தமிழகக் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இந்த ஆண்டு முதல் ஆக்கப்படுகிறது என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக, வரும் பத்து வருடங்களில் எல்லா வகுப்புகளுக்குமாக அமையும்.
இன்று பள்ளிக்கூடங்களில் தமிழ் படுமோசமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. வலைப்பதிவுகளை மேலோட்டமாக மேய்ந்தால் நான் சொல்வது தெரியவரும். பிழையின்றி நல்ல தமிழில், அதே சமயம் புரிந்துகொள்ளக்கூடியவகையில், எழுதுபவர்கள் மிகச்சிலரே. 'தமிழே என் உயிர்' என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.
பத்திரிக்கைகளில் நாம் காணும் பிழைகள் நம்மைக் கூசவைக்கின்றன. தேர்தல் அறிக்கைகள் முதற்கொண்டு தெரு போஸ்டர் வரை பிழையான தமிழ்தான்.
இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் நல்ல தமிழில் எழுதமுடிகிறது.
கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் தமிழை ஒருபொருட்டாக யாரும் மதிக்காத காரணம் தமிழ் மதிப்பெண்கள் தொழில் கல்விக் கல்லூரிகளில் நுழைவுக்கான ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப்படாததுதான். அதற்காக உடனடியாக தமிழ் மதிப்பெண்களை நுழைவுத்தேர்வில் எப்படியாவது நுழைத்துவிடலாம் என்று சிலர் சொல்வதை நான் ஏற்கவில்லை.
தமிழ் அல்லது ஆங்கிலம் - எதுவாக இருந்தாலும் மொழியின் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் பள்ளிகளும் கல்லூரிகளும் உணர்வதில்லை. நம் சிந்தனைகளைச் சரியாக வெளிப்படுத்த மொழி ஆளுமை அவசியம் என்பதைப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்றுக்கொள்ளாமையே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். சிந்தித்து எழுதுவது என்பதே தேவையில்லாதது; படித்து மனப்பாடம் செய்து அதை மீண்டும் வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலையில் சிந்தனை எதற்கு, மொழி எதற்கு என்று மாணவர்களும் ஆசிரியர்களும் நினைக்கிறார்கள்.
இன்று எங்கள் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். எங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கற்பிக்க. எங்களது புத்தகங்களில் உள்ள பிழைகளை முற்றிலுமாகக் களைய நாங்கள் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக.
அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன சில விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. 10வது, 12வது தமிழ்ப்பாடத் தேர்வில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால் அவற்றைக் கண்டுகொள்ளவேண்டாம், கருத்துப்பிழை இருந்தால்மட்டும் அதற்கு மதிப்பெண்கள் குறைக்க வேண்டும் என்ற நிலையாம் இப்பொழுது. அப்படி இருந்தால் எப்படி ஒருவர் பிழையின்றி தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்?
ஆங்கிலத்தில் எழுதும்போதோ, பேசும்போதோ பிழைகள் இருந்தால், அதை மற்றொருவர் சுட்டிக்காட்டினால் நமக்குக் கூச்சம் ஏற்படுவதில்லையா? அதேபோன்ற கூச்சம் தமிழில் நாம் தவறாக எழுதும்போதோ பேசும்போதோ அது சுட்டிக்காட்டப்பட்டால் நமக்கு ஏற்படவேண்டும்.
பள்ளிக்கூடத்தில் தமிழ் ஒரு பாடமாக இருந்தால் மட்டும் போதாது. ஒழுங்கான தமிழ், பிழையில்லாத தமிழ் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதை அரசாணைகளால் திணிக்க முடியாது. ஆனால் சரியான மொழி ஆளுமை இல்லாத மாணவர்களால் பிற்காலத்தில் உருப்படமுடியாது என்ற எண்ணத்தைப் புகட்டவேண்டும்.
தமிழைக் கட்டாயப்பாடமாக்குவது, தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவது போன்றவற்றை வெறும் அரசியல் பிரச்னைகளாக மட்டும் நினைத்துப் பார்க்கக்கூடாது. மனிதவள மேம்பாட்டின் மிக முக்கியமான அங்கங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதே சமயம் ஆங்கிலமோ, இந்தி முதற்கொண்ட பிற இந்திய மொழிகளோ எதுவாயினும் தேவைக்கேற்றவாறு அதனையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள மாணவர்கள் முற்பட வேண்டும்.
Thursday, June 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
////பள்ளிக்கூடத்தில் தமிழ் ஒரு பாடமாக இருந்தால் மட்டும் போதாது. ஒழுங்கான தமிழ், பிழையில்லாத தமிழ் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதை அரசாணைகளால் திணிக்க முடியாது. ஆனால் சரியான மொழி ஆளுமை இல்லாத மாணவர்களால் பிற்காலத்தில் உருப்படமுடியாது என்ற எண்ணத்தைப் புகட்டவேண்டும்.///
ReplyDeletewell said.
பத்ரி,
ReplyDelete//தமிழைக் கட்டாயப்பாடமாக்குவது, தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவது போன்றவற்றை வெறும் அரசியல் பிரச்னைகளாக மட்டும் நினைத்துப் பார்க்கக்கூடாது. மனிதவள மேம்பாட்டின் மிக முக்கியமான அங்கங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதே சமயம் ஆங்கிலமோ, இந்தி முதற்கொண்ட பிற இந்திய மொழிகளோ எதுவாயினும் தேவைக்கேற்றவாறு அதனையும் பிழையின்றித் தெரிந்துகொள்ள மாணவர்கள் முற்பட வேண்டும்.//
அருமையாகச் சொன்னீர்கள்.
அரசின் ஆணைகள் தமிழக மனிதவள மேம்பாட்டில் ஒரு திருப்புமுனையாக அமையும்
ReplyDeleteஅருமையான முடிவு;அருமையான பதிவு
"தமிழை ஒருபொருட்டாக யாரும் மதிக்காத காரணம் தமிழ் மதிப்பெண்கள் தொழில் கல்விக் கல்லூரிகளில் நுழைவுக்கான ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப்படாததுதான் "
ReplyDeleteVery true.I apologise for writing this review in english.I welcome the law.In my view; whatever is the language learning to communicate properly is very important.
//ஆங்கிலத்தில் எழுதும்போதோ, பேசும்போதோ பிழைகள் இருந்தால், அதை மற்றொருவர் சுட்டிக்காட்டினால் நமக்குக் கூச்சம் ஏற்படுவதில்லையா? அதேபோன்ற கூச்சம் தமிழில் நாம் தவறாக எழுதும்போதோ பேசும்போதோ அது சுட்டிக்காட்டப்பட்டால் நமக்கு ஏற்படவேண்டும்.//
ReplyDeleteபத்ரி, அருமையாக கூறியுள்ளீர்க்கள்.
கிட்டதட்ட என் வார்த்தைகளுடன் உங்கள் வார்த்தைகளும் ஒத்து போகின்றது.
"ஆங்கில மொழியை இலக்கண தவறாக பேசினால் வெட்கபடும் நாம், தமிழ் இலக்கணம் கற்று கொள்ளாமால் இருப்பதற்கு என்றாவது வெட்கபட்டு, குறைந்தபட்சம் யோசித்து இருக்கின்றோமா?"
கட்டாய தமிழ் பாடம் குறித்த என் நேற்றைய பதிவையும் காண வேண்டுகிறேன்.
http://tsivaram.blogspot.com/2006/05/blog-post_31.html
தமிழ் கட்டாயப் பாடமாக்கபட்டது தேவையற்றது. தமிழைக்காட்டிலும் ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாக்கினால் (ஒன்றாவது வகுப்பிலிருந்து) பட்டிக்காடுகளில் வாழும் தமிழர்கள் அதிகப் பயனைடவர். மேலும் தமிழில் தான் அறிவியல் கற்க வேண்டும் என்ற முட்டாள்தனத்தை விட்டு விட்டு, அதை ஆங்கிலத்தில் பயிற்றுவித்தால், மேற்படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசியல்வாதிகளின் தந்நலத்திற்கு நம் கிராமப்புற மக்களின் முன்னேற்றம் பலியாகக் கூடாது. பட்டிணத்தில் உள்ளோரும் செல்வந்தர்களும் ஆங்கிலம் கற்று பயனடையும் போது, ஏழைகளுக்கும் கிராமங்களில் உள்ளோருக்கும் ஏன் இந்த அநீதி!!!
ReplyDeleteAnon: தமிழும் கட்டாயப்பாடம்; ஆங்கிலமும் கட்டாயப்பாடம். இதற்கு முன்னர்வரை ஒருவர் தமிழ் படிக்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் ஆங்கிலம் படித்தே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. தமிழுக்கு பதில் பலரும் சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்றவற்றில் ஏதோ ஒன்றைப் படித்தனர்.
ReplyDeleteஅதனால் நீங்கள் கவலைப்படுவது தேவையற்றது.
இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் நல்ல தமிழில் எழுதமுடிகிறது.
ReplyDelete>>>>>
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :)
தமிழ் செய்தித்தாள்களின் இணைய தளங்களை செய்திக்காக படிப்பதை நிறுத்தி நாளாகிவிட்டது. அவர்கள் எழுதும் தமிழைப் படிக்க மட்டும் மேய்ந்து கொண்டு வருகிறேன். நல்ல "முன்னேற்றம்" தெரிகிறது.
"சந்தி" சிரிக்கிறது. இலக்கணம் எல்லாம் ஹி...ஹி..ஹி...
முதலில் ஒரு சந்தேகம் ஐயா (நோ சார் :-) அடுத்த வருடம் பத்தாவதுக்கு செல்லும் மாணவர்களும் பத்தாம் வகுப்பு தமிழ் பயில வேண்டுமா? (கர்நாடகாவில் சட்டம் இப்படித்தான் இயங்குகிறது. திடீரென்று ஜாகை மாறி, +2-வில் சேர்ந்தாலும், கன்னடம் படித்து தேற வேண்டும்.)
ReplyDelete---தேர்வில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்தால் அவற்றைக் கண்டுகொள்ளவேண்டாம், கருத்துப்பிழை இருந்தால்மட்டும் அதற்கு மதிப்பெண்கள் குறைக்க வேண்டும்்---
ஃப்ரெஞ்சு, சம்ஸ்கிருதம் போல் மதிப்பெண்ணும் அள்ளி விட வேண்டும்; இலக்கணக் குற்றங்களும் இருக்கக் கூடாது... Catch 22?
----மொழியின் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் பள்ளிகளும் கல்லூரிகளும் உணர்வதில்லை. படித்து மனப்பாடம் செய்து அதை மீண்டும் வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலையில் சிந்தனை எதற்கு, மொழி எதற்கு----
101% தலையாட்ட வைக்கும் கருத்து!
மிக நல்ல கருத்தாழமுள்ள பதிவு பத்ரி.
ReplyDelete//இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்களால்தான் நல்ல தமிழில் எழுதமுடிகிறது.
//
எனக்கெல்லாம் இன்னும் 40 வயசு ஆக வில்லையே :-( இன்னும் கொஞ்சம் நாள் போகவேண்டும். பின்னர் தான் நல்ல தமிழில் எழுத முடியும் போல் இருக்கிறது :-(
ஒழுங்காய்த் தமிழில் எழுதுவது அருகி வருவது குறித்த உங்கள் கவலை எனக்கும் உண்டு. ஆயினும், இதை நிவர்த்தி செய்ய தமிழ்க் கல்வியின் தரத்தை உயர்த்தினால் மட்டும் போதாது.
ReplyDeleteகூடவே தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தவும் வேண்டும். நல்ல தமிழ் எழுதுவது எளிமையாக்கப்பட வேண்டும். தமிழைக் கற்றறிபவர்களின் எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது. இது போன்ற அரசாணைகளால் மேலும் வளரும். ஆயினும் தமிழ் மொழி இன்னமும் மாணவர்களுக்குக் கடினமான சில பண்டிதத்தனங்களை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறது. உதாரணம், ஒற்று மிகுதல். எங்கு ஒற்று மிக வேண்டும், எங்கு மிகக் கூடாது என்பதற்கு கிட்டத்தட்ட நாற்பது விதிகள் உள்ளன! தேவையேயில்லை! ஐந்திலிருந்து பத்துக்குள் இவற்றை சுருக்க வேண்டும், சில சமரசங்களைச் செய்தாவது. இல்லாவிட்டால், அடிப்படை விதிகளைக் கூட மாணவர்கள் சட்டை செய்ய மாட்டார்கள். ஆசிரியர்களுக்கும் இவற்றையெல்லாம் கற்றறிந்து கற்பிப்பது மிகக் கடினம்.
மொழியைக் குற்றம் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். தமிழின் இலக்கணத்தை எளிமைப்படுத்தினால், அதை ஒழுங்காகப் பழகுவது பரவலாகும் என்ற எண்ணத்தில் சொல்கிறேன்.
//இன்று எங்கள் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். எங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கற்பிக்க.//
ReplyDeleteஅட, நெசமாவா? சூப்பருங்க
குமரன்: 40 வயதாகி விட்டால் தமிழ் தானாக வந்துவிடாது:-) நான் சொன்னதன் காரணம் முப்பது வருடங்களுக்கு முன்னால் வரை தமிழை ஒழுங்காகக் கற்றுக்கொடுத்து வந்தார்கள்; அதன்பின் கைகழுவி விட்டுவிட்டார்கள் என்பதுதான்! அதனால்தான் அந்தத் தலைமுறைக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழை மோசமாகக் கற்று, இப்பொழுது தமிழைக் கொலை செய்கின்றனர்.
ReplyDeleteஸ்ரீகாந்த்: ஒவ்வொரு மொழிக்கும் என்று ஓர் இலக்கணம் தோன்றி, சிறிது சிறிதாக மாறி வந்துள்ளது. திடீரென சிலர் உட்கார்ந்து மொழியை எளிமைப்படுத்திவிடுவதில்லை. ஒற்று என்பது தமிழின் தனித்தன்மை. பிற மொழிகளுக்கு இல்லாத ஒரு தனிப்பண்பு. விதிகளை எளிதில் கற்பிக்கலாம். ஆனால் விதிகளை திடீரென்று மாற்றிவிடமுடியாது. சில இடங்களில் ஒற்று மிகுந்தால் ஒரு பொருள், மிகாவிட்டால் வேறொரு பொருள். ஒற்று என்பது வேறெதையும் பாதிக்காத தனிப்பட்ட விதியல்ல. ஒற்று மிகுவதை/மிகாததை தனியாக மாற்ற முடியாது; அத்துடன் வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தும் விதத்தையும் வேறு பலவற்றையும் சேர்த்து மாற்றவேண்டியிருக்கும்.
ReplyDeleteஆங்கிலத்திலும் தமிழில் உள்ளதைப் போன்று (ஆனால் வேறு இடங்களில்) கடுமையான விதிகள் உள்ளன. ஆனால் நாம் அதனைக் கண்டு வருந்துவதில்லை. புதிதாக ஒரு குழந்தைக்கு ஆங்கிலம், தமிழ் இரண்டையும் கற்றுக்கொடுக்கும்போது இது புரிய வரும்.
தமிழ் கற்பித்தலை எளிமையாக்க வேண்டும் என்பதுடன் உடன்படுகிறேன். ஆனால் தமிழ் இலக்கண விதிகளை மாற்றித்தான் ஆகவேண்டும் என்பதை இப்பொழுதைக்கு என்னால் ஏற்க இயலாது.
இன்ஷா அல்லா, தமிழைப் பிழையின்றி எழுத, பேச கற்றுக்கொள்ளும் விதமாக, அதே சமயம் ஜாலியாகப் படிக்கக்கூடியவகையில், புரிந்துகொள்ளக்கூடியவகையில் இருக்குமாறு ஒரு புத்தகத்தை உருவாக்கியபின்னர் பேசுகிறேன்.
பலரும் சொன்னதுபோல சங்க இலக்கியங்கள், பழம் பாடல்கள் ஆகியவற்றை முதலில் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. இப்பொழுது நம்முடைய தேவை நல்ல உரைநடையைக் கற்பது, அடிப்படை உரைநடை இலக்கணத்தைக் கற்பது, பல்லாயிரம் சொற்களைக் கற்பது. மற்றவை இரண்டாம்பட்சமே.
பாஸ்டன் பாலா: இந்த வருடம் ஒன்றாம் வகுப்புக்கு மட்டும்தான் இது கட்டாயமாகிறது. வெளி மாநிலங்களிலிருந்து மாற்றல் பெற்று தமிழ்நாடு ஸ்டேட் போர்ட், மெட்ரிக் ஆகியவற்றில் ஒன்றாம் சேர்ந்தால் நிச்சயமாகத் தமிழையும் படிக்கவேண்டியிருக்கும்:-) ஆனால் 2, 3, ... 12 என்றால் இந்த வருடம் பிரச்னையில்லை. அடுத்த வருடம் 1, 2 இரண்டிலும் தமிழ் இருந்தாக வேண்டும். And so on.
ReplyDeleteபிரெஞ்சு, சமஸ்கிருதம் போல மார்க்கும் வேண்டும்.... என்ற பிரச்னை இன்னமும் சில வருடங்களில் இருக்காது அல்லவா? ஏனெனில் தமிழுக்கு பதில் பிரெஞ்சு, சமஸ்கிருதம் என்று எடுத்து ஜல்லியடித்து மார்க் வாங்கித் தப்பிக்க முடியாது. எனவே தமிழ் ஆசிரியர்கள் கூர் சீவிய பென்சில் அல்லது சிகப்பு மை பேனாவால் கண்ட இடங்களிலெல்லாம் சுழித்து மதிப்பெண்களைக் குறைக்குமாறு வேண்டுவோம்.
Badri,
ReplyDeleteBear with English. Cant type in Tamil now. I welcome the move of making Tamil Compulsory in Tamil Nadu. People like Boston Balaji are asking questions quoting exceptions ("what if a person moves to TN in the middle of the school year?"). Many states have their language as compulsory in their schools. Whatever others will do by moving to that state, they will do the same here in TN. Another thing to note here is, the same people who worry about exceptions/minorities here may take different stand when it comes to issues related to religious minorities (I dont refer Boston Bala here but only meaning generically.) So, one should welcome this move.
However, I read somewhere that this 69% reservation in private educational institutions do NOT apply to minority institutions. Likewise, do you have any idea about whether this "Tamil as Compulsory language" applies to Minority educational institutions or not. Please let me know.
This 69% reservation and Tamil as Compulsory should be applied and followed by all educational institutions by letter and sprit. TN Govt should do an ordinance or law for it. (I dont know whether it will be under the jurisdiction of TN Govt though.)
Thanks and regards, PK Sivakumar
தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிப் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை தொழிற்கல்விக் கல்லூரிகளில் நுழைவுக்கான அங்கமாக எடுத்துக் கொள்ளப்பட தேவையில்லை என்பது என் கருத்து. ஏனென்றால் அதற்குப் பின் வரும் படிப்புகளில் மொழிக்கான தேவையே ஏற்படுவதில்லை. மொழிப்பாடங்களில் சிறந்த மதிப்பெண் பெறுவதும் தொழிற்கல்வியில் சிறந்து விளங்க ஒருவரின் திறமையின் அடையாளமாகக் கொள்ளப் படலாமென்றாலும் நேரடியாக மற்ற பாடங்களில் உள்ள திறமையே மேற்படிப்புக்கு முக்கிய தேவையாகப் படுகின்றது.
ReplyDelete//ஆங்கிலத்தில் எழுதும்போதோ, பேசும்போதோ பிழைகள் இருந்தால், அதை மற்றொருவர் சுட்டிக்காட்டினால் நமக்குக் கூச்சம் ஏற்படுவதில்லையா? அதேபோன்ற கூச்சம் தமிழில் நாம் தவறாக எழுதும்போதோ பேசும்போதோ அது சுட்டிக்காட்டப்பட்டால் நமக்கு ஏற்படவேண்டும்.//
தவறான தமிழை எழுதும்போது கூச்ச்சம் ஏற்படாமலிருப்பது பள்ளி ஆசிரியர்களிடமிருந்தும், ஊடகங்களாலும் ஊட்டப்படுகிறது. நிச்சயமாக பள்ளிகளில் இதற்கான தற்காப்பு நடவடிக்கை எடுப்பப் படவேண்டும்.
தமிழ் இலக்கணத்தை எளிமைப் படுத்துவது குறித்த உங்கள் பின்னூட்டம் மிக அருமை. ஒற்று பற்றிய விதிகள் பண்டித்தனம் என்று குறிப்பிடப்பட்டது குறித்து மிகவும் வருந்துகிறேன். தமிழ் இலக்கணத்தைவிட ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ள கடுமையானது என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்துவில் வரும் know your English இதற்கு சரியான எடுத்துக்காட்டு.
எல்லாக் கல்விக்கும் தாய்மொழியைவிட சிறந்ததாக எதை எண்ண முடியும்? ஆனால் ஆங்கிலத்தின் தேவை தவிர்க்கமுடியாததாகிவிட்ட நிலையில், தமிழ்மொழிப் பயிற்சிப் பாடத்துடன் கணிதம், அறிவியல், சரித்திரம் மற்றும் புவியியல் பாடங்களின் ஆரம்பப் பாடங்களை தமிழிலும் ஆங்கிலத்துக்கான விரிவான மொழிப் பயிற்சியினையும் கட்டாயம் கற்பிப்பது இன்றைய தேவைகளின் அடிப்படையில் சரியெனத் தோன்றுகிறது.
தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எண்ணங்களை முழுமையான அளவில் வெளிப்படுத்தக்கூடிய திறமையை நாம் இன்னும் சிறுவயதிலேயே அடையவேண்டுமென்பது என் எண்ணம். ஆரம்பப் பள்ளி நிலைவரை மொழிப்பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுமானால் மற்ற பாடங்களில் சிறந்து விளங்குவதற்கான ஆற்றலை உயர்நிலைப் பள்ளியில் பெற முடியும். நான் என் பள்ளிப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறபோது அறிவியல், கணிதம் மற்றும் சரித்திர பூகோள பாடங்களுடன் அதற்கான மொழியையும் சேர்த்தே கற்றுக் கொண்டதாக உணர்கிறேன்.
ஓகை நடராஜன்.
Badri
ReplyDeleteI have a similar doubt like Baba. Let us assume, say in few years Tamil is made compulsory in all grades from 1-12. At that point if a person gets transfer to TN and if his kid is studying in, say 9 Std. That student would have been studying say Oriya as his/her first language in his/her previous place. Now how come suddently that student is expected to learn and pass 9th standard level Tamil? So forcing non Tamil speaking pupils to learn Tamil as the first language amounts to linguistic fanaticism. I oppose any state that force students like this, not only Tamil Nadu.
If students come with a non Tamil background, they can be forced to take Tamil as the first language, only if the level is 1st standard level. Suppose if a Gujarathi student enters into a TN school in his 8th Std, then he should be asked to study 1 Std level Tamil in his 8th Std and 2nd Std Tamil book in his 9th Std and 3rd Std level Tamil book in his 10th std. If he is forced to learn directly 8th Std level of Tamil book, then it is wrong, if TN law says like that, then it should be condemned, opposed and taken to court.
We are living in Global village era, Many non Tamil speaking are coming into TN each year to work in IT and other industries. The trend will grow in future. So any law should be considerate and rationale. Again, I am not telling not to teach Tamil as the compulsory 1st language. I am telling for outsiders some consideration should be given. It is O.K. to make students to learn Tamil but there should be some rationality behind that move. If the Govt is going to say non Tamil students coming into Tamil are exceptional cases and they should not come inside TN if they dont know Tamil, then it will be certainly a fanatical move.
Thanks
Rajan
நன்று சொல்லியிருக்கிறீர்கள், பத்ரி,
ReplyDeleteமேலும் சில எண்ணங்களை, கீழ்க்கண்ட URL-ல் காண்க
http://vinmathi.blogspot.com/
In this week Thinnai, Cinna Karuppan has expressed his views on Tamil as compulsory. Good points. FYI please.
ReplyDelete- PK Sivakumar
=====
கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்
[I have added the URL to the comment from PKS, for the benefit of readers - Badri]
ராஜன்: ஒரு மாநிலத்துக்கு வரும் வேற்று மாநில மானவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? அந்தச் சிறு சதவிகிதத்துக்கு என்று தனியாக என்ன வசதிகளைச் செய்து கொடுக்க முடியும் என்று பார்த்தால், அதற்கு CBSE/ICSE பள்ளிகள் சில இருக்கின்றன. தமிழக எம்.எல்.ஏக்கள் சிலர் கேட்டுக்கொள்வதுபோல தமிழக அரசால் CBSE பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாது. நம் நாட்டு அரசியல்வாதிகளின் முட்டாள்தனம் (அதேபோலவே சில மிலிடண்ட் தமிழ் விரும்பிகளும்கூட) என்னவென்றால் அவர்கள் அரசியலமைப்புச் சட்டம், மத்திய, மாநில அரசாங்களுக்குள்ள அதிகாரங்கள், அவற்றின் வரம்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள விரும்புவதில்லை.
ReplyDeleteCBSE பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழக அரசால் இதனை வற்புறுத்தவும் இயலாது. இந்தப் பள்ளிகள் வேற்று மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மாற்றலாகி வரும் குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கும். இதற்காக நாகப்பட்டினத்தில் யார் CBSE பள்ளியை அங்கு மாற்றலாகி வரும் 8 பேருக்காகக் கட்ட முடியும்? இதற்குப் பெற்றோரே பொறுப்பு. அவர்கள்தான் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருக்கும்.
ஒரு பொதுவான சட்டம் கொண்டுவரும்போது முடிந்தவரை மிகப் பெரும்பான்மையான மக்களுக்குச் சாதகமாக மட்டுமே கொண்டுவரப்படவேண்டும். இப்பொழுது என்ன நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும். தமிழ் படித்தால் கடினமாக இருக்கிறது; பிற மொழிகளில் அடிப்படை விஷயங்களை மட்டும் சொல்லிக்கொடுத்து 100/100 போட்டுவிடுவார்கள் என்ற காரணத்தால் பல பள்ளிகள் - மெட்ரிக், ஸ்டேட் போர்ட் - தமிழைத் தவிர்த்து பிற மொழியைப் பாடமாக வைத்தனர். இதனால் தமிழ் ஆசிரியர்கள் தங்கள் பதவிக்கு வேட்டு வந்துவிடுமோ என்று தமிழ்த்தாளைத் திருத்தும்போது கண்டிப்பில்லாமல் எல்லாப் பிழைகளையும் பொறுத்துக்கொள்வோம் என முடிவு செய்தனர். விளைவு கடந்த இருபது-முப்பது வருடங்களில் மோசமான தமிழைக் கற்றுக்கொண்ட தலைமுறை உருவாகியுள்ளது.
இந்த ஓட்டைகளை அடைப்பதற்கு முக்கியமானது இப்பொழுது இயற்றப்பட்டிருக்கும் சட்டம். இது மக்களுக்கு எதிரான சட்டம் அல்ல.
===
திண்ணையில் சின்ன கருப்பன் சொன்னதுபோல CBSE பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாது. CBSE பள்ளிகள் பற்றி அவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் தெரிந்து கொள்வது நல்லது.
===
PKS: இந்த 'தமிழ் கட்டாயப் பாடம்' சட்டம் தமிழகக் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளுக்கும் - சிறுபான்மையினர் பள்ளிகளையும் சேர்த்து - பொருந்தும்.
ஆனால் இட ஒதுக்கீட்டுச் சட்டம் வேறு. அது சிறுபான்மையினருக்குப் பொருந்தாது. ஏன் என்று பார்க்கவேண்டுமானால் சமீபத்தில் இயற்றப்பட்ட 93வது அரசியலமைப்புச் சட்ட மாற்றத்தைப் படிக்கவேண்டியது அவசியமாகிறது. அதனை enabling legislation ஆக வைத்துத்தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Enabling legislation-இல் சிறுபான்மைக் கல்வி நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனையொட்டி இயற்றப்படும் சட்டத்தால் enabling legislation-ஐத் தாண்டி புதிதாக ஏதும் செய்துவிட முடியாது. சரி, enabling legislation-இல் என் சிறுபான்மைக் கல்வி நிலையங்களைச் சேர்க்கவில்லை? அது Article 30-ஐ பாதிக்கலாம் என்பதால் சேர்க்கவில்லை.
இது தனியான விவாதம். இங்கு தகவலுக்காக மட்டுமே சேர்த்திருக்கிறேன். இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருணாநிதி அரசு சிறுபான்மையினருக்காக ஸ்பெஷலாக ஏதோ செய்துவிட்டது என்று நினைக்கக்கூடாது.
'டாவிஞ்சி கோட்' திரைப்படம் மீதான தடை... அது முழு அபத்தம். தனியாக விவாதிக்கப்படவேண்டியது.
உங்களின் இந்தப் பதிவும், கேள்விகளுக்கான பதிலும் (CBSE குறித்து) எனக்கும் ஏற்புடையதே.
ReplyDeleteஇன்னும் விரைவாக இதனைச் செயல்படுத்த முனைந்திருக்கலாம். எல்லா வகுப்புக்களுக்கும் இப்போதே கட்டாயப்படுத்துவது சிரமம் என்றாலும், முதல் வகுப்பு மட்டும் என்றில்லாமல், ஆரம்பப்பள்ளிக்கு (ஒன்று முதல் ஐந்து) என்று கட்டாயப்படுத்தி இருந்தால் இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் மிச்சமாகியிருக்கும். அதோடு பழந்தமிழ் இலக்கியங்கள் என்பதை எல்லாம் குறைத்து எளிமைப்படுத்தியிருந்தாலும் நடைமுறையில் இதனைச் செய்யச் சுளுவாயிருந்திருக்கும். தமிழை இப்போது தவிர்த்த பிற மொழிகளைப் பயில்பவர்கள் அதிகமிருப்பது நகர்ப்புறங்களில் தான் இருக்கும். தேவைப்பட்டால், தனிப்பயிற்சி வைத்துக் கற்றுக் கொள்ளும் வசதி கொண்டவர்களாய்த் தான் இருக்கும்.
சின்னக்கருப்பணின் திண்ணைக் கட்டுரை நன்று. தலைப்பில் தான் ஒரு 'க்' விட்டுவிட்டார் ! :-(
==தனிக்குறிப்பு==
இணைப்புச் சிக்கலால் பல முறை இந்தப்பின்னூட்டம் பதிவாயிருந்தால் மன்னியுங்கள்.
தமிழகத்தில் CBSE பள்ளிகளி இந்தி மொழி திணிக்கப்படுகிறது.
ReplyDeleteதமிழர்கள் III language Hindi கட்டாயமாக எடுக்க வேண்டி உள்ளது.
இந்தி ஆட்கள் தமிழ் எடுக்கத் தேவையில்ல்லை; அவர்கள் II language Hindi எடுத்தால் போதும்.
நீங்கள் பாடத்திட்டத்தைப் பார்த்தால் III language இந்தி II language இந்தியைவிட அதிகமாக உள்ளது.
ஆகையால் தமிழகத்திலேயே CBSE பள்ளிகள் தமிழர்களுக்கு எதிராக பாரபட்சமாக பாடம் அமைகிறது.
II language தமிழ் III language இந்தி ஒரே நேரத்தில் படிப்பது II language இந்தி III language Sanskrit ஐ விட மிகவும் கடினமானது.
இந்த அரசு தமிழ் கட்டாயப் பாடமைக அறிவித்தது ஒரு கண் துடைப்பு போல் உள்ளது. சென்னை போன்ற மாநகரங்களில் CBSE பள்ளிகளில் பெரும்பாலுமாக தமிழர்கள் படிக்கின்றனர். அங்கு இத்தகைய இந்தி திணிப்பு நடப்பது கொடூரமானது.
La Chatelaine, Bharatiya Vidya Bhavan, Kendriya Vidyalaya, Sainik போன்ற CBSE பள்ளிகளில் இந்தி மொழி வகுப்புகளில் சித்திரவதை நடக்கிறது.
இன்னொன்று, தமிழகத்தி மொத்தம் 5-10 இந்தி பேசும் சாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர். முற்பட்டோரில் நிறைப் பேர் தமிழர்கள்; இந்த தமிழர்களை விட்டிவிட்டு இந்தி சாதிகள் இடஒதுக்கீடு பெறுவது 'தமிழ்'அகத்தின் இன்னொரு சிறப்பு அம்சமாகும்.
www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
தமிழத்தின் பெயர் தமிழ் அடிப்படையில் இல்லையென்றால் அது 'தமிழ்'அகம் என அழைப்பது அசிங்கம்!
மகாராஷ்டிரத்தில் CBSE பள்ளிகளில் மராத்தி மொழி கட்டாயப் பாடமாக உள்ளது. தமிழகத்தில் இப்பள்ளிகளில் இந்தியே கட்டாயப்பாடமாக உள்ளது.
ReplyDeleteதமிழே படிக்காமல் தரவரிசையில் (Rank) முன்னிற்கின்றனர் வெளி மாநிலத்தார்! இந்தி பாரத்தை சுமந்து தமிழ் படிக்கும் மாணவர்கள் பின் தள்ளப்படுகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் CBSE பள்ளிகளுக்கு தனி சட்டம்; தமிழ்கத்தில் பள்ளிகளுக்கு தனி சட்டம் ஏன்?
தமிழுக்கு எதிர்ப்பாக பாரபட்சம் CBSE பள்ளிகளில் இப்பாரபட்சம் நடந்துகொண்டே உள்ளது.
தமிழக அரசின் அலட்சியமும் அதைவிட வேடிக்கை!