Wednesday, August 25, 2004

சட்லெஜ்-யமுனா இணைப்புக் கால்வாய்

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே உள்ள காவிரிப் பிரச்சினை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்சினை பற்றித் தெரியுமா?

1960 வருடம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதிகளின் தண்ணிரைப் பங்கு போடுவதற்கான ஒப்பந்தம் ஒன்று நிகழ்ந்தது. இதற்கு Indus Waters Treaty, 1960 என்று பெயர்.

சிந்து நதிகள் - சிந்து (Indus), ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் - ஆகியவை. இந்தியா பாகிஸ்தான் ஒப்பந்தப்படி கிழக்கில் உள்ள ஆறுகள் ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகியவற்றின் தண்ணீர் இந்தியாவிற்கும், மேற்கில் உள்ள சிந்து, ஜீலம், சீனாப் ஆறுகளின் நீரில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கும், சிறுபகுதி இந்தியாவிற்கும் எனப் பிரிக்கப்பட்டது.

இந்தப் பிரிவினை நடக்கும்போதே இந்தியா தன் நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவையாக உள்ளது - முக்கியமாக ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளுக்கும் நீர் தேவை என்று விவாதம் செய்துதான் மேற்படி ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் நிறைவேற்றியது. அந்த நேரத்தில் பஞ்சாப், ஹரியானா இரண்டும் ஒன்றாக பஞ்சாப் என்ற பெயரில் இருந்தது. 1966இல்தான் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பஞ்சாப், ஹரியானா என இரு மாநிலங்களானது. அப்பொழுது பாராளுமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட Punjab Reorganization Act, 1966 பஞ்சாபுக்கும் ஹரியானாவுக்கும் எவற்றை எந்த விகிதத்தில் பிரித்துக் கொடுப்பது என்பதை உள்ளடக்கியது. 1976இல் மத்திய அரசு பஞ்சாபும், ஹரியானாவும் தண்ணீரை எந்த விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது. இந்தத் தண்ணிரைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக சட்லெஜ் - யமுனா ஆறுகளை இணைக்கும் ஒரு கால்வாய் கட்டப்படவேண்டும் என்று முடிவாகி, வேலையும் 1978இல் தொடங்கியது. ஆயினும் பிரகாஷ் சிங் பாதலின் அப்பொழுதைய பஞ்சாப் அரசு 1978இல் இந்த விகிதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. தொடர்ந்து ஹரியானாவும், ராஜஸ்தானும் உச்ச நீதிமன்றம் சென்றன.

சீக்கியத் தீவிரவாதம் வலுத்த போது நதிநீர்ப் பங்கீடும் கோபத்தை அதிகப்படுத்தும் ஒரு காரணமாக இருந்தது. 1981இல் இந்திரா காந்தியின் தூண்டுதலில் பேரில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் காங்கிரஸ் (ஐ) முதல்வர்கள் ஒன்று சேர்ந்து புது ஒப்பந்தம் (Water Sharing Agreement, 1981) ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து ஹரியானா, ராஜஸ்தான் இருவரும் உச்ச நீதிமன்றத்திலிருந்த தங்கள் வழக்குகளைத் திரும்பப் பெற்றனர்.

ஆயினும் பஞ்சாபில் மட்டும் பொதுமக்களிடையே இந்த ஒப்பந்தத்திற்கு வரவேற்பில்லை. இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு, ராஜீவ் காந்தி-லோங்கோவால் ஒப்பந்தத்திலும் (Punjab Accord, 1985) சட்லெஜ்-யமுனா இணைப்புக் கால்வாய் வேலைகள் தொடர்ந்து நடக்கும் என்றே முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வருடங்கள் பலவாகியும் பஞ்சாப் பகுதியில் வேலை தொடர்ந்து நடக்காததால் ஹரியானா உச்ச நீதிமன்றம் செல்ல, உச்ச நீதிமன்றம் 4 ஜூன் 2004 அன்று மத்திய அரசே இந்த வேலையை எடுத்துக்கொண்டு செய்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். உடனே பஞ்சாப் அமரீந்தர் சிங் அரசு சட்டசபையில் Punjab Termination of Agreement Act, 2004 எனும் சட்டத்தை இயற்றி இதற்கு முன்னால் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லாது என்று அறிவித்தது. என்னவோ அதற்காகவே காத்திருந்தது போல பஞ்சாப் கவர்னரும் அடுத்த நாளே இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டார். இது குழப்பம் நிறைந்தது என்றால் அவரே குடியரசுத் தலைவரிடம் ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

22 ஜூலை 2004 அன்று, 'இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால் நிஜமாகவே முன்னால் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களெல்லாம் ரத்தாகி விடுமா என்ன' என்ற ஒரு கேள்வியை மத்திய அரசு குடியரசுத் தலைவர் கேட்பதாக உச்ச நீதிமன்றம் முன்னால் கொண்டுவந்தது. இந்த Presidential reference ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சிடம் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே பஞ்சாபும் தன் பங்குக்கு உச்ச நீதிமன்றம் போய், அதன் 4 ஜூன் 2004 தீர்ப்பை ரத்து செய்யுமாறு வேண்டிக்கொண்டது. ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'அதெல்லாம் முடியாது, மத்திய அரசு அந்தக் கால்வாயைக் கட்டியே ஆக வேண்டும். 4 ஜூன் 2004 தீர்ப்பில் மாற்றம் இல்லை' என்று தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் அளவில் பல தர்மசங்கடமான கேள்விகள் வெளிவருகின்றன.

1. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் கலந்தாலோசிக்காமல் இந்தக் காரியத்தைச் செய்தாரா? அப்படியானால் அவர்மீது காங்கிரஸ் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை?

2. ஹரியானாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கொதித்துள்ளனர். உடனடியாக தங்கள் ராஜினாமாவை ஹரியானா காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தலைமை தன் கட்சியின் பஞ்சாப், ஹரியானா மக்களை எப்படித் திருப்திப்படுத்தப் போகிறது?

3. ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, யமுனா வழியாக புது தில்லிக்குக் கொடுக்கும் தண்ணீரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார். தில்லியிலும், பஞ்சாபிலும் ஆள்வது காங்கிரஸ். ஹரியானாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சி. இப்படி ஆளாளுக்கு ஏற்கனவே கையொப்பமிட்டிருக்கும் ஒப்பந்தங்களை மீறினால் என்னாவது?

4. பாஜக காங்கிரஸின் அமரீந்தர் சிங் மீது புகார் சொல்கிறதேயொழிய தன் கூட்டாளியான அகாலி தள் தலைவர் பாதலைக் குறை கூறவில்லை. ஆனால் பாதல இந்த விஷயத்தில் அமரீந்தர் சிங்கை முழுமையாக ஆதரிக்கிறார். சொல்லப்போனால் தான் இந்த விஷயத்தைச் செய்திருக்ககூடாதா என்று வருத்தப் படுகிறார். பாஜக ஆட்சியில் இருந்தால் என்ன செய்திருக்கும்?

5. நம் நாட்டின் தலைவர்கள் எப்பொழுது குறுகிய சுயநலத்தை விடுத்து நாட்டின் முழு நலனை மனதில் வைத்து வேலை செய்யப்போகிறார்கள்?

1 comment:

  1. நதிகள் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டியது அவசியம். அது ஒன்று மட்டுமே இத்தகைய பிரச்னைகளுக்கு ஓரே தீர்வு

    ReplyDelete