Monday, June 19, 2006

கடன் தள்ளுபடி - தவறான செயல்

சமீபத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் கொடுத்திருந்த விவசாயக் கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்கள். இதுவரையில் மாநில அரசு அந்தப் பணத்தை எங்கிருந்து பெறுவது என்று திட்டவட்டமாக யோசித்து முடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்தக் கடன் தள்ளுபடி சரியானதென்று தோன்றவில்லை. "ஏழை விவசாயிகளுக்கு ஒரு நன்மை என்றால் உனக்கு ஏன் எரிச்சல்? பணக்காரர்களுக்கு எவ்வளவு சலுகை பார்த்தாயா" என்று கேள்விகள் வரும் என்று தெரியும். Of course, பணக்காரர்களது கடனும் தள்ளுபடி செய்யப்படக்கூடாது. எந்தக் கடனும் என்னைப் பொருத்தவரையில் தள்ளுபடி செய்யப்படவே கூடாது. அது எவ்வளவு ஏழைக்கு, பிச்சைக்காரருக்குக் கொடுத்த கடனாக இருந்தாலும் சரி. கடன் என்று கொடுத்த பின்னால் அதனை வசூல் செய்தே ஆகவேண்டும். ஆனால் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். மேலும் தேவையான கடன்களைக் கொடுக்கலாம். அதற்கான வட்டியைக் குறைக்கலாம். ஆனால் முதலை எப்படியும் வசூல் செய்தே ஆகவேண்டும். இது ஈவிரக்கமற்ற செயல்பாடு அன்று!

(இலவசமாகக் கொடுப்பது, மான்யமாகக் கொடுப்பது ஆகியவை வேறு. அதை முன்னரே முடிவெடுத்து, பட்ஜெட் போட்டு, பின்னர்தான் கொடுக்கிறோம்.)

இதைச் சரியான வழியில் இப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் யோசித்ததை மிகச்சிறந்த வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பங்களாதேசத்தில் கிராமீன் வங்கி என்ற புகழ்பெற்ற மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தை ஆரம்பித்த முகமது யூனுஸ். கீழே உள்ளது அவரது சுயசரிதையிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது:

=====
பங்களாதேசம் இயற்கைச் சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு நாடு. எனவே இங்கு தொழில் செய்வதில் [கடன் கொடுப்பதில்] இயற்கைச் சீற்றங்களை முக்கியமான ஒரு காரணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் எப்பேற்பட்ட பேரழிவாக இருந்தாலும் சரி, இயற்கைச் சீற்றமோ கடன் பெற்றவர் வாழ்வில் சொந்த இழப்போ எதுவானாலும், அவரிடமிருந்து கடனை வசூல் செய்வதே - வாரத்துக்கு 50 பைசா ஆனாலும் சரி - எங்கள் கொள்கை. இதன்மூலம் கடன் பெறுபவரின் தன்னிறைவடையும் தன்மையையும் அவரது திறமையின்மீது அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கமுடிகிறது. ஆனால் கடன்களைத் தள்ளுபடி செய்வது இதற்கு மாறான ஒரு நிலையையே உருவாக்குகிறது. பல வருட உடைப்பின் பலனாக கடன் பெறுபவருக்குக் கிடைத்துவந்த தன்னம்பிக்கை குலைகிறது.

வெள்ளத்தாலோ பஞ்சத்தாலோ ஒரு கிராமம் அழிந்துபோனால், கடன் பெற்றவரது பயிர்கள், மாடுகள் அழிந்துபோனால் நாங்கள் அவருக்கு உடனடியாக மேற்கொண்டு புதிய கடன்களைத் தருகிறோம். அதைக்கொண்டு அவர் மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். ஆனால் நாங்கள் பழைய கடன்களைத் தள்ளுபடி செய்வதில்லை. பழைய கடன்களை நீண்டகாலக் கடன்களாக மாற்றி அவர் அதனை மெதுவாகத் திருப்புக்கொடுக்குமாறு மாற்றுகிறோம்.

...

அரசுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொடுத்திருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வதன்மூலம் மைக்ரோ-கிரெடிட் நிறுவனங்களின் இயக்கத்தை வெகுவாக பாதிக்கிறார்கள்.

...

பிரமீளாவின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அதிலிருந்து எங்களிடம் கடன் பெறுபவர்கள் எம்மாதிரியான இயற்கையின் அழிவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவரும். ஜூன் 1971-ல் [பங்களாதேச] விடுதலைப் போரின்போது அவரது வீடு எரிக்கப்பட்டது. மீண்டும் அக்டோபரில் அவரது வீட்டை பாகிஸ்தான் படையினர் எரித்தனர். அவர் 1984-ல் கிராமீன் இயக்கத்தில் இணைந்தார். [அதாவது கடன் பெற்றார்.] 1986-ல் குடல் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சைக்குப் பிறகு அடுத்த இரண்டு வருடங்கள் அவர் வேலை செய்யக்கூடாது; ஓய்வெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார். அவரது மைக்ரோ-கிரெடிட் குழு உறுப்பினர்கள் குழு நிதியிலிருந்து அவரைக் கடன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் பிரமீளா தன் மாட்டையும் பலசரக்குக் கடையையும் விற்க வேண்டியிருந்தது.

கறவை மாடுகள் வாங்க அவருக்கு மீண்டும் கடன் கொடுத்தோம். ஆனால் இந்த மாடுகள் ஏதோ வியாதியினால் இறந்துவிட்டன. அவர் மீண்டும் கிராமீன் மையத்துக்கு வந்து சிறு கடனாக $60 வாங்கி மற்றுமொரு மாட்டை வாங்கினார்.

1988-ல் வெள்ளத்தின்போது அவரது கிராமம் நீரில் மூழ்கியது. அவரது வீடு அழிந்துபோனது. அவரது பயிர் நாசமானது. [....]

பிரமீளாவுக்கு 40 கிலோ கோதுமையும் காய்கறி விதைகளும் கொடுக்கப்பட்டன. அதற்கான விலையை அவர் பின்னர் செலுத்தினார். அவர் மூன்றே வாரங்களில் மீண்டும் ஒரு பலசரக்குக் கடையைத் தொடங்கினார்.

1992-ல் அவரது வீடு தீப்பிடித்து அழிந்துபோனது. அண்டை வீட்டார் அவருக்கு உதவியபோதும் அவரால் எதையும் காப்பாற்ற முடியவில்லை. அவரது வீடு, உணவு, பலசரக்குக் கடை, சரக்குகள், பயிர்கள், இரண்டு கறவை மாடுகள் என்று அத்தனையும் நாசமானது. அவர், அவரது கணவர், குழந்தைகள் ஆகியோர் கட்டியிருந்த துணிமட்டும்தான் மிஞ்சியது.

அவருக்கு கிராமீன் மீண்டும் புதிய கடன் வழங்கியது. அந்தக் கடனில் அவர் மீண்டும் ஒரு பலசரக்குக் கடை அமைத்தார். தனது நிலத்துக்கு உரம் வாங்கினார். தன் மூன்று வளர்ந்த மகன்களின் உதவியோடு தன் கடன்களை அடைக்கத் தொண்டங்கினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு கிராமீன் அவர் வீடுகட்ட வீட்டுக்கடன் கொடுத்தது. அதைவைத்து அவர் ஒரு நல்ல வீட்டைக் கட்டிக்கொண்டார்.

அவர் இதுவரையில் 12 முறை கடன் வாங்கியுள்ளார், அதில் பெரும்பாலானவற்றை அடைத்து விட்டார். இப்பொழுது அவருக்கு, அவரது குடும்பம் உண்டது போக மீதமாக கிட்டத்தட்ட 400 கிலோ அரிசி இருக்குமாறு விளைவிக்கும் அளவுக்கு நிலம் உள்ளது.
=====

கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதன்மூலமா நாம் நம் விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். மேற்கொண்டு அவர்களுக்குக் கடன்வசதி செய்து, அவர்கள் வாழ வழி செய்யவேண்டாமா? கூட்டுறவு வங்கிகளிடம் பணம் இல்லாவிட்டால் அவர்களால் மீண்டும் கடன் கொடுக்கமுடியுமா?

தேர்தலில் வெற்றிபெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் விவசாயிகள் நாளடைவில் தன்னிறைவு பெற்றவர்களாக, தன்னம்பிக்கை பெற்றவர்களாக மாறவேண்டுமானால் தமிழகத்திலும் இந்தியாவிலும் கிராமீன் வங்கி போன்ற அமைப்பு உருவாக வேண்டும். கடன் தள்ளுபடிகளால் நன்மை கிடையாது.

====

கடன் தள்ளுபடி பற்றிய என் முந்தைய பதிவுகள்:
தமிழகத்துக்கு திட்டக்குழு நிதி
முதல் கையெழுத்து[கள்]

13 comments:

  1. வணக்கம் பத்ரி!

    எத்தனை முறைதான் இது போன்ற புளித்து போன சொத்தை வாதத்தைக்கேட்பது.ஆனாலும் மீண்டும் மீண்டும் இது போன்ற வாதங்கள் கிளம்பிக்கொண்டே தான் இருக்கிறது.

    எனக்கு தெரிந்த சிறு விளக்கம்.

    ஒரு சர்வதேச நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால்,அதற்கு சகயா விலையில் நிலம் சில சமயம் இலவச நிலம் ,அந்த நிலத்தை சீர்திருத்தி தருவது ,மின்சாரம், சாலைவசதி என அனைத்தும் சில பல கோடி செலவில் அரசே தான் செய்து தருகிறது. இது போன்று விவசாயிகளுக்கு தருவார்களா!

    அதுவும் தடை அற்ற மின்சாரம் குறைந்த கட்டணத்தில் ,குடிநீர் தருவதாக எழுத்து வடிவத்தில் உத்திரவாதம் தருகிறார்கள்.இதனால் வேலைவாய்ப்பு பெருகுமே எனலாம். தமிழ் நாட்டில் 60 சதவித பேருக்கு வேலைவாய்ப்பு தருவது விவசாயம் தானே.

    கடன் தள்ளுபடி செய்வது தவறென்றால் ,சர்வதேச நிறுவனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கிறார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு. உதாரணம் ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்கு 7 ஆண்டுகள் பூரண வரி விலக்கு. அந்த காலம் முடிந்ததும் அத்தொழிற்சாலை மூடப்படும் எனக்கூட ஒரு ஹேஷ்யம் அபோது கிளம்பியது.அவர்கள் எல்லாம் சோத்துக்கு வழி இல்லாத அன்றாடம் காய்ச்சிகளா?

    //கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதன்மூலமா நாம் நம் விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். மேற்கொண்டு அவர்களுக்குக் கடன்வசதி செய்து, அவர்கள் வாழ வழி செய்யவேண்டாமா? கூட்டுறவு வங்கிகளிடம் பணம் இல்லாவிட்டால் அவர்களால் மீண்டும் கடன் கொடுக்கமுடியுமா?//

    கடன் தள்ளுபடி என்றால் அது காகித அளவில் மட்டும் இல்லை அரசே அந்த பணத்தை மீண்டும் வங்கிகளுக்கு அளிக்கும் என்பதே அப்படி இருக்க எப்படி வங்கிகளில் பணம் இல்லாமல் போகும்.மீண்டும் கடன் அளிக்க வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டதாக செய்திதாள்களில் வந்துள்ளதே பார்க்கவில்லையா?

    விவசாயிகளுக்கு வாழ ஒரு ஏதுவான சூழல் இல்லத நிலையில் இது போன்ற கடன் தள்ளுபடிகள் தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களுக்கு முதலில் தரமான இடுபொருள்கள்,விதைகள் கிடைக்க கூட செய்யவில்லை அரசு. வேளாண்மை துறை என்பது காகித அளவில் தான் செயல்படுகிறது.

    பொட்டாஷ் வகை உரங்கள் நம் நாட்டில் உற்பத்தி கிடையாது இறக்குமதி தான் செய்யப்படுகிறது.அதற்கு அதிக வரி வேறு. சாகுபடி காலத்தில் இந்த வகை உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படும்.அப்படியும் கிடைத்தால்,இவற்றில் கலப்படம் வேறு,பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை ஆகாயதில் இருக்கிறது. வேளாந்துரையால் வழங்கப்படும் விதைகளோ படு மட்டமானவை.முளைப்பு திறன் 50 சதவீதம் கூட இல்லாதவை.

    மேலும் இப்படி எல்லாம் விளைவித்து விற்க சென்றால் அதனை வாங்க அரசு முன்வருவதில்லை. தற்போது தமிழ்னாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாங்குவதை நிறுத்திவிட்டு தேசிய உணவு கழகம் சார்பாக குறைந்த அளவே வாங்குகிறது . தனியார் வியாபாரிகளோ அடிமாட்டு விலைக்கு தான் வாங்குகிறார்கள்.

    எல்லாவற்றிலும் ஊழல் அப்படி இருந்தும் விவசாயத்தை விட்டு ஓடி விடாமல் மக்களுக்கு உணவளிக்க அவர்கள் விவசாயம் செய்ய இது போன்ற கடன் தள்ளுபடிகள் தான் உதவுகிறது.

    ReplyDelete
  2. எனக்கும் இந்த கடன் தள்ளுபடி நடவடிக்கையில் உடன்பாடில்லை. நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆக்க பூர்வமாக உதவ வேறு வழிகள் இருக்கிறது. கடன் தள்ளுபடி ஒரு அரசியல் நடவடிக்கை மட்டுமே ஆகும். இது சம்பந்தமாக என் பதிவு http://balablooms.blogspot.com/2006/05/blog-post_22.html

    நண்பர் வவ்வால் அவர்கள் தொழில் தொடங்கும் பண்னாட்டு நிறுவங்களுக்கு அளிக்கும் சலுகைகள் பற்றி கூறியதில் நியாயம் இருந்தாலும், ஒன்றை நினைவு கூறவேண்டும். இந்த மாதிரியான தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை அதிகரிக்கின்றன. அவை பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன.

    "Money generates Money".

    ReplyDelete
  3. Hi Badri
    I was waiting for this follow up post.
    Even I think it is not right to write off loan as bad debts....if we do Then we are stoping the whole dynamics of the economy.
    Micro Credits founder has very good business model with win win situation.
    Government should make the individuals more responsible rather then always making them to beg for food and basic needs...They won't do that because their vote bank will go bankrupt.

    "ஒரு சர்வதேச நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க..."
    This is also done for the local industrial houses, export oriented units.. etc This is purely done for the employment opportunities for the local people and economical development of the neighbouring area...... I have seen, this has really improved the life style of the people.This is done in most of the states and we should be glad that we are able attract this much...

    "இது போன்று விவசாயிகளுக்கு தருவார்களா..."
    I guess in tamil nadu we are giving Free electricity for agriculture....In my opinion There is nothing wrong in asking for concession in employing new technologies to prepare the land , assistance for new method of cultivation, asking for good seeds ..etc.Instead of that telling" PAY US FOR DOING AGRICULTURE "is not sensible.
    I guess the way of thinking has to be changed.....

    I remember in tamilnadu, government used to susidize the fertilizer price because of the reasons said by vaval..I don't know what is the situation now.

    "மேலும் இப்படி எல்லாம் விளைவித்து விற்க சென்றால் அதனை வாங்க அரசு முன்வருவதில்லை "
    Agreed (why do you want to sell to government). what is the solution farmeres has to learn how to do buisness.We have a product much more valuable than OIL and GOLD , but we don't know how to add market value to this....I am sure BADRI can come out with a strategy , if not an MBA can volunteer to give a good solution.
    There is a debate on related subject in VAJRA SANKARS blog....

    with best
    CT

    ReplyDelete
  4. //கடன் தள்ளுபடி என்றால் அது காகித அளவில் மட்டும் இல்லை அரசே அந்த பணத்தை மீண்டும் வங்கிகளுக்கு அளிக்கும் //

    அதுதான் ஏமாற மாதாந்திர சம்பளம் வாங்கி வரி கட்டும் ஆட்கள் இருக்கிறார்களே. அப்புறம் என்ன? கடன் தள்ளுபடி, இலவச டீ.வீ என ஜாமாய்க்க வேண்டியதுதானே.

    இந்த முறை கடன் வாங்கி சரியாக கட்டியவன் அடுத்த முறை கட்டுவான்? இதையெல்லாம் கேள்வி கேட்டால் கேட்டவன் சமுதாயத்தை பரந்த நோக்கோடு பார்க்காதவன் என பட்டம் பெறுவான். அவன் பேசுவது எல்லாம் சொத்தை வாதம் ஆகிவிடும்.

    நல்லா இருங்கடா சாமி.

    ReplyDelete
  5. பாலா, மற்றும் சி.டி, என்ற இருவர் எனது பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கிறேன் எனக்கிளம்பியவர்கள் தங்களது மூக்கு(கண்)கண்ணாடியை அணிய மறந்துவிட்டார்கள் போலும் , தெளிவாக நான் சொன்னவற்றை கவனிக்காமலே மீண்டும் புதிதாக சொல்வதுப்போல் பேசுகிறார்கள்.

    இவர்களது கவனிப்புதிறன் இதுதான் என்றால் இவர்கள் எல்லாம் எப்படி மிகவும் ஜீவாதாரமான பிரச்சினைகளை புரிந்து கொள்வார்கள்.மெத்த படித்த மேதாவிகளின் நுனிப்புல் மேயும் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பாலா சொல்வது....
    //ஒன்றை நினைவு கூறவேண்டும். இந்த மாதிரியான தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை அதிகரிக்கின்றன. அவை பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன. //

    எனத்து பின்னூட்டத்திலேயெ உள்ளது ....

    /அதுவும் தடை அற்ற மின்சாரம் குறைந்த கட்டணத்தில் ,குடிநீர் தருவதாக எழுத்து வடிவத்தில் உத்திரவாதம் தருகிறார்கள்.இதனால் வேலைவாய்ப்பு பெருகுமே எனலாம். தமிழ் நாட்டில் 60 சதவித பேருக்கு வேலைவாய்ப்பு தருவது விவசாயம் தானே./

    இதில் மீண்டும் அழுத்தி சொலவது "தடையற்ற மின்சாரம்" என்பதை கவனைக்க, மேலும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவது விவசாயமே என்பது.

    உள்ளூர் தொழில் முனைவோருக்கும் சலுகைகள் தருகிறார்கள் என்கிறார் , அவர்கள் எல்லாம் ஒவ்வொரு தடையில்லா சான்றிதழ் வாங்கவும் நாயாய் அலைந்து அனுமதி வாங்கிய பின்னரே துவங்கப்படும். தொழில் துவங்குவதற்கு முன் எத்தனைப்பேருக்கு லஞ்சம் தர வேண்டி இருக்கும் என தெரியுமா அன்பரே! இது போன்று தான் பன்னாட்டு நிறுவங்கள் கஷ்டப்படுகிறதா சொல்லுங்கள்.

    பன்னாட்டு நிறுவனங்கள் விஷயத்தில் அரசுகள் எவ்வாறுஇருக்கின்றன என்பதற்கு நல்ல உதாரணம் ,ஆந்திர அரசு வோல்வோ கார் தயாரிக்கிரோம் என்று வந்த சில ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாந்து பணம் இழந்த கதை அறியமாட்டார் போல் உள்ளது.

    பத்ரி நீங்கள் தான் செய்திகளை விரல் நுனியில் வைத்திருப்பீர்களே அந்த கதையை அவருக்கு விலாவாரியாக சொல்லுங்கள்!

    மேலும் நல்ல விதை ,உரங்கள் கிடைப்பதில்லை அரசின் மெத்தனப்போக்கால் என்பதை சொல்லியுள்ளேன் முதலில் முழுதாக படிங்க அய்யா.

    சி.டி சொல்வது....
    //assistance for new method of cultivation, asking for good seeds ..etc.Instead of that telling" PAY US FOR DOING AGRICULTURE "is not sensible.//

    எனது பின்னூட்டத்தில் இருப்பது.....

    /பொட்டாஷ் வகை உரங்கள் நம் நாட்டில் உற்பத்தி கிடையாது இறக்குமதி தான் செய்யப்படுகிறது.அதற்கு அதிக வரி வேறு. சாகுபடி காலத்தில் இந்த வகை உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படும்.அப்படியும் கிடைத்தால்,இவற்றில் கலப்படம் வேறு,பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை ஆகாயதில் இருக்கிறது. வேளாந்துரையால் வழங்கப்படும் விதைகளோ படு மட்டமானவை.முளைப்பு திறன் 50 சதவீதம் கூட இல்லாதவை. /

    சி.டி சொல்வது....

    //Agreed (why do you want to sell to government). what is the solution farmeres has to learn how to do buisness.We have a product much more valuable than OIL and GOLD , but we don't know how to add market value to this....//

    எனது பின்னூட்டத்தில் இருப்பது.....

    //தனியார் வியாபாரிகளோ அடிமாட்டு விலைக்கு தான் வாங்குகிறார்கள்//

    மேலும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று ஒரு பேட்டா செருப்பு வாங்கினால் அதில் விலை போடுவது அந்த நிறுவனம் தான் அந்த விலைக்கே நாம் வாங்குகிறோம். ஆனால் எந்த விவாசாயியும் அவன் விளைவித்த நெல்லுக்கு இது தான் விலை என நிர்ணயிக்க முடியாது. முதலில் அந்த உரிமையை தாருங்கள் விவசாயிகள் கடனே கேட்க மாட்டார்கள்.

    ஒரு ஏக்கரே வைத்து இருக்கும் விவசாயி வியாபாரி ஆக வேண்டும் என்கிறார் ,அப்படி எனில் தறியில் துணி நெய்பவர் துணிக்கடை வைக்கவும், ஒரே ஒரு புத்தகம் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் பதிப்பகம் துவங்கவும் , ஒரு மாடு வைத்து இருப்பவர் எல்லாம் பால் பதனிடும் நிலையம் துவக்கவும் சொல்வார் போல இருக்கிறது :-))
    இது தான் உற்பத்திக்கு மதிப்பு கூட்ட செய்யும் நூதன முறைப் போலும்.

    ReplyDelete
  6. இலவசக்கொத்தனார்,

    ஒரே ஒரு வரியை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்கவேண்டாமே முழுதும் படித்து பார்த்து பேசு பொருளை புரிந்துக்கொண்டு விவாதாம் செய்யுங்கள்.சிலரின் செல்லரித்த மூளை ஏழை விவசாயின் பாட்டையெல்லாம் உணராது அது போன்றவர் தான் தாங்கள் எனில் ஒரு வணக்கம் மற்றும் நன்றி தவிர கூறுவதற்கு என்னிடம் வேறேதும் இல்லை.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. கடன் தள்ளுபடி தவறான செயல் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை.

    ஏனெனில் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி பாராளுமன்றத்தில் சொன்னார். மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சேர்வது வெறும் 5 சதம் தான், மற்றவை இடையில் சேர்ந்து விடுகிறது என்று. எனவே மக்களை நேரில் சென்றடையும் இந்த மாதிரியான திட்டங்கள் தான் சரியானது என்று நினைக்கிறேன். இதனால் எத்தனை விவசாயக் குடும்பங்கள் மகிழ்ந்தன என்பது விவசாயப்பகுதியில் சென்று பார்த்தால் தான் தெரியும்.

    அடிப்படையில் விவசாயியாக இருந்தால் தான் அவர்களின் அடிப்படை பிரச்சனை தெரியவரும் நகர் புறங்களில் இருப்பவர்களுக்கு உண்மை தெரிவதில்லை என்றே நான் கருதுகிறேன்.
    - சுகுமாரன்

    ReplyDelete
  9. //
    விவசாயிகளுக்கு வாழ ஒரு ஏதுவான சூழல் இல்லத நிலையில் இது போன்ற கடன் தள்ளுபடிகள் தவிர்க்க முடியாத ஒன்று.
    //
    அந்த ஏது வான சூளல் என்ன, எப்பவரும் என்பதை விளாக்குங்கள் Batman!!

    ...

    எல்லாமே அரசே செய்யவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அப்புறம் அரசு செய்தால் ஊழல் என்று கத்துகிறீர்கள்..!! (ஊழல் இல்லை என்று சொல்லவில்லை)


    //
    விவசாயத்தை விட்டு ஓடி விடாமல் மக்களுக்கு உணவளிக்க அவர்கள் விவசாயம் செய்ய இது போன்ற கடன் தள்ளுபடிகள் தான் உதவுகிறது.
    //

    should i interpret it as,

    ஏழையாக் இருந்து ஏமாந்து வோட்டு போடுவதை விட்டுவிடாமல் இருக்க அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற கடன் தள்ளுபடிகள் தான் உதவுகிறது.
    ....
    average land holding அதாவது சராசரி கையிருப்பில் இருக்கும் நிலம் மிகச்சிறியது...இந்தியாவில்.

    இது போல் பிரிந்து பிரிந்து (fragmented) விவசாயம்(முக்கியமாக நிலமில்லா தொழிலாளர்களுக்கு நிலம் என்கிற பெயரில் பட்டா போட்டு கொடுப்பது. அரசு நிலம் தான் - அப்பன் வீட்டு சொத்தா!! அள்ளிக் கொடு! ) செய்வதைவிட பெரிய அளவில் செய்வது சிறப்பு. (corporate மயமாக்கிவிட வேண்டும். தனியார் முதலீடுகள் பெருகினால் விவசாயிகள் கடன் அரசிடம் வாங்கி இது போல் வங்கிகளுக்கு 'அல்வா' கொடுப்பது நிறுத்தப்படும் ...)

    பிறகு அரசு தலியீட்டினால் ஏற்படும் நிர்வாகச்சிக்கல் (Red tape) இல்லாமல் இருந்தால் விவசாயிகள் விவசாயத்தில் கவனம் செலுத்துவார்கள்...!!

    ReplyDelete
  10. இந்த விவாதத்தில் என்னத்த மேற்கொன்டு சொல்கிறது எல்லாம் கண்ணைக்கட்டிக்கொண்டு யானையை தடவிப்பார்க்கிறாப்போல பேசுறாங்க!

    முதலில் அடுத்தவங்க என்ன சொல்லி இருக்காங்க என்று முழுசா படிங்க ஸ்வாமி அப்புறமா பேசலாம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கும்.

    //அந்த ஏது வான சூளல் என்ன, எப்பவரும் என்பதை விளாக்குங்கள் batman!! //

    அந்த ஏதுவான சூழல் எப்போ வரும்னா ,
    நாட்டுல என்ன நடந்தா என்னனு எதுப்பற்றியும் கவலைப்படமா ஒரு கோயில் கட்டுவதையே தனது தேசிய கொள்கையா வைத்து இருக்கிற தேசியக்கட்சிக்கு தடை போடும் போது தான் வரும். வேறு எதுப்பற்றியும் கவலை இல்லாத இது போன்ற அரசியல்வாதிகள் எல்லாம் ஒழிஞ்சா வரும்! தனது தேர்தல் அறிக்கைல கூட நாட்டு மக்களைப்பற்றி கவலைப்படாத(கட்சிகள் குறைந்த பச்சம் அறிக்கைல தான் மக்கள் பத்தி பேசும்) அரசியல் கட்சிய எல்லாம் ஒழித்து கட்டினா முன்னேற்றம் வரும்.

    //Create infrastructure that are required for Agriculture industry, else hand it over to emerge as private corporate sector!//

    இன்ப்ராஸ்ட்ரக்சர் வேணுனு சொல்றிங்க வேணும் தான் சுதந்திரம் அடைந்த நாள் முதலா நல்ல சாலை வேணும், குடி நீர் வேணும் ,மின்சாரம் வேணும்னு தான் மக்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க வந்துச்சா சொல்லுங்க! அப்படி இருக்கும் போது சும்மா கிடைக்காத ஒன்ன சொல்லி கிடைக்கிறத நிறுத்த சொல்றிங்களே அறிவு கொழுந்தே உங்களை என்ன சொல்லி பாரட்டுறது!

    விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கினால் எல்லாம் சரி ஆகிடும்னு சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு நோபல் பரிசு யாராவது தாங்கப்பா?

    கார்ப்பரேட் ஆக்கிட்டா ஒரு வேளை சோறு கூட எவனும் தின்ன முடியாது. அவங்க விலைய எல்லாம் இஷ்ட்டப்படி ஏத்திடுவாங்க அதெல்லாம் செய்ய மாட்டங்க கார்ப்பரேட் மக்கள் எல்லாம் வாழும் மகாத்மாக்கள் என்று சொன்னால் ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

    தேயிலை சாகுபடி என்பது இந்தியாவில் கார்ப்பரேட் கைகளில் தான் உள்ளது.இந்தியாவில் பெரிய தேயிலை சாகுபடியாளர்கள் டாடா,மற்றும் ஹிந்துஸ்தான் லீவர், இவர்களிடம் தான் 90 சதவீதம் தேயிலை தோட்டங்கள் உள்ளது.தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்தது ஆனாலும் எங்காவது தேயிலைத்தூள் விலைகுறைந்தா? இன்றும் நீலகிரியில் பச்சை தேயிலைக்கு விலை உயர்த்தக்கோரி அங்குள்ள தனிப்பட்ட விவாசாயிகள் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள்.

    உலக அளவில் தேயிலை விலை குறைந்தது ,நமது ஏற்றுமதி பாதித்தது ஆனால் பொது மக்கள் வாங்கும் தேயிலைத்தூளின் விலை 50 பைசா கூட குறைக்கப்படவில்லை.காரணம் கார்ப்பரேட்களின் கையில் தான் தேயிலை சந்தை முழுதும் அவர்கள் வைப்பதே விலை.அது போல் அரிசிக்கும் நிலை வரவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் அடிவருடிகளின் ஆசைப்போலும்.

    ReplyDelete
  11. வவ்வால், எல்லாவிதமான கடன்கள் - பெரும் பணமுதலாளிகளுக்குக் கொடுத்தது, பஞ்சப் பரதேசிக்குக் கொடுத்தது - எதுவானாலும் திரும்ப வசூலிக்கப்படவேண்டும்.

    கடன் தள்ளுபடி செய்யப்படுவதால் விவசாயிகள் எல்லாம் பெருத்த பணக்காரர்கள் ஆகிவிட்டனர் என்று சிலர் சொல்வதுபோல நான் சொல்லவில்லை.

    விவசாயத்தொழில் தன்னிறைவற்ற தொழிலாக இருந்தால் அதன் விளைவு நாட்டுக்குத்தான் கெடுதல். அவ்வப்போது விவசாயிகளைக் காப்பாற்ற அரசுத் தலையீடு தேவை என்றால் நாளடைவில் விவசாயிகள் தம் தொழிலைவிட்டு வெளியேறி வேறு தொழில்களுக்குச் சென்றுவிடுவார்கள். அப்பொழுது நாம் கோதுமைக்கும் கொள்ளுக்கும் வேறு நாட்டை எதிர்பார்த்திருக்கவேண்டியதுதான்.

    என் கருத்தில் கடன் தள்ளுபடி (மட்டும்) விவசாயிகளைக் காப்பாற்றாது.

    1. அரசு விவசாயிகளுக்குக் கொடுக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் விலை அதிகமாக இருக்கவேண்டும்.
    2. மிகக்குறைந்த வட்டியில் தேவைக்கு ஏற்றவாறு கடன்வசதிகள் விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டும். இயற்கைச் சீற்றத்தினால் பயிருக்கு அழிவு ஏற்பட்டால் அவர்களது நல்வாழ்வுக்காக உடனடியாக மேற்கொண்டு கடன்களை - வட்டி இல்லாமலோ அல்லது மிக்ககுறைந்த வட்டியிலோ, மிக அதிக வருடங்களில் திருப்பிக்கொடுக்கும்படியாக - அவர்களுக்குக் கொடுக்க வகை செய்யவேண்டும்.

    முக்கியமாக ஊர்களில் இருக்கும் அநியாய வட்டிக் கடன்கள் தருபவர்களுக்குப் பதில் குறைந்த வட்டி தரும் நியாயமான நிறுவனங்கள் இருக்க வகைசெய்யவேண்டும்.

    3. தண்ணீர் இலவசமாகக் கிடைக்க வகைசெய்யவேண்டும். முக்கியமாக விவசாயத்துக்குத் தேவையான நீர் ஆதாரங்களைப் பெருக்கவேண்டும். ஆனால் மின்சாரம் இலவசமாகக் கொடுக்கப்படவேண்டும் என்று நான் கருதவில்லை. குறைந்தபட்சத் தொகையாவது வசூல் செய்யப்படவேண்டும்.

    4. Access to markets - விவசாயிகள் தங்களது பொருள்களுக்கான சரியான விலையைப் பெறக்கூடியவகையில் சந்தைகளை ஏற்படுத்தித்தரவேண்டும். பெரிய விவசாயிகளுக்குக் கிடைக்கும் வசதிகள் சிறு விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

    5. அனைத்து விவசாயிகளுக்கும் 'பயிர் காப்பீடு' வசதிகளைக் கட்டாயமாகச் செய்துதரவேண்டும். இதன்மூலம் எதிர்பாராத பயிர் இழப்புகளை ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும்.

    6. Access to information - பாரம்பரியமான வழிமுறைகளை மட்டும் நம்பியிருக்காமல் புதுப்புதுப் பயிர்வகைகள், அவற்றைக் காக்கும் முறை, மகசூலை இயற்கை வழியில் அதிகரிக்கும் முறை ஆகியவற்றை விவசாயிகளுக்குக் கொண்டுசேர்க்கும் கணினித் தகவல் மையங்களை சிற்றூர்களில் நிறுவவேண்டும். விவசாயிகளுக்கு படிப்பறிவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு வயதுவந்தோருக்கான கல்வித்துறைமூலம் இதனைச் செயல்படுத்தவேண்டும்.

    உலகின் பல நாடுகளில் உணவில் தன்னிறைவு பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ்கின்றனர். இந்தியாவிலும் இதனைச் செயல்படுத்தமுடியும் என்று நம்புகிறேன்.

    முகமது யூனுஸ் ஏழைமையை ஒழிக்கவென்றே கிராமீன் வங்கியை உருவாக்கினார். பெருமளவு வெற்றிகண்டுள்ளார். அவர் சொல்வதை கவனமாகக் கேட்பதில் தவறொன்றுமில்லை.

    மாற்றுக்கருத்துகள் பற்றி விவாதிக்கும்போது சில உரையாடல்களைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு:

    1. புளித்துப்போன சொத்தை வாதம்
    2. மெத்தப்படித்த மேதாவிகளின் நுனிப்புல் மேயும் திறன்
    3. சிலரின் செல்லரித்த மூளை

    இவற்றையும் பிறவற்றையும் தவிர்த்தும்கூட கனமான விவாதங்களை நடத்தமுடியும். சொல்லவந்ததைப் பிறர் புரிந்துகொள்ளுமாறு செய்யவும் முடியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. வணக்கம் பத்ரி!

    உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடே, கடன் தள்ளுபடி மட்டுமே காப்பாற்றாது என்பதே ஆனால் நீங்கள் கூறிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா அதனை செய்யாமல் இதனைப் பறிக்கவேண்டாம் என்பதே நான் கூறுவது. உன்கோவனத்தைப் பார்த்தால் அசிங்கமாக இருக்கிறது என அதை உருவி விடுவது விட ஒரு வேட்டி வாங்க வகை செய்தால் நல்லது.

    நான் பலவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளேன் அதில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வாதம் செய்யும் போது தான் செல்லரித்த மூளை என்று சொல்ல வேண்டியுள்ளது. மேலும் இன்றைய காலக்கட்டத்தில் விவசாயம் லாபகரமானது இல்லை ஆனாலும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவே தான் அது தெரிந்தும் தெரியாது போல பேசுவோரை சொத்தை வாதம் என சொல்கிறேன்.

    காலம் காலமாக விவசாயம் செய்வோரை லாபம் இல்லையே அதை விட்டு வெளியில் போ என்பது பிரச்சினையை உள்வாங்காமல் பேசுவது தானே எனவே தான் அவ்வாறு கூறினேன். இப்போதே கூட விவசாயம் செய்தோர் பிழைப்பை தேடி சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்வதால் பெரு நகரங்கள் திணறுகிறது இடப்பற்றாக்குறையால். எனவே விவசாயிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வசதிகள் தரப்பட வேண்டும்.


    தரமான இடுப்பொருள்கள் கிடைப்பதில்லை , அவற்றின் விலையும் ஏறிக்கொண்டே வருகிறது என்பதை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ளேன் அதற்கெல்லாம் யாரும் பதில் கூற தயாரில்லை.ஏனென்றால் ஒரு 200 மில்லி டெமக்ரான் விலை என்ன என்று இங்கு பேசும் யாருக்கும் தெரியாது. அது தான் அவர்களின் விவசாயம் சார்ந்த அறிவு.எனவே தான் அவர்களது இது போன்ற பொத்தாம் பொதுவான கருத்துகளை கண்டு ஒரு வகையான எரிச்சல் வருகிறது.

    என்னால் அதுப்போன்ற சொற்களை தவிர்த்தும் வாதிடமுடியும் ,சில சமயங்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக வருகிறது மற்றபடி வன்மம் கொண்டல்ல!

    ReplyDelete
  13. Looks like I missed the train...
    To Mr.Vawvaal,
    I didn't deny the problems whatever you have posted here by and most of the problems faced by farmers and agriculturist are known to pretty much every one who are living in the cauvery and other agricultural belt....so lets not say that people doesn't understand the problem .Few of my childhood friends are doing farming business in a beautiful way.. They are not complaining about the problems...,
    I was suggesting solutions for the problems, which can be permanent fix for the farmers and to grow from there. I am sure, you know very well how much infrastructure we can develop and how much we can educate these people to survive by themselves...by spending these 7000 crores.
    I don't know what you interpreted when I said they should learn how to do business.... (The day when you come out with your product you are a sales man, if you don't know how to sell, you are not in the market PAL.)I can tell so many stories where people have changed the way they sell and have become successful (Please do read story of this Bloger Mr.Bdri). This is not the thread to talk about it. One thing I can assure you, you have misunderstood...
    If we have to discount for farmers, tomorrow we may have to discount the loan for textile people (They went thru a big time loss), Leather industry (still they are struggling to come up), and small scale industrial units (how many units in ambattur are doing great)...
    As far as difficulties faced by the Indian industrial houses are much higher then MNC are difficult for me to accept, because In 1999 FORD MOTOR Company wanted to outsource their effluent treatment plant...to avoid dealing with government agencies. There are problems and people have learnt to deal and they are dealing pretty good and they have grown from few crores to thousands of crores. They are not sitting and crying PAL...( Tamilnadu Pollution control board norms are as strict as California norms)......
    So please change the way how you are looking at this definitely we can do better rather then depending on this suckers (politicians)

    BADRI:
    Nice thought about the insurance and educating the farmers through computers.

    with best
    CT

    ReplyDelete