Monday, July 14, 2008

ஆசிரியர் - மாணவர் உறவு

என் உறவினர் பையன் ஒருவன் சென்ற ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். ரூ. 5 லட்சம் பணம் கொடுத்து. கல்லூரி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நிறையத் தொல்லை கொடுக்கிறாராம். எதற்கெடுத்தாலும் இவனை வகுப்பில் திட்டுகிறாராம். எனவே கல்லூரிக்கு இனிப் போகமாட்டேன் என்று முடிவு எடுத்துவிட்டான். போனால் வேறு கல்லூரி, இல்லாவிட்டால் கிடையாது என்பது அவன் கருத்து.

பெற்றோர்களும் கல்லூரியில் இருந்து டிசி வாங்கிக்கொண்டு, வேறு ஒரு கல்லூரியில் சேர்க்கும் முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டனர். அந்த ரூ. 5 லட்சத்தைக் கேட்டு வாங்கப்போகிறார்களா என்று தெரியவில்லை.

***

கல்லூரி ஆசிரியர்களால் ஒரு மாணவனை முன்னேற்றுவது வேண்டுமானால் கடினம். ஆனால் ஒரு மாணவனின் வாழ்க்கையை முற்றிலும் நாசமாக்கிவிடமுடியும்.

நான் ஐஐடி சென்னையில் நான்காம் ஆண்டு, ஏழாம் செமஸ்டர் படித்த சமயம். வெப்பவியல் தொடர்பான ஒரு பாடம் இருந்தது. அந்தப் பாடத்தை எடுத்த ஆசிரியருக்கு, அவரது பாடம் ஏழாவது செமஸ்டரில் இருக்கிறது என்ற பெரும் குறை. ஏனெனில் ஏழாவது செமஸ்டர் வரும்போது எல்லா மாணவர்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருப்பார்கள். GRE/TOEFL முடித்திருப்பார்கள். ப்ராஜெக்ட் வேலைகள் நடந்துகொண்டிருக்கும். CAT பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் வகுப்பில் பாடத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள். ஆறு செமஸ்டர் வரையிலான GPA-வை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களைத் தேர்வு செய்யும். ஏழாவது செமஸ்டர் பாடங்களில் பாஸ் செய்தால் போதும்.

இதுதான் அந்த ஆசிரியரது குறையே. தான் எடுக்கும் பாடத்தை மாணவர்கள் கவனத்துடன் படிக்கப்போவதில்லை என்ற நிலை இருந்தால் ஓர் ஆசிரியருக்குக் கோபம் வருவது இயல்பே. ஆனால் அதை அவர் எதிர்கொண்டவிதம் சரியாக இல்லை.

தான்தான் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியர், தன்னால்தான் மாணவர்களைச் சரியாக எடைபோடமுடியும், தனது பரீட்சைகளில் மார்க் வாங்குவதுதான் மிகக் கஷ்டமானது என்றும் இந்த ஆசிரியர் நினைத்திருந்தார்.

வகுப்பில் முதல் நாள். நேராக உள்ளே வந்தார். முதல் கேள்வி, “யார் இந்த வகுப்பில் முதல் மாணவன்?” என்பது. நான் எழுந்து நின்றேன். “உன்னால் இந்த வகுப்பில் முதல் மதிப்பெண் பெறமுடியாது. என் வகுப்பில் நிஜமாகவே திறமையுள்ள மாணவர்களால் மட்டுமே முதல் மதிப்பெண் பெறமுடியும். உட்கார்” என்றார். அன்று மட்டுமல்ல. அடுத்தடுத்து பல வகுப்புகளிலும் ஏதாவது என்னைச் சீண்டிக்கொண்டே இருப்பார்.

நான் அவரோடு போராடிப் பார்ப்பதாக முடிவெடுத்திருக்கலாம். “வருவது வரட்டும் மவனே. உன் பரீட்சையில் கிழித்துக் குதறி முதல் மதிப்பெண் வாங்கிவிடுகிறேன்” என்று நான் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் நான் மற்றுமொரு திசையில் சென்றேன். ஐஐடி படிப்பில் முதன்முறையாக வகுப்பை பங்க் அடிக்க ஆரம்பித்தேன். வகுப்புக்கு வந்தால்தானே இவரது பார்வையில் படவேண்டும்? 1st Quiz, Midsem, 2nd Quiz, Final என்று நான்கு பரீட்சைகள், வாரா வார அசைன்மெண்ட் என எல்லாவற்றிலும் ஏனோ தானோவென்று எழுதி ஒருவழியாக “B” கிரேட் கிடைத்தது.

அந்த ஆசிரியருக்கு சந்தோஷம். “பார்த்தாயா, நான் சொன்னது நடந்துவிட்டது! நீ வகுப்பில் முதல் கிடையாது, இரண்டாவதுகூடக் கிடையாது. 15ஓ, 20ஓ” என்றார். எனக்கோ, இதைப்பற்றிக் கவலையில்லை. ஏழாவது செமஸ்டர் முடிவடைவதற்கு முன்னரே, இந்த கிரேட் கிடைப்பதற்கு முன்னரே, யுனிவெர்சிடி ஆஃப் இல்லினாய், அர்பானா ஷாம்பெய்ன் மற்றும் கார்னல் யுனிவெர்சிட்டி இரண்டிலும் இடம் கிடைத்திருந்தது. “நீ போடா வெண்ணெய், உன் பாடமும் நீயும். எவனுக்கு வேணும் ஹீட் டிரான்ஸ்ஃபரும் பவர் பிளாண்ட் எஞ்சினியரிங்கும்” என்றுதான் எனக்குத் தோன்றியது.

***

முதல் ஆண்டில் இயல்பியல் என்றால் எனக்கு நடுக்கம். ஏதோ ஒரு மாதிரி JEE-யில் ஒப்பேற்றி ஐஐடிக்குள் நுழைந்திருந்தேன். முதல் நாளே மற்ற பசங்கள் எல்லாம் ரெஸ்னிக் அண்ட் ஹாலிடே என்றார்கள். அப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே கிடையாது. முதல் செமஸ்டர், பிஸிக்ஸ், மேத்ஸ் இரண்டிலும் தர்ம அடி. ஃபெயிலாகாமல் தப்பித்தது பெரும் புண்ணியம்.

இயல்பியலுக்கு, சற்றே காலை விந்தி விந்தி நடக்கும் ஓர் ஆசிரியர் இருந்தார். அவருக்கு ஏதோ பிரச்னை என்று மற்ற பசங்கள் பேசிக்கொண்டார்கள். அவரது பையனுக்கு JEE-யில் இடம் கிடைக்கவில்லை என்றும் அதனால் கடும் கோபத்தில் இருந்த அவர் உள்ளே வந்த பையன்கள் அனைவரையும் ரவுண்டு கட்டி அடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள். “I want to strip you naked and make you run around the OAT” என்று பலராம் நாயுடு உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பையன்களைத் திட்டுவது அவரது வழக்கம். (OAT என்றால் ஓப்பன் ஏர் தியேட்டர்.) இன்னும் நிறையத் திட்டுவார். யாராவது தப்பாக பதில் சொல்லி மாட்டிக்கொண்டால் காலி.

ஆனால் பிசிக்ஸ் வகுப்பில் ஒரு வசதி. முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் பிசிக்ஸ் பாடத்தை எடுப்பதால் சுமார் 100 பேருக்கு மேல் ஒரு வகுப்பில் இருந்தார்கள் என்று ஞாபகம். அதனால் அப்படியே கண்ணுக்குத் தெரியாமல் பதுங்கிவிடலாம். பின் பெஞ்சில் உட்கார்ந்துகொள்ளலாம். தூங்கவும் செய்யலாம். நாம் தூங்குவது அவருக்குத் தெரிந்துவிட்டால் சாக்பீஸைத் தூக்கி மேலே எறிவார். ஆனால் வந்து பிடிக்கமுடியாது. கால் ஊனம் ஒரு காரணம்.

அவர் ஒரு டெரர். அப்போதே பலர் பிசிக்ஸிலிருந்து எஸ்கேப் ஆகலாம் என்று முடிவு செய்தார்கள். என்னதான் இருந்தாலும் மூன்று செமஸ்டர்கள் மட்டும்தான் கழுத்தறுப்பு. பிறகு உங்களது எஞ்சினியரிங் என்னவோ அந்த பாடங்கள் மட்டுமே.

ஆனால் அதுதான் முதல் செமஸ்டர். நான் தீவிரமாக ஒரு முடிவை எடுக்கவேண்டியிருந்தது. நமது பின்னணிக்கு, தொடர்ந்து ஐஐடியில் படிக்கலாமா, இல்லை ஓடிவிடலாமா என்பதுதான் அது. சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். முதலில் ரெஸ்னிக் அண்ட் ஹாலிடேயில் தொடங்கினேன். நூலகத்துக்குச் சென்று கிடைத்த பிஸிக்ஸ், மேத்ஸ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். நல்ல நூலகம். நிறைய அற்புதமான புத்தகங்கள் கிடைத்தன. முதல் செமஸ்டரில் “C” கிரேடில் ஆரம்பித்து, இரண்டாவதில் “B”, மூன்றாவதில் “A” என்று முன்னேறினேன்.
பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் இந்த அளவுக்கு மோசம் கிடையாது. யூஸ்லெஸ், வேஸ்ட் என்றெல்லாம் சொல்வார்களேதவிர, ஒரு குரூர எண்ணத்தோடு மாணவர்களை டார்ச்சர் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்கள்.

அந்த பிஸிக்ஸ் வாத்தியாரின் மிரட்டல்தனத்தால் நான் நிறையவே பயனடைந்தேன். மூன்றாவது செமஸ்டர் வரும்போது மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் முதலாவதாக இருந்தேன். கடைசிவரை அப்படியே தொடர்ந்தேன். ஆனால், அந்தக் காரணத்தால்தான் வெப்பவியல் ஆசிரியரின் வம்படியில் மாட்டினேன்.

***

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்காது. மாணவர்களைத் துன்புறுத்துவது நடக்காத காரியம். மேல் முறையீடு செய்ய தனி அலுவலகம் இருக்கும். தைரியமாக புகார் கொடுக்கலாம். (ஆனால் சில நேரங்களில் பொய்ப் புகாரும் கொடுக்கப்படலாம். கார்னலில் நான் டீச்சிங் அசிஸ்டெண்டாக இருந்தபோது என்மீது ஒரு பொய் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.)

ஆனால் இந்தியாவில், அதுவும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இதெல்லாம் நடப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. அரைகுறை ஆசிரியர்கள் தங்களது டென்ஷனை மாணவர்கள்மீது சுமத்த அரிய வாய்ப்பு. பணம் கொடுத்து சேரும் மாணவர்களும் ஏதோ டிகிரியை வாங்கிவிட்டு வெளியேறுவோம், ஏன் வீண் வம்பு என்றே நினைப்பார்கள்.

ஆனால், தங்களது நடத்தையின் விளைவுகளை ஆசிரியர்கள் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். சுமார் மாணவனை நல்ல மாணவனாகவும், நல்ல மாணவனை மோசமான மாணவனாகவும் ஆக்கும் திறமை ஆசிரியர்களுக்கு உண்டு. முதல் காரியத்தைச் செய்யாவிட்டாலும், இரண்டாவதைச் செய்யாமல் விட்டார்களானால் நல்லது.

12 comments:

  1. பத்ரி,

    இந்த பதிவை எழுதும்பொழுது தங்கள் முன்னேற்றத்துக்கு வழி செய்த ஒரு இந்திய ஆசிரியர் கூட மனதில் வரவில்லையா ?

    நான் நெகடிவ்வாக கூறுவதை குறை கூறுபவன் அல்ல. ஆனால் ஒரு balance இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதுவும் இப்படி ஒரு தலைப்பின் கீழ் எழுதும் பொழுது.

    எனது ஆறு வருட காலேஜ் வாழ்க்கையில் என்னை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த ஆசிரியர் என்று ஒருவரும் இல்லை. ஆனால் எனக்கு பள்ளியில் சில அருமையான ஆசிரியர்கள் இருந்தனர். அதை பயன்படுத்தி கொள்ள தெரியாதவனாக தான் நான் இருந்தேன்.

    ReplyDelete
  2. Chetan Bhagat's 5 point someone paditha madiri irunthadu, thamizhilil.

    When I studied at IIT-KGP, a prof with my name, had a problem with his similar name and south students and tried hard to make the students fail miserably. Very sadistic! What B grade, 39 of my engg. class wrote a basics paper again! We didn't have the chance to drop the course! He used to address my class as 'useless guys'. Unfortunately, my dept. HOD was his relative, who had somehow, brought him from IIT-K, so couldn't complain at all.

    He is doing his 6th PHD now!

    Regards
    Ramesh

    ReplyDelete
  3. பத்ரி,

    Chetan Bhagat எழுதியுள்ள Five Point Someone படித்துள்ளீர்களா? ஐ.ஐ.டி வாழ்கையை மசாலா கலந்து எழுதியுள்ள நாவல். உங்களின் இந்தப் பதிவை படிக்கும் பொழுது அந்த புத்தகம் தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  4. Hi,
    I can quote at least 50 such incidents from my bachelors.... :)

    Though, in my post graduation, I had only one such experience. It was a stupid subject. I registered for that thinking I can increase my overall grade by scoring with ease. It was about advance networking concepts. I think he was a visiting professor and he worked for Telstra as a senior engineer or something. Chinese guy. :) All the classes were smooth. Labs were cake walk. Lot of tcl/tk network node simulation stuff. But, when it came to the final exam, this guy screwed up with every ones mark. I was so disappointed and formed a gang with fellow students, who were also screwed. We bypassed the student union and directly mailed the vice chancellors office. :)) There were lots of mails flying across from the group, but I did all the communication. We asked for a re exam and dint agree for revaluation of papers. Some how, the vice chancellors office agreed for re exam. I felt as if I conquered the institute. When I saw the question paper for re exam, I felt like peeing, b'cos if was the same question paper, as it is. no change, not even a dot more or less. Yes, I knew the result of that re exam then and there. Any how, I gave my best. I resolved all the problems. I knew the answers as I had re worked immediately after the actual exam. Submitted the answer sheet, walked out to the nearest 7/11, bought a coffee and donut, sat near the university main hall and started laughing. :)
    After a fortnight, there was a call for answer sheet distribution and discussion. And in the meeting, this lecturer, was distributing the answer sheets and it was all the same marks as of the first attempt. :)) and he called my name at last, after 45 minutes. Though others fought with him, I went and sat quietly next to him. He gave the paper. same old thing, smiled at him and walked out.

    The prize I paid for my stupidity and one of my mis adventurous nostalgic moments, probably the best of my post grad life.

    -- Nokia Fan.

    ReplyDelete
  5. அவனும் அவளும்: ஒரு மாணவனின் கல்லூரி வாழ்க்கையை பாதித்த ஓர் ஆசிரியரைப் பற்றிய தகவலுடன், என் வாழ்க்கையையும் மோசமாக பாதித்திருக்கக்கூடிய நிகழ்வுகளை மேய்ந்ததன் விளைவே இந்தப் பதிவு.

    ***

    இரண்டு பேருக்கு ஃபைவ் பாயிண்ட் சம் ஒன் ஞாபகம் வந்தது ஆச்சரியம்தான்.

    ReplyDelete
  6. Everybody come across some bad teachers amd many good teachers in their life. It is about whose impact are more in you. Fortunately, i have influenced by good teachers. So, its always a sweet memory. I found some very bad teachers in US too. They think they are the best and they know everything. I suffered from that kind of teacher last semester. HE always thinks Indian will not do their own work. He suspects us everytime we submit an assignment.Most indian students will not complain about those teachers in US. On the other hand, there is a teacher who likes indian students and always speaks good about indians.

    Its about your fortunate. But, it is always nice to get a good teacher. They make difference...

    ReplyDelete
  7. Something to share as an IIT experience:

    We had a very special subject (course) and it was offered probably only in IITM in the whole of India. It was taught by a prof who is reportedly very good in that topic. At the end of the semester we were not sure how a typical question paper would be set for such a niche subject. Fearing to ask him, one of our classmates somehow approached a student from our senior set and got the last year's question paper. Only then we could visualize what kind of questions are possible in that subject.
    On the exam day we sat for writing and was given a question paper. We could not believe our own eyes: it was not just set on the same pattern, it was the same question paper! Hold on, he did not mistakenly give this. The date was altered with the correction fluid to reflect current day and the paper was photocopied.
    I don't know why, I felt like being cheated. I wrote the exam for one hour just to make sure I don't fail, and left. That was the only subject I scored a 'B' grade in my M. Tech. IIT faculty is made up of strange people!

    ReplyDelete
  8. சாப்ட்வேர் துறையில் சில‌ ஆண்டு ப‌ணியாற்றிவிட்டு பின்பு ஓரு இஞ்சினிய‌ரிங் க‌ல்லுரியில் க‌ணிப்பொறி ஆசிரிய‌ராக‌ குறுகிய காலம் (என் போதாத‌ கால‌ம்) வேலை பார்த்த‌ அனுப‌வ‌த்தில் சொல்கிறேன்: மாண‌வ‌ர் ந‌ல‌ன‌யும் எதிர்கால‌த்த‌யும் குறித்த‌ க‌வ‌லை ஆசிரிய‌ர்க‌ளுக்கும், க‌ல்லுரித்த‌லைமைக்கும் கொஞ்ச‌மும் இருப்ப‌தில்லை. அதிலும் க‌ண‌னிதுறையில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ இருப்போர் ப்ரொக்ர‌மிங் வாச‌னையும், புதிய‌ தொழில் நுட்ப‌ங்க‌ளை அறிய‌ ஆர்வ‌ம் அற்ற‌வ‌ர்க‌ளாக‌வும், மாண‌வ‌ர்க‌ளுக்கு எந்த‌ ஆலோச‌னை த‌ர‌ லாய‌க்க‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கின்றன‌ர். ந‌ன்றாக‌ ப‌டிக்காத‌ மாண‌வ‌ர்க‌ள் க‌ல்லுரிக‌ளிலும் (ரூ 8000+ ச‌ம்ப‌ள‌ம்), ப்ரொகிராம் ப‌ண்ண‌த் தெரிந்த‌வ‌ர்க‌ள் ஐடி துறையில் (ரூ 15000+ ச‌ம்ப‌ள‌ம்), நுழைந்து விடுவ‌தாலும் க‌ணிப்பொறி இஞ்சினிய‌ரிங் பிரிவைப்பொறுத்த‌வ‌ரை மாண‌வ‌ர்க‌ளுக்கு நல்ல‌ ஆசிரிய‌ர் கிட்டுவ‌து கடின‌ம். ப‌ல‌ த‌னிப்ப‌ட்ட‌ கார‌ண‌ங்க‌ளால் தற்போது நான் மீண்டும் சாப்ட்வேர் துறையில். :‍)

    ReplyDelete
  9. //ந‌ன்றாக‌ ப‌டிக்காத‌ மாண‌வ‌ர்க‌ள் க‌ல்லுரிக‌ளிலும் (ரூ 8000+ ச‌ம்ப‌ள‌ம்), ப்ரொகிராம் ப‌ண்ண‌த் தெரிந்த‌வ‌ர்க‌ள் ஐடி துறையில் (ரூ 15000+ ச‌ம்ப‌ள‌ம்), நுழைந்து விடுவ‌தாலும் க‌ணிப்பொறி இஞ்சினிய‌ரிங் பிரிவைப்பொறுத்த‌வ‌ரை மாண‌வ‌ர்க‌ளுக்கு நல்ல‌ ஆசிரிய‌ர் கிட்டுவ‌து கடின‌ம்//

    இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாக வாய்ப்புள்ளது.

    தனியார் கல்லூரிகளில் வகுப்பெடுப்பவர்கள் சிலரின் மதிப்பெண் பட்டியலை பார்த்தால் நொந்து விடுவோம்.

    இதில் மற்றொரு அபாயம் உள்ளது. இது போல் நிலைமை தொடர்ந்தால், தனியார் கல்லூரிகளில் வகுப்பெடுபதில் ஒரு Stigma சேர்ந்தால், ஊதியம் அதிகரிக்கவில்லையென்றால் இப்பொழுது வகுப்பெடுக்கும் சில நல்ல திறமைசாலிகளும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று விடுவார்கள்

    ReplyDelete
  10. Narayanan Chakravarthi --- Does this name ring a bell ? :)

    ReplyDelete
  11. பத்ரி,

    இதை விரிவாக ஒரு பயோ-நாவலாகப் பதிவு பண்ணுங்க.Five Point Something-ஐ விட அதெண்டிக் ஆக இருக்கும். வாழ்க்கையிலிருந்து வர்ற பார்வைக்கு அசாதாரண அழுத்தம் உண்டு.

    நம்ம ராம்நாராயண் சார் கிட்டே மும்பை பரிசுவிழா நேரத்திலே இதேதான் சொன்னேன். அவர் 60-களின் ரஞ்சி பிளேயர். அந்தக் காலத்தைப் பதிவு செய்தால், அவரோட வாழ்க்கை, 60-களின் சென்னை மற்றும் அந்தக் காலகட்டத்து சென்னை கிரிக்கெட் பத்திய ஒரு அதெண்டிகேட் படைப்பு கிடைக்கும். தமிழில் இது மாதிரி ரொம்ப குறைவு.

    ராம்நாராயனண் எக்ஸ்பிரஸ் வீக் எண்ட் எழுதிய கட்டுரை படித்தீங்களா?

    ReplyDelete
  12. /இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாக வாய்ப்புள்ளது./

    ப‌த்ரிசார் இதைப்ப‌ற்றி ஒரு த‌னிப்பதிவு போட‌லாமெ.

    அப்புற‌ம், என்ன‌வாயிற்று உங்க‌ள் ஒபாமா பார்ட் த்ரீ? வாசிக்க‌ ஆவ‌லாக‌ உள்ளேன். இன்று ஹிண்டுவில் வ‌ந்த ஒபாமா பாகிஸ்தான் கட்டுரை ப‌டித்திருப்பீர்க‌ள் என‌ நினைக்கிறேன்.

    ReplyDelete