Friday, June 23, 2006

சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்

புதன் அன்று National Folklore Support Centre, நுங்கம்பாக்கத்தில் ஜானகி விஸ்வநாதனின் 'தீக்ஷிதர்கள்' விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. இது ஆறு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்.

தீக்ஷிதர்கள் ஒரு தனி இனக்குழுவாகச் செயல்படுகிறார்கள். தில்லை நடராஜர் சிதம்பரம் வந்தபோது அவருடன் கூடவே வந்த 3,000 அந்தணர்கள் குடும்பத்தின் இன்றைய வழித்தோன்றல்கள் என்று நம்புகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் இவர்களுடைய தனிச்சொத்து என்று நினைக்கிறார்கள். தீக்ஷிதர்களைத் தவிர்த்து வேறு யாரும் இந்தக் கோயிலின் எந்த வேலையையும் செய்யமுடியாது - அர்ச்சனை மட்டுமல்ல, சமையல்முதல் நிர்வாகம்வரை அனைத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

இவர்கள் கடுமையான அகமண முறையைப் பின்பற்றுகிறவர்கள். தம் குடும்பங்களுக்குள்ளாக மட்டுமே மணம் செய்துகொள்கிறார்கள். இன்று எஞ்சியிருக்கும் தீக்ஷிதர் குடும்பங்கள் 320தாம். அவற்றுக்குள்ளாக மீண்டும் மீண்டும் மணமுடிப்பதால் பிறக்கும் பல குழந்தைகள் ஜெனெடிக் பிரச்னைகளுடன் பிறக்கின்றன. விகாரமான முகம், மூளைக்குறைபாடுகள், பிற அவயக் குறைபாடுகள் ஆகியவை இம்மாதிரியான திருமணங்கள் வழியாக ஏற்படுகின்றன என்று அறிவியல்பூர்வமாகத் தெரிந்தாலும் இன்றும் இந்தக் குடும்பங்களிடையே இந்த வகைத் திருமணங்கள் தொடர்கின்றன.

அடுத்ததாக குழந்தைத் திருமணங்கள். தீக்ஷிதர்கள் குடும்பங்களில் இன்றும்கூட 12 வயதுக்குள் திருமணம் முடித்துவிடுகிறார்கள். தில்லை நடராஜர் கோயிலில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதில்லை. வைதீக முறைப்படி நடக்கிறது. வைதீக முறைப்படி மணமான ஆண்தான் வழிபாடு செய்யத் தகுதிபெற்றவன். தீக்ஷிதர்கள் பொதுவாக வேறு எந்த வேலையையும் செய்வதில்லை என்பதால் சிறுவயது முதற்கொண்டே வருமானத்தை மனத்தில் வைத்து சிறுவர் சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு திருமணத்துக்குப்பிறகு படிப்பு சொல்லித்தருவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வெளியே சென்று படித்தால் "கலப்பு" ஏற்பட்டுவிடலாம் என்ற பயம். சிறுவயதுத் திருமணம் என்பதால் சிறுவயது முதலே கருவுறுதல், குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. விதவையான பெண்களுக்கு மறுமணத்தை இந்த இனக்குழு அனுமதிப்பதில்லை.

மணமான பெண்கள் வெளியே சென்று வேலைபார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விவரணப்படம் எடுத்த சமயத்தில் ஒரேயொரு பெண் மட்டுமே மணமாகி வேலை செய்துகொண்டிருந்தார்.

பெண்ணுரிமை என்பது இந்த இனக்குழுவில் எள்ளளவும் இல்லை. படத்தில் வந்த பெண் ஒருவர் சொல்வதுபோல "அவா என்ன சொல்றாளோ அதுதான். அவா யெஸ்னா யெஸ், நோன்னா நோதான்".

சமீப காலங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவையும் ஆண்களுக்கு மட்டும் சாதகமானவை. உதாரணத்துக்கு ஓர் ஆண் தன் 'அர்ச்சனை' முறையை விட்டுக்கொடுத்து வெளியே சென்று படித்து அரசாங்க வேலை செய்ய விரும்பினால் தன் முறையை தன் அண்ணன், தம்பி என்று குடும்பத்துக்குள்ளாக மாற்றிக்கொடுக்கலாமாம். படம் திரையிடலுக்கு சென்னையில் இருந்த அரசாங்க வேலை பார்க்கும் தீக்ஷிதர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருந்தார்.

தீக்ஷிதர்கள் தனித்துத் தெரிவதற்காக தலைமுடியைச் சுருட்டி முன்பக்கம் கொண்டை மாதிரி வைத்துக்கொள்கின்றனர். கோயில் நடைமுறைகளை ஒரு பொதுக்குழு, செயல்குழு மூலம் செயல்படுத்துகின்றனர். எந்த வயதுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு வாக்கு உண்டு. தீக்ஷிதர்களுக்குள் நிறைய வேறுபாடுகள் சமீபத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. சிலர் பாரம்பரியப் பழக்கவழக்கத்தைத் தொடர விரும்புபவர்களாகவும் வேறு சிலர் முன்னேறும் நாகரிகத்தை விரும்புபவர்களாகவும் இருப்பதால் ஓயாத டென்ஷன்.

உமாபதி சிவாச்சாரியார் எனும் தீக்ஷிதர் திருஞானசம்பந்தருடன் சேர்ந்து உணவு உண்டதால் குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டாராம். பின்னர் நடராஜர் கேட்டுக்கொண்டதன்பேரில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டாலும் அவருக்கு உரிய மரியாதையைச் செய்ய பிற தீக்ஷிதர்கள் தவறிவிட்டதால் கோபம் கொண்ட உமாபதி சிவாச்சாரியார் அவர்களை சபித்துவிட்டாராம். அதன் விளைவாகவே தீக்ஷிதர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று குறைபட்டார் ஒரு தீக்ஷிதர்.

தமிழக அரசு தில்லை கோயில் நிர்வாகத்தைத் தன் கையில் எடுக்க முயற்சிகள் செய்துள்ளது, ஆனால் தீக்ஷிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை எதிர்த்துள்ளனர். இதன் இன்றைய நிலை என்ன என்று தெரியவில்லை என்றார் ஜானகி விஸ்வநாதன்.

தீக்ஷிதர்கள் அனைவரும் ஒரே பொருளாதார நிலையில் இல்லை. பணம் படைத்த பலர், ஆதீனங்கள் ஆகியவை கொடுக்கும் கட்டளைகளை வைத்தும் கோயிலில் சேரும் பணத்தை வைத்தும்தான் இவர்கள் வாழவேண்டும். ஆனால் சில கட்டளைகள் அதிகப் பணத்தைக் கொடுப்பதால் அந்தக் குடும்பங்கள் சற்றே வசதி படைத்தவையாகவும் பெரும்பாலானவை ஏழைக்குடும்பங்களாகவுமே உள்ளன.

====

ஜானகி விஸ்வநாதனின் விவரணப்படம் தீக்ஷிதர் இனக்குழுவின் வாழ்க்கையை முழுமையாகவே படம் பிடித்துள்ளது. வழிபாட்டு முறைகள், கோயில் என்று நேரத்தை வீணாக்காமல் வாழ்க்கை முறை, குடும்பம், பெண்களின் நிலை, ஆண்களின் நிலை என்று சமுதாயக் கண்ணோட்டத்தில் அவர்களை எடுத்துக்காட்டுகிறது.

தீக்ஷிதர்கள் சமுதாயம் பழமையில் தோய்ந்து பிற்போக்காக உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. சிறுவயதுத் திருமணங்கள், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பு, அடிப்படை உரிமைகள் மறுப்பு, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் குறுகிய அகமண முறை ஆகியவை இன்னமும் தொடர்கின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது.

இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படையானது சிதம்பரம் கோயிலின் ownership. இந்தக் கோயில்மீதான உரிமையை நிலைநாட்டவும் தன் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கவுமே தீக்ஷிதர் ஆண்கள் இத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதற்கு சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் ஒரு தீக்ஷிதர்.

சிதம்பரம் கோயில் பராமரிப்புக்கு அரசு எந்தப் பணமும் தருவதில்லை. அதனால் அதன் பல பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. முதலில் தமிழக அரசு சிதம்பரம் கோயிலை தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அங்கும் யாரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.

குழந்தைத் திருமணத்தைக் கட்டாயமாகத் தடைசெய்யவேண்டும். மீறி அதைச் செய்பவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனைகள் கொடுக்கவேண்டும். பெண்கள் அனைவருக்கும் கட்டாயமான பள்ளிக்கல்வி அளிக்கவும் அதனை மறுக்கும் பெற்றோர்களுக்கு சட்டபூர்வமான தண்டனை கொடுக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.

குறுகிய அகமண முறை எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்பொழுதைய தீக்ஷிதர்கள் சமுதாயம் அறிந்துகொள்ளாது. ஏனெனில் அவர்களது படிப்பறிவு அவ்வளவு மோசமாக உள்ளது. சாஸ்திரம், சம்பிரதாயம் என்று உளறிக்கொண்டு ஆண்கள் தம் விருப்பப்படி நடந்துகொள்கிறார்கள். அந்தக் குடும்பங்களுக்கு உள்ளாகவே சீர்திருத்தவாதிகள் தோன்றவேண்டும்.

படம் © Tamil Nadu Tourism

9 comments:

  1. உண்மைதான், இது போன்ற செயல்களை பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

    ReplyDelete
  2. மாறிவரும் காலம் இவுங்களுக்கு மட்டும் மாறாம அப்படியே நின்னுருச்சா?
    அதிர்ச்சியான விஷயமா இருக்கே.

    பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படறது ரொம்ப அநியாயம். இதைக் கடவுளே விரும்ப மாட்டார்.

    ReplyDelete
  3. பதிவர் கானா பிரபா சிதம்பரம் சென்றபோது இந்த தீட்சிதர்கள் செய்த அட்டூழியம் பற்றி எழுதி இருக்கிறார்..

    http://kanapraba.blogspot.com/2006/05/blog-post.html

    ReplyDelete
  4. That community should give up many practices that are harming them.They should not follow tradition blindly.

    ReplyDelete
  5. பத்ரி - தமிழக அரசு ஏற்கனவே ஒரு முறை தில்லை கோவிலின் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி செய்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றதாகவும், தீஷதர்கள் பழைய பட்டயங்கள் கல்வெட்டுக்களை எல்லாம் ஆதாரமாக காட்டி கேஸை வென்றதாகவும் கேள்விப்பட்டிருக்கேனே. நான் சொல்லும் விவரம் தவறா?

    ReplyDelete
  6. பயனுள்ள அருமையான கட்டுரை.
    குறிப்பாக சிறுவயது மணம் பற்றிய
    செய்தியும் ஆதங்கமும் ஊன்றிக் கவனிக்கத்தக்கது.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  7. தில்லைக் கோவிலுக்கு செல்லும்போது பார்த்து இருக்கிறேன்.சின்ன சின்னக் குழந்தைகள் மாமிகள்(9யார்ட்ஸ்) போல் வளைய வருவதை.இவர்கள் ஏன் வெளியே வர மறுக்கிறார்கள்?அறிவு பூர்வமான திட்டமாக இருக்க முடியாது.டிவி எல்லாம் பார்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் ஒரு தீக்ஷிதர்.///
    சின்ன சந்தேகம் இந்த 300 குடும்பங்களையும் அழித்தால் கலியுகம் முடிவுற்றுமா? அல்லது கலியுகத்தை முடிவடைய வைக்க 300 குடும்பங்களையும் அழிக்கலாமா? எல்லாம் ஒரு குசும்புதான். தீட்சிதர்கள் மன்னிப்பார்கள்.

    ReplyDelete