Monday, July 21, 2008

அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...

நர்சரி பள்ளியில் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம், அரசுக் கல்லூரியில் ரவுடிப் பசங்கள் செய்யும் அட்டகாசம். இரண்டையும் ஒன்றாகக் குழைத்து வார்த்ததுபோலத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் நடந்துகொள்வது வழக்கம்.

இன்று முக்கியமான அலுவல். காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தொடரவேண்டுமா, கூடாதா என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு முன்னதான விவாதங்கள். பிரணாப் முகர்ஜி, அரசை ஆதரித்து, இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை விளக்கிப் பேசினார். அவை அமைதியாக இருந்தது. பொறுக்கித்தனங்கள் பிற்பாடு ஆரம்பித்தன என்றாலும் பெரும்பாலும் எந்த இடையூறும் இன்றி முகர்ஜி பேசினார். ஆங்கிலத்தில் அங்கும் இங்கும் தடுமாறல்கள். வங்காள மொழி உச்சரிப்பினால் சிறிது குழறல். வயதான குரலானதால் கொஞ்சம் தடுமாற்றம். மற்றபடி, அற்புதமாக இருந்தது அவரது பிரசெண்டேஷன்.

இந்த அரசு நாளைய வாக்கெடுப்பில் தோற்காது என்று நான் கருதுகிறேன். அப்படியே தோற்றாலும் பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சு வெகு நாள்கள் மனத்தில் நிற்கும்.

அமெரிக்கா, IAEA ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களை முகர்ஜி வெகுமக்களுக்குப் புரியும் வண்ணம் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுடன் ஒப்பிட்டார். பாஸ்போர்ட், விசா வாங்குவதென்றால் உடனடியாக அந்த நாட்டுக்குப் போகிறோம் என்று முடிவெடுத்துவிடவில்லை. ஆனால் பாஸ்போர்ட்டே இல்லை என்றால் விசா எடுக்கமுடியாது. விசா இல்லையென்றால், விரும்பினாலும் அந்த நாட்டுக்குப் போகமுடியாது. IAEA-உடன் ஓர் ஒப்பந்தம் இல்லையென்றால் (India Specific Safeguards Agreement), அணு எரிபொருள் தர எந்த நாடும் ஒப்புக்கொள்ளாது. எனவே இது பாஸ்போர்ட் போன்றது. அதன் பிறகு, NSG, இந்தியாவுக்கு எரிபொருள் தருவதை ஒப்புக்கொள்ளவேண்டும். அதன்பின், எந்தவொரு NSG நாட்டுடனும் இந்தியா தனியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் அடிமையாக இந்தியா மாறிவிடும் (மாறிவிட்டது) என்று கேரளத்தின் ஃபேவரைட் தமிழ் எழுத்துக்காரன் கலா கௌமுதியில் எழுதியாகிவிட்டது. கெப்பல்ஸ்தான் ஞாபகத்துக்கு வருகிறார். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால்... அது உண்மை என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள்.

***

இந்த வாக்கெடுப்பைப் பொருத்தமட்டில், சிபு சோரன் போன்ற சிறைப்பறவைகளையெல்லாம் தூசு தட்டி எடுத்து அவர்களுக்கு ஆரத்தி காண்பித்து மந்திரி பதவி கொடுக்கவேண்டுமா என்று கேள்வி கேட்கப்படுகிறது.

அடுத்து, இந்த அணு ஒப்பந்தம் என்ன அவ்வளவு முக்கியமா? ஏன் இதற்காக அரசையே ஆட்டம் காண வைக்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி.

இந்த ஒப்பந்தம் அவ்வளவு முக்கியம்தான். ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களாக இதனை நெகோஷியேட் செய்து வந்துள்ளனர். இப்போது முடிக்காவிட்டால் இனி எப்பொது மீண்டும் தொடர்ந்து முடிக்கமுடியும் என்பதில் கேள்விகள் உண்டு. அந்தப் பக்கமும் ஆட்சி மாறும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆயிரத்தெட்டு முக்கியமான விஷயங்கள் உண்டு. எனவே முன்னுரிமைகள் மாறிக்கொண்டே இருக்கும்.

இப்போது ஒப்பந்தம் செய்துமுடித்தாலும் எரிபொருள் கிடைக்க எவ்வளவு வருடங்கள், மின்சாரம் கிடைக்க எவ்வளவு வருடங்கள் என்ற கேள்விகள் எல்லாம் அபத்தமானவை. அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் 2030-க்கான திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். தள்ளிப்போடுவோம், தள்ளிப்போடுவோம் என்றால் நாளைய சமூகம்தான் பாதிக்கப்படும்.

தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டே, சாலைகள் முதல் ரயில்கள்வரை, கல்விமுதல் மின்சாரம்வரை திண்டாடிக்கொண்டிருக்கிறோம். என்றோ செய்திருக்கவேண்டிய மெட்ரோ ரயில் திட்டங்களை இன்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் சென்னையில் வேலையை ஆரம்பித்தபாடில்லை.

அடுத்து, 25 கோடி, சிபு சோர(ன்) ஒப்பந்தங்கள். இரண்டு பக்கங்களிலும் பணம், பதவிகள் கைமாறுவதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தியக் குடியாட்சி முறையில் அசிங்கம் நடப்பது இது முதல் முறையல்ல. கடைசி முறையும் அல்ல. கோடிகளைக் கொடுத்து வாக்குகள் பெற்றால் அது குற்றம். ஆனால் அமைச்சர் பதவி ஆசை காட்டினால் அது குடியாட்சி முறைக்குள், சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. கோடி கொடுத்ததற்கான ஆதாரம் இருந்தால் சிலர் ஜெயிலுக்குப் போகவேண்டிவரலாம்.

இந்தியக் குடியாட்சி முறையில் எக்சிகியூட்டிவ் அதிகாரம் நாடாளுமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட கேபினெட் கையில் இருக்கும்வரையில், ஆட்சியைக் கவிழ்க்கும் பல செயல்பாடுகள் நடக்கும். அப்போது ஆசை காட்டி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதும் நடக்கும். அந்த “ஆசை காட்டுதல்” சட்டத்துக்குப் புறம்பானதாக இருப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

8 comments:

  1. பத்ரி உங்கள் கோபம் நியாயமானது

    உங்களின் அணு ஒப்பந்தம் தொடர்பான எல்லா விஷயத்திலும் இருப்பது உண்மை, அதற்காக சாருவை அவன் என்றெல்லாம் விளிப்பது உங்கள் பெருமையை குறைப்பதாகும், சாருவின் மரியாதை ஒரு நிகழ்வுக்கான மரியாதை மட்டுமல்லவே

    ReplyDelete
  2. எழுத்துக்காரன் என்பது மலையாள வார்த்தை. மலையாளத்தில் மரியாதைப் பன்மை கிடையாது. விவேகானந்தன், ராமகிருஷ்ண பரமஹம்சன் என்றுதான் அங்கு சொல்கிறார்கள்.

    தமிழில் எழுத்தாளன் (அய்யோ, மன்னிக்கவும்) எழுத்தாளர்... போதுமா.

    ReplyDelete
  3. பத்ரி,

    பிரணாப் முகர்ஜியின் பேச்சினை முழுமையாக, வீட்டுக்கு மதிய உணவு சாப்பிட போகும் சாக்கில் முழுமையாக கேட்டேன். பிரதமர் சரியாக தான் சொல்லியிருக்கிறார். முகர்ஜியின் பேச்சை கேட்ட பின்பும், இதை பற்றி கதைப்பது, அவல் மெல்லும் வாய்கள் மட்டுமே.

    கம்யூனிஸ்டுகள் மரணடி வாங்க வேண்டும், அடுத்த தேர்தலில். இந்தியாவில் எம்பிகள் வாங்கப்பட்டார்கள், பேரம் நடந்தது என்பதெல்லாம் இன்று நேற்று நடப்பதல்ல. Politcal Economy-யில் இது சகஜம். இங்கே ஸ்டார் ஹோட்டல்கள், சூட்கேஸ்கள், சலுகைகள் என்றால், அமெரிக்காவில் இந்த மாதிரியான லாபி பண்ணவே நிறைய பேர் இருக்கிறார்கள். புரியாதவர்கள் Syriana படம் பார்க்க (ஆயில் லாபி என்றால் என்னவென்று அப்பட்டமாக சொல்லியிருப்பார்கள்)

    டிவிட்டரில் பேசி கொண்டிருக்கும் விவாதங்கள் (ஏன் நான் அணு ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கிறேன்) ஒருபுறம் இருக்க, இந்தியா மாதிரியான ஒரு தேசத்திற்கு இம்மாதிரியான முடிவுகள் அவசியமென்று தான் தோன்றுகிறது.இது கம்யூனிஸ்டுகளை போல அமெரிக்கா என்றால் விஷம் என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய அந்தப்புரத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டிருப்பதை விட எம்பிகளை வாங்குதல் ஒன்றும் கேவலமாக தோன்றவில்லை.

    மாயாவதியின் பின் அணிவகுப்போம் என்று சொல்வதின் பின்னிருக்கும் அரசியல் லாப நட்டங்களையும், சலுகைகளுக்கு எதிராக பார்த்தால் அமர்சிங்கோ,இன்ன பிற கட்சிகளோ ஒன்றும் பெரியதான குற்றம் செய்ததாக தோன்றவில்லை. சிபு சோரன் போன்றவர்கள் மந்திரி பதவி ஆசை காட்டியதால் தான் இருக்கிறார்கள் என்றால், நம்முடைய தி.மு.க, பா.ம.க நிலையும் அதே.

    என்னுடைய தனிப்பட்ட கருத்து இன்னமும் அணு ஒப்பந்தத்திற்கு எதிரானதாக தான் இருக்கிறது. அமெரிக்கா என்கிற தனிநாட்டினை முன்னிறுத்தி நான் பேசவில்லை. அணு ரியாக்டர்களின் கழிவுகளை எப்படி வெளியேற்ற போகிறோம் ? அமெரிக்கா இன்றளவும் அணு கழிவுகளே பக்கத்தில் இருக்கும் தீவுகளில் நிரப்பி கொண்டிருக்கிறது. பொது மக்கள் இல்லாத இடம் என்று சொன்னாலும், அங்கேயும் சுற்றுச்சூழல் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேஷனல் ஜியாகரபிகில் கொஞ்ச நாளைக்கு முன்பு எப்படி இம்மாதிரியான dump locations சுற்றுச்சூழலையும், உயிரினங்களையும் எவ்வாறாக சிறுக சிறுக பாதித்து அதன் மூலம் பெரிய அளவில் மாற்றங்களை உண்டு பண்ணும் என்கிற விஷயம் பேசப்பட்டது. சூழலியாளன் என்றாலே முன்னேற்றத்தினை தடைப் பண்ணுவர்கள் என்றொரு பேச்சும் இருப்பதனால், இதன் சாதக பாதகங்களின் முழூ வீச்சு தெரியாமல் இதை ஒட்டு மொத்தமாக ஆதரிப்பது என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஏதோ ஒரு கணக்கில் இந்தியா $100 பில்லியன் டாலர்கள் செலவிடும் என்று செய்தி சேனல்களில் சொன்னார்கள்.

    இவ்வொப்பந்தம் கையெழுத்தானால், நாமும் IAEA-ல் ஒரு அங்கம். அப்படி இருக்கும் போது எல்லாவிஷயங்களும் பொதுவில் வைத்து தான் பேச முடியும். இதற்கு செலவிடும் 100 பில்லியன் டாலர்களில் 20% பணத்தினை வைத்துக் கொண்டு மாற்று எரிபொருள், மரபு சாரா எரிபொருள்/சக்தி உற்பத்திக்கு முன்னிடம் அளித்தோமானால், அது எல்லாவிதங்களிலும் முழுமையானது என்று தோன்றுகிறது. அணு சக்தியோ, சூரிய ஒளி சக்தியோ எதுவுமே பேசியவுடனே நடக்க போவதில்லை. இதெல்லாம் பத்து-இருபது வருட காலகட்டங்களில் பேசப்படவேண்டியவை.

    ஆயில் ரேகையில் பா.ரா ஜப்பான் எப்படி 1970-களின் பெட்ரோலிய பிரச்சனையினை எதிர்கொண்டது என்று எழுதியிருப்பார். 70-80களில் மிக மோசமான பொலுயுசன் இருந்ததாக சொல்லப்பட்ட டோக்கியோ இன்றைக்கு மிக சுத்தமான உலக நகரங்களில் ஒன்று. நமக்கான ஒரு பெரும் energy/power கட்டமைப்பினை நாம் இப்போது தான் உருவாக்குகிறோம். அதை உலகின் சூழலோடு சேர்த்து யோசித்தால், காரியப்படுத்தி செய்தால், அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்க நிறைய இருக்கிறது. கொஞ்சம் இப்படியும் யோசிக்கலாம்!

    ReplyDelete
  4. //கோடிகளைக் கொடுத்து வாக்குகள் பெற்றால் அது குற்றம். ஆனால் அமைச்சர் பதவி ஆசை காட்டினால் அது குடியாட்சி முறைக்குள், சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.//

    :) :)

    ReplyDelete
  5. //அதற்காக சாருவை அவன் என்றெல்லாம் விளிப்பது உங்கள் பெருமையை குறைப்பதாகும்.//

    பத்ரி ஒரே ஒருமுறை சாருவை "எழுத்துக்காரன்" என்று குறிப்பிட்டதற்கே கோபித்துக்கொள்கிறீர்களே மகாகவி பாரதியை மேடைப் பேச்சுக்களிலும் பத்திரிகைக் கட்டுரைகளிலும் அரட்டைக் கச்சேரிகளிலும் அவன் இவன் என்று மரியாதைக் குறைவாகக் குறிப்பிடுவதை (பாரதிதாசன் தவிர) நாம் யாராவது கண்டித்திருக்கிறோமா? கவிதையில் அவன் இவன் என்று சொல்வதையாவது மன்னித்துவிடலாம். உரைநடையில், பேச்சில்?

    ReplyDelete
  6. Badri,

    I have been reading your blog regularly for some time now. I have been reading this article (http://online.wsj.com/article/SB121562768791139877.html) today which goes like this..

    "....All of this sounds pretty good. There's only one problem: To garner the political support necessary to proceed with the deal, Mr. Singh and his supporters have been making a pitch back home that's the polar opposite of Washington's story board. Thus just last week, to gain the support of the Samajwadi Party (an Indian political group previously opposed the deal), the prime minister's office announced that "the 123 Agreement clearly overrides the Hyde Act" and that, as such, "there is nothing in the agreement which places an embargo on India's right to carry out a nuclear test if it thinks this is necessary in India's supreme national interest."....."

    And in many of the other Opinion pieces also pretty much puts forth the same i.e. '123 agreement is binded by Hyde Act'. My question is, Whether the Indian government is hiding the truth in this regard as the article states?

    Thanks
    Bala

    ReplyDelete
  7. Bala: 123 Agreement can be overridden by Hyde Act (particularly related to nuclear testing) or put to a lot of strain (related to foreign policy being aligned with American policy) where the senators can demand or force the US President to cancel the 123 Agreement with India.

    Part of the Indian position is that Hyde Act cannot control 123 Agreement. This is not correct. There were suggestions that India would also enact a counterpart to Hyde Act which will control aspects of 123 Agreement.

    ***

    Actually, India's position as non-nuclear power and non-NPT signatory, non-CTBT signatory meant that something like Hyde Act had to be passed in the senate for the US President to initiate 123 Agreement with India. The senators had their own agenda and added a few clauses that pleased their constituencies.

    If Congress has lied about Hyde Act, it is unpardonable. But if Congress still believes Hyde Act is meaningless and cannot control the implementation of 123 Agreement that is another matter. In fact, both can be true in bits.

    For example, George Bush himself immediately came up with a press release (after the passing of the Hyde Act). While the senators wanted enforcing alignment of Indian foreign policy along the lines of American foreign policy, to be eligible for 123 Agreement in the Hyde Act, Bush indicated that he will not consider that clause as binding on him as American constitution leaves foreign policy decision making in the hands of the President and not with the senators. (I can't remember the exact words - I did include the press release in one of my earlier posts).

    On the other hand, if India performs a nuclear test, it will be difficult for any US President to persist with the 123 Agreement as it is.

    ReplyDelete
  8. P.K.Iyengar, former chairman of Atomic Energy Commission blasts off the entire nuke deal. He has outlined 10 misconceptions about the Nuke deal in today's BL - http://tinyurl.com/63nlh4

    This man is not a journalist, and he was with the Atomic Energy Commission's highest post and definitely knows a lot more than the journalists. Although, i am not completely convinced with all the points, the point he is raising about NSG and the pricing of the uranium is seriously needed to be discussed.

    My view is still although on the non-nuclear, clean tech side, but even with the nuclear deal, there are lot more things to be considered & discussed before taking this fully into consideration.

    ReplyDelete