Wednesday, November 30, 2011

அந்நிய நேரடி முதலீடு - 1/n

இந்தியாவில் பெரும்பாலான விவாதங்களை ஒரு தரப்பு படுவேகமாகக் கடத்திக்கொண்டு போய்விடுகிறது. எதிர்த் தரப்பு தன் வாதத்தை வைப்பதற்கு முன்னால் முதல் தரப்பு மாபெரும் குண்டுகளைத் தூக்கிப் போட்டுவிடும். எதிர்த் தரப்பால் செய்யக்கூடிய ஒரே விஷயம், பதுங்கு குழிக்குள் டபார் என்று பாய்ந்து ஒளிந்துகொள்வது மட்டுமே.

கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், அணுக் கதிர்வீச்சில் கோடி பேர் சாவார்கள், நாடே நிர்மூலமாகிவிடும் என்று ஒரு தரப்பு சொல்லிவிட்டால், எதிர்த் தரப்பு காலி. இல்லை, நடக்காது என்றால் எப்படி என்று நிரூபி என்பார்கள். அணு மின்சாரத்தின் நன்மைகள் பற்றியெல்லாம் பேச இங்கு இடமே கிடையாது. முதல் தரப்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே காலம் கழிந்துவிடும். முல்லைப் பெரியாறு என்றால் ஒரு தரப்பு, 35 லட்சம் மக்களின் உயிரே போய்விடும் என்று ஆரம்பிக்கும். பதில் பேசுவதற்குள் சினிமா காண்பித்து, அணை 3-டியில் உடைந்து, மக்கள் நீரில் மிதந்துகொண்டிருப்பார்கள்.

இப்போது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு. 40 லட்சம் மக்களை அல்லது 4 கோடி மக்களை அழிக்கப்போகிறது அணு குண்டு. எப்படி என்பதெல்லாம் கவலையில்லை. விவசாயிகள் ஒழிந்தார்கள். எதிர்ப்பேச்சு இல்லை. அண்ணாச்சி கடைகள் காலி. ம்ஹூம், என்ன பதில் சொல்வது?

எனவே நான் என் கருத்துப் போரை ஆரம்பித்துவிட்டேன். தமிழ்பேப்பரில் நான் எழுதிய கட்டுரை இதோ. ஆனால் அது போதாது. பல தெளிவுகள் தேவை. எனவே இந்த நீண்ட தொடர் உரையாடலில் தினமும் கொஞ்சமாவது எழுதப்போகிறேன்.

முதலில் ரீடெய்ல் டிரேடிங் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே யாராவது இருக்கவேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் நேரடியாக நுகர்வோரை அணுகத் தெரியாதவர்கள் அல்லது அணுக விரும்பாதவர்கள். மேலும் நுகர்வோரை அணுக, அதற்கான கட்டுமானம் தேவை. அந்தக் கட்டுமானத்தைத்தான் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், ஸ்டாக்கிஸ்டுகளும் வழங்குகிறார்கள்.

மொத்த வியாபாரி பெரும்பாலும் நேரடியாக நுகர்வோருக்கு விற்கமாட்டார். அவரிடமிருந்து பெரும்பாலும் சில்லறை வியாபாரிகள்தான் வாங்குவார்கள். பின் அவர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பார்கள். இதில் C&F agents (carrying & forwarding) என்று சிலர் இருப்பார்கள். இவர்கள் பொருள்களைக் கிடங்குகளில் வைத்திருப்போர் மட்டுமே. உற்பத்தியாளரே மொத்த அல்லது சில்லறை வியாபாரிகளைப் பிடித்து, அவர்களிடம் பொருள்களை விற்றுவிட்டு, சி&எஃப் எஜெண்டிடம் சொல்லி, யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர்களுக்கு அனுப்பச் சொல்லிவிடுவார். பொருள்களை வைத்திருந்து, அனுப்புவதற்கு இவர்களுக்கு ஒரு கட்டணம் தரப்படும்.

இந்தக் கட்டுமானம் இல்லாமல் இன்று இந்தியாவில் பெரும்பாலும் எந்தப் பொருளுமே விற்பனைக்கு வருவதில்லை என்று சொல்லிவிடலாம். இதில் எவையெல்லாம் அடங்கும்?
 1. காய்கறி, பழம்
 2. அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் வற்றல் போன்ற மளிகை சாமான்கள்
 3. குளியல் சோப், இத்யாதிகள்
 4. மர, இரும்புச் சாமான்கள், பாத்திரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள்
 5. மின்னணுப் பொருள்கள் (டிவி, ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர்...)
 6. புத்தகங்கள்
 7. மியூசிக் குறுந்தட்டுகள், டிவிடிகள்
ஐடியா கிட்டத்தட்டப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியிலிருந்து சில வேறுபாடுகளும் உள்ளன.

1. பாரம்பரியச் சந்தை முறை: கிராமங்களில் இன்றும் இது தொடர்கிறது. காய்கறி, மளிகைப் பொருள்கள், சில கைவினைப் பொருள்கள் ஆகியவை உற்பத்தியாளர்களாலேயே சந்தைக்கு (உழவர் சந்தை, கிராமச் சந்தை) கொண்டுவரப்பட்டு, நுகர்வோருக்கும் ஏஜெண்டுகளுக்கும் நேரடியாக விற்கப்படுகின்றன.

2. நேரடி விற்பனை முறை: எந்த இடைத்தரகரும் இல்லாமல், இணையம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், நேரடி விற்பனையாளர் மூலமாகவும் நுகர்வோருக்கு விற்பனை செய்வது. டெல் கம்ப்யூட்டர்கள், யுரேகா ஃபோர்ப்ஸ் வேக்கும் கிளீனர், அக்வா கார்ட் வாட்டர் ஃபில்ட்டர் போன்றவை.

3. கம்பெனி ஷோரூம்/ஏஜென்சி: இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகள் விற்பனைச் செயல்பாடு இப்படித்தான் நடக்கிறது. உற்பத்தியாளர் நேரடியாக தன் ஏஜென்சிகளை சிலருக்கு மட்டும் கொடுக்கிறார். சரக்கை நேராக அங்கே அனுப்புகிறார். இதெல்லாம் பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருள்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். இந்த ஷோரூம்களில் சில காட்சிப் பொருள்கள் மட்டும் இருக்கின்றன. புக்கிங் செய்ததும், சில நாள்கள் கழித்து, வேண்டிய பொருள்கள் ஷோரூமுக்கு வந்து பின் நுகர்வோருக்குப் போகின்றன. இங்கு, விற்பனைக்குப் பிறகான சேவை முக்கியமாகிறது.

(கொஞ்சம் கொஞ்சமாகத் தொடரும்)

11 comments:

 1. நன்றாக உள்ளது பத்ரி!!! இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாமோ? எனக்கு இந்த விஷயத்த பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல...ரெண்டு பக்கமும் கொழப்புறாங்க :)

  ReplyDelete
 2. ///எனவே நான் என் கருத்துப் போரை ஆரம்பித்துவிட்டேன். ///

  வெரி குட்.
  ஸ்பெக்ட்ரமில் போலத் தனிக்குரலாக, நிதானமான, தெளிவான அலசல் இங்கும் தந்திருக்கிறீர்கள். வரும் புக் ஃபேரில் 'ரீடெயில் சர்ச்சை' புத்தகத்தை எதிர்பார்க்கலாமா :-)

  ReplyDelete
 3. உங்களிடமிருந்து இதை எதிர்பார்த்தேன். நல்ல தொடக்கம்

  கண்ணன் திருவள்ளூர்

  ReplyDelete
 4. அப்படியே தொடர்ந்து எழுதும் போது, குருமூர்த்தி வைக்கும்/வைக்கப்போகும் வாதங்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
  -நகுல்

  ReplyDelete
 5. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடரும்//

  நீங்க எழுதி முடிக்கும் முன்னாடி "அனைத்தும் நிறைவேறிற்று"ன்னு சங்கு ஊதிரப்போறாங்க....-:)

  ReplyDelete
 6. Kerala's answer to Multi-National Retail Stores...
  http://en.wikipedia.org/wiki/Margin_Free_Market

  Also please talk about Chinthamani Coop. Super Market which was running very successfully in Coimbatore, but closed down not due to lack of patrons/customers, but due to politicians/corrupt bureaucracy.

  - Why Cooperative movement has been hijacked ???

  ReplyDelete
 7. Waiting for last few days to hear your opinions. I would have mailed you if this post had nt appeared. Thanks

  ReplyDelete
 8. Please answer this and help us understand the difference. This question appears in Tamil paper.

  பாலு மகேந்திரன்
  November 30th, 2011 at 6:02 pm

  அந்நிய குளிர்பானக் கம்பெனிகளை உள்ளே விட்டதால் என்ன நடந்தது என்று நினைவில்லையா?

  அந்நிய முதலீட்டில் பிரச்சனையே இல்லையா என்றால் இருக்கிறது: “Food Security.”
  இந்நிறுவனங்கள் cold storage எனப்படும் back end supply chain-ஐ பலப்படுத்துவர் . சந்தையில் அதிக விலை கொடுத்து அந்த சீசனில் விளைந்த அனைத்தயும் வாங்கி ல் வைத்து பின் குறைந்த விலைக்கு அவர்கள் கடையில் விற்பார்கள். இப்படியே கொஞ்ச நாள் சென்றால் சிறு வணிகர்கள் தங்கள் கடையை மூடி விட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடுவர். சில காலம் கழித்து சந்தையில் சில அந்நிய கம்பனிகளே தாக்குப் பிடித்து இருப்பார். அதற்கப்புறம் இவர்கள் வைத்ததுதான் சட்டமாகிவிடும்

  ReplyDelete
 9. இப்போது உரத்த குரல் எழுப்புவோர் அனைவரும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்துகிறார்கள். யாராவது விவசாயிகளின் கருத்து என்ன என்று கேட்டார்களா? இல்லை. 51 சதவிகித அன்னிய முதலீட்டினால் விவசாயிகள் பாதிக்கப்ப்டுவதற்குப் பதிலாக அவர்கள் பயன் பெற வாய்ப்பு இருக்கிறது.உற்பத்தி அதிகரித்தால் விலை வீழ்ந்து நஷ்டம் தான் ஏற்படும் என்ற அச்சம் இன்றி அவர்கள் தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டு போக வழியிருக்கிறது.
  எந்த ஊடகமும் விவசாயிகள் சங்கத்தினரின் கருத்தை எடுத்துக்க் கூற முன்வரவில்லை என்றே கருதுகிறேன்.
  மத்திய அரசும் சரி,(கூடங்குளத்தில் செய்தது போல்வே) தங்கள் கொள்கையால் பயன் பெறப்ப்போகிறவர்களை முன் நிறுத்தவில்லை அவர்களின் குரல் எடுபடச் செய்வதற்கு எதையும் செய்யவில்லை.காங்கிரஸ்காரர்கள் - மத்திய தலைவர்கள், பிரதேச் காங்கிரஸ் தலைவர்க்ள், காங்கிரஸ எம்பிக்கள் ஆகியோர் யாரும் அரசுக்கு பின்பலமாகக் குரல் எழுப்ப முன் வரவில்லை.இது ஏதோ மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவின் சொந்த விவகாரம் என அனைவரும் ஒதுங்கி நிற்கின்றனர்.வாயைத் திறந்தால் பிரச்சினையாகி எதிர்காலத்தில் தேர்தல் டிக்கெட் கிடைக்காம்ல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். ஊடகங்கள் மதில் மேல் பூனையாக இருப்பது வருந்தத்தக்கது.

  ReplyDelete
 10. Indian products are not of high quality
  - Bring chinese goods

  Indian seeds are not of high quality - Bring artificially/genetically processed seeds from america

  I earn more than 1 lac per month, i cannot go and stand in koyambedu to buy vegetables
  - Bring Reliacne and More retail shops(atleast this is somewhat acceptable)

  Indian corporation won't aLLufy kuppai properly.
  - Bring Singapore company contrct, to kuppy allufy

  Indian petti shops and annachis won't pay taxes, won't respect employees and customers
  - Bring Walmart

  Simple Solution. No vision. No long term strategy. No 'risk-taking' from govt.

  ReplyDelete