Wednesday, July 30, 2008

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1

பூமி தன்னை நோக்கி அனைத்துப் பொருள்களையும் இழுக்கும் சக்தி கொண்டது. அத்தகைய இழுக்கும் விசையைத்தான் புவி ஈர்ப்பு விசை என்கிறோம். சொல்லப்போனால் எடையுள்ள எல்லாப் பொருள்களுமே தன்னை நோக்கி பிற பொருள்களை இழுக்கும். எடை அதிகமானால் இழுவிசையும் அதிகமாக இருக்கும். அதைப் போன்றே தனக்கு வெகு அருகில் உள்ள பொருளை அதிக விசையுடன் இழுக்கும். தூரத்தில் உள்ள பொருளை குறைந்த விசையுடன் இழுக்கும்.

பூமி மிகக் கனமான ஒரு பொருள். அது தன் மீதுள்ள அனைத்துப் பொருள்களையும் தன்னை நோக்கி இழுக்கிறது. அதனால்தான் வானில் தூக்கி எறியப்படும் அனைத்துப் பொருள்களும் மீண்டும் கீழே விழுகின்றன. பூமி, சந்திரனையும் தன்னை நோக்கி இழுக்கிறது. ஆனால் அது ஏன் பூமியின்மீது விழாமல், பூமியைச் சுற்றிவருகிறது? கவனமாகப் பார்த்தால் சுற்றுவதும் விழுவதற்கு ஒப்பானதே! இதை நியூட்டன் புரிந்துகொண்டதும் அவருக்கு வான்வெளியில் உள்ள பொருள்கள் ஒன்றை ஒன்று ஏன் சுற்றுகின்றன என்று தெளிவாகிவிட்டது.

ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் உயரே தூக்கிப் பிடித்து, கையை விட்டுவிடுங்கள். பொத்தென்று நேராகக் கீழே விழுகிறது. அடியில் உள்ள படத்தில் இருப்பதைப் போல.

அடுத்து, அதே கல்லை எடுத்துக்கொண்டு கொஞ்சம் பக்கவாட்டில் விசை கொடுத்துத் தள்ளிவிடுங்கள். இப்போது நேராகக் கீழே விழாமல், சறறு தள்ளி, ஒரு வளைந்த பாதையில் விழுகிறது.

சந்திரனும்கூட இப்படிப்பட்ட ஒரு கல்தான். யாரோ அதைப் பக்கவாட்டில் பிடித்துத் தள்ளிவிட்டார்கள். அதுவும் நல்ல வேகமாக. இப்போது அது விழுகிறது, ஆனால் தள்ளி விழும்போது பூமியின் மேல் விழாமல், சற்று தள்ளிப்போய் விழுகிறது. அங்கும் இதே நிலை. ஒவ்வொரு கட்டத்திலும் அது பூமியை நோக்கி விழவேண்டும், ஆனால் விழும்போது சற்றே தள்ளி இருக்கிறது. எனவே பூமியைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

ஆக, சந்திரன் பூமியைச் சுற்றுவதும், கல் பூமியின் மேல்பரப்பில் விழுவதும் ஒன்றுதான். இதைச் செய்வது பூமியின் ஈர்ப்பு விசை.

பூமியின் மேல் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் பூமி இழுப்பதைப் போல, சந்திரனும் இழுக்கிறது. ஆனால் நாம் பறந்து சந்திரனை அடைவதில்லை. அதற்குக் காரணம், சந்திரனின் இழு விசையைவிட, பூமியின் இழுவிசை அதிகம். ஏனெனில் பூமியின் எடை சந்திரனின் எடையைவிட அதிகம். மேலும் நாம் பூமிக்கு அருகிலும் சந்திரனுக்கு வெகு தொலைவிலும் உள்ளோம்.

அதேபோலத்தான் சூரியனும் நம்மை இழுக்கிறது. சூரியன் பூமியைவிட அதிக எடைகொண்டதாக இருந்தபோதிலும், வெகு தொலைவில் இருப்பதால், பூமியைவிட வலுவாக நம்மை சூரியனால் இழுக்கமுடிவதில்லை. நல்ல வேளை! இல்லாவிட்டால் நாம் பறந்துசென்று சூரியனில் விழுந்து எரிந்து சாம்பலாகியிருப்போம்.

***

இப்படி பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்துப் பொருள்களையும் பூமி பிடித்து இழுப்பதால்தான் நாம் மிதக்காமல் இருக்கிறோம். தரையில் கால் பதித்து நடக்கிறோம். நம்மால் இந்த இழுவிசையை எதிர்த்து மேலே போகமுடிவதில்லை.

ஆனால் சில உயிரினங்கள் சர்வசாதாரணமாக இந்தக் காரியத்தைச் செய்கின்றன.

1. பறவைகள், பறக்கும் பூச்சிகள். இவை வெகு சாதாரணமாகக் காற்றில் மிதக்கின்றன. பூமி இவற்றைப் பிடித்து இழுத்தாலும் இவை விழுவதில்லை. எப்படி முடிகிறது இவற்றால்?

2. சிறு பூச்சிகள் (எறும்பு, கரப்பு, கொசு, ஈ, சிலந்தி) சுவர்மீது ஜாலியாக நிற்கின்றன. அவை கீழே விழுவதில்லை. நிற்பதோடு இல்லாமல் ஊர்ந்து மேலும் கீழும் செல்கின்றன. எப்படி? அவற்றை ஈர்ப்பு விசை தாக்குவதில்லையா?

3. பல்லி போன்றவை மேலும் சில ஜாலங்களைப் புரிகின்றன. அந்தரத்தில் கூரைமீது தலைகீழாக அவை நடக்கின்றன. தாம் விரும்பினால் மட்டுமே அவை கீழே குதிக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது?

சென்ற வாரம் என் மகளுக்கு உதித்த சந்தேகம் இது. அதன் விளைவாக இந்தப் பதிவுகள்.

அடுத்த சில பதிவுகளில், எப்படி இந்தச் சில உயிர்கள் புவி ஈர்ப்பு விசையை எதிர்கொள்கின்றன என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment