Thursday, July 01, 2004

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1

தலித்திய விமர்சனக் கட்டுரைகள், ராஜ் கௌதமன், காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2003, விலை ரூ. 90

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், புதுவை அரசு பட்டமேற்படிப்பு மையத்தில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவராகவும் இருக்கும் ராஜ் கௌதமனின் பதினைந்து கட்டுரைகளை அடக்கிய புத்தகம் இது.

முதல் கட்டுரை "தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்" - 1991இல் எழுதியது. இக்கட்டுரையில் தமிழ் இலக்கியம் தலித்துகளை எவ்வாறு சித்தரிக்கிறது, தமிழகத்தில் நடந்த மூன்று பெரும் போராட்டங்கள் - (தேச) விடுதலை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் - ஆகிய மூன்றும், இவ்வியக்கங்களின் தாக்கத்தால் உருவான படைப்புகளும் எவ்வாறு தலித்துகளுக்கு எதிரான கருத்தியலையே முன்வைத்தன என்றும் விளக்குகிறார். "வழக்கமாக தமிழில் ஏதாவது ஒன்றின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி எழுதுபவர்கள் தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுவது மாதிரி தலித் இலக்கியத்திற்குக் காட்ட முடியாது. இதற்கு இனிமேல்தான் தோற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டும்." என்கிறார். தலித் இலக்கியத்திற்கான வரையறை ஒன்றையும் தருகிறார்:
தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.
பொதுவுடமைக் காரர்கள் வர்க்க அழிப்பு தங்களுக்கு வெற்றியைக் கொடுத்து விடும் என்று நினைப்பது தவறு. தமிழகச் சூழலில் வெற்றி என்பது தலித்கள் மேற்கொள்ளும் சாதி, மத, குடும்ப அழிப்புப் போராட்டம் வெற்றியடைந்தால்தான் என்கிறார். எதற்காக சாதி, மதம் ஆகியவற்றை அழிப்பதோடு குடும்பம் என்னும் அமைப்பையும் அழிக்க வேண்டும்? ஆதிக்கம் என்பது வெவ்வேறு வகைகளில் இந்த மூன்று அமைப்புகளிலும் இடம்பெறுகிறது. குடும்பம் என்பதில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதாகவும், சாதி என்னும் கட்டமைப்பில் ஆதிக்க சாதியினர் (பார்ப்பனிய, வெள்ளாளர்கள்) தலித்துகளை நசுக்குவதாகவும், இந்த இரண்டு வித ஆதிக்க அமைப்புகளையும் மதம் என்னும் அமைப்பு நிரந்தரப்படுத்துவதாலும், முழு விடுதலை என்பது இம்மூன்று அமைப்புகளையும் நொறுக்குவதாலேயே கிடைக்கிறது என்கிறார்.

பெண்களையும், தலித்துகளையும் 'தீட்டு' என்னும் கொள்கை மூலம் ஆதிக்கசாதி ஆண் சமூகம் ஒடுக்கியது, சொத்துக்களை ஆண் வழியாக பகிர்ந்து கொண்டது, பாலியல் ரீதியான ஒடுக்குமுறை, பொருளாதார ரீதியின் தலித்துகளின் உழைப்பைச் சுரண்டிய சமூகம், குடும்பத்திற்குள் பெண்ணின் உழைப்பைச் சுரண்டுகிறது. இதனாலேயே தலித்துகள் சாதி, பொருளாதார அதிகராங்களைத் தகர்ப்பதன் கூடவே குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்க்க வேண்டிய கடமைக்குள்ளாகிறார்கள் என்கிறார். இதனால் இந்தப் போராட்டத்தில் பெண்களும், தலித்துகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மேலோட்டமாகவும் குறிப்பிடுகிறார் ராஜ்கௌதமன்.

3 comments:

  1. காலச்சுவட்டில் சமீபத்தில்தான் இவருடைய பேட்டியொன்றைப் படித்தேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க முடிந்தால் நன்றாயிருக்கும்.

    ReplyDelete
  2. 200 கோடி கொண்டுள்ள 40 பேருடைய ஒரு குடும்பத்தையும் , 20,000 மொத்த சொத்துள்ள 40 பேருள்ள குடும்பத்தையும் நினைத்துப் பார்த்து இவ்வாறு சொல்வார் என்ப் புரிந்துகொள்கிறேன். 200 கோடிகள் கொண்ட குடும்பங்கள் வளர்ந்து கொண்டே போவதும் 20000 கொண்டுள்ள குடும்பங்கள் முன்னேறாமல் இருப்பதும் மாறுவது எப்படி?

    ReplyDelete
  3. //எதற்காக சாதி, மதம் ஆகியவற்றை அழிப்பதோடு குடும்பம் என்னும் அமைப்பையும் அழிக்க வேண்டும்? //
    my previous comment was related to this.

    ReplyDelete