Tuesday, July 29, 2008

காந்தியும் கல்விச் செலவும்

காந்தி இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற மொத்தம் செலவு செய்தது ரூ. 13,000. அதாவது அன்றைய நாணய மாற்று விகிதத்தில் 1000 பவுண்டுகள். இதில் பயணச் செலவு, கல்விக் கட்டணம், உடை, உணவு, தங்குமிடச் செலவு, கொஞ்சம் டம்பச் செலவுகள் (டான்ஸ் ஆடக் கற்றுக்கொண்டது, தங்கியிருக்கும் வீட்டின் பெண்களை சாப்பிட அழைத்துச் சென்றது என்ற வகையில்).

இத்தனைக்கும் பனியாவான காந்தி, தான் செய்த செலவு ஒவ்வொன்றுக்கும் கணக்கெழுதி, எப்படியெல்லாம் செலவைக் குறைப்பது என்று திட்டமிட்டு, தங்குமிடத்தைச் சரியாகத் தேர்வு செய்து, மேலும் பல சிக்கனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

காந்தியின் குடும்ப நண்பர் ஒருவர் பாரிஸ்டர் படிப்புக்கு 400 பவுண்டுகள் ஆகும் என்று சொல்லியிருந்தார். ஆனால் செலவு அதைப்போல இரண்டரை மடங்கு ஆனது.

இதென்ன பெரிய விஷயம்? வேலை பார்க்க ஆரம்பித்தால் கட்டு கட்டாகப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிவிடாதா என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது ஓர் இளைஞன் பக்கத்தில் இருந்தவரிடம் தான் விமான பைலட் வேலைக்குப் பயிற்சி மேற்கொண்டிருப்பதாகவும் ஓர் ஆண்டுப் படிப்புக்கு ரூ. 25 லட்சம் ஆகும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அப்படிச் செலவு செய்யும் பணத்தை இரண்டே வருடங்களுக்குள் திரும்பப் பெற்றுவிடமுடியும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதைப்போல காந்தியும் ஓரிரு ஆண்டுகளில் ரூ. 13,000 சம்பாதித்துவிடமாட்டாரா என்ன?

ஆனால் உண்மை வேறுமாதிரியாக இருந்தது. மும்பையில் ஆறு மாதங்கள் தங்கி வழக்கு ஏதும் கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார். கமிஷன் கொடுக்காமல் வழக்கு கிடைக்காது என்று தெரியவந்ததும், காந்தி அதனை விரும்பவில்லை. ராஜ்கோட் திரும்பிவிட்டார். தன் தந்தையைப் போன்று ஆண்டுக்கு ரூ. 300 வருமானம் கிடைத்தாலே போதும் என்று முடிவெடுத்தார். ஆண்டுக்கு ரூ. 300 என்றால், செலவு செய்த ரூ. 13,000-ஐத் திரும்பப் பெற 40 ஆண்டுகளுக்கு மேலாகும்!

சில மாதங்கள் கழித்து காந்திக்கு தென்னாப்பிரிக்கா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலையும் போக வர டிக்கெட் செலவுபோக, ஆண்டுக்கு 105 பவுண்ட் என்ற கணக்கில் இருந்தது. அப்படியே என்றாலும் பாரிஸ்டர் படிப்புக்குச் செலவழித்த தொகையைத் திரும்பப் பெற பத்தாண்டுகளாவது ஆகும்!

ஆக, என்ன தைரியத்தில் பணம் செலவு செய்து காந்தி இங்கிலாந்து படிக்கப் போனார்? எப்படி காந்தியின் அண்ணன் லக்ஷ்மிதாஸ் அவ்வளவு பணத்தைத் தயார் செய்தார்? காந்தியின் குடும்பம் கஷ்டப்படும் குடும்பமல்ல. காந்தியின் தந்தையும் பாட்டனாரும் சிறு சமஸ்தானத்தின் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்ததாகத் தெரியவில்லை.

***

கல்விக்குச் செலவு செய்வதற்கு நடுத்தர வர்க்க மக்கள் கொஞ்சம்கூட அஞ்சுவதில்லை. கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை வெகுவாக அதிகமாக்கிவிட்டன. தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என்றில்லை, அரசின் பொறியியல் கல்லூரிகள் முதல் கலை அறிவியல் கல்லூரிகள்வரை கல்விக்கட்டணம் அதிகமாகத் தோன்றுகிறது. சாதாரண தொடக்கக் கல்விக்கே பல பள்ளிகளில் தடாலடிக் கட்டணம் நிலவுகிறது. அப்படியெல்லாம் படித்தால்தான் மக்கள் பெரும் அறிஞர்களாக வருவார்கள் என்று பெற்றோரும் நினைத்துக்கொள்கின்றனர்.

நான் 12-ம் வகுப்பு வரை படித்தது அரசு உதவி பெற்ற தனியார் பள்ளிகளில். ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டுக் கட்டணம் ரூ. 15 என்று ஞாபகம். 6-12 படித்தது ஆங்கில மீடியத்தில். அதற்காக மாதம் ரூ. 20 என்ற அளவில் அபராதக் கட்டணம் மாதிரி ஒன்று இருந்ததும் ஞாபகம் உள்ளது. அப்படியும் ஆண்டுக்கு ரூ. 400க்குள்தான் இருக்கும்.

நான் ஐஐடியில் படித்தபோது ஆண்டுக் கட்டணம் ரூ. 200. (ஆம், வெறும் இருநூறுதான்!) ஹாஸ்டல் தங்குமிடத்துக்கு ஆண்டுக் கட்டணம் வெறும் ரூ. 100! தனி அறை வேறு. சாப்பாட்டுக்கு முதல் ஆண்டில் மாதத்துக்கு ரூ. 275 வரை ஆனது. பின் நான்காம் ஆண்டு வரும்போது ரூ. 450 வரை உயர்ந்துவிட்டது. இது மிகவும் குறைவான கட்டணம்தான். இந்த அளவுக்கு சப்சிடி கொடுத்திருக்கவேண்டுமா என்று கேட்கலாம். அதுவும் அந்தக் கட்டத்தில்தான் பெருமளவு ஐஐடி மாணவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர்.

எனக்கு கல்விக்கென அதிகமாகச் செலவானது அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் செல்லும் முன்னேற்பாடுகளின்போதுதான். 1989-1990 சமயம். இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு விழுந்துகொண்டிருந்த நேரம். மாதா மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டிருந்தது. GRE எழுதும்போது டாலர் 8 ரூபாயாக இருந்தது என்று ஞாபகம். அது மளமளவென்று ஏறி TOEFL, GRE-Subject Test ஆகியவற்றை நெருங்கும்போது 12, 14, 15, 16 என்று ஆகிவிட்டது.

ஆனால் இதிலும் பல பணம் சேமிக்கும் யோசனைகளை சீனியர்கள் கற்றுக்கொடுத்தனர். எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் GRE-Subject Test தேவையில்லை. சிலவற்றுக்கு மட்டும்தான் தேவை. சில, GRE-General Test போதும் என்று சொல்லிவிடும். பரீட்சை எழுதும்போதே நாம் சொல்லும் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பரீட்சை நடத்தும் ETS ஸ்கோரை அனுப்பிவிடும். எனவே முதலில் General Test எழுதும்போது அந்த ஸ்கோர் எந்தப் பல்கலைக்கழகங்களுக்குப் போகவேண்டுமோ அவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். அடுத்து Subject Test எழுதும்போது, இரண்டு ஸ்கோரையும் சேர்த்தே அனுப்புவார்கள். அப்போது மேலும் மூன்று பல்கலைக்கழகங்கள் பெயரை - இம்முறை சப்ஜெக்ட் ஸ்கோரையும் எதிர்பார்க்கும் இடங்களை - குறிப்பிடவேண்டும்.

TOEFL ஸ்கோர் நேரடியாக எந்த இடங்களுக்குச் சென்றதோ, அவற்றைத் தவிர மீதி இடங்களுக்கு ஃபோடோகாப்பி எடுத்து அனுப்பித்து தப்பித்துக்கொண்டேன். அதற்கென தனிச் செலவு ஏதுமில்லை.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பக் கட்டணம் சேர்த்து அனுப்பவேண்டும். 25 முதல் 60 டாலர் வரை இருக்கும். அதிலிருந்து தப்ப, “ஐயா, எனது தந்தையின் ஆண்டு வருமானம் xxxx டாலர்கள்தான். ஆகவே தயைகூர்ந்து கட்டணத்தைத் தள்ளுபடி செய்து, எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்” என்று ஒரு அழுகைக் கடிதத்தை அனுப்பவேண்டும். ஆனால் ஒரு ரிஸ்க் உண்டு. சிலர் விண்ணப்பத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவார்கள்.

இந்த வழியைப் பின்பற்றி, ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு நான் விண்ணப்பித்திருந்தேன் (எம்.ஐ.டி, கார்னல், அர்பானா ஷாம்பெய்ன், ஒஹாயோ, ஆர்.பி.ஐ.).

இவற்றில் எம்.ஐ.டி தவிர நான்கு இடங்களிலும் கிடைத்தது. அதுவும் ஏழாவது செமஸ்டர் லீவிலேயே. அப்போதே கார்னலைத் தேர்ந்தெடுத்து, இத்தாகா செல்ல விமான டிக்கெட் வாங்கிவிட்டேன். ஆகஸ்டில் இத்தாகாவில் இருக்கவேண்டும். பிப்ரவரியிலேயே டிக்கெட் வாங்கிவிட்டதால் கணிசமான சேமிப்பு. அதற்குப் பிறகு ரூபாய் மேலும் கடுமையாகச் சரிந்தது.

அடுத்து உடைகள், சூட்கேஸ்கள், கையில் கொஞ்சம் பணம் (அன்றைய தேதியில் கையில் $ 500தான் அதிகமாக எடுத்துச் செல்லமுடியும்) என்று எடுத்துக்கொண்டு செல்லவேண்டுமே.

இந்தக் கட்டத்துக்குள்ளாகவே என் தந்தை அவரது பி.எஃப்பின் ஒரு பகுதியை மூடி, பணம் எடுக்கவேண்டியதாயிற்று. கல்விக் கடன் என்பது எந்த அளவுக்கு இருந்தது என்று தெரியாது. இருந்தாலும் அதை எடுக்க என் தந்தை ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். கடன் வாங்குவது பாவம் என்பது அவரது கொள்கை.

ஆனால் உண்மையில் இந்த அளவுக்கு பணம் பற்றி கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை. கார்னல் வந்து ஆறு மாதங்களுக்குள்ளாக உதவித்தொகை சேமிப்பிலிருந்து அந்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டேன். எனவே தைரியமாகக் கடன் வாங்கியிருக்கலாம்.

***

இன்று நடுத்தர வர்க்கத்து மக்களால் மட்டுமே கல்விக்கடன் பெறமுடியும் என்று தோன்றுகிறது. இந்த வர்க்கத்துப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்புக்காக குழந்தை பிறந்த அன்றிலிருந்தே சேமிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால், அடித்தளத்து மக்களால் கல்விக் கடன் பெறுவது சாத்தியமா என்று தோன்றவில்லை. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வங்கிகளில், நிலம் அல்லது வீடு எதையாவது அடமானத்துக்குக் கேட்கிறார்கள் என்றார். மேலும் இன்று சாதாரண பொறியியல் கல்லூரி என்றால் படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் ஒருவரால் கடன் பெறமுடியும்?

இணையத்தில் அவ்வப்போது ஏழை மாணவர்கள் சிலரது படிப்புக்குப் பணம் சேர்த்துக் கொடுப்பதைப் பார்க்கிறோம். வேறு பலர், வெளியே விஷயம் தெரியாமல் இதுபோன்ற உதவிகளைச் செய்யக்கூடும்.

இதைப் பற்றி யோசிக்கும்போது kiva.org என்ற தளம் ஞாபகத்துக்கு வந்தது. இது குறுங்கடன் வழங்குவதற்கான ஒரு பிளாட்ஃபார்ம். இங்கே கடன் கேட்பவர்கள், கடன் தருபவர்கள் என இருவரும் வந்து சேர்கிறார்கள். கடன் தருபவர்கள் யாருக்குத் தரலாம் என்று தாங்களே முடிவுசெய்யலாம்.

அதைப்போன்றே கல்வி உதவிக்காக என்று ஒரு தளத்தை உருவாக்கலாம். அதில் உதவி தேவைப்படுபவர்கள் தங்களைப் பதிந்துகொள்ளலாம். தாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம் என்பதற்கு சில அறியப்பட்ட பதிவர்களை சாட்சிகளாக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கல்விக்கு என பண உதவி செய்ய விரும்புபவர்கள் இரண்டு விதங்களில் உதவிகளைச் செய்யலாம். (1) பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுப்பவர்கள்; (2) பணத்தை இலவசமாகக் கொடுப்பவர்கள்.

இதில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிக்கூடம், பாலிடெக்னிக் என எங்கு படிப்பவராயினும் இணைந்து உதவியைக் கோரலாம். Kiva.org போன்றே, தளம் நடத்துபவர்கள், உதவி பெற்றவர்களின் முன்னேற்றத்தைப் பதிவு செய்யலாம்.

சாத்தியமா?

21 comments:

  1. பத்ரி,

    இது நல்ல யோசனை. நிச்சயம் செய்யலாம்.

    பிகு: kiva.org போலவே இந்தியாவிலிருந்து rangde.org ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. கிவாவில் பணம் கொடுத்து உதவியிருக்கும் அனுபவம் இருப்பதால், கிவாவின் பிஸினஸ் மாடல் (பிஸினஸ் மாடல் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை) பார்த்தீர்களேயானால், அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும், அப்பகுதியை சார்ந்த ஒரு தன்னார்வ நிறுவனத்தினை உண்மை கருத்தறியும் back end operation க்கு வைத்திருக்கிறார்கள். இதே மாதிரி இந்தியாவிற்கென்று ஈபே ஒரு தளத்தினை போட்டார்கள். தளத்தின் பெயர் நினைவில்லை.

    இந்தியாவில் இதன் சாத்தியங்கள் அதிகமானாலும், களப்பிரச்சனைகள் அதிகமென்று தோன்றுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ஆன்லைன் வர்த்தகம் செய்வது ஒரு பணக்கார சமாச்சாரம். சிசி அவென்யு மாதிரியான ஆட்கள் 100க்கு 7ரூ வரை எடுத்து விடுவார்கள். ஆக உதவிக்காக கொடுக்கும் தொகையில் கொடுக்கும் முன்னரே 5- 7% காலி. வியாபார தளங்கள் போல இங்கே அந்த செலவையும் சேர்த்து விலை வைக்க முடியாது.

    உதாரணத்திற்கு ஒரு கலைக்கல்லூரியில் சேர ஒரு மாணவருக்கு 10000ரூ தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனன 10 பேர் ஆயிரம் ரூபாயாக பங்கு போட்டு ($25) கொடுத்தால், இதில் 7% ஏற்கனவே போய்விடும். ஆக 700ரூ காலி. இதை எப்படி ஈடு கட்டப் போகிறோம் ?

    இரண்டாவதாக, உதவி தேவைப்படும் மாணவர்களின் கோரிக்கையினை எப்படி நிர்ணயிப்பீர்கள்? யார் அந்த வட்டார ரீதியில் செக் செய்து, சரி பார்த்து கொடுப்பார்கள் ? உண்மையிலேயே நிதி தேவைப்படும் மாணவர்களுக்கு இது பயன்படும் தான், ஆனால், சர்க்கரை கிலோ குறைவாக கொடுக்கிறார்கள் என்பதற்காகவே ரேஷன் அட்டையில் பொய் சொல்லும் சமூகம் இது. இங்கே கொடுக்கிறார்கள் என்றால் எல்லாவிதமான சாக்குகளும், சந்தர்ப்ப வாத செட்டப்களும் அதிகம்.

    இது ஒரு நல்ல சிந்தனை ஆனால், கள ரீதியில் செயல்படுவதற்கான ஆக்கத்திற்கு நிறைய இடைவெளிகளை நிரப்ப வேண்டும்.

    ReplyDelete
  3. //இதில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பள்ளிக்கூடம், பாலிடெக்னிக் என எங்கு படிப்பவராயினும் இணைந்து உதவியைக் கோரலாம். Kiva.org போன்றே, தளம் நடத்துபவர்கள், உதவி பெற்றவர்களின் முன்னேற்றத்தைப் பதிவு செய்யலாம்.

    சாத்தியமா?//

    சாத்தியம் தான்.

    நீங்கள் ஆரம்பியுங்கள். எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.

    ReplyDelete
  4. Hi Badri,

    Nice Article.
    Even gandhi was human(spent for dance and girls).
    It is surprising to know your IIT fees man,it was so nominal.
    Tiva.com is a nice effort.
    There are individual efforts here and there helping kids,but we need innovative ideas like yours to reach out to more needy people.Instead of waiting at governmnet to do something,we can do from ourside.
    Even corporates should spend atleast 10% of their profits towards social causes.
    10% of my company's profits(www.vickytech.com,started very recent) will go to my education foundation(i am going to start very soon),this is the first time i am declaring public through your site.
    Thanks for sharing your thoughts on a main social issue.

    Bets Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete
  5. Sorry,it should be kiva.org

    kannan

    ReplyDelete
  6. நாராயண்: எங்காவது ஆரம்பிக்கவேண்டுமே? சிசிஅவென்யூ 7% எடுத்துக்கொள்வது உண்மையே. ஆனால் வங்கி மூலம் பணம் மாற்றினால் இந்தச் செலவு இருக்காது. Paypal குறைவாக இருக்கலாம். இதைப் பெரிய விஷயமாக நினைக்கக்கூடாது. அதிக பரிமாற்றங்கள் இருந்தால் ஐசிஐசிஐ இடைமுகம் மூலம் 2-3% என்றாக்கலாம்.

    உண்மை நிலை அறிவதற்கு தன்னார்வ நிறுவனங்கள் தேவை, அல்லது அந்தந்தப் பகுதிகளில் தன்னார்வலர்கள் தேவை. இணையம் வளரும் வேகத்தில் நிச்சயம் அதற்கான தன்னார்வலர்களைப் பிடிக்கலாம்.

    நிறைய புரோகிராமர்கள் இருக்கிறீர்கள். அதனால் நுட்பரீதியில் ஒரு தளத்தை உருவாக்குவதில் பிரச்னை இருக்காது.

    நாம் ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? ஒத்துவராவிட்டால் அப்போது விட்டுவிடுவோமே?

    விரும்பும் நண்பர்கள் ஒரு வார இறுதியில் உட்கார்ந்து பேசி எப்படி அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்வோமே?

    ReplyDelete
  7. காந்தி Vs பத்ரி கட்டுரைகள் நன்றாக வந்துகொண்டிருக்கின்றன. :-)

    ReplyDelete
  8. Badri,
    It is actually good idea. There is no harm in trying as you said and in case it doesn't work out, we can drop it. But, we have to try to make something happen. Please keep me updated on the progress. As I am not in Chennai, I would not be able to participate in the discussion personally. Please keep me updated. I will do what is possible from my side. Let us hope it fructifies.

    ReplyDelete
  9. பத்ரி,
    சில வருடங்களாகவே கல்விகட்டனங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்த்து கொண்டு செல்கின்றன. இதற்காக கல்வி நிறுவனங்கள் சொல்லும் காரணம் வேலை வாய்ப்பு. படித்து முடித்தவுடனே கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி அதற்காக பெற்றோர்கள் செய்யும் செலவை நியாயபடுத்துகிறது. இதனால் பதிக்கபடுகிறவர்கள் கிராமப்புற மாணவர்களே. அடிப்படை கட்டமைப்பு இல்லாத, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இல்லாத, சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத ஓர் அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவன், முட்டி மோதி பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து, நுழைவு தேர்வையும் (இப்பொழுது இல்லை!!!) சந்தித்து, கஷ்டப்பட்டு ஒரு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் சீட்டை பெற்றால், அவர்கள் கேக்கும் கட்டணம் தலை சுற்ற வைக்கிறது.
    சரி, தேசிய வங்கிகள் தான் கல்விக்கடன் கொடுக்கிறதே என்று அங்கு போனால் அதை விட கொடுமையாக உள்ளது. நன்கு லட்சம் வரையிலான கல்விகடனுக்கு செக்யூரிட்டி ஏதும் தேவை இல்லை என்று அரசு சொன்னாலும், பெரும்பாலான வங்கிகளில் அதை பின்பற்றுவது இல்லை. நிலமோ, வீடோ இல்லாதவர்கள் பாடு கஷ்டம் தான். இதை நினைக்கும் பொது சமீபத்தில் வந்த செய்திதான் நியாபகம் வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் பெரிய நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய கடன் தொகை 1500 கோடியை தாண்டுகிறது!!!!!!
    நீங்கள் குறிப்பிட்டது போல் தனி நபர் உதவியினால் சிலராவது பயனடைவார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் நகர்புற மாணவர்கலாகத்தான் இருப்பார்கள் என்பது என் கருத்து. ஒரு நல்ல அரசு அமைந்தால்தான் இதுக்கு முழு தீர்வு ஏற்படும்.

    ReplyDelete
  10. கல்விக்கடன் கண்டிப்பாக அடித்தட்டு மக்களுக்கு கிடைக்காது. எனது இந்த பதிவை படித்துப் பாருங்கள்!! http://vurathasindanai.blogspot.com/2008/02/i.html

    ReplyDelete
  11. //விரும்பும் நண்பர்கள் ஒரு வார இறுதியில் உட்கார்ந்து பேசி எப்படி அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்வோமே?//

    தேதி கூறுங்கள் :)

    ReplyDelete
  12. Hi Badri
    Nice idea. I wont be able to give you technical/idea/time contribution. But will be definitely interested in making monetary contribution once this effort kicks off. please keep us updated.

    regards
    Suresh

    ReplyDelete
  13. Badri,

    Excellent idea and let's give a try and see how it goes...

    Having come from a small village farmer family, I can very well understand the difficulties of village / poor students. I applied for education loan for my ECE dgree in 1985 and I handed over every certificates that they adked for and after 6 months of dragging my application got rejected since I was getting National merit scholarship. They simply said "No" in spite of my explanation that Rs 2400 / year National merit scholarship was not sufficient and that's why I need the loan.

    I have been helping poor students and supporting educational projects in Tamil Nadu along with my AIMS India Organization(www.aimsindia.net)friends and I would like to actively participate and support this venture to help the needy students. Please keep me updated about the progress and the discussions (vssravi@gmail.com)

    BTW, your posting made me nostalgic about my collge days fees also. I paid Rs. 180 for per year as college fees for my ECE degree in CEG, Anna University (1985-1989) and Rs 75 for Hostel. Now I have to pay S$ 1500 per month for my two kids school fees in Singapore!!!

    Anbudan,
    -Ravichandran

    ReplyDelete
  14. I fully support this initiative. Please keep us informed about the outcome of your discussion.

    ReplyDelete
  15. //ஆண்டுக்கு ரூ. 300 என்றால், செலவு செய்த ரூ. 13,000-ஐத் திரும்பப் பெற 40 ஆண்டுகளுக்கு மேலாகும்!

    40 வ‌ருட‌ம் ரூ300 ச‌ம்ப‌ள‌த்தில் இருந்திருப்பாரா..என்ன‌ சார் க‌ண‌க்கு இது ! :‍)

    ReplyDelete
  16. Badri,

    Excellent idea. Since I have gone through some of the financial difficulties on educational front, I can see how fruitful this idea would be. I echo most of the thoughts put by Ravi.

    I want to actively participate and contribute. So please update us on the plans and we'll give it our best shot ! (I'm not in Chennai)

    Keep the good work flowing!

    Thanks,
    Senthil

    ReplyDelete
  17. நல்ல முயற்சி. பணம் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் உதவ ஆர்வமுடன் இருக்கிறேன். என்னுடைய பங்களிப்புக்காக உங்கள் பதிவில் மேல் விவரங்களை எதிர்பார்க்கிறேன்.
    -ஆனந்த்.

    ReplyDelete
  18. I came across this web site thru Idlyvadai. This organisation is doing good job.

    http://indiasudar.org/

    ReplyDelete
  19. பத்ரி
    இந்தியா போன்ற நாட்டில் இந்த முறை சரிபட்டு வருமா என்று கவலை ஏற்படுகிறது. தேவை நிச்சயம் இருக்கிறது - மறுப்பில்லை. ஒருவேளை வேறு channel தேவைப்படுமென்று தோன்றுகிறது. நேரிடையாக பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ தொடர்பு கொள்ளுதல் அவசியம் என்று தோன்றுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழியாக சென்றால் தேவைகளை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு உண்மையான் தேவையுடைவர்களை அடையலாம்.இணையம் இடைமுகமாக மட்டுமே செயல்படட்டுமே.

    ReplyDelete
  20. பத்ரி, rangde.org கல்விக் கடன் சேவையையும் துவக்கி உள்ளார்கள். நீங்களும் அவர்களுடன் இணைந்து செயல்படலமே!

    http://www.rangde.org/eduindex.htm

    ReplyDelete
  21. Badri...

    vaa.Manikandan is already doing stuff like this thru nisaptham.com. Please involve him too in these efforts. He has done field work on this and continue to do more.

    Thanks!

    ReplyDelete