மன்மோகன் சிங் இயல்பில் சாதுவான சுபாவம் கொண்டவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஒரு கூட்டத்துக்கு நடுவில் அவரைப் பேசவிட்டால் சீக்கிரமே கூட்டம் கலைந்துவிடும், அல்லது மக்கள் தூங்கிவிடுவார்கள்.
நேற்றும் அதற்கு விதிவிலக்காக அவர் பேசவில்லை. அவர் பேசத் தொடங்கியதுமே சில பிஜேபி கடைசி பெஞ்ச் கனவான்கள் அவைத்தலைவர் இடத்துக்கு வந்து “மன்மோகன் சிங்கே, பதவி விலகு” என்று பாட்டுப் பாடினார்கள். மன்மோகன் சிங் தன் உரையைத் தொடர முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. சிங் என்றால் சிங்கம் போல கர்ஜனை செய்வார் என்றெல்லாம் இல்லை. முயல் போல, பேச்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். “உரை வெப்சைட்டில் உள்ளது, அவைத்தலைவரிடம் கொடுத்துவிட்டேன், எனவே வாக்களிக்கப் போகலாம்” என்று உட்கார்ந்துவிட்டார். வாக்கெடுப்பில் ஜெயித்துவிட்டார்.
பேச்சுக்கலை எல்லோருக்கும் வராது. மன்மோகன் சிங்குக்கு இந்த வயதில் இனி அது வரப்போவதில்லை. ஒரு வாஜ்பாயியோ, ஒரு அத்வானியோ, அல்லது காங்கிரஸ் தரப்பில் ஒரு பி.சிதம்பரமோ, பிரணாப் முகர்ஜியோ பேசும் அளவுக்கு மன்மோகன் சிங்கால் முடியாது. தேவையும் இல்லை.
அப்படிப் பேச்சு வராத மன்மோகன் சிங் நேற்று கோபத்தின் உச்சக்கட்டத்தில் அத்வானியை கேலி செய்துள்ளார். ஜோதிடனை மாற்று என்கிறார். நாடாளுமன்றத் தாக்குதலின்போது அத்வானி தூங்கிக்கொண்டிருந்தார் என்கிறார். ஜின்னா விவகாரத்தில் அத்வானியை கேலி செய்கிறார். அத்வானியைத் திட்டுவதற்கு தன் அறிக்கையில் இவ்வளவு இடத்தை மன்மோகன் சிங் வீணாக்கியிருக்கவேண்டாம்.
அத்வானி ஓர் அரசியல்வாதி. மூத்த அரசியல்வாதி; ஆனாலும் அரசியலில் உழன்று வந்தவர். அரசியலில் அடுத்தவரைத் திட்டி, கேலி செய்து, மானம் போகவைப்பது அவசியம் என்று கருதப்படுகிறது. எதிராளி சறுக்கும்போது அங்கு போய் கோல் போட்டு பாயிண்ட்களை ஏற்றுவது அவசியம் என்று கருதப்படுகிறது. அபிமன்யு கையில் ஆயுதமே இல்லாது இருந்தாலும் கௌரவர்கள்போல அவன்மீது அம்பெய்வது நியாயம் என்கிறது.
இங்கு பேச்சுதான் பிரதானம். செயல் அல்ல. அழகான நான்கு கவிதைகளைத் தட்டி, அடுக்குமொழியில் நெருப்பைக் கக்கும் பேச்சு போதும். மயக்கிவிடலாம். செயல் என்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.
மன்மோகன் சிங் தயவுசெய்து அந்த நிலைக்கு இறங்கக்கூடாது. அத்வானி உங்களை “லாயக்கற்றவன்” என்று திட்டினால், “சரி, போகட்டும்” என்று விட்டுவிட்டுப் போங்கள். ம.க.இ.க ஆசாமிகள் “மாமா வேலை பார்ப்பவன்” என்பதில் தொடங்கி, “அமெரிக்கக் கைக்கூலி” என்று முடித்து என்னென்னவோ திட்டிவிட்டார்கள். வெகுஜனப் பத்திரிகை பத்திகளிலேயே “மதிகெட்ட மாமன்னன்” என்ற பட்டம் வாங்கியாயிற்று. (தமிழ் தெரியாதது ஒரு நல்ல விஷயம்!)
மன்மோகன் சிங் இரண்டு விரல்களையும் விரித்து “V” என்று வெற்றியைக் காண்பிப்பது பார்க்க சகிக்கவில்லை. வேண்டாம். அதெல்லாம் எம்.ஜி.ஆர் தொடங்கி விஜயகாந்த் வரையிலானவர்களுக்கும் பிற வெத்துவேட்டு அரசியல்வாதிகளுக்கும் போதும்.
***
காங்கிரஸ், பிஜேபி, சமாஜவாதி, பஹுஜன் சமாஜ் ஆகிய நான்கு பேர்களுமே நிறைய தில்லுமுல்லுகளில் ஈடுபட்டிருந்தனர் என்று நினைக்கிறேன். பிறரை தங்கள் பக்கம் இழுத்து வாக்களிக்க வைப்பது, குறைந்தபட்சம் வாக்களிக்காமல் ஜூட் விடுவது. அதற்கு எவ்வளவோ ஆசைகள் காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் பணம் கொடுப்பது என்பது நேரடிக் குற்றமாகிறது. பணம் கொடுத்து கேள்வி கேட்கவைப்பது என்பதே குற்றம் என்று முடிவாகி அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் பணம் கொடுத்த விவகாரத்தில் உண்மை என்று ஏதும் வெளியே வராது என்றே தோன்றுகிறது. ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சொல்வார். பெயர்கள் வெளிப்படும். ஆனால் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. இதனால் இந்தியக் குடியாட்சி முறையே கேவலமாகிவிட்டது என்று நான் சொல்லமாட்டேன். இது மாற்றம் நிகழும் ஒரு கட்டம். அத்தனை அசிங்கங்களையும் நாம் பார்த்தாகவேண்டிய கட்டம்.
***
இப்போது நடந்த வாக்கெடுப்பில் இரு பக்கமும் சிலர் கட்சி மாறி வாக்களித்திருக்கின்றனர். சிலர் வாக்களிக்காமல் இருந்திருக்கின்றனர். இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்.
இதற்கு அடிப்படை கொறடா எனப்படும் whip. தேர்தலில் ஜெயித்தபிறகு கட்சித் தலைமைக்கு அடிமையாக இருக்குமாறு செய்ய இந்தக் கொறடா ஆணை பயன்படுத்தப்படுகிறது. கொறடாவை மீறி வாக்களித்தவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். தனது எம்.பி பதவியை இழக்க நேரிடும்.
மூன்றில் ஒரு பங்கு என்று ஒரு குழுவாகப் பிரிந்து அவைத்தலைவரிடம் பேசி தாங்கள் தனி அணி என்று அவர்கள் சொன்னால்மட்டுமே பதவியை இழப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
என் கருத்தில், இந்த கொறடா மிரட்டல் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும். ஒரு கட்சியின் ஆதரவில் நின்று ஜெயித்தபிறகு, கட்சி மாறினால் என்ன செய்வது? கட்சிக்கு விசுவாசமாக நடக்காவிட்டால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சிக்கு விசுவாசமாகத்தான் நடக்கவேண்டும் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் சொல்வதில்லை. இதனால் நிறைய “குதிரைப் பேரங்கள்” நடக்கலாம்; ஆட்சி நிலைத்தன்மை உடையதாக இருக்காது என்று சிலர் கருதலாம்.
ஆனால் கட்சியை ஓரிருவரும் அவரது குடும்பங்களும் கைப்பற்றிக்கொண்டு தங்களது சொந்தச் சொத்தாக நடத்துவதை இது குறைக்கும். ஆட்சி கவிழாமலேயே சில தீர்மானங்கள்மட்டும் தோல்வியுறலாம். அதுவும் நல்லதற்கே.
***
அத்வானி நேற்றைய வாக்கெடுப்பின் முடிவில் முகம் பேயறைந்ததுபோலக் காணப்பட்டார். பேச்சிலும் நிறையத் தவறுகள். நன்கு பேசத் தெரிந்தால் மட்டும் போதாது. சத்தியத்தின் பலம் பின்னால் இருக்கவேண்டும். கடைசியாக நடந்த “பண நாடகம்” வேறு அசிங்கமாக இருந்தது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை விட்டுவிட்டு உடனடியாக மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று அத்வானியும் பிஜேபியும் கேட்டது அபத்தமாக இருந்தது.
மன்மோகன் சிங்கைத் தாக்குவது அத்வானிக்கு எளிது. ஆனால் அழகல்ல. அணு ஒப்பந்தத்தை பிஜேபி ஆதரித்திருக்கவேண்டும். ஆனால் விலைவாசி முதற்கொண்டு வேறு சில விஷயங்களில் அரசை நன்றாக எதிர்த்திருக்கலாம். அரசுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் பிஜேபி அதைச் செய்யவில்லை. இப்போது சோர்ந்து கிடந்த காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளார் அத்வானி.
அரசைத் தோற்கடிக்க என்று பிஜேபி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், இடதுசாரிகளும் மாயாவதியும் பிஜேபியுடன் எந்த விதத்திலும் கூட்டு சேரப்போவதில்லை. ஆட்சி கவிழ்ந்திருந்தால் இடதுசாரிகளும் மாயாவதியும் தாங்கள்தான் இதனைச் சாதித்தோம் என்று சொல்வார்கள். கவிழாவிட்டால் பிஜேபி தோற்றதாகத்தான் சொல்லப்படும். ஆக, எந்த முடிவானாலும் பிஜேபிக்கு லாபமில்லை. யோசிக்காமல் நடந்துகொண்டது பிஜேபி. அதன் பலனை அனுபவிக்கிறது.
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
யோசிக்காமல் நடந்துகொண்டது பிஜேபி. அதன் பலனை அனுபவிக்கிறது.
ReplyDeleteஅட ஏன் பத்ரி ? அடுத்த 5 மாசத்துல நடக்க போற கூத்துல அவங்களுக்கு லாபம் தான் அதிகம்.
காங்கிரஸ், பிஜேபி, சமாஜவாதி, பஹுஜன் சமாஜ் ஆகிய நான்கு பேர்களுமே நிறைய தில்லுமுல்லுகளில் ஈடுபட்டிருந்தனர் என்று நினைக்கிறேன்.
left இதுல எதுவும் செஞ்சி இருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்களா ?
அவனும் அவளும்: (1) பிஜேபி இந்தப் பிரச்னையில் அரசோடு சுமுகமாக நடந்துகொண்டிருந்தால், மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸுக்கும் ஆதரவு அதிகமாகியிருக்காது. இடதுசாரிகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அணு ஒப்பந்தமும் நிறைவேறியிருக்கும்.
ReplyDeleteஅதற்குப் பிறகு விலைவாசி உயர்வு இன்னபிற ஆகியவற்றை அடிப்படையாக எடுத்துக்கொண்டு காங்கிரஸ்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கலாம். அதைக்கூட இரண்டு, மூன்று மாதங்கள் கழித்துச் செய்திருக்கலாம்.
ஆனால் இப்போது நடந்துகொண்டவிதத்தில் காங்கிரஸ் மேலும் பல வாக்குகளைப் பெறக்கூடும். இடங்களையும் பெறக்கூடும். அத்துடன் மாயாவதி-இடதுசாரி கூட்டணி வலுவாக ஆகியுள்ளது. இது பிஜேபிக்கு நல்லதல்ல.
(2) இடதுசாரிகள்மீது என்னெவெல்லாம் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் காசு கொடுத்து எம்.பிக்களைத் தங்கள் பக்கம் இழுப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
அதிகபட்ச தில்லுமுல்லுகளில் ஈடுபட்டவர்களாக சமாதவாதி மற்றும் பஹுஜன் சமாஜ் கட்சிகளையே நான் பார்க்கிறேன். காங்கிரஸுக்கு நிச்சயம் பங்கிருக்கும். எந்த அளவுக்கு என்று தெரியவில்லை. பிஜேபியின் பங்கு “கூடச் செல்வதாக நடித்து” பின் “அய்யோ, அய்யோ, லஞ்சம் கொடுக்கறான்” என்று நடித்ததில் இருந்தது.
Since too much of astrology is talked around, here is a snippet from a techno astrologer.
ReplyDeleteWe dont have a correct Birth time for India, should be declaration time, about 12:01AM on Aug 15th, 1947 by Lord Mountbatten. (They say it was deliberate to make sure we dont celebrate our Independence day with Pakistan). Mars is sitting in the second house, clearly showing that, we will play second fiddle. Sun and Rahu will make India Superpower, and that is in 2010 or 2047. Definitely this new association is going to be beneficial for us.
John McCain and Bobby Jindal are going to support India.
Regards
Ramesh
//யோசிக்காமல் நடந்துகொண்டது பிஜேபி. அதன் பலனை அனுபவிக்கிறது. //
ReplyDeleteஉண்மைதான். முத்தாய்ப்பாக சொல்லி விட்டீர்கள்
Why did the CNN-IBN channel did not telecast the 'STING' tapes ?
ReplyDeleteபத்ரி பி.ஜே.பி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சரியே ஆனாலும் அவர்கள் கொண்டுவந்த ஒப்பந்த்தத்தை விட நல்ல முரையில் ஒப்பந்தம் போட்ட பிறகும் இப்படி எதிர்கிறார்களே என்ற கோபத்தில் பிரதமர் அப்படி கேலி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.சாருவின் வலையில் எதிர்வினைகள் கடிதமாக வந்துள்ளதை பார்த்தீர்களா?
ReplyDeleteஆடட்டும் ஆடட்டும் இன்னும் 5 மாசம் தானே. பத்ரி அரசியலில் நாகரீகம் மேம்பட எதாவது எழுதுங்கள். நாடு நாசமாக நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ReplyDeleteஅணு ஒப்பந்தம் ஒருபுறம் இருக்க, அடுத்த தேர்தல் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப்பட்டால் காங்கிரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இல்லாவிடில். . . ஆம். ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தாலும் வந்துவிடும். அப்படி இல்லாவிடில் குறுகிய காலத்திற்கு லாலு, மாயாவதி, முலாயம் ஆகிய மூவரில் ஒருவர் பிரதமர் ஆகலாம். எதையும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது.
ReplyDelete