Friday, April 01, 2005

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

15-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்தே மிளகையும், கிராம்பையும், ஜாதிக்காயையும் தேடி ஐரோப்பியர்கள் உலகெங்கும் சுற்றத் தொடங்கினர்.

அதுவரையில் அரேபியர்களும் வெனிஸ் நகர வியாபாரிகளும் ஐரோப்பியர்களுக்கு மிளகு விற்றே கொழுத்த லாபம் பார்த்திருந்தனர். எனவே எப்படியாவது இவர்களை வெட்டிவிட்டு தாமே நேரடியாக பொருள்களை உற்பத்தி செய்யுமிடத்துக்கே சென்று வாங்கிவிடுவது என்று துடியாய்த் துடித்தனர் போர்ச்சுகீசியர்கள். வாஸ்கோ ட காமா 1498இல் இந்தியா வந்தார். அதனைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், டென்மார்க் நாட்டவர், பிரெஞ்சு, கடைசியாக ஆங்கிலேயர் அனைவரும் கம்பெனிகளை அமைத்து, பெருஞ்செலவு செய்து கப்பல்களில் வந்து இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய இடங்களில் மிளகு வகையறாக்களை வாங்கிச்சென்றனர்.

அப்படி ஆரம்பித்து, அங்கிருந்து தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நெசவு ஆடைகள், பிற கைவினைப்பொருட்கள் என்று வியாபாரம் மட்டுமே குறியாக இருந்து பணம் சேர்த்தவர்கள் இந்தியாவின் சில பகுதிகளை வாங்குவது, அங்கு நகரங்கள் அமைப்பது, சில அரசர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிரானவர்களை அழிப்பது என்றாகி, அங்கிருந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கடைசியாக இந்தியா முழுமையும் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1700களின் தென்னிந்தியாவின் தலைவிதி பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் கையில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் இவர்களுக்கு இடையே நடந்த போராட்டங்கள், அக்கால மக்களின் வாழ்க்கை, வியாபாரம் அனைத்தையும் இன்று ஒருவர் அறிய வேண்டுமானால் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளின் துணையை நாடவேண்டும்.

ஆனந்தரங்கப் பிள்ளை பாண்டிச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாகவும், பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் இருந்தார். ஆனந்தரங்கப் பிள்ளை 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இவர் எழுதிச் சென்ற நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்பவர் ஆனந்தரங்கப் பிள்ளையின் சந்ததிகளிடமிருந்து கண்டெடுத்து தான் ஒரு பிரதியெடுத்துக்கொண்டார். எதுவார் அரியேல் (Edward Ariel) என்பவரால் இது பிரதியெடுக்கப்பட்டது. ஆனந்தரங்கப் பிள்ளை தமிழில் எழுதியதை ஏன் இந்த பிரெஞ்சு ஆசாமிகள் பிரதியெடுத்து வைத்துக்கொள்கிறார்கள்... ஒருவேளை இதில் ஏதேனும் விஷயம் இருக்குமோ என்பதால் அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்த ஆங்கில அரசப் பிரதிநிதி ஜெனரல் மெக்லீட் (McLeod) அந்தப் பிரதியிலிருந்து மற்றுமொரு பிரதியெடுத்து அதனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். இந்தப் பிரதியை எடுத்தது பேராசிரியர் G.W.பாரஸ்ட் என்பவர். எதுவார் அரியேல் பிரதியெடுத்தது கலுவா-மொம்பிரேன் இறந்ததும் பிரான்சு சென்றது. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிவைத்த மூலப்பிரதி அவரது சந்ததியினரால் தொலைக்கப்பட்டது.

சென்னையிலிருந்த ஆங்கிலேய அரசின் மூலமாக இந்த நாட்குறிப்புகள் ஆங்கிலத்தில் J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டன. [The Private Diary Of Ananda Ranga Pillai in 12 vol. A Record of Matters Political, Social, Historical and Personal- From 1736 to 1761 Translated from the Tamil by The Order Of The Govt. of Madras - Ananda Ranga Pillai, Dubash to J.F.Dupleix; - Editors J.F. Price, Rangachari. Vol.1 (1736-1746) 488p, Vol.2 (Apr.1746-Oct.1746) 464p, Vol.3 (Oct.1746-Mar.1747) 508p, Vol.4 (Apr.1747-Mar.1748) 521p, Vol.5 (Apr.1748-Oct.1748) 496p, Vol.6 (Oct.1748-Mar.1750) 494p, Vol.7 (Apr.1750-Apr.1751) 492p, Vol.8 (May1751-Dec.1753) 303p, Vol.9 (Sep.1754-Dec.1755) 474p, Vol.10 (Jan.1756-Dec.1757) 452p, Vol.11 (Jan.1757-Jun.1759) 510p, Vol.12 (Jan.1760-Dec.1760) 456p. 12 Volumes - ISBN 81 206 0181 5]

ஆனால் மேற்படி ஆங்கில மொழியாக்கத்தில் பல பகுதிகள் விடுபட்டுள்ளன என்கிறார் ஓர்சே மா. கோபாலகிருஷ்ணன். பிரான்சு நாட்டில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (Gobalakichenane) கடந்த மாதம் சென்னையில் சில இடங்களில் ஆனந்தரங்கப் பிள்ளை பற்றியும் இன்ன பிற பற்றியும் பேசினார். அதில் Alliance Francaise-ல் அவர் பேசியதைக் கேட்க நான் சென்றிருந்தேன். பிரான்சில் நூலகத்தில் இருக்கும் முதலாம் பிரதியைத் தான் பார்த்ததாகவும் அதில் இருப்பதில் கிட்டத்தட்ட 30% J.F.ப்ரைஸ் ஆகியோரது ஆங்கில மொழியாக்கத்தில் காணக்கிடைப்பதில்லை என்றும் சொல்கிறார் கோபாலகிருஷ்ணன். அதை நிரூபிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கான (பிரஜோத்பத்தி) நாட்குறிப்புகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார் இவர்.

ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு, பிறசொற்பத்தி ஆண்டு (1751-1752), மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர் 2004, பக். 430, விலை ரூ. 140.

தான் தமிழக, புதுச்சேரி அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்த நாட்குறிப்புகளை முழுமையாக, தரமாக, செம்பதிப்பாக வெளியிட விரும்புவதாகச் சொன்னாலும் அதற்கு உதவி செய்ய நம் நாட்டு அரசாங்கங்கள் முன்வரவில்லை என்று வருத்தப்பட்டார்.

ஆனந்தரங்கப் பிள்ளையைத் தவிர இன்னமும் சிலரது நாட்குறிப்புகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது ஆனந்தரங்கப் பிள்ளையின் சகோதரர் பிள்ளை விஜய திருவேங்கடப்பிள்ளை (3), அவரது மகன் முத்து விஜய திருவேங்கடப்பிள்ளை (4) மற்றும் வீர நாய்க்கர் (2) ஆகியோரது நாட்குறிப்புகள் என்கிறார் இவர். கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும், தான் அதனை கவனமாகப் பார்த்தபோதுதான் இந்தக் குறிப்புகள் இரண்டு வெவ்வேறு (தந்தை, மகன்) ஆள்களால் எழுதப்பட்டது என்று தெரிய வந்ததாகவும் சொல்கிறார்.

அத்துடன் இரண்டாம் வீராநாய்க்கர் என்ற திருவேங்கடப்பிள்ளைகளின் இரண்டாம் நிலை அதிகாரியின் நாட்குறிப்புகளையும் பிரான்சு நூலகத்திலிருந்து எடுத்து 1992-ல் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792). பதிப்பு விவரம்: நற்றமிழ் பதிப்பகம், E11, பி.ஏ.டவர்ஸ், 33, ஹால்ஸ் சாலை, எழுமூர், சென்னை 600 008, பிப்ரவரி 1992, பக். 310, விலை ரூ. 130

நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை. ஒருவேளை சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பிரதியிலிருந்து (G.W.பாரஸ்ட் உடையது) புதுச்சேரி அரசு ஒரு பிரதியெடுத்து அதனை மலிவு விலைப் பதிவுகளாகவும் விற்கலாம். இதுபற்றி மேற்கொண்டு விசாரிக்க வேண்டும். தகவல் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்.

ஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரசியமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மின்பிரதி நா.கண்ணனின் முதுசொம் காப்பகத்தில் உள்ளது.

11 comments:

  1. பிரபஞ்சனும் இதுபற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. படித்தோரே சொற்பமாக இருந்த அந்தக் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவதெல்லாம் அரிதான செயல். பல வரலாற்று நிகழ்வுகளை அக்குறிப்புகள் தாங்கியிருக்கக்கூடும். //தான் தமிழக, புதுச்சேரி அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்த நாட்குறிப்புகளை முழுமையாக, தரமாக, செம்பதிப்பாக வெளியிட விரும்புவதாகச் சொன்னாலும் அதற்கு உதவி செய்ய நம் நாட்டு அரசாங்கங்கள் முன்வரவில்லை என்று வருத்தப்பட்டார். // வரலாற்றிற்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். :(

    ReplyDelete
  3. சுரதா: பிரபஞ்சன் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளில் வரும் விவரங்களை வைத்து அதனூடாக புதினங்களைத்தான் எழுதினார்.

    ReplyDelete
  4. பத்ரி:

    இந்த பதிவின் கருப்பொருளுக்கு சம்பந்தம் அற்ற ஒரு கருத்து.

    ஐரோப்பியர்கள் மிளகையும், கிராம்பையும் மட்டுமா தேடினார்கள்? அவர்கள் மதப் பிரச்சார நிறுவனங்களை தோற்றுவிக்கவும், பின்பு செல்லும் இடங்களில் கணிசமான பொருள்களை கத்தி கத்தியோ அல்லது கத்தி முனையிலோ கவரவும், பெரிய நாவாய்களை பயன்படுத்தி அரசியல் தொடர்பான செயல்களில் தாங்கள் சார்ந்த ஐரோப்பிய நாட்டின் அரசன்/அரசியின் அதிகார முத்திரை பெற்று அதன் தொடர்பான காலணிகளுக்கு வித்திட்டதும் முக்கியமானதல்லவா?

    ReplyDelete
  5. பாலாஜி-பாரி: வரலாற்றில் உலகம் முழுதும் சுற்றி வாணிபம் செய்யவெனவும், மதம் மாற்றவெனவும் சேர்ந்து கிளம்பியவர்கள் ஸ்பானியார்கள், போர்ச்சுகீசியர்கள். இதில் போப்பாண்டவர் ஒருவரின் தலையீடு காரணமாக கோடுகிழித்து அந்தப் பக்கம் உனக்கு, இந்தப் பக்கம் எனக்கு என்று முடிவாகி இந்தியா போர்ச்சுகீசியர் பக்கம் வந்தது. அதனால்தான் இந்தியா/இலங்கை/இந்தோனேஷியாவில் ஸ்பானியர்களைப் பார்க்க முடிந்ததில்லை.

    போர்ச்சுகீசியர் கூட இந்தியா வந்து இறங்கியதும் சில மதமாற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னர் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து வரிசையாக வந்த டேனிஷ், டச்சுக்காரர்கள், பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் ஆகிய அனைவருமே மதமாற்றத்தை பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்பது இந்தியாVஇல் இருக்கும் கிறித்துவர்களின் எண்ணிக்கையிலிருந்து தெரியும். அதைப்போலவே இந்தோனேஷியாவிலும் உள்ள கிறித்துவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கவும்.

    பிற நாடுகளில் என்ன செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் மதமாற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. இந்தியர்களின் மத நம்பிக்கையில் அதிகமாக ஈடுபடவுமில்லை.

    வாணிபம் மட்டும்தான் தலையாய நோக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் வாணிபம் செய்ய வந்தவர்கள் அனைவருமே வரையறுக்கப்பட்ட (limited) கம்பெனிகள். தமது பங்குதாரருக்கு லாபம் ஈட்டுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்திருக்கிறது. அதனால் தொடக்கத்தில் நிச்சயமாக நாடு சேர்க்க ஆசைப்படவில்லை.

    தம்மைக் காத்துக்கொள்ளவும், பிற ஐரோப்பியப் படைகளுடன் போரிடவுமே முதலில் படைகளை - முக்கியமாகக் கப்பற் படைகளை - வைத்திருந்தனர். உதாரணமாக இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட போர்கள் எல்லாமே ஆங்கிலேயர்களுடன். பின் பிற அரசர்கள் தாமாகவே இம்மாதிரி துப்பாக்கி, பீரங்கிகள் வைத்துச் சண்டையிடும் நட்பை நாட ஆரம்பித்தார்கள்.

    வெறும் கணக்கெழுதும் கிளார்க் ஆக இருந்தவர்கள் கவர்னர்கள் ஆனது இப்படித்தான். பின் அவரவரது நாடுகள் சட்டமியற்றி கம்பெனிகள் சேர்த்து வைத்த பிற நாட்டை தாம் அபகரித்துக்கொண்டன. உதாரணமாக இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அவர்கள் சேர்த்து வைத்த இந்தியாவைப் பிடுங்கிக் கொண்டது. வைசிராய்களை அதன்பின் நியமித்தது.

    தன் அரசிடமே இந்தியாவை இழந்த கிழக்கிந்திய கம்பெனி அதற்கடுத்த சில வருடங்களில் bankrupt ஆகி, அதன் பங்குதாரர்கள் தலையில் துண்டைப் போட வைத்தது.

    இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு சுவாரசியமானது.

    இந்தியாவில் நாம் ஐரோப்பியர்கள் அனைவரையும் வெள்ளைக்காரர்கள் என்று ஒரேயடியாகச் சொல்லி குழப்பி விடுகிறோம். ஐந்து நாடுகள் என்று விளக்குவதில்லை. அதேபோல கிழக்கிந்திய கம்பெனி, இங்கிலாந்து அரசு (பின் அது கிரேட் பிரிட்டன் அரசானது) என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை.

    பிரிட்டன் ஆதிக்கத்தில் வந்தபோதுதான் காலனியாதிக்கம் என்பது உச்சத்துக்கு வந்தது. அதுவரையிலும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை வியாபார உற்பத்தி ஸ்தலமாக மட்டுமே பார்த்து வந்தது. பெரும்பான்மை இந்தியா அவர்கள் கைக்கு வந்தது விதிவசம்தான். அதை எதிர்பார்த்து அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை.

    ReplyDelete
  6. விளக்கத்திற்கு நன்றிகள் பத்ரி.
    மேலும் கோடுகள் கிழித்து கொண்டதும் பின்பு எந்த வகை நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுக்க வேண்டு இருந்தது என்பதையும் விளக்கி உள்ளீர்கள்.
    நீங்கள் கூறும் மதம் குறித்த கருத்துக்களில் உடன்பாடே. ஆனால், அதாவது சர்ச்சுகள் ஆளும் அரசனுக்கு எவ்வளவு அருகில் இருந்தது என்பதும் அது எப்படி நிலைமையை பயன் படுத்தியது என்பதும், பயன் படுத்தப்பட்டது என்பதும் குறித்து நான் பிறகு எழுதுகின்றேன். ஏனெனில் இதில் நாம் கவனம் கொள்ள வேண்டியது ஏன் இங்கிலாந்து போப்-ஐ நிராகரித்தது என்ற கேள்வியை. அஃதாவது 1560 களில்...இதற்குண்டான பதில் இன்னும் சில நிலைமைகளை நமக்கு உணர்த்தும்.

    ஆயினும். உங்கள் பதில் விரிவாக இருந்தது நன்றிகள்.

    ReplyDelete
  7. நான் எழுதிய பதிவில் சில தவறுகள் இருந்ததை கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் எனக்கு அனுப்பிய அஞ்சலிலிருந்து தேவையான பகுதிகளை இங்கு சேர்க்கிறேன். இது பிற்காலத்தில் இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

    ====
    You have rightly pointed out that I saw the manuscripts in Paris, on which I worked thoroughly by comparing pagewise the three: those manuscripts, the english translation and the tamizh edition. In order to enhance your presentation so as to render it errorless and make it a reference text, I will suggest you few modifications taking in account the following considerations/remarks:

    1/ The copies were separately made by Gallois-Montbrun and by Edouard Ariel. While Gallois-Montbrun's was in Pondicherry until the end of 19th cent., the one made by E.Ariel has been brought to Paris after HIS demise in 1854, at the age of 36. Gallois-Montbrun's (who continued to live in Pondicherry as his children afterwards) copy of Pondicherry has been viewed by the British who made a copy - probably of selected passages - which has been used for translation purpose as english edition. That copy is probably kept in the State Archives of Tamizhnadu, but, for administrative reasons - not existing so tightly in Europe - and in spite of my explanations and insistance, I was unable to see it and ascertain this assumption during my short passage at Chennai 7 years ago).

    2/ கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும்

    The diaries of Tiruvengadappillai were not thought to be of less importance by the Tamizhars of Pondicherry or by Gallois-Montbrun, BUT BY THE LIBRARIANS OF PARIS when they examined the copies for cataloging in the end of 19th century.

    3/ நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    The English version (12 volumes, from 1736 to 1761) has been reprinted by Asian Educational Services. And the tamizh version (9 volumes, from 1736 to 1753) has been reprinted recently by Pondicherry State Government. I consider the latter reprint as useless, except the first volume which initially has been prepared by R.Desikan who wrote the important biography of Anandarangappillai. and whose work was E-keyed optically by Dr.N.Kannan, as you rightly mention also. I worked on this biography about 12 years ago, one copy of this work being preserved in National Library of France, Paris.

    ReplyDelete
  8. //வாணிபம் மட்டும்தான் தலையாய நோக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் வாணிபம் செய்ய வந்தவர்கள் அனைவருமே வரையறுக்கப்பட்ட (limited) கம்பெனிகள். தமது பங்குதாரருக்கு லாபம் ஈட்டுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்திருக்கிறது. //

    The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multi (Paperback)

    ReplyDelete
  9. Badri,

    Why don't you publish the book in Thamizh?

    The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multi (Paperback) by Nick Robins.

    ReplyDelete
  10. //வாணிபம் மட்டும்தான் தலையாய நோக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் வாணிபம் செய்ய வந்தவர்கள் அனைவருமே வரையறுக்கப்பட்ட (limited) கம்பெனிகள். தமது பங்குதாரருக்கு லாபம் ஈட்டுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்திருக்கிறது. அதனால் தொடக்கத்தில் நிச்சயமாக நாடு சேர்க்க ஆசைப்படவில்லை. //


    I sorely differ here. Conquest was their main motive. That was the basis of all those costly expeditions, likes of Vasco da Gama, Columbus etc.

    ReplyDelete
  11. முன்பு திரு ரகமி அவர்கள் ஆனந்தரங்கபிள்ளை பற்றிய தொடர் தினமணி கதிரில் முழுமையாக எழுதினார், ரகமி அதுபோல் பல தொடர்களை அதில் எழுதினார் வீரவாஞ்சி, ஜகதீஷ் செண்பகராமன், கணிதமேதை ராமானுஜம் மற்றும் பல, அவரின் மறைவுக்கு பிறகு ரகமி சேமித்து வைத்திருந்த தகவல்கள் என்ன ஆனதென்று தெரியவில்லை.

    ReplyDelete