Wednesday, March 30, 2005

தமிழ் எழுத்துச் சீர்மை

காசி தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியிருந்தார்.

2003 தமிழ் இணைய மாநாட்டில் பேசப்பட்ட அளவுக்கு இதைப்பற்றி 2004 மாநாட்டில் பேசவில்லை.

2003 மாநாட்டில் குழந்தைசாமி இதுபற்றிப் பேசும்போது சொன்ன சில கருத்துகள் இங்கே:
  • எழுத்துச் சீரமைப்பு என்றால் எழுத்தைக் குறைப்பது அல்ல, கற்பதை எளிதாக்குவது (247 எழுத்துக்களை இம்மியும் குறைப்பதல்ல). எழுத்தைக் குறைக்கப் போனால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனால் 'சீரமைக்கும்' பணியே கெட்டு விடலாம். உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 'ஐ', 'ஔ' ஆகிய இரண்டையும் நீக்க முயற்சி செய்தார். ஆனால் மக்கள் அதை ஒப்புக்கொள்ளாததனால், விட்டு விட்டார்.
  • எழுத்துச் சீர்திருத்தம் என்பது சமீபத்திய கருத்துருவாக்கம் அல்ல. இதைப்பற்றி 1933 இல் பெரியார் சில கருத்துக்களைக் கூறினார். 1978-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பெரியார் சொன்ன சீர்திருத்தத்தில் பாதி நிறைவேற்றப்பட்டது, மற்றது இதுவரையில் செயல்படுத்தப் படவில்லை.
  • தமிழ் பன்னாட்டு மொழி; உலகு தழுவி வாழும் மொழிக்குடும்பத்தால் பேசப்படும் மொழி. இந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆகும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உயிர்மெய் என்பது ஐரோப்பிய நாடுகளின் மொழிகளில் கிடையாது, மத்திய தரை நாடுகளிலும் கிடையாது.
  • இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இதில்தான் குழப்பமே, வித்தியாசமே. இவற்றைக் கற்கத்தான் நாம் அதிகக் குறியீடுகளை உண்டாக்குகிறோம். தமிழ் கற்கும் இடத்தில் ஆங்கிலம், மற்றும் ஃபிரெஞ்சைப் பார்க்கையில் தமிழ் கற்பது பிரமிப்பாக இருக்கிறது, ஏனெனில் அந்த மொழிகளில் எழுத்துக்கள் குறைவு.
  • இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை வெறும் நான்கு குறியீடுகளை வைத்துச் செய்ய வேண்டும். சண்டை சச்சரவு இல்லாமல் இந்த நான்கு வரிசைகளையும், நான்கு குறியீடுகளினால் எழுதுவோம் என்ற கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்வோம். எந்தக் குறிகளைக் கொண்டு வருவது என்பது பற்றி அறிஞர் குழு ஒன்றின் மூலம் முடிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது எளிதாகிறது, அவர்களுக்கும் தமிழ் கற்பதில் அச்சம் இல்லாது இருக்கும். இதனையும் விட குறைக்கலாம், ஆனால் தமிழ் உலகம் ஒப்புக்கொள்ளாது என்பதால் அதைப்பற்றி இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை.
  • வரி வடிவம் நிரந்தரமானதல்ல, ஒலி வடிவம்தான் நிரந்தரம். காலக்கணக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. [பார்க்க: காசியின் பதிவில் உள்ள படங்கள்.]
  • கிரந்தக் குறியீடுகள் உகர, ஊகாரத்துக்கு எளிதானவை.
  • முடிவு: மாற்றங்கள் தேவை, 1978க்குப் பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.
தமிழ் உயிர்மெய் எழுத்துகளில் மொத்தம் ஐந்து வகைகள்:
  1. அகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், ஆனால் அதனைத் தொடாமல், வரும் மாற்றிகள் (துணைக்கால்). எ.கா: ஆகார உயிர்மெய்
  2. அகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்தைத் தொட்டுக்கொண்டு, ஆனால் எழுத்துக்கு வலப்புறத்திலிருந்து தொடங்குமாறு இருப்பது. எ.கா: இகரம், ஈகாரம்
  3. அகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், அதனைத் தொடாமல், ஆனால் அதனை எழுதுவதற்கு முன்னதாகவே வரும் மாற்றிகள் (கொம்புகள்). எ.கா: எகரம், ஏகாரம், ஐகாரம்
  4. அகரமேறிய உயிர்மெய் வடிவத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து எழுதுவது. எ.கா: உகரம், ஊகாரம்
  5. அகரமேறிய உயிர்மெய் வடிவத்தை இரு பக்கங்களிலிருந்தும் மாற்றி அமைப்பது, ஆனால் எழுத்தைத் தொடாமல். எ.கா: ஒகரம், ஓகாரம், ஔகாரம்.
சின்னத்துரை ஸ்ரீவாஸ் Linear Tamil என்று சிலவற்றை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஸ்ரீவாஸ் லினியர் தமிழ் என்பதில் அனைத்து மாற்றிகளையும் (modifiers) அகர உயிர்மெய்க்குப் பக்கத்தில் போடவேண்டும் என்கிறார்.

குழந்தைசாமி போன்ற பலரும் சொல்வது - முதலில் நாம் உகர, ஊகாரப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே. அதன் பின் வேண்டுமானால் இகர, ஈகாரங்களைத் தொடலாம். இவைதான் கற்றலை எளிதாக்கும். அதைப்போலவே கணினி, டிஜிட்டல் வடிவங்களில் பிரச்னைகளைத் தீர்க்கும். ஒளிவழி எழுத்துணரி (OCR) போன்ற மென்பொருள்களை எளிதாகத் தயாரிக்கலாம்.

சுரதா கீறு (glyph) அமைப்பிலான எழுத்துக் குறியீடுகள் மூலம் (எ.கா: டிஸ்கி) ஏற்கெனவே இருக்கும் ஒரு டிஸ்கி கோப்பை உகர/ஊகாரச் சீர்மையை உள்ளடக்கி உருமாற்றத் தேவையான மாற்றியை வடிவமைத்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் கோப்புகளை மாற்றியமைக்காமல் எழுத்துருவை மட்டும் மாற்றி சீர்மை எழுத்திலும், இப்பொழுது புழங்கும் எழுத்திலும் படிக்க வேண்டுமானால் யூனிகோட் முறையில் இது சாத்தியமாகிறது.

அதாவது ஒரே கோப்பு (இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்றே வைத்துக்கொள்ளுங்கள்...) - இதனை லதா, இணைமதி, தேனி போன்ற கணினியில் ஏற்கெனவே இருக்கும் தமிழ் யூனிகோட் எழுத்துருவில் வாசித்தால் தற்போதைய தமிழ் எழுத்து முறையில் தெரியும். எழுத்துருவை புதிதாக வடிவமைத்த சீர்மை எழுத்துக்கு மாற்றினால் உடனே உகர, ஊகாரச் சீர்மையுடன் தெரியும். நாக.கணேசன் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.

இம்மாதிரி பல்வேறு சீர்மை முறைகளைக் கொண்டுவர, அந்தச் சீர்மைகளைத் தாங்கிய யூனிகோட் எழுத்துருக்களை உருவாக்குவதன் மூலம் செய்ய முடியும். இதனால் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் கோப்புகளைப் பல்வேறு உருக்களின் காண முடியும். அதன்மீதான நமது கருத்துக்களைப் பிறருக்கு முன் வைக்க முடியும். எது பலரது நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுகிறதோ, அதனை அரசின் மீது சுமத்த முடியும்.

நான் உகர, ஊகார எழுத்துக்களை மாற்றி கிரந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

10 comments:

  1. நானும் கிரந்த உகர,ஊகார குறிகளை (கிடையாக இல்லாமல் செங்குத்து வடிவமாக)அகரமேறிய மெய்யெழுத்துக்களின் வலப்பக்கத்தில் போடுவதை ஆதரிக்கிறேன். இது பற்றி அவுஸ்திரேலியாவில் இருக்கும் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் எழுத்துரு ஒன்றை வடிவமைத்துள்ளார். இதுபற்றி ஒரு பதிவு எழுத எண்ணமுண்டு. மேலும் இகர, ஈகார விசிறிகள் மேய்யுடன் ஒட்டாமல் இருக்கும் வண்ணம் பாரத்துக் கொள்ளுதலும் வரவேற்கத்தக்கதே.

    ReplyDelete
  2. எழுத்து சீர்மை அல்லது செம்மை பற்றி சிந்திக்கும் போது அது இனி வரும் தொழில்நுட்பங்களில் செயலபடவும் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒலி உணர் (speach recognition) தொழில் நுட்பம்.

    பிரன்ஞ் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளைப் போல் அல்லாது தமிழில் ஒவ்வொரு எழுத்தும் தனித்த ஒலியைக் கொண்டவை. காபி என்ற ஆங்கிலச் சொல்லை, kaphi என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் உச்சரிப்பு மாறாது.(இதில் ஒரு எழுத்துக் கூட காபி என்ற சொல்லில் உள்ள (coffee) எழுத்துக் கூட கிடையாது. ஆனால் தமிழில் எந்த சொல்லையும் அதன் ஒலிக்குரிய எழுத்து இல்லாமல் எழுத முடியாது. இந்த சிறப்புத் தன்மை ஒலி உணர் தொழில்நுட்பத்திற்கு பெரும் உதவி.

    அதே போல தமிழில் ஒரே எழுத்தை சில qualifiers பயன்படுத்தி வேறுமாதிரி ஒலிக்கச் செய்யலாம். சக்கரத்தில் வருகிற 'க'வும், ச 'ங்'கத்தில் வருகிற 'க'வும் ஒரே உச்சரிப்புக் கொண்டவை அல்ல. உச்சரிப்பு மாற்றங்களை அதன் முன் உள்ள க், ங் என்ற மெய்யெழுத்துக்கள் ஏற்படுத்துகின்றன.

    ஒரு மொழியை எழுதுவது படிப்பது என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் பார்ப்பது முழுமையானதல்ல. முறையானதல்ல. என்னுடைய அனுபவத்தில் தமிழில் இன்று எந்த சீர்திருத்ததிற்கும் அவசியமில்லை.
    மாலன்

    ReplyDelete
  3. மாலன்: எழுத்துச் சீர்மை எவ்விதத்திலும் ஒலி உணர்தலை பாதிக்காது. ஏனெனில் மொழியின் எந்த அடிப்படையையும் எழுத்துச் சீர்மை தொடப்போவதில்லை. அது, எழுதும் வரி வடிவத்தில் மட்டுமே மாறுதலை ஏற்படுத்தப்போவதால் உங்களது பயங்களுக்கு இதில் அடிப்படை ஏதுமில்லை.

    எங்கு எந்த எழுத்து வரும்போது என்ன உச்சரிப்பு இருக்கும் என்பதிலும் உகர/ஊகார மாற்றங்கள் எவ்விதத்திலும் மாறுதலை ஏற்படுத்தா.

    ஸ்ரீவாஸ் போன்றவர்கள் சொல்லும் டயாக்ரிடிக் மாற்றிகளை நாம் ஏற்க வேண்டியதில்லை. f, ph ஒலிகள், இன்ன பிற மொழிகளில் இருக்கும், தமிழில் இல்லாத ஒலிகளைத் தமிழில் கொண்டுவர சில வரிவடிவங்கள் அல்லது டயாக்ரிடிக் மார்க்கர்கள் தேவையா என்பது முழுதும் வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை அவை இப்பொழுதைக்கு நிச்சயமாகத் தேவையில்லை என்பேன்.

    ஆனால் உகர/ஊகார சீர்திருத்தம் அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. மாலன் சொன்னது:
    //எழுத்து சீர்மை அல்லது செம்மை பற்றி சிந்திக்கும் போது அது இனி வரும் தொழில்நுட்பங்களில் செயலபடவும் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒலி உணர் (speach recognition) தொழில் நுட்பம்.

    பிரன்ஞ் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளைப் போல் அல்லாது தமிழில் ஒவ்வொரு எழுத்தும் தனித்த ஒலியைக் கொண்டவை. காபி என்ற ஆங்கிலச் சொல்லை, kaphi என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் உச்சரிப்பு மாறாது.(இதில் ஒரு எழுத்துக் கூட காபி என்ற சொல்லில் உள்ள (coffee) எழுத்துக் கூட கிடையாது. ஆனால் தமிழில் எந்த சொல்லையும் அதன் ஒலிக்குரிய எழுத்து இல்லாமல் எழுத முடியாது. இந்த சிறப்புத் தன்மை ஒலி உணர் தொழில்நுட்பத்திற்கு பெரும் உதவி.

    அதே போல தமிழில் ஒரே எழுத்தை சில qualifiers பயன்படுத்தி வேறுமாதிரி ஒலிக்கச் செய்யலாம். சக்கரத்தில் வருகிற 'க'வும், ச 'ங்'கத்தில் வருகிற 'க'வும் ஒரே உச்சரிப்புக் கொண்டவை அல்ல. உச்சரிப்பு மாற்றங்களை அதன் முன் உள்ள க், ங் என்ற மெய்யெழுத்துக்கள் ஏற்படுத்துகின்றன.

    ஒரு மொழியை எழுதுவது படிப்பது என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் பார்ப்பது முழுமையானதல்ல. முறையானதல்ல.//


    இது அத்தனையுமே மிகச்சரியான கருத்துக்கள்.

    ஆனால் இதற்குப்பின்
    // என்னுடைய அனுபவத்தில் தமிழில் இன்று எந்த சீர்திருத்ததிற்கும் அவசியமில்லை.//

    இந்த வரிதான் 'இப்பேர்ப்பட்ட மரத்தில் கொண்டு வந்து மாட்டைக் கட்டுவார்கள்' கதை மாதிரி இருக்கிறது:-D இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை. இது வேறு அது வேறு. பின்னால் வருபவர்கள் படித்துக் குழப்பிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் இதை வலியுறுத்திச் சொல்கிறேன். **எழுத்து**சீர்மை வேண்டுமா வேண்டாமா என்ற கருத்தில் விவாதிப்பதற்கும், தமிழின்(பல இந்திய மொழிகளின்) விசேஷ **ஒலிப்பியல்** சிறப்புகளுக்கும் எந்த சமபந்தமும் இல்லை.

    கூடவே, என் வலைப்பதிவில் இருக்கும் கீழ்க்கண்ட என் கருத்தையும் இங்கே இன்னொரு முறை சேர்க்கிறேன்.

    'கீற்றுகளைச் சேர்ப்பதன் மூலம் மட்டும் எல்லா உயிர்மெய்யெழுத்துக்களையும் உருவாக்குவதால் இன்னொரு அனுகூலம், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய உருக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவதோடு, ஒரே மாதிரியான தர்க்கமுறைமை(logic system)யைப் பழகிக்கொண்டால் போதும். உதாரணமாக 'எ' ஒலியென்றால் என்றால், முன்னால் ஒற்Raiக்கொம்பு போடு, 'ஆ' ஒலி என்றால் கால் கொடு, என்பது தர்க்கமுறைமை. பதினெட்டு மெய்யெழுத்துடனும் இப்படி ஒரு கீற்றைச் சேர்த்தால் ஆயிற்று, வேறு ஒன்றையும் நினைவில் வைக்க வேண்டியதில்லை. ஆனால் 'உ' & 'ஊ' ஒலிக்கு மட்டும், ககரமானால் 'கு','கூ' சகரமானால் 'சு','சூ' இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான கீற்று என்பதால் அத்தனையையும் நினைவில் வைத்தே ஆகவேண்டும். மாணவர்களுக்கு ஒலிக்க எளிதாய் இருக்கும் தமிழ் எழுதக் கடினமாக இருக்க இதுவே காரணம்.'

    ReplyDelete
  5. காசி வரிவடிவத் திருத்தங்களை பற்றி சொல்லும் பொழுது OCR'ஐ குறிப்பிடுகிறார். பத்ரியும் சுரதாவின் glyph முறையை சுட்டிக்காட்டி உள்ளார். கணினியை பொருத்தவரை இதெல்லாம் ஒரு மென்கலன் சார்ந்த சமாச்சாரமே. வரிவடிவங்கள் OCR'க்காக மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலத்தைப் போல் cursive வடிவங்கள் இல்லாததால், OCR செயல்படுத்த வரிவடிவங்கள் ஒரு பிரச்சினையே அல்ல.
    பிரச்சினை மொழி கற்பதில் கூட இல்லை. நமது மூளையின் திறனை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஒரு சில எழுத்துக்களில் உள்ள மாற்றம் பெரிய விஷயமில்லை என்பது என் கருத்து.
    தற்கால விசைப்பலகையில் தமிழின் எழுத்தை புகுத்தும் பொழுதுதான் பிரச்சினையே. எல்லோரும் எதற்கும் ஒருமுறை மற்ற பாஷைகளின் விசைப்பலகைகளை பார்க்கவேண்டும். உதாரணமாக ஜெர்மன் வி.பலகையில் விசேஷ விசைகள் பலவுண்டு. அதாவது தமிழுக்காக சில விசைகள் சேர்க்க வேண்டுமானால் அதில் ஒன்றும் தவறேயில்லை. நிறைய பயனீட்டாளர்கள் உருவாகும் பட்சத்தில் கம்பெனிகளுக்கும் தமிழ் விசேஷ பலகை உற்பத்தி செய்வதில் பிரச்சினை இருக்கப் போவதில்லை.
    நாம் எல்லோரும் இந்த QWERTY பலகையுடனே குடியிருப்பதால் இதனை பெரிய பிரச்சினையாக கருதுகிறோமோ?
    மொத்தத்தில அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவுக்காக வடிவமைத்த பலகை ஒன்று வந்தால் Indic மொழிகளில் சுலபமாக மொழியாடலாம்.
    ::யக்ஞா

    ReplyDelete
  6. யக்ஞா,
    OCR என்றல்ல, எந்த நுட்பத்தாலுமே முடியாதது என்பது எதுவுமே இல்லை (போன உயிரைக் கொண்டு வருவது மாதிரி பெரிய விஷயங்களை விடுங்கள்:-D); எத்தனை நேர்த்தியாக, விரைவாக, பிழையற்று என்பது குறித்து ஆராய்ந்தால் கட்டாயம் தற்போதைய முறைக்கும் சீர்மைப் படுத்தப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியும். அதே போலத்தான் மொழி கற்றுக்கொள்வதிலும் ஒருவரே பலமொழி, பல எழுத்துவகை அறிந்துகொள்வதிலும் எதுவுமே சாத்தியமே. 247க்கும் தனித்தனி வரிவடிவம் இருந்தாலுமே, நாம் திரும்பத் திரும்ப எழுதி, வாசித்துப் பழகிக்கொண்டால் பிரச்னை இல்லை. நீங்கள் விடாமுயற்சி, நினைவுத்திறன், உழைப்பு ஆகியவை அமையப்பெற்ற சில புத்திசாலிகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் சாதாரணமான குழந்தைகளைப் பற்றிச் சொல்கிறேன்.

    என் மகன் கோவையில் ஒரு பள்ளியில் படிக்கிறான். அங்கு ஆண்டிறுதியில் மாணவர்கள் விடுதியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிய போது செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? தமிழ்ப் புத்தகத்தையும், நோட்டையும் 'தலையைச் சுற்றி' எறிந்துவிட்டு குதூகலமாய் ஓடிப்போனதுதான். இதை என் மகன் தொலைபேசியில் சொன்னபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாடம் முழுமையும் ஆங்கிலத்தில் படிக்கும் நிலையில்தான் இன்றைய கல்விமுறை மாறிக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் பயிலும் வசதியற்ற குழந்தைகள் மட்டுமே இன்று தமிழ்வழிக் கல்வி பயிலுகிறார்கள். இப்படி ஆங்கிலவழீயில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் ஒரு கூடுதல் பாடம், அவ்வளவே. அதுவும் பத்தாம் வகுப்புக்கு மேல் ஒண்ணுக்கும் பிரயோசனப்படாத பாடம். அதில் சிரமப்பட்டு உழைத்து தங்கள் நேரத்தை வீணாக்க அவர்கள் தயாராக இல்லை. இதுபோன்ற இடங்களிலுமே அவர்களுக்கு தமிழ் எழுதுவதில் உள்ள கடினத்தை உகர-ஊகார சீர்மை குறைக்கும். அதற்காகவும் தேவை என்கிறேன்.

    ஆளாளுக்கு ஒரு விசைப்பலகையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? மீண்டும் ஆங்கிலம் புழங்கும் இடங்களில் நெகிழ்ந்து புழங்கினாலே இனித் தாக்குப் பிடிக்க முடியும் எண்பது நிதர்சனம். எனவே தனித்தமிழ் விசைப்பலகை நடைமுறையில் எல்லாரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் ஒன்றாக ஆகிவரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    ReplyDelete
  7. þÐ ±ó¾ «Ç×ìÌ º¡ò¾¢Âõ?

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. பத்ரி எழுதிய மடற்சுட்டியைக் காசி தந்தார். இருவருக்கும் என் நன்றிகள். யூனிகோட் வலைப்பதிவுகளிலும் உ/ஊ சீர்மை பேசப் படுவது தமிழில் சிறப்பான நிகழ்ச்சி.

    ஏற்கெனவே யூனிகோட் சந்தடி யில்லாமல் உ/ஊ சீர்மையை நடைமுறைப்படுத்திவிட்டது எனலாம்.
    எழுத்துருக்களில் உ/ஊ உயிர்மெய் முழுக்கச் சேராமல் பிரிந்து எழுதும்படி சில எழுதுருவை வலையில்
    இலவசமாக வழங்கவேண்டும். விருப்பமுள்ளோர் அவ்வுருவைப் பயன்படுத்தினால் வலைப்பக்கங்களோ,
    ஒரு வொர்ட்பேட், எம்எஸ் வொர்ட் ஆவணங்களோ "சீர்மை" எழுத்துருக்களில் உ/ஊ பிரிந்து தெரியும். ஆனால், லதா, தேனி, ... போன்றவற்றில் அதே ஆவணங்கள் பிணைந்து தெரியும். ஆரம்ப காலத்திலிருந்து யூனிகோட் என்கோடிங்
    என்னை ஈர்க்க இது ஒரு முக்கியக் காரணம். அதாவது, உயிர்மெய்களுக்கு தனிப் பொந்துகள் இல்லாமை.

    என்னைப் பொறுத்தவரையும், உ, ஊ உயிர்மெய் சீரமைப்புடன் எழுதுத்துத் திருத்தம் முடிவடைகிறது. ஆனால், உ/ஊ உயிர்மெய் திருத்தம் வேண்டும்.
    இதனால் தேவையற்ற 36 எழுத்து வடிவங்களை நாம், முக்கியமாக நம் குழந்தைகள் ஞாபகத்தில் வைக்க வேண்டியதில்லை.

    தமிழ் இணையம் 2000ல் வா.செ. குழந்தைசாமி அவர்களின் கட்டுரை:
    http://www.geocities.com/thamizh@sbcglobal.net/VCK_TI2000.pdf

    " ஒரு மொழியினர்; பல நாட்டினர்
    இன்று உலகு தழுவி வாழும் இனங்கள் ஐந்து; 1. யூதர் 2. ஆங்கில மொழியினர் 3. சீனர் 4. ஜப்பானியர் 5. இந்தியர். இந்தியர்களில் தமிழர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகின் இரண்டு
    நாடுகளில் தேசிய மொழியாக இருக்கும் பெருமை, இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு. தமிழர்கள் பார் முழுதும் பரந்து வாழ்கின்றனர். தமிழர் ஒரு மொழியினர் ; பல நாட்டினர். எல்லா நாட்டிலும் சிறுபான்மையர். தமிழினம் ஆலமரம் போன்றது. அடிமரம் தமிழகத் தமிழர்
    என்றால், மற்ற நாட்டினர் விழுதுகள். தமிழினம் என்ற ஆலுக்கு விழுதின் வலிமை மிக முக்கியம். விழுதுகள் வலிமையுள்ளதாக இருக்க வேண்டுமாயின் அயலகத் தமிழர்கள் தமிழ் மொழியோடுதொடர்புள்ளவர்களாக வாழ வேண்டும். அவர்கள் தமிழ் கற்க வேண்டும். அதற்குத் தமிழ் கற்பது
    எளிதாக்கப்பட வேண்டும். ஒரு மொழி பொருளாதாரத் தேவையாக இல்லா விட்டால் இளைஞர் தலைமுறை எளிதில் அதைக் கற்க முன்வராது. இந்தியத் துணைக் கண்டத்திற்குள்ளேயே மற்ற மாநிலங்களில் வாழ்பவர்கள் தமிழை மறந்து விடுகிறார்கள். பொதுவாகத் தமிழ் கற்பது
    எளிதாக்கப்பட வேண்டும், அதற்கு முதற்படியாக, தமிழ் வரிவடிவம் எளிதாக்கப்பட வேண்டும்.
    எளிதாக்கப்படுவது இயலும். வரிவடிவம் கடினமாக இருக்குமாயின் ஆரம்பமே
    அதைரியப்படுத்துவதாக அமைந்து விடும். இது விரும்பத்தக்கதன்று"

    கொடுமுடி சண்முகத்தின் தமிழ் இணையம் 2000 - கட்டுரை:
    http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/A4koduok.pdf

    இவ்வறிஞர்களின் TI2003 கட்டுரைகளையும்
    இண்பிட் வலைத்தளத்தில் பெற்றுப்படிக்கலாம்.
    http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf
    http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf

    கி.வா.ஜ. பழைய தமிழில் பெயர்பெற்றவர். அவர்கூட கிரந்த உ, ஊ குறிகளைப் பயன்படுத்தவேண்டும்
    என்று விரிவான கட்டுரை வரைந்துள்ளார். அதைச் சில நாள்களில் வலையேற்றுவேன். கிரந்த உ, ஊ குறியீடா, வேறொன்று பொருந்துமா
    என்று நிபுணர் குழு முடிவெடுக்கட்டும்.

    ஆனால், உ,ஊ உயிர்மெய்ச் சீரமைப்பு அவசியம், காலத்தின் கட்டாயம். யூனிகோட் அதன்நடைமுறையாக்கத்தை மிக எளிமைப்படுத்தி விட்டது.

    அன்புடன்,
    நா. கணேசன், ஹூஸ்டன், டெக்சாஸ்

    பி. கு. : ஊ உயிர்மெய்க்கு மலையாள 0D32 என் தெரிவு. அதையே, சுழி இல்லாமல் உ குறி எனலாம்.
    எழுதும்போது அவை 0D32க்கு நேரான
    0C32 அல்லது 0CB2 போல வரும். 0D32-வை வைத்து சில யூனிகோட் எழுத்துக்கள் அளிக்க எண்ணம் கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  10. தமிழ் இணையம் 2000ல் வா.செ. குழந்தைசாமி அவர்களின் கட்டுரை:
    http://www.geocities.com/
    thamizh@sbcglobal.net/VCK_TI2000.pdf

    கொடுமுடி சண்முகத்தின் தமிழ் இணையம் 2000 - கட்டுரை:
    http://www.infitt.org/ti2000/
    tamilinaiyam/papers/A4koduok.pdf

    இவ்வறிஞர்களின் TI2003 கட்டுரைகளையும்
    இண்பிட் வலைத்தளத்தில் பெற்றுப்படிக்கலாம்.
    http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf
    http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf

    ReplyDelete