Saturday, March 19, 2005

சம அளவில் இரண்டு அணிகளும்

பொதுவாக முதலிரு தினங்களில் ஏதேனும் ஓரணி முன்னுக்கு வந்து ஆட்டத்தின் போக்கை நிர்ணயித்துவிடும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் இரண்டு அணிகளும் மாறி மாறி அடுத்த அணியின் முன்னேற்றத்தைத் தடுத்து ஆட்டத்தைச் சமன் செய்த வண்ணம் உள்ளன.

முதல் நாள் இந்திய மட்டையாளர்கள் வெகு வேகமாக ஆட்டத்தை பாகிஸ்தான் கையை விட்டு எடுத்துச் சென்றனர். ஆனால் நாளின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தான் வேகமான நான்கு விக்கெட்டுகளைப் பெற்று மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தனர். இரண்டாம் நாள் காலையில் பிர விக்கெட்டுகளைப் பெற்றதும் பாகிஸ்தான் தனது சிறப்பான மட்டையாட்டத்தால் முன்னணிக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது பாகிஸ்தான் மிக வலுவான நிலையில் இருந்தது. கையில் எட்டு விக்கெட்டுகள். இந்தியாவைவிட 134 ரன்கள் பின்னால். நல்ல ஃபார்மில் உள்ள இன்ஸமாம்-உல்-ஹக், அசீம் கமால், அப்துல் ரஸாக், கம்ரான் அக்மல் ஆகியோர் இனிதான் விளையாட வரவேண்டும். கிரீஸில் இருக்கும் யூனுஸ் கான், யூசுஃப் யோஹானா இருவருமெ அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து, யாரிடமிருந்து வரும் என்பது தெரியாத வண்ணம் இருந்தது.

மூன்றாம் நாள் காலை பாலாஜி முதல் அடியைக் கொடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து உள்நோக்கித் திரும்பியது. யூசுஃப் யோஹானா பந்தை சரியாகக் கணிக்காமல் மட்டையை மேலே உயர்த்தி வழிவிட்டார். ஆனால் பந்து கால்காப்பில் பட்டது. ஸ்டிரோக் ஏதும் அடிக்காத காரணத்தால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். 281/3. யோஹானா 104. அடுத்து விளையாட வந்த இன்ஸமாம் தான் எப்போதும் விளையாடுவது போல ஜாலியாக விளையாடினார். அடித்த ஒவ்வொரு பந்தும் மட்டையின் நடுவில் பட்டது. எளிதாக ரன்கள் பெற்றார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் பதான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட் கொடுத்து அவுட்டானார். இன்ஸமாம் 30, பாகிஸ்தான் 331/4. இந்நிலையில் இந்தியாவின் லீட் 76 ரன்கள் மட்டுமே. யூனுஸ் கான் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு மூன்றாவது ரன்னைப் பெற முயற்சி செய்தனர். எல்லைக்கோட்டுக்கருகே பந்தை நிறுத்திய கங்குலி பந்தை மேல் நோக்கித் தட்டிவிட, பின்னால் வந்த டெண்டுல்கர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாலரிடம் அனுப்பாமல் நேராக விக்கெட் கீப்பரிடம் விட்டெறிந்தார். இதை எதிர்பார்க்காது மெதுவாக ஓடிவந்த அசீம் கமால் ரன் அவுட் ஆனார். கமால் 6, பாகிஸ்தான் 347/5.

இப்படியாக இந்தியா ஓரளவுக்கு சமநிலையை அடைந்தது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல்முறையாக தமது திறமையைக் காட்டினர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே பந்தை காற்றில் மிதக்கவிட்டு ஆடுகளத்தின் உதவியால் சுழல வைத்து அதிலிருந்து நிறையப் பலனை அடைந்தனர். யூனுஸ் கான் கும்ப்ளேயின் லெக் பிரேக்கில் ஏமாந்து இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யூனுஸ் கான் 147, பாகிஸ்தான் 361/6. மொஹாலியில் அற்புதமான சதமடித்து இந்தியாவுக்கு வெற்றிகிட்டாமல் செய்த கம்ரான் அக்மல் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை சரியாகக் கணிக்காமல் மிட்-ஆஃப் மேல் அடிக்க நினைத்தார். பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்பின் ஆனதால் உள்புற விளிம்பில் பட்டு மிட்-ஆனுக்கு கேட்ச் ஆகப் போனது. அங்கு டெண்டுல்கர் அந்த கேட்சைப் பிடித்தார். அக்மல் 0, பாகிஸ்தான் 362/7. ரன்கள் பெறுவது இப்பொழுது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகிப் போனது.

கும்ப்ளேயின் மற்றுமொரு லெக் பிரேக்கில் அப்துல் ரஸாக் விளிம்பில் தட்டி, கார்த்திக்கின் கையுறை வழியாக முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்தார். ரஸாக் 17, பாகிஸ்தான் 378/8. அடுத்த ஓவரிலேயே மொஹம்மத் சாமி ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆகி ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் கங்குலி பின்னால் ஓடிச்சென்று எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். சாமி 7, பாகிஸ்தான் 378/9. கடைசி விக்கெட்டுக்கு சில ஓசி ரன்கள் கிடைத்தன. ஒரு பை நான்கு ரன்கள், ஒரு லெக் பை நான்கு ரன்கள், ஒரு விளிம்பில் பட்ட நான்கு ரன்கள் என்று சில ரன்களுக்குப் பிறகு கும்ப்ளேயின் பந்தில் மிட்-ஆஃப் சேவாகுக்கு கேட்ச் கொடுத்து மொஹம்மத் கலீல் ஆட்டமிழந்தார். 392 ஆல் அவுட். இந்தியாவுக்கு 14 ரன்கள் லீட் கிடைத்தது.

இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் முதல் ஓவரில் சேவாக் அடுத்தடுத்து மூன்று நான்குகள் அடித்தார். முதலிரண்டு பந்துகளும் கால் திசையில் வந்தன. அருமையாக ஃபிளிக் செய்தார். மூன்றாவது கவர் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சாமி யார்க்கரில் கம்பீர் பவுல்ட் ஆனார். கம்பீர் 1, இந்தியா 14/1. நான்காவது ஓவரில் சேவாக் சாமியை கட் செய்யப்போக, அடி விளிம்பில் பட்டு பந்து ஸ்டம்பில் விழுந்தது. சேவாக் 15, இந்தியா 23/2.

டெண்டுல்கர் தேநீர் இடைவேளைக்கு முன் ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திராவிட், ஆனால், எந்தப் பிரச்னையுமின்றி ஆடினார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பெருத்த மாற்றம் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் டெண்டுல்கர் இவ்வளவு அருமையாக விளையாடியதில்லை. தன் வாழ்க்கையின் உச்சத்தில் எப்படி விளையாடினாரோ அப்படி விளையாடினார். ஆஃப் ஸ்டம்பில் விழும் பந்துகளை அவர் திறமையாக ஃபிளிக் செய்வதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. ஸ்டிரெயிட் டிரைவ், கவர் டிரைவ், பாடில் ஸ்வீப், கட் என்று ஒவ்வொரு அடியும் அற்புதமாக இருந்தது. திராவிடின் எண்ணிக்கையை சுலபமாகத் தாண்டி தன் அரை சதத்தை நெருங்கினார்.

இதற்குள் மைதானம் இருளில் மூழ்கத் தொடங்கியது. டெண்டுல்கர் அப்துல் ரஸாக்கின் பந்துகள் சிலவற்றை சரியாகக் கணிக்க முடியாமல் தடுமாறினார். நடுவர் ஸ்டீவ் பக்னாரிடம் சென்று வெளிச்சக்குறைவு பற்றி புகார் செய்தார். ஆனால் பக்னார் அதைக் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் உள்ள மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. ஆனால் இந்த விளக்குகள் வரும்போது அணைந்து அணைந்து எரியும். அதுவும் டெண்டுல்கரை வெகுவாகப் பாதித்தது. ஆனாலும் தொடர்ந்து விளையாடி பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்று தனது அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ரஸாக் பந்து ஒன்றில் முழுவதுமாக ஏமாந்தார். பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரை நெருங்கும்போது ஸ்விங் ஆனது. அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் ரஸாக் அரைகுறையாக செய்த அப்பீலில் பக்னார் டெண்டுல்கரை அவுட் கொடுத்தார்! டெண்டுல்கர் 52. இந்தியா 121/3.

டெண்டுல்கருக்குப் பெருத்த அதிர்ச்சி. ரீப்ளேயில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் இடைவெளி இருக்கும் போலத் தோன்றியது. அற்புதமான ஓர் ஆட்டத்தை பார்வை குறைந்த பக்னார் ஒழித்து விட்டார்! அதைத் தொடர்ந்தும் திராவிட், கங்குலி இருவரும் வெளிச்சம் பற்றி புகார் செய்தவண்ணம் இருந்தனர். சாமியின் பந்தை புல் செய்து திராவிட் தன் அரை சதத்தைப் பெற்றார். கங்குலியும் கவர் திசையில் ஒரு நான்கைப் பெற்றார். அந்நிலையில் மீண்டும் கங்குலி புகார் கொடுக்க, நடுவர்கள் போனால் போகிறதென்று வெளிச்சம் போதாமையால் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். ஆட்டம் முடியும்போது இந்தியா 133/3 என்ற நிலையில் இருந்தது.

இந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ்பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

1 comment:

  1. //இந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ்பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.// இந்த அனுமானம் பலித்துள்ளது. கும்ளே இரண்டாம் இன்னிங்ஸில் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு சில மணிநேர ஆட்டம் மீதி இருக்கும் என நினைக்கிறேன், முடிவு எப்படி இருக்குமென்று பார்ப்போம்.

    ReplyDelete