Tuesday, July 22, 2008

கிரிக்கெட்: பேச்சிலும் beach-இலும்!

சென்ற வெள்ளியன்று மெட்ராஸ் புக் கிளப் ஆதரவில் “IPL and its impact on the future of cricket in India” என்ற தலைப்பில், தாஜ் கன்னிமரா ஹோட்டலில் பேசினேன்.

நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் வந்திருந்தது. மெட்ராஸ் புக் கிளப் உறுப்பினர்கள்தான். சுமார் 40-50 பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சில நடுத்தர வயதினர். 35-க்குக்கீழ் இரண்டு பேர்தான் கண்ணில் பட்டனர்.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் எப்படி பாதிக்கப்படும் என்பது பற்றிய எனது கருத்துக்களைப் பேசினேன். வணிகரீதியாக, சமூகரீதியாக, கிரிக்கெட் விளையாட்டின் தன்மையில், விளையாட்டு வீரர்களின் உடல்நலத்தில், கிரிக்கெட் நிர்வாகத்தில், சர்வதேச கிரிக்கெட் உறவில், கிரிக்கெட் விதிகளில் எந்தவிதமான பாதிப்புகள் இருக்கும் என்று பேசினேன்.

சரியாக மாலை 7.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. முடிந்தபோது 8.15 இருக்கும். எனது பேச்சுக்குப் பிறகு சில நல்ல கேள்விகள் கேட்கப்பட்டன.

மொத்தத்தில் நானே எதிர்பார்க்காத அளவு, வந்திருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பேச்சைக் கேட்டனர்.

இதற்குமுன் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு இரண்டு முறை கிரிக்கெட் பற்றிப் பேசியுள்ளேன். கோகலே சாஸ்திரி ஹாலில், “சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள்” என்பது பற்றிப் பேசினேன். ஆரம்பிக்கும்போது, 5 பேர் இருந்தனர். முடிக்கும்போது கிட்டத்தட்ட 10 பேர் இருந்தனர். சென்ற ஆண்டு “தெரு கிரிக்கெட்” என்பது பற்றி ஸ்ரீ பார்வதி ஹாலில் பேசினேன். அதில் 15 பேர் அளவுக்கு வந்திருந்தனர்!

இந்த முறையும் மெட்ராஸ் தினப் பேச்சுகளில் பேச உள்ளேன். ஆனால் நல்லவேளையாக கிரிக்கெட்பற்றி இல்லை. எதைப்பற்றி என்று பின்னர் சொல்கிறேன்.

***

கடற்கரைக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதில் இப்போது எங்கள் அலுவலகத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே என்னிடம் இருக்கும் இரண்டு நல்ல மட்டைகள் (ஒன்று வுட்வோர்ம், இன்னொன்று எம்.ஆர்.எஃப்) சீப் டென்னிஸ் பந்துகளை அடிக்கப் பயனாகிறது. சனிக்கிழமை நான்கு ஸ்டம்ப்களையும் வாங்கிவிட்டனர்.

கடற்கரையில் சில இடங்களில் யாரோ புண்ணியவான்கள் தரையிலிருந்து மணலை விலக்கி, கெட்டியான ஆடுகளத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். யார் முதலில் போய் இடத்தைப் பிடிக்கிறார்களோ, ஆடுகளம் அவர்களுக்குச் சொந்தம்.

ஓவர்-ஆர்ம் வீசுதல் கிடையாது. மாங்காயடி chucking-தான். நல்ல வலுவுள்ள ஆள்கள் அடித்தால் எதிர்காற்றையும் மீறி பந்து சிக்ஸுக்குப் போகிறது. (ஆனால் எல்லைக்கோடு சிறியதுதான்.)

இப்போது எங்கள் முதன்மை அலுவலகத்தில் இருப்பவர்களை சேகரித்தாலே இரண்டு கிரிக்கெட் அணிகளை உருவாக்கிவிடலாம். கிரிக்கெட் பந்து, கால், கை காப்புகள், நல்ல ஆடுகளம் என்று எடுத்துக்கொண்டு, நன்றாகப் பயிற்சி செய்தால் Blue Star லீகின் அடிமட்டத்தில் விளையாடலாம்.

ஆனால் என்னையும் சேர்த்து பாதிப் பேருக்கு ஓடுவதில் சிரமம் இருக்கும்.

இப்போதைக்கு பீச் கிரிக்கெட்டே சிறந்தது. வாரம் ஒருமுறை - சனிக்கிழமை - தொடர்ந்து விளையாடினால் கொஞ்சம் ஃபிட்னெஸ் உருப்படியாகலாம். பிறகு தீவிரமான கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி யோசிக்கலாம்.

ஆனால் கிரவுண்ட் ஒன்றைத் தேடவேண்டும்.

***

நாகப்பட்டினத்தில் நான் படித்த தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு உருப்படியான விளையாட்டு மைதானம் கிடையாது. ஆனால் போட்டிப் பள்ளிகளான சி.எஸ்.ஐ மேல் நிலைப் பள்ளி, அந்தோணியார் மேல் நிலைப் பள்ளி ஆகியவை மிகப் பெரியவை. உள்ளுக்குள்ளேயே கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி என்று சகலமும் விளையாடமுடியும். எங்களுக்குப் பொறாமையாக இருக்கும்.

ஆரம்பத்தில் எங்களுக்கு கிடிக்கெட் விளையாட அவுரித்திடல் என்ற திடல் கிடைத்தது. பெரியாஸ்பத்திரிக்கு எதிராகப் பரந்து விரிந்திருக்கும் மாபெரும் திடல். அங்கு ஒரே நேரத்தில் நிஜமாகவே பத்து கிரிக்கெட் மேட்ச்களை நடத்தலாம். எப்போதாவது எம்.ஜி.ஆர் அல்லது இந்திரா காந்தி வந்தால் சுற்றுப்புறப் பள்ளிகளிலிருந்தெல்லாம் குழந்தைகளை அழைத்துவந்து இங்குதான் வதை செய்வார்கள்.

அந்த இடத்தில்தான் நாங்கள் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்ற காரணத்தால் புரூடென்ஷியல் கிரிக்கெட் கிளப் என்ற பிரம்மாண்டமான பெயரில் கிரிக்கெட் அணி ஒன்றை உருவாக்கினோம். பசங்களோ பெருமாள் வடக்கு மடவிளாகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கென்று சொந்தமாக கிரிக்கெட் பேட் இருந்ததாகக்கூட ஞாபகம் இல்லை. சட்டையப்பர் கோயில் தெருப்பக்கம் இருந்த பசங்களோடு மேட்ச் ஆடிய ஞாபகம் உள்ளது. தோற்றுத்தான் போனோம். நாங்கள் அந்தப் பெயரில் ஆடிய ஆட்டங்களில் மொத்தமாகவே ஓரிரு முறைதான் ஜெயித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். கார்க் பந்து கொண்டுதான் ஆட்டம் நடக்கும்.

திடீரென நகராட்சி அந்த மைதானத்தைப் பிடுங்கி அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்தது. அதன் பிறகு அந்தோணியார் பள்ளிக்கூட கிரவுண்டில் அவ்வப்போது விளையாடியிருக்கிறோம். நீலாயதாட்சியம்மன் கோயிலில் கொஞ்சம் விளையாடலாம்.

பஸ் ஸ்டாண்ட் வந்தபிறகு, உருப்படியான கிரிக்கெட் மேட்ச் என்றால் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில்மட்டும்தான் விளையாடமுடியும் என்றானது.

பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் தேசிய மேல் நிலைப் பள்ளிக்காக ஆடும்போது (11-வது படிக்கும்போது), பாலிடெக்னிக் கிரவுண்டில் சி.எஸ்.ஐயிடம் கடுமையாகத் தோல்வி கண்டது ஞாபகம் உள்ளது. எங்களுக்கு பிராக்டீஸே கிடையாது. நான் விக்கெட் கீப்பிங் செய்தேன். டாஸில் வென்ற சி.எஸ்.ஐ பேட்டிங் என்றனர். எங்களது அணியில் ஒருவர்கூட மேட்டில் விழுமாறு பந்து வீசவில்லை. அங்கும் இங்குமாகச் சென்று என் கழுத்தை அறுத்தது. கடைசியாக வெட்கம் பிடுங்கித்தின்ன ஏகப்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனோம்.

இன்று நாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாட பையன்கள் எங்கே செல்கின்றனர் என்று தெரியவில்லை.

5 comments:

  1. Badri,

    Very nice nostalgic post. Reminded me of a short story by Sujatha (think it is "Paperil Per") on his Srirangam cricket club match and also our own sunny cricket club we had in vellore.

    Best regards,
    Magesh

    ReplyDelete
  2. அடுத்த வருடம் 100 பேர் அடங்கிய கூட்டத்தில் பேச எனது மனதார வாழ்த்துக்கள். என்ன பேசினீங்கன்னு ஒரு சின்ன brief கொடுத்து இருக்கலாம்.

    ReplyDelete
  3. Badri, on reading your nostalgic part, I was literally taken back to those days and felt myself living in those days. You are on dot while saying that National Higher secondary does not have a proper play ground. I still remember, even the small ground was not maintained properly which was opposite to a cinema theater.

    We use to pack lunch boxes and go a long way to play/watch matches in Polytechnic ground which is 5 to 6 KM from the city.

    Incidentally, I was also part of those friends which you have mentioned as Sattayppar koil street mates.

    Apart from these ground crickets, we have also played in the Sattayappar mela veethi street, with the pitch being the distance between my house and the opposite side house. It was interesting as sometimes we use to wait for a catch when the ball goes over the roof of the house and comes down slowly. Annoyingly, it might stuck in between or would get diverted during last minute and would go out of our hands. Also, it might get into the open roof floor of house, which is a wicket (out), because we need to replace the ball. Straight hit past the bowler and the wall of the house is granted two runs. (There is no running between the wicket as it played across the srtee). As there was a small shop in the off-side (cover position) we use to restrict with no runs on the off-side. If by mistake, the ball goes near to shop, that person would grab the ball and will not give.

    There is one more place where we used to play- which is near Akkarai kulam. I think, you have also played in that ground with Shankara narayanan, Kunjambi...!

    Nice post. Really enjoyed the refreshing moments which would never come back in life as life and time has no reverse gear!

    ReplyDelete
  4. i would like to know your viewpoint on this post :-

    http://saavu.blogspot.com/2008/07/blog-post_22.html

    ReplyDelete
  5. Sir,
    "indhiya kirikket" enru edhai kuripidu gireergal?
    i wish to humbly submit that, there is no national cricket team for india. If you apply to ICC requesting for kizhakku team to be treated as official team from india, they might,if your team satisfies some ruiles. (i couldnt find these rules even in icc website)

    Respectfully,
    venkat

    ReplyDelete