ஞாயிறு (22 ஆகஸ்ட் 2004) மாலை 5.30 மணியளவில் உந்துநர் அறக்கட்டளை (Catalyst Trust) சார்பாக சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசினார்.
உந்துநர் அறக்கட்டளை சென்னையிலிருந்து நடைபெறும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம். குடியாட்சி முறை சிறப்பாக நடைபெற வேண்டுமானால் மக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை விழிப்புடன் கண்காணிப்பது அவசியம் என்பதை வலியுறுத்துவதே உந்துநர் அறக்கட்டளையில் நோக்கம். 'குடிமக்கள் முரசு' என்னும் தமிழ் மாத இதழை நடத்தி வருகிறது இந்த அறக்கட்டளை.
இரா.செழியன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
உந்துநர் அறக்கட்டளையின் தலைவர் B.S.ராகவன் (ஓய்வுபெற்ற இ.ஆ.ப) டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை வரவேற்றுப் பேசினார். டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 'இந்திய அரசியலின் கங்கோத்ரி' என்று பாராட்டினார். உலகின் எட்டாவது அதிசயம் இந்தியத் தேர்தல் - இதனை மிகவும் திறம்படச் செய்து காட்டியவர் கிருஷ்ணமூர்த்தி என்று புகழாரம் சூட்டினார். இந்தியாவில் 675 மில்லியன் வாக்காளர்கள் (இதில் 55-60% தான் வாக்களிக்க வருகிறார்கள்), 700,000 வாக்குச் சாவடிகள், 1 மில்லியன் மின்னணு வாக்கு இயந்திரங்கள், 500,000 தேர்தல் பணியாளர்கள், 5000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் என்று பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது இந்தியப் பாராளுமன்றத்துக்கானப் பொதுத் தேர்தல், என்றும் இப்படிப்பட்ட தேர்தலை திறமையாக நடத்தியிருப்பவர் அமெரிக்காவில் மட்டும் இருந்துவிட்டால் அவர் மீது பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும், பல பெருமைகள் குவிந்திருக்கும், ஆனால் இந்தியாவில் நாம் இத்தகைய ஒரு மாபெரும் விஷயத்தைச் செய்தவரைப் பற்றி கண்டுகொள்வது கூட இல்லை என்றார் ராகவன்.
இந்தியாவில் மூன்று அமைப்புகள் அரசியல் நிர்ணயச் சட்டத்தை இயற்றியவர்கள் எதிர்பார்த்தமாதிரி இதுவரை நடந்துள்ளது. அவை இராணுவம், நீதித்துறை, தேர்தல் கமிஷன். இதில் கூட முதலிரண்டில் அவ்வப்போது சில தொல்லைகள் இருந்தாலும் தேர்தல் கமிஷனைப் பொருத்தவரை அப்பழுக்கற்றதாய் உள்ளது என்றார்.
கிருஷ்ணமூர்த்தி தேர்தல், அரசியல் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கோரி பிரதமருக்கு 22 சிபாரிசுகள் அடங்கிய மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதுபற்றி அவர் தன் பேச்சில் விரிவாகப் பேசுவார் என்று முடித்தார் ராகவன்.
இரா.செழியன் பேசும்போது தான் ஓர் அரசியல்வாதி, ஆனால் இப்பொழுது எந்தக் கட்சியிலும் இல்லை என்றார். குடியாட்சியைப் பற்றிப் பேசும்போது அவர் சொன்னது: "குடியாட்சி என்பது நடக்கும் ஆட்சியை பயமின்றி விமர்சிக்கும் உரிமை, வன்முறையின்றி மாற்றும் உரிமை" என்றார். [இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... ஆங்கிலத்தில் இரா.செழியன் சொன்னது - "Democracy is the right to criticise the Government without fear and the right to change the Government without violence". இது செழியனுடைய சொந்த சரக்கா, இல்லை வேறு ஏதோ அறிஞருடையதை மேற்கோள் காட்டுகிறாரா என்று தெரியவில்லை.]
அனைவருக்கும் வாக்குரிமை என்பதை சிலர் எதிர்க்கிறார்கள். ஒன்றும் படிக்காத முட்டாள்கள் ஓட்டுப்போடுவதால்தான் பொறுக்கிகள் ராஜ்ஜியம் நிலவுகிறது. இதை மாற்றி வாக்குரிமை குறைந்த பட்சம் ஓரளவு வரை படித்தவர்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் சில இடங்களில் நிலவுகிறது. அதனைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் செழியன். இந்த நாடு சில நேரங்களில் வழி பிறழ்ந்தபோதெல்லாம் 'படிக்காதவன்' கூட்டமாக வந்து வாக்குச் சாவடியில் வாக்களித்துத்தான் நாட்டைக் காப்பாற்றியுள்ளான். அதனால் 'அனைவருக்கும் வாக்குரிமை' அவசியம் என்றார்.
தேர்தல் செலவுகள் பற்றிப் பேசும்போது கட்சிகள் audited accounts ஐ தேர்தல் ஆணையத்திற்குக் கொடுப்பதில் உள்ள கஷ்டங்களைப் பற்றிப் பேசினார். பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு சரியான கணக்கு காட்ட முடியாது. அப்படி நன்கொடை யார் கொடுத்தது என்பதை ஓர் எதிர்க்கட்சி கணக்காகக் காட்டினால், அங்குள்ள ஆளும் கட்சி நன்கொடை கொடுத்தவர்களைத் துன்புறுத்தலாம் என்றார். மேலும் கிடைத்த பணமெல்லாம் பொதுமக்கள் பொதுக்கூட்டங்கள் அஞ்சு, பத்து என்று சில்லறையாகப் போட்ட பணம், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கில்லை என்றும் சொல்லி விடலாம் என்றார்.
[இதற்குப் பின்னால் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு அரசியல் கட்சியும் வருமான வரி விலக்கு பெற வேண்டுமானால் audited accounts ஐ வருமான வரி அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். மேலும் ரூ. 20,000க்கு மேல் நன்கொடை பெற்றால் கொடுத்தவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க்க வேண்டும் என்று இப்பொழுதே ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதைப் பற்றி ஆலோசனை செய்யும் என்றார்.]
மீன்களின் நடனம்
1 hour ago
//குறைந்த பட்சம் ஓரளவு வரை படித்தவர்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும்//
ReplyDeleteஇவ்விஷயத்தில் செழியனின் கருத்து ஒப்புக் கொள்ளப் படக் கூடியதே. நடப்புக் கல்வியினால் அறிவுத்திறம் மேம்படுகிறது என்பதே கேள்விக்குரியதாக இருக்கும்போது அதை ஒரு அளவுகோலாகக் கருதி அதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமையைத் தீர்மானிப்பது நிச்சயமில்லாத்தனம். மேலும் இது போன்ற முறைகள் கொண்டுவரப் பட்டால், கிராமத்தில் கல்வியறிவின்றி உழைக்கும் மக்களில் கோடிக்கணக்கானவர்கள் குடியாட்சியில் எந்த உரிமையுமின்றிக் கடையர்களாகச் சீரழியும் ஆபத்து இருக்கிறது. இது மக்களாட்சியாக இருக்காது, உழைப்போரைக் கண்மூடித்தனமாகப் புறக்கணிக்கும் கொடுங்கோன்மையாக இருக்கும். எனவே வாக்குரிமை எல்லோருக்கும் கட்டாயம் வேண்டும்.
//குடியாட்சியைப் பற்றிப் பேசும்போது அவன் சொன்னது://
"அவர்" மேல எதாச்சும் கோபமா? :)
இன்னமும் சில இடங்களில் தவறுகள் உள்ளன. (அவன் -> அவர்) செய்து விட்டேன்.
ReplyDeleteஇந்தப் பதிவு மிக நீண்டதாக இருப்பதால் அதைப் படித்து சரி செய்ய வேண்டிய பொறுமை போய்விட்டது.
நிறைய எழுத்துப் பிழைகள் மண்டி விட்டன என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெரிகிறது. அவற்றையெல்லாம் மெதுவாகத்தான் சரி செய்ய வேண்டும்.