Friday, November 18, 2011

கல்வி உரிமை என்ற பெயரால் - 4

5. கல்வி வாய்ப்பை நம் பிள்ளைகளுக்கு அதிகமாக வழங்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

முதலில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். அதற்கான ஒரு வெள்ளை அறிக்கையையும் நாம் பார்ப்பதில்லை. தன் குப்பைகளைப் பற்றிக் கவலைப்படாத ஓர் அரசுதான் தனியார் கல்வி நிறுவனங்களைத் தண்டிக்கப் பார்க்கிறது. தம் பள்ளிகளை சாக்கடையாக வைத்திருக்கும் ஓர் அரசு, அதனைச் சீர் செய்ய ஒரு துரும்பையும் கிள்ளிப் போடுவதில்லை. புதிதாக அரசு, பள்ளிகளை உருவாக்கவேண்டாம். இருக்கும் பள்ளிகளை சீரும் சிறப்புமாக வைத்தாலே, நல்ல கல்வியை வழங்கமுடியும். இதற்குப் பணமும் தேவை, மனமும் தேவை. ஆனால் ஊழல் மலிந்த அரசுத் துறையால் இதனைச் சாதிக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

என்ன செய்யலாம்?

அமெரிக்காவில் இருக்கும் சார்ட்டர் பள்ளிகளைப் போல நாம் உருவாக்கலாம். இவை தனியார் பள்ளிகள் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். இவை பொதுப் பணத்தில் இயங்கும் பொதுப் பள்ளிகள். ஒரு பள்ளியை நிர்வகிக்க ஐந்து அல்லது பத்தாண்டுகள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட லாப நோக்கில்லாத அமைப்பிடம் கொடுக்கவேண்டும். அந்தப் பள்ளி குறிப்பிட்ட இலக்குகளை அடையவேண்டும். தன்னிச்சையாக ஆசிரியர் மாற்றம், நியமனத்தில் ஊழல் போன்றவற்றையெல்லாம் செய்ய முடியாது. முடிந்தவரை அந்தந்தப் பகுதிகளில் உள்ள, அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவுச் சங்கத்திடம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பைத் தரலாம். மிகச் சிறந்த ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பிடம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பைத் தரலாம். என்.ஜி.ஓக்களிடம் இந்தப் பொறுப்பைத் தரலாம். அரசுக்கு ஒரு தலைவலி குறையும். அதே நேரம் கொடுத்த காசுக்கு அதிக மகசூல் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, தனியார் பள்ளிகளை அதிகமாக்கவேண்டும். அதற்கு சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். நாம் தொடர்ந்து சொல்லி வருவதைப்போல கல்வித்துறையில் லாபம் சம்பாதிப்பதில் தவறு இல்லை என்ற மாறுதலைக் கொண்டுவந்தால், நிஜமாகவே நல்லவகையில் கல்வி அளித்து அதிலிருந்து லாபம் சம்பாதிக்க விரும்பும் நேர்மையான தொழில்முனைவோர் பலரும் கல்வித்துறைக்கு வருவார்கள். இன்று கல்வித்துறையில் உள்ள தனியார் அனைவரும் அநியாய வழிகளில், சட்டத்துக்குப் புறம்பான வழிகளில்தான் பணத்தை ‘அள்ளுகிறார்கள்’. ஆனால் கொள்கை அளவில்கூட இந்த லாபம்+கல்வி என்பதை யாரும் பரிசீலிப்பதில்லை.

6. ஆங்கிலம் + தமிழ்: இன்று ஆங்கிலக் கல்விமீதான மோகத்துக்குக் குறைவே இல்லை. இனி குறையப்போவதும் இல்லை. இதன் விளைவு, மானவர்களுக்கு இரண்டு மொழிகளும் ஒழுங்காகச் சொல்லித் தரப்படுவதில்லை. அவர்களால் தமிழிலும் எழுத முடிவதில்லை, ஆங்கிலத்திலும் எழுத முடிவதில்லை. தமிழ் வழிப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தபட்சம் நல்ல தமிழில் எழுதப்பட்டதை மனப்பாடம் செய்து சிறப்பாக ஒப்பிக்கவாவது செய்கிறார்கள் (நானே நேரில் பார்த்திருக்கிறேன்). ஆனால் ஆங்கிலப் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் ஆசிரியர்களின் ஆங்கிலமே தாங்க முடிவதில்லை. இதில் மாணவர்களை என்ன சொல்வது?

முத்துக்குமரன் கமிட்டி கொடுத்த சமச்சீர் கல்வி அறிக்கையில் இரு மொழிகளுக்கும் செலவிடப்படவேண்டிய நேரம் அதிகம். ஆனால் எந்தப் பள்ளியும் இன்று அதனை விரும்புவதில்லை. தமிழிடமிருந்து நேரத்தைத் திருடி, அறிவியல், கணிதம் நடத்தவே அவர்கள் முற்படுகிறார்கள். மொழியின் புரிதலின்றி, பிறவெல்லாம் வீணே என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

ஆனால், இந்தக் குழப்பத்துக்கு எப்படி விடை காண்பது என்று தெரியாமல் குழம்புகிறேன்.

(முற்றும்)

8 comments:

  1. என்.ஜி.ஓக்களிடம் இந்தப் பொறுப்பைத் தரலாம்.இப்பொழுது அதுதானே நடைமுறையில் உள்ளது(Aided Schools)அரசுப் பள்ளிகளை தனியார் தத்தெடுக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கவேண்டும். அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தவிர்க்கப்படவேண்டும்.
    கற்றாலென்பது ஒரு ஏதுவான சூழ்நிலையில் தான் சாத்தியப்படும். இதைப் பற்றி நீங்கள் தொடங்கி வைத்த gomannar வலைபூவில் நான் எழுதிய கட்டுரை http://gomannar.blogspot.com/2011/07/v.html

    ReplyDelete
  2. ஊழலை ஒழிப்பது எப்படி என்று ஒரு சமயம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டபோது அது ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கையிலும் தாயின் கையிலும் உள்ளது என்று ரத்தினச் சுருக்கமாகப் பதிலளித்தார். அதாவது மாண்வர்களை --எதிர்காலப் பிரஜைகளை உருவாக்குவது ஆசிரியர் கையில் உள்ளது என்பதைத் தான் அவர் அவ்விதம் சுட்டிக் காட்டினார்.

    கல்வித் துறையிலான பிரச்சினை எல்லாம் ஆசிரியர்களை மையமாகக் கொண்டதே. ஆசிரியர் பணி என்பது சமூகப் பொறுப்பையும் கொண்டது.ஆசிரியர் பணிக்கு வருபவ்ர் பெரும் பணம் சம்பாதிக்க வழியே இல்லை.(ப்ள்ளிகளைத் துவக்குவோர் மேலும் மேலும் பணக்காரராக முடியும்).வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை.வாத்தியார் வேலைக்குப் போவோம் என்ற மனப்பான்மை தனியார் பள்ளிகளிலும் சரி, அரசுப் பள்ளிகளிலும் சரி, கல்வித் தரத்தை உயர்த்தாது.
    எல்லாமே ஆசிரியர் நியமனத்தில் தான் உள்ளது.அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில் வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிந்து பத்து பதினைந்து ஆண்டு காத்திருந்த பின் ஆசிரியர் வேலை கிடைக்கலாம். இதற்குள் ஆசிரியர் ப்ணிக்குத் தகுதி கொண்ட எந்த நபருக்கும்--எந்த இளைஞருக்கும் சிறந்த ஆசிரியராகத் திகழ வேண்டும் என்ற லட்சிய மனப்பான்மை ஆவியாகிவிட்டிருக்கும்.
    பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது.வேறு வேலை கிடைக்கின்ற வரையில் ஆசிரியர் வேலையில் கிடைத்த சம்பளத்தில் இருப்பார். கல்வி போதனை என்றால் என்ன என்று அவர் கற்றுக்கொள்வதற்குள் வேறு வேலை கிடைத்துப் போய்விடுவார்.இருக்கின்ற காலத்தில் நிர்வாகத்தின் நிர்பந்ததால் --வேலை போய்விடும் என்ற அச்சத்தால் முடிந்தவரை கஷ்டப்பட்டு உழைப்பார்.வேலை போய்விடும் என்ற அச்சம் அவர்களை உழைக்கச் செய்கிறது.
    அரசுப் பள்ளிகளில் வேலை போகும் என்ற பயம் இல்லை.தகுந்த மேற்பார்வை முறை இருப்பதாகச் சொல்ல முடியாது.அர்சுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளூரைச் சேர்ந்தவராக உள்ளூர் மக்களிடையே நன்கு அறியப்பட்டவராக் இருந்தால் நன்றாக இருக்கும்.டிரான்ஸ்பர் முறை இருக்கும் போது அதற்கான வாய்ப்பு குறைந்து விடுகிறது.
    முனிசிபல் பள்ளியில் படித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆசிரியர்கள் திறமைமிக்கவர்களாக கடமை உணர்வு கொண்டவர்களாக டியூஷன் வைத்துக்கொள் என்று நிர்பந்திக்காதவர்களாக வேறு சைட் பிசினஸ் வைத்துக் கொள்ளாதவர்க்ளாக் இருந்தார்கள்.பல நல்ல முனிசிபல் பள்ளிகளை--எல்லாமே தமிழ் மீடியம் பள்ளிகள் --அப்போதே எனக்குத் தெரியும்.அப்படிப்பட்ட முனிசிபல் --மற்றும் அரசுப் பள்ளிகள் ஏன் தரம் தாழ்ந்தன என்பதைக் கண்டறிந்தால் கல்வித் துறையிலான பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

    ReplyDelete
  3. மீடிய்ம் பற்றி சொல்லாமல் விட்டு விட்டதால் மறுபடி தொடர்கிறேன். மீடியம் ஒரு முக்கிய அம்சமே அல்ல. அரசுத் துறையில் அல்லது உள்ளாட்சித் துறையில் ஊருக்கு இரண்டு மிகச் சிறந்த தமிழ் மீடியம் ஆரம்பப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள் நடத்திக் காட்டினால் போதும். காலப்போக்கில் ஆங்கில மீடியம் பள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
    தாய் மொழியில் தான் கல்வி இருக்க வேண்டும்.தாய் மொழியில் சிந்திககவைக்க வேண்டும்.ஆங்கிலம் ஒரு மொழி என்ற மட்டில் அதை நன்கு போதித்தால் போதும். ஆங்கில மீடியத்திலான படிப்பு தான் சிறந்த ப்டிப்பு என்று கூறுவது விஷயம் தெரியாதவர்கள் பேசுகின்ற பேச்சு.
    ஜெர்மனியிலும், போலந்திலும்,பிரான்சிலும், ஜப்பானிலும் தங்கள் தாய் மொழியில் ப்டித்து உலகப் பிரசித்தி பெற்றவர்கள் ஆங்கில் மீடியத்தில் படிக்காமல் தாய் மொழியில் படித்து எப்படி முன்னேறினர் என்ற கேள்விக்குப் பதில் என்ன?
    தமிழகத்தில் 1940 களில் ஆங்கில மீடியப் பள்ளிகளே இல்லாத நிலைமை இருந்தது.அப்போது படித்தவர்கள் எல்லாம் முட்டாள்களாகி விடவில்லை.
    மீடியம் முக்கியமல்ல.கல்வி போதனையிலான தரம் தான் முக்கியம்.
    ஆனால் இன்று தமிழில் 20 வாக்கியங்கள் சொந்தமாக, ஒழுங்காக, பிழையின்றி எழுதத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆங்கில மீடியப் பள்ளிகளில் ப்டிக்கும் மாண்வர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.அரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படிக்கின்ற மாண்வர்களுக்கு ஆங்கில்த்திலும் புலமை இல்லை.தமிழிலும் தடுமாற்றம் என்ற நிலை உள்ளது. மீண்டும் கூறுகிறேன்.தரம் தான் முக்கியம். மீடியம் முக்கியமேல்ல.தாய்மொழிக் கல்விதான் சிறந்தது.

    ReplyDelete
  4. திரு.பத்ரி

    நல்ல நுட்பமான அலசல். தங்களது உழைப்பு நன்றாகத் தெரிகிறது. ஆதங்கமும் புரிகிறது. உண்மை. என்ன செய்வது? என் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்வார் "கேனப் பைய ஊர்ல கிறுக்குப் பைய நாட்டாமை ஆண்டா?" மக்கள் எல்லோரையும் திட்டமிட்டு கேனப் பையன்களாக ஆக்கிவிட்டார்கள். கிறுக்குப் பசங்கதான் ஆட்சி செய்வார்கள். வழியில்லை என்றே தோன்றுகிறது. மீண்டும் ஒரு நல்ல தொலைநோக்குள்ள சமுதாய அக்கறை உள்ள ஒரு ஆட்சியாளர் வரும்வரை இதுதான் நிலைமை. ஒன்றும் செய்வதற்கில்லை. எத்தனை வருஷங்கள் தவம் செய்ய வேண்டுமோ தெரியவில்லை?

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

    ReplyDelete
  5. உள் நாட்டுக்கு வந்த பிறகு பல நிலைகளில் பார்க்கிறேன்....கல்வியின் தரம் எந்த அளவுக்கு கீழே இறங்கியிருக்கிறது என்று.இதை இப்படியே விட்டால் எந்த தரத்துக்கு நம் மதிப்பு இருந்ததோ அதை விரைவில் இழக்கவேண்டிவரும்.
    சட்டத்துக்குப் புறம்பான வழிகளில்தான் பணத்தை ‘அள்ளுகிறார்கள்’
    இல்லாவிட்டால் போனஸாக வருடம் 2 லட்சம் ஹாட் கேஷாக கொடுக்கமுடியாதே!

    ReplyDelete
  6. A good Analysis... Badri - We do not even need Charter Schools.. If the local Governments work towards caring for education and local schools you can change the entire scene with in five years....
    It is an easy thing.. Why will they not do it? refer the above Comment of Mariappan...
    "கேனப் பைய ஊர்ல கிறுக்குப் பைய நாட்டாமை ஆண்டா?" மக்கள் எல்லோரையும் திட்டமிட்டு கேனப் பையன்களாக ஆக்கிவிட்டார்கள். கிறுக்குப் பசங்கதான் ஆட்சி செய்வார்கள். வழியில்லை என்றே தோன்றுகிறது. மீண்டும் ஒரு நல்ல தொலைநோக்குள்ள சமுதாய அக்கறை உள்ள ஒரு ஆட்சியாளர் வரும்வரை இதுதான் நிலைமை

    ReplyDelete
  7. நான்கு பதிவுகளும் ஆழமான அக்கறையுடன் எழுதப் பட்டிருக்கின்றன.
    சில கேள்விகள், கருத்துகள்:சார்ட்டர் பள்ளிகள், பொதுப் பணத்தில் பொதுப் பள்ளிகள், லாப நோக்கமின்றி அமைப்பு, கூட்டுறவு சங்கம், சிறந்த ஆசிரியர்களின் கூட்டமைப்பு எல்லாம் சரிதான். ஆனால் இந்த அமைப்புகளை நியமிக்கப் போவது யார்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பது போல் கரை வேட்டிகளை விட்டால் நாட்டுக்கு யார் இருக்கிறார்கள்? சுதந்திர அமைப்பில் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள் என்று யார் சொன்னது? சினிமாத் துறையில் ஆதிக்கம் செலுத்தி தியேட்டர்களை அமுக்கியவர்களுக்கு இதெல்லாம் கடினமா? தேன் எடுக்கும் போது புறங்கையை நக்கியே பழக்கப்பட்டவர்கள் சப்புக்கொட்டிக் கொண்டு புதியதொரு ஊழலுக்குத் தயாராகி விடுவார்களே?
    கல்விப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப் படுகிறவர்கள் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களே. அவர்கள் தாமாகவே ஒன்று கூடி அரசு உதவியை சிறிதும் எதிர்பார்க்காமல் முற்றிலும் கூட்டுறவு முறையில் பள்ளிகள் நடத்த முனைந்தால் இதற்கு ஓரளவு நல்ல தீர்வு கிடைக்கும். இந்தக் கூட்டுறவு அமைப்பிலும் உபரிப் பணம் அதிகம் புழங்காமல் இருப்பது அவசியம். பணம்தான் மனிதர்களைத் தின்னும் தூண்டில். எனவே ஒரு பகுதியில் வசிக்கிறவர்கள்/ ஒரு அலுவலக ஊழியர்கள் இப்படி ஏதோ ஒரு அடிப்படையில் ஒன்று சேர்கிறவர்கள் பணத்துக்குப் பதில் பொருள்/ திறமை/ நேரத்தைத் தங்கள் உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்விக்காக அளித்தால் இந்தக் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகத்தில் தூய்மை சாத்தியமாகும்.

    ReplyDelete
  8. கல்வி என்பது பள்ளிகளில் மட்டுமே கிடைப்பத்து என்பது ஜனநாயகம் வளர்த்த மூடநம்பிக்கை. வயலிலும் அடுப்பங்கறையிலும் பட்டறையிலும் காட்டிலும் திண்ணையிலும் தெருவிலும் டீக்கடை மேசையிலும், சில நேரங்களில் நூலகங்களிலும் கூட கற்பது கல்வி.
    ஆனால் இன்று பள்ளிக்கூட கல்வி ஒரு வெப்லென் பொருள் - அந்தஸ்த்துக்காகவும் அடையாளத்திற்காகவும் வாங்கப்படும் பொருள். வலைப்பதிவாலும் வாக்குவாதத்தாலும் இது மாறாது. அரசின் இரும்பு கரத்திலிருந்தும் சமூக சீர்திருத்த சிக்கன்குனியாகளின் தொல்லையிலிருந்தும் தப்புவது மெத்தக் கடினம், ஐயே!

    ReplyDelete