
நமது கலாசாரம் என்றுமே பணத்தை வெறுத்ததில்லை. லட்சுமி என்று பணத்தைத் தெய்வமாக வழிபடுவதுதான் நம் இயல்பு. பணம் பெருகவேண்டும் என்றுதான் சொல்கிறேமோ தவிர, பணத்தைக் கொள்ளையடிக்கவேண்டும் என்று சொல்வதில்லை. மோசமான வழியில் ஈட்டிய செல்வம் தங்காது என்றுதான் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித்தந்துள்ளனர். அதே நேரம், சரியான, நியாயமான வழியில் செல்வம் ஈட்டவேண்டும்; அப்படி ஈட்டியபின் அதனை படாடோபமாகச் செலவழித்து அல்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது; ஈட்டிய செல்வத்தை வறியவர்களுக்கு வாரி வழங்கவேண்டும் என்றும் நாம் நீதிநூல்களிலிருந்து அறிகிறோம்.
இந்தச் செல்வத்தை எப்படி ஈட்டுவது? வெறும் கடின உழைப்பு போதாது. சினிமாவில்தான் பால்கார அண்ணாமலை ஒரு பாடலின் ஆரம்பத்தில் பால் கறக்க ஆரம்பித்து பாட்டின் முடிவில் பணக்காரர் ஆவார். தேவை நிறைய முதலீடும் அல்ல. தேவை சரியான யோசனைகள். சட்டெனத் தோன்றும் சின்னஞ்சிறு பொறி, உங்களைத் தூண்டவேண்டும். செலுத்தவேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தி, வெற்றிகரமாக ஆக்க நீங்கள் உழைக்கவேண்டும். அதாவது உழைப்பு தேவை; ஆனால் சரியான யோசனை அதற்குமுன் தேவை. சும்மா மாடு போல் உழைத்தால் அலுப்புதான் மிஞ்சும். ப்ரஸன்னாவின் பணமே ஜெயம் என்ற இந்தப் புத்தகம் பல நிஜ வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லி, உங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் சில ஐடியாக்களை வெளியே கொண்டுவரக்கூடும்.

முத்துராமலிங்கத் தேவர் பற்றிய புத்தகத்தை எங்கள் வாசகர்கள் வெகுநாள்களாகக் கேட்டபடி இருந்தனர். சில பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை, இந்த முறை முத்துராமலிங்கத் தேவர் புத்தகம், பாலு சத்யா எழுத்தில் வெளியாகிறது. தேவர் ஒரு தேசியத் தலைவராக, காங்கிரஸ்காரராக, சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளராக, தமிழகத்தில் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் ஒரே முகமாக வளைய வருகிறார். குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார் தேவர். இதன் பலனாக, தென் தமிழகத்தின் பல சாதிகள் விடுதலை பெறுகிறார்கள். இந்தப் புத்தகம் சர்ச்சைகள் பற்றியதல்ல. இருந்தாலும் இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கு, முதுகுளத்தூர் கலவரம் ஆகியவை பற்றியும் தகவல்கள் இருக்கின்றன.
இன்று தேவர் பெயரைச் சொல்லி குருபூஜையில் கலந்துகொள்ளாத கட்சிகளே இல்லை. தேவர், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குக் கடவுள். அவர் முருகனுடன் ஐக்கியமாகிவிட்டதாகவே இவர்கள் நம்புகின்றனர். அந்த அளவுக்கு ஒரு சமுதாயப் பிரிவினர் ஒருவர்மீது வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையின் காரணம் என்ன? இந்தப் புத்தகம் ஓரளவுக்கு அதனை ஆராய்கிறது.

இரா. முருகன் 2006-ல் எழுதி வெகு நாள்களாக வைத்திருந்து, இந்த ஆண்டு வெளியாகிறது, அவரது ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய புத்தகம். இரா. முருகனை இலக்கியவாதியாக மட்டுமே உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். மென்பொருள் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கும் இவர் எழுதிய
மூன்று விரல் புத்தகம் ஒரு புரோகிராமரின் வாழ்க்கையை சுவைபடக் கூறுகிறது. ப்ராஜெக்ட் ‘எம்’ என்பது முருகன் தினமணி கதிரில் தொடராக எழுதியது. கடினமான ஒரு சப்ஜெக்டைச் சொல்ல, இரா. முருகன், ஒரு டிஜிட்டல் சாமியாரை உருவாக்கியிருப்பார். அந்த சாமியாருடன் அவருடைய சிஷ்யர்கள் நடத்தும் உரையாடலின் வழியாக ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்டின் சூட்சுமங்கள் வெளிவரும். இது சாமானியர்களுக்கான புத்தகம் அல்ல. ஆனால், ஏதோ நிறுவனத்தில் மென்பொருள் புரோகிராமர்களாக இருந்தீர்கள் என்றால், ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக விரும்புகிறீர்கள் என்றால் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் வாங்குங்கள். உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

சென்ற பதிவில் எழுத மறந்த சொக்கனின் புத்தகம், கம்ப்யூட்டர் கையேடு. கிழக்கிலிருந்து கம்ப்யூட்டர் தொடர்பாக ஒரு புத்தகமும் வரவில்லை. இது கம்ப்யூட்டர் வாங்க விரும்பும், கம்ப்யூட்டரை இப்போதுதான் வாங்கியிருக்கும் ஒருவருக்கான புத்தகம். வெகு நாள்களுக்குமுன் நான் இந்தப் புத்தகத்தை எழுத விரும்பினேன்! அதற்கான அவுட்லைனும் போட்டிருந்தேன். ஆனால் எழுதும் பக்குவமும் சுறுசுறுப்பும் வரவில்லை. பெரும்பாலானோர் தவறு செய்வது சரியான கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதில்தான். எங்கள் அலுவலகத்திலேயே இரண்டு பேர் மாகிண்டாஷ் கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்று துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. சொக்கனின் புத்தகம் அங்குதான் ஆரம்பிக்கிறது.
சொக்கனின் புத்தகம் சிறு குழந்தைக்குச் சொல்லித்தருவதுபோல, கம்ப்யூட்டரில் எந்தெந்தப் பிரச்னை வந்தால், எப்படிச் சரி செய்யவேண்டும், வைரஸ் என்றால் என்ன, அது எப்படி கணினியைத் தாக்கும், அதிலிருந்து மீள்வது எப்படி, இணையச் சேவைகள் என்னவெல்லாம் உள்ளன, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது போன்ற பலவற்றையும் அழகாகச் சொல்லித்தருகிறது.
(தொடரும்)
Badri Sir,
ReplyDeleteThis year no books from Soma.Valliappan??
Bala