழந்தமிழ் நடையை முற்றிலும் விலக்கவேண்டிய அவசியமாகிறது. புதிய வடிவ உத்திகளை மேற்கொள்ளவேண்டியதாகிறது. இந்த அளவுக்கு சுதந்தரத்தை எடுத்துக்கொள்ளும்போது சில தவறுகளும் அசம்பாவிதங்களும் ஏற்படலாம். அவை சுட்டிக்காட்டப்பட்டால் நிச்சயமாகத் திருத்திக்கொள்வோம். இந்த இலக்கியங்களை எந்தவிதமான ஐடியலாஜிகல் முன்முடிவுகளுடன் நாங்கள் அணுகவில்லை.
சொக்கன் சினிமா எடுப்பவராக இருந்தால், அம்பானி ட்ரைலாஜி எடுத்திருப்பார்! திருபாய் அம்பானி பற்றிய சொக்கனின் புத்தகம் சுமார் 40,000 பிரதிகளுக்குமேல் விற்றுள்ளது; 50,000-ஐத் தாண்டிவிட்டதா என்று தெரியவில்லை. பார்க்கவேண்டும். அடுத்து 2009-ல் முகேஷ் அம்பானி பற்றிய புத்தகத்தை எழுதியிருந்தார். அப்போதே அனில் அம்பானி பற்றி எழுதவேண்டுமா என்று யோசித்து, கைவிட்டு, பிறகு மீண்டும் தட்டி எடுக்கப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் இது.
சொக்கன் எழுதி 2010-ல் வராமல் 2011-ல் வரப்போகும் சில புத்தகங்கள் கைவசம் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்ப்போம். இந்த ஆண்டின் முக்கியமான கிழக்கு புத்தகங்களில் இரண்டில் ஒன்று அந்தமான் சிறை பற்றிய சொக்கனின் புத்தகம். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்ததும், அவர்களுடைய சில அரக்கத்தனங்களைக் கூடவே எடுத்துவந்தனர். மரணதண்டனை தராமல், ஆனால் அதேபோன்ற அளவுக்கு, அல்லது அதைவிடக் கடுமையான தண்டனையாக அவர்கள் உருவாக்கியதுதான் தொலைதூரத் தீவு ஒன்றில் ‘கைதி’களை அடைத்துவைப்பது. அப்படித்தான் அவர்கள் ஆஸ்திரேயாவைப் பயன்படுத்தினார். அதேபோல இந்தியக் கைதிகளுக்காக அவர்கள் உருவாக்கியதுதான் அந்தமான் தீவுச் சிறை. இந்தியாவின் சில முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்கள் அந்தமானில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சொக்கனின் புத்தகத்தில் இந்தச் சிறை பற்றிய முழுமையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
இதில் ஒரு சோகம் என்னவென்றால், இன்றும்கூட அந்தமான் இந்திய அரசால் சிலரை ஒளித்துவைக்கப் பயன்படுகிறது என்பதுதான். அந்தமானில் நடக்கும் பல நிழலான காரியங்களை இந்திய அரசு அல்லது அதன் உளவுத்துறையினர் நடத்துகின்றனர். அதன் சில குரூரங்களில் ஒன்றை நந்திதா ஹக்சரின் புத்தகமான வஞ்சக உளவாளியில் நீங்கள் படிக்கலாம்.
சென்ற ஆண்டு, சென்னை புத்தகக் கண்காட்சியில் சக்கைப்போடு போட்டது ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய ரகோத்தமனின் புத்தகம். இந்த ஆண்டு வெளியீடு சொக்கன் எழுதியுள்ள மகாத்மா காந்தி கொலை வழக்கு. மகாத்மா காந்தி கொலையில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. சுட்டது நாதுராம் வினாயக் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். பள்ளிக்கூடப் புத்தகத்தில் இதை நாம் படிக்காமல் பாஸ் பண்ணுவது இல்லை. அதனைத் தாண்டி மாலன் எழுதிய ஜனகணமன என்ற புதினத்தில் இது தொடர்பான பல செய்திகள் உள்ளன. இந்தப் புத்தகத்தில் சொக்கன், முழுக் கதையை, உயிரோட்டத்துடன் எழுதியுள்ளார். காந்தி கொலையில்தான் மர்மம் இல்லையே தவிர, ஏன் கொல்லப்பட்டார், இந்தக் கொலை அவசியம்தானா? கொலைகாரர்களும் கூடத் திட்டமிட்டவர்களும், இந்தக் கொலையைத் தவிர்த்திருக்க முடியாதா? காந்தி என்ற முரட்டுப் பிடிவாதக்காரர் ஏன் தனக்கு யாரும் பாதுகாப்பு தருவதை விரும்பவில்லை? காந்தி உயிரோடு இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
(தொடரும்)
இந்த புத்தகங்களுக்கு, புத்தக கண்காட்சியில் ஏதாவது தள்ளுபடி உண்டா?
ReplyDeleteசொக்கன் எங்கள் ஆஸ்தான எழுத்தாளர். அவர் எந்த நிறுவனத்திலாவது வேலை செய்கிறாரா அல்லது முழு நேர எழுத்தாளரா என்று நான் பல நேரங்களில் சந்தேகப்பட்டதுண்டு - Yes me too... thought like that in many times...
ReplyDeletewow !!! How many titles - Some of them are really path breaking - good luck - Srividhya
ReplyDeleteசொக்கன் எங்கள் ஆஸ்தான எழுத்தாளர். அவர் எந்த நிறுவனத்திலாவது வேலை செய்கிறாரா அல்லது முழு நேர எழுத்தாளரா என்று நான் பல நேரங்களில் சந்தேகப்பட்டதுண்டு.
ReplyDelete:) மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஐயப்பாடும் அதுதான் :)
பத்ரி, விஜய், செல்வேந்திரன்,
ReplyDeleteஇந்தச் சந்தேகத்தைத் தமிழில் எழுதியதற்கு நன்றி. என் பாஸுக்குத் தமிழ் படிக்கவராது ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.