Saturday, July 12, 2008

IAEA Safeguards ஒப்பந்தம்

இன்று தி ஹிந்துவில் வந்திருக்கும் சித்தார்த் வரதராஜன் கட்டுரை சுவாரசியமாக உள்ளது. இந்தியா-IAEA ஒப்பந்தம், பொதுவாக இடதுசாரிகள் நினைத்ததைவிட இந்தியாவுக்கு சாதகம் அதிகம் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் தொடர்ந்து எதையோ பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். “அய்யோ, நாம் கஷ்டப்பட்டு காசு கொடுத்து வாங்கிய வெளிநாட்டு ரியாக்டர்கள் என்னாவது?” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். யாஹூ! செய்தியிலிருந்து:
'As a result of operationalising the Indo-US nuclear deal, India will place its costly imported reactors under perpetual IAEA safeguards and risk their permanent shutdown in case it fails to toe the US line on foreign policy issues,' the Left parties said.
முதலில் இந்த India Specific Safeguards Agreement-ன் சில ஷரத்துகளை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.

1. முன்னரே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை (NPT) பிரகாரம், இரண்டுவிதமான நாடுகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அணு ஆயுத நாடுகள், அணு ஆயுதம் இல்லாத நாடுகள். அத்துடன் இந்தியா போன்ற திரிசங்கு சொர்க்க நாடுகளும் (NPT-ஐ ஏற்றுக்கொள்ளாத, ஆனால் அணு ஆயுதம் உள்ள நாடுகள்) உள்ளன என்றும் பார்த்தோம்.

IAEA, அணு ஆயுத நாடுகளைப் பொருத்தமட்டில் ரொம்ப ஆட்டம் போடாது. “நீங்க என்ன வேணா செஞ்சுக்கங்க, உங்க வழில நான் வரமாட்டேன்” என்று சொல்லிவிடும். ஆனால், அணு ஆயுதம் இல்லாத நாடுகளில் புகுந்து ரகளை செய்யும். அணு ஆயுதம் இல்லாத நாடுகளில், ஒவ்வொரு அணு உலையையும் கண்காணிக்கும். உள்ளே வரும் யுரேனியம், வெளியே போகும் யுரேனியம் என்று எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொள்ளச் சொல்லும். அதில் எதுவும் வேறு நாடுகளுக்குப் போகிறதா, அப்படிச் செல்லும் நாடுகள் அணு ஆயுத நாடுகளா, இல்லையா, ஏன் அங்கு யுரேனியம் செல்கிறது என்றெல்லாம் தோண்டித் துருவும்.

ஆனால் India Specific Agreement-ல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளது. இந்தியா அணு ஆயுத நாடு என்று ஒருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதைவிடச் சிறப்பான ஒப்பந்தம் நமக்குக் கிடைக்காது.

2. இந்தியா தான் விரும்பி கைகாண்பிக்கும் அணு உலைகளை மட்டுமே IAEA கண்காணிக்கும். அந்த அணு உலைகள், இந்தியா பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் உருவான அணு உலைகளாக மட்டுமே இருக்கும். ஒன்று இந்த அணு உலைகளே அந்நிய நாட்டிலிருந்து ஒப்பந்தம்மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும். இரண்டு, நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அணு உலைகளுக்கு அந்நிய நாட்டிலிருந்து யுரேனியம் பெற்றால், அந்த அணு உலைகளாக இருக்கும்.

நம் அணு உலைகள், நம் யுரேனியம் என்றால் IAEA கண்டுகொள்ளாது. கண்காணிப்பு ஏதும் இல்லை.

பிறர் நமக்கு அணு உலைகளைத் தரும்போது, அதற்கு கட்டாயமாகக் கண்காணிப்பு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுபோலவே, பிறர் நமக்கு யுரேனியம் தரும்போது அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வோம் என்பதையும் அதிலிருந்து ஒரு துளிகூட அணு ஆயுதம் செய்வதற்குப் போகக்கூடாது என்பதையும் அந்த நாடுகள் எதிர்பார்க்கலாம் அல்லவா?

3. அடுத்து, ஒரு நாடு யுரேனியம் தந்துகொண்டே இருக்கும்போது, திடீரென நிறுத்திவிட்டால் என்ன செய்வது?

அது இந்தியாவின் பிரச்னை. தாராப்பூருக்கு யுரேனியம் தந்துகொண்டிருந்த அமெரிக்கா, போக்ரான் - 1 அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, நிறுத்திவிட்டது. (இதில் ஏன் நமக்குக் கோபம் வரவேண்டும்?) அதேபோல நாளையும் நடந்தால் என்ன ஆவது என்று இடதுசாரிகள் கேட்கிறார்கள்.

இது நிச்சயம் நாளை நடக்கலாம். திடீரென நமக்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஒரு நாடு, எவ்வளவோ காரணங்களுக்காக யுரேனியத்தை நிறுத்தலாம். நாம் காசு கொடுக்கவில்லை என்பதற்காக, நாம் அவர்களது விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, நாம் அவர்களது நாட்டின் குடியரசுத் தலைவரை பன்றி என்று திட்டியதற்காக, அல்லது நம் நாட்டில் ஹிட்லர் போன்ற ஒரு சர்வாதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார், உலகெங்கும் அணு குண்டுகளைப் போடக்கூடும் என்பதற்காக... இப்படி எத்தனையோ காரணங்களுக்காக நம்மிடம் ஒப்பந்தம் போடும் ஒரு நாடு சப்ளையை நிறுத்தலாம்.

சும்மா, காரணமே இல்லாமல்கூட ஒரு சப்ளையர், சப்ளையை நிறுத்தலாம். அதற்கு என்ன செய்வது? அந்தமாதிரி நிகழ்வு நமது மின்சார உற்பத்தியை பாதிக்காதவகையில், மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டியது நமது கடமை.

4. நமது ரியாக்டர்கள் எல்லாம் IAEA கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பது உண்மையல்ல. நாம் குறிப்பிடும் ரியாக்டர்கள் மட்டுமே. அப்படியே IAEA கட்டுப்பாட்டுக்குள் வந்தால் என்னதான் குறை? என்னவோ இந்த ஒரு காரணத்துக்காக இடதுசாரிகளுக்குக் கோபம் வருவதுபோலச் சொல்வது பெரும் ஜோக். ஏதோ இந்தக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் சீனாவும் ரஷ்யாவும் நமக்கு யுரேனியம் வழங்க வரிசையில் நிற்பதுபோல இவர்கள் சொல்கிறார்கள்.

5. அமெரிக்கா, அணு உலைகளைக் கொடுக்கும்போது, நமது அயலுறவுக் கொள்கைகளையும் கட்டுப்படுத்தும் என்று கரடி விடுகிறார்கள் இடதுசாரிகள். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வோம். IAEA ஒப்பந்தத்தை முடிப்போம். NSG உடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். அடுத்து நாம் அமெரிக்காவிடம் உலைகள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே? ரஷ்யாவிடம் வாங்கிக்கொள்ளலாமே?

தனது அயலுறவுக் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு அணு உலை கிடையாது என்று சொல்ல அமெரிக்காவுக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால் அப்படியென்றால் அவர்களுடைய அணு உலையை வாங்க நமக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல நமக்கும் உரிமை உண்டு! ஆனால் IAEA ஒப்பந்தம் ஆகியவை நிறைவேறாவிட்டால் ரஷ்யாவிடம் அணு உலை வாங்குவதிலும் நமக்கு சிக்கல்கள் ஏற்படும். இது தெளிவு.

***

மொத்தத்தில் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் மன்மோகன் அரசு மிக நன்றாக உழைத்துள்ளது. மற்றவரது அரைவேக்காட்டு எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நாட்டு நலனை மட்டுமே முன்வைத்து இதனைச் செய்துள்ளது.

இனி, மிச்சமிருக்கும் சில மாதங்களில் அரசைக் காப்பாற்றி, ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, மக்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயிப்பது கஷ்டம்தான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கும். ஆனால் மீண்டும் காங்கிரஸ் ஜெயித்தால் சந்தோஷப்படுவேன்.

2 comments:

  1. Hi,
    Again, this article defends the neclear deal. Lets leave Left's.
    The main issue here is about the need for nuclear power? As Mr.Gnani said in his article(kumudam), we need to justify why we need to invest so much on nuclear power? it is an unsafe technology too. and, we don't know how to process the waste.
    u were telling no problem at all if US stop uranium supply for any reasons. how about set up cost? if we dont produce any power from those reactors, then think about how many we wasted on that project?
    50,000 crores?
    when u will of these issue? PM should explain what will happen if US stops the fuel supply?
    Dont' we (the public) have any rights to know about the deal???

    ReplyDelete
  2. Hi Badri,
    I am hearing a different theory here.After spending so many crores of rupees on nuclear reactors,will it be really cost effective and leads india to self-reliance.Why can't we use our Thorium resource to produce elecricity.
    Did you read Gnani's article in kumudam.
    Anyway,thanks for sharing.

    Best Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete