Thursday, July 10, 2008

மீனவனும் மனைவியும்

(From Grimms' Fairy Tales, The Fisherman and his wife, retold by Badri)

ஒரு மீனவன் கடலோரம் உள்ள சிறு குடிசை ஒன்றில் தன் மனைவியுடன் வசித்துவந்தான். ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்ற அவனது வலையில் மாபெரும் மீன் ஒன்று மாட்டியது. அந்த மீன், “என்னை விட்டுவிடு. நான் ஓர் இளவரசன். ஒரு சாபத்தால் இப்படி மீனாக ஆகியுள்ளேன்” என்றது. “அய்யோ, பேசும் மீன் எனக்கு வேண்டாம்” என்று சொல்லி, அந்த மீனைக் கடலில் விட்டுவிட்டான் அவன்.

வீட்டுக்கு வந்த மீனவன் தான் மீன் பிடித்த கதையைத் தன் மனைவியிடம் சொன்னான். அவளோ, “இப்படி ஒரு அதிர்ஷ்டம் கையில் கிடைக்கும்போது பயன் ஏதும் அடையாமல் வந்திருக்கிறாயே? போ, போய் அந்த மீனிடம் கேட்டு நமக்கென நல்ல ஓட்டுவீடு ஒன்றைப் பெற்றுக்கொண்டு வா” என்றாள்.

மீனவனுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை. இருந்தாலும் மனைவியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் கடலுக்குப் போனான். கடல் அமைதியாக மஞ்சளும் பச்சையுமாக இருந்தது. கடலோரத்தில் நின்று இவ்வாறு பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு என்ன வேண்டும்” என்றது. “உன்னை நான் விடுவிக்கும்போது உன்னிடம் ஏதாவது கேட்டிருக்கவேண்டுமாம்! அவளுக்கு இப்போதிருக்கும் குடிசை வீட்டில் வாழப் பிடிக்கவில்லையாம். ஓட்டுவீடு ஒன்று வேண்டுமாம்” என்றான் மீனவன். “அவ்வளவுதானே? நீ வீட்டுக்குப் போ. அவள் இப்போது ஓட்டு வீட்டில்தான் இருக்கிறாள்” என்றது மீன்.

வீடு திரும்பிய மீனவன், தனது குடிசை இருந்த இடத்தில் அழகான ஓட்டு வீடு இருப்பதைப் பார்த்தான். வாசலில் இருந்த அவன் மனைவி, “பார், இந்த வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது. சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பு பூசப்பட்டு, வெள்ளையடித்துள்ளது. சமையலறை, படுக்கயறை, வெராந்தா என நிறைய அறைகள் உள்ளன. ஒரு சின்ன தோட்டம்கூட உள்ளது. அதில் எவ்வளவு பூக்களும் பழங்களும்! அங்கே பார்த்தாயா? எவ்வளவு கோழிகளும் வாத்துகளும்!” என்றாள். “அப்பாடா, இனி எந்தக் கவலையும் இன்றி நாம் வாழலாம்” என்றான் மீனவன். “குறைந்தது முயற்சியாவது செய்யலாம்” என்றாள் மனைவி.

ஓரிரு வாரங்கள் கழித்து மனைவி மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்தாள். “இந்த வீடு போதவில்லை. அறைகள் எல்லாம் சிறியதாக இருக்கின்றன. ஒரு பெரிய கல் கோட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். போ, போய் அந்த மீனிடம் நமக்கு ஒரு கோட்டையைக் கட்டித்தருமாறு கேள்” என்றாள். “நான் அந்த மீனிடம் போகமாட்டேன். அது கோபப்படலாம். இந்த ஓட்டு வீடே வசதியாகத்தானே இருக்கிறது?” என்றான் மீனவன். “உளறாதே! மீன் நிச்சயம் செய்துதரும். போய் முயற்சி செய்” என்று கடுப்படித்தாள் மனைவி.

மிகவும் வருத்தத்துடன் மீனவன் கடற்கரைக்குப் போனான். கடல் அமைதியாக இருந்தாலும் நீலமும் இருண்மையுமாக இருந்தது. கடலோரத்தில் நின்று இவ்வாறு பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு இப்போது என்ன வேண்டும்” என்றது. “என் மனைவி கல் கோட்டையில் வசிக்கவேண்டுமாம்!” என்றான் மீனவன். “போ, திரும்பிப் போ. அவள் இப்போது கோட்டையின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறாள்” என்றது மீன்.

வீடு இருந்த இடத்தில் ஒரு பெரும் கோட்டை இருந்தது. அதன் வாயிலில் அவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள். “பார்த்தாயா? எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது! கோட்டைக்குள் ஏகப்பட்ட வேலைக்காரர்கள். தங்கத்தால் ஆன நாற்காலிகள், மேஜைகள். மாபெரும் தோட்டம். எங்கும் ஆடுகள், மாடுகள், முயல்கள், மான்கள். குதிரை லாயம், மாட்டுத் தொழுவம்” என்று சந்தோஷமாகச் சொன்னாள் அவள். “சரி, இனியாவது நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோமா?” என்றான் மீனவன். “பார்க்கலாம்” என்றாள் மனைவி.

அடுத்த நாள் காலை, மீனவனைக் குத்தி எழுப்பினாள் மனைவி. “எழுந்திரு கணவா! நீ இந்தத் தீவின் அரசன் ஆகவேண்டும்” என்றாள் அவள். “நான் எதற்காக அரசன் ஆகவேண்டும்? எனக்கு இஷ்டம் இல்லை” என்றான் அவன். “நீ விரும்பாவிட்டால் நான் ஆகிறேன்” என்றாள் அவள். “மீன் உன்னை எப்படி ராஜாவாக ஆக்கமுடியும்?” என்றான் அவன். “மறுவார்த்தை பேசாதே! முயற்சி செய்துபார். போய் மீனிடம் என்னை அரசனாக்கும்படிக் கேள்” என்றாள் அவள்.

சோகம் தாளாமல் மீனவன் கடற்கரைக்குப் போனான். கடல் நுரைத்துப் பொங்கி ஆரவாரத்துடன் கருமையாக இருந்தது. கடலோரத்தில் நின்று இவ்வாறு பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு இப்போது என்ன வேண்டும்” என்றது. “அவள் அரசனாக வேண்டுமாம்” என்றான் மீனவன். “போ! அவள் இப்போது அரசன்!” என்றது மீன்.

மீனவன் வீடு திரும்பினான். அங்கே ஒரு மாபெரும் அரண்மனை இருந்தது. நிறைய சிப்பாய்கள் இருந்தனர். அவனது மனைவி தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் தலையில் தங்கக் கிரீடம் இருந்தது. அவளது இரு பக்கத்திலும் ஆறு ஆறு பெண்கள் காத்துக்கிடந்தனர். “மனைவியே, நீ இப்போது அரசனா?” என்றான் மீனவன். “ஆம்” என்றாள் அவள். “நல்லது. இனி நம் காலம் முடியும்வரை உனக்கு வேறெதுவும் வேண்டாம், அல்லவா?” என்றான் அவன். “அதெப்படி? எனக்கு அரசனாக இருப்பது அதற்குள்ளாக போரடித்துவிட்டது. நான் பேரரசனாகவேண்டும்” என்றாள் அவள். “நீ எதற்கு பேரரசனாகவேண்டும்? மேலும் மீனால் உன்னை நிச்சயமாக பேரரசன் ஆக்கமுடியாது. அப்படியே முடிந்தாலும் எனக்கு போய்க் கேட்க விருப்பம் இல்லை” என்றான் அவன். “எதிர்த்துப் பேசாதே! நான் அரசன், நீ என் அடிமை. உடனடியாக மீனிடம் சென்று என்னைப் பேரரசனாக்கச் சொல்” என்றாள் அவள்.

“இது நிச்சயம் பிரச்னையைத்தான் கொடுக்கப்போகிறது” என்று புலம்பிக்கொண்டே மீனவன் கடலுக்குச் சென்றான். கடல் கறுத்து, குழம்பி, சீற்றத்துடன் காற்று சுழன்றடிக்க, அலைகள் எழும்பிக் குதித்தவண்ணம் இருக்க, மீனவன் பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “உன் மனைவிக்கு இப்போது என்ன வேண்டுமாம், சொல்” என்றது. “அவள் பேரரசன் ஆகவேண்டுமாம்” என்றான் மீனவன். “போ, அவள் இப்போதே பேரரசன்” என்று சொல்லி மறைந்தது மீன்.

மீனவன் வீட்டுக்குப் போனான். மாபெரும் அரியாசனத்தில் அவனது மனைவி உட்கார்ந்திருந்தாள். அவளது தலையில் முன் இருந்ததைவிடப் பெரிய கிரீடம் இருந்தது. இரு பக்கங்களிலும் ஏகப்பட்ட மெய்க்காப்பாளர்கள் இருந்தனர். பல அரசர்களும் ஜமீந்தார்களும் குற்றேவல் செய்யக் காத்திருந்தனர். “மனைவியே, நீ இப்போது பேரரசனா?” என்றான் அவன். “ஆம்” என்றாள் அவள். “அற்புதம். இனி உனக்கு வேறென்ன வேண்டும்?” என்றான் அவன். “ஏன் இல்லை? ஏன் பேரரசனோடு நிற்கவேண்டும். நான் அடுத்து போப் ஆகவேண்டும்!” என்றாள் அவள். “உளறாதே, மீன் உன்னை எப்படி போப் ஆக்கமுடியும்?” என்றான் அவன். “ஏன் முடியாது? என்னைப் பேரரசனாக்கமுடியும் என்றால் போப்பாகவும் ஆக்கமுடியும். நிற்காதே, போ. கேள்” என்றாள் அவள்.

எனவே அவன் கடலுக்கு மீண்டும் போனான். அவன் கரையை அடையும்போது கடும் புயல் அடித்துக்கொண்டிருந்தது. அலைகள் ஆளுயரத்துக்கு எழும்பி எழும்பி அடித்தன. எங்கும் சிவந்த வானம் தென்பட்டது. இதைக் கண்டதும் மீனவனுக்கு பயமாக இருந்தது. நடுங்கிக்கொண்டே அவன் பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

மீன் வெளியே வந்தது. “இப்போது என்ன ஆசை உன் மனைவிக்கு” என்றது. “என் மனைவி போப் ஆக விரும்புகிறாள்” என்றான் மீனவன். “வீட்டுக்குப் போ, அவள் இப்போது போப்” என்றது மீன்.

வீடு திரும்பிய மீனவன், தன் மனைவி மிகப்பெரிய ஆசனத்தில் வீற்றிருப்பதைப் பார்த்தான். அவளது தலையில் மூன்று கிரீடங்கள் இருந்தன. தேவாலயங்களின் முழு அதிகாரமும் அவளது கைக்குள் இருந்தன. அவளது இரு பக்கங்களிலும் பல ஒளிவிளக்குகள் இருந்தன. “மனைவியே, நீ இப்போது போப்பா?” என்று கேட்டான் மீனவன். “ஆம்” என்றால் அவள். “அப்படியென்றால் உனக்கு இனி வேறெதுவும் தேவையில்லைதானே?” என்றான் அவன். “பார்க்கலாம். யோசித்துச் சொல்கிறேன்” என்றாள் அவள்.

மறுநாள் காலை தூங்கி எழுந்த அவள், ஜன்னல் வழியாகப் பார்த்தாள். சூரியன் ஏற்கெனவே உதித்திருந்தது. “ஹ்ம்ம்ம். இந்த சூரியன் உதிப்பதை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை” என்று அவளுக்குத் தோன்றியது. பாதி தூக்கத்தில் இருந்த கணவனை உதைத்து எழுப்பினாள். “போ, போய் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நான் தலைவனாகவேண்டும் என்று மீனிடம் சொல்” என்று அவனிடம் சொன்னாள். “அடப்பாவி, போப்பாக இருப்பது போதவில்லையா உனக்கு?” என்றான் அவன். “இல்லை. சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மீனிடம் உடனடியாகப் போ” என்றாள்.

பயந்து நடுங்கிக்கொண்டே கடலை நோக்கிச் சென்றான் மீனவன். கடும் புயல் அடித்துக்கொண்டிருந்திருந்தது. மரங்கள் வேரோடு பெயர்ந்தன. மலைகள் உடைந்து சிதறின. கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. இடியும் மின்னலும் நடுங்கவைத்தன. வெள்ளை நுரை பொங்கும் கரும் அலைகள் சுழன்று அடித்துக்கொண்டிருந்தன. மெதுவாக ஊர்ந்தவாறே மீனவன் கடலோரத்துக்குச் சென்று பாடினான்:

“கடலுக்குள் ஒளிந்திருக்கும் மீனே, மீனே
கருணையுடன் எனக்கு அருள் புரிவாய் நீயே
நச்சரிக்கும் என் மனைவி ஆசை தீர்க்க
வரம் கொடுத்து என்னை நீ காக்க, காக்க!”

“இப்போது என்னவாக விரும்புகிறாள் உன் மனைவி” என்று கேட்டது மீன். “சூரியனுக்கும் சந்திரனுக்கும் தலைவனாக விரும்புகிறாள்” என்றான் மீனவன். “அவ்வளவுதானே? உன் பழைய குடிசை வீட்டுக்கே போ” என்றது மீன்.

கடல் மீண்டும் அமைதியானது. மீனவன் தன் வீட்டுக்குச் சென்றான். அது பழையபடி சின்னஞ்சிறு குடிசையாக இருந்தது. அதன்பின் தன் வாழ்நாள் முழுதும் அந்த இடத்திலேயே அவர்கள் கழித்தனர்.

5 comments:

 1. நல்ல கதை பத்ரி. ஆனால் நீங்கள் குழந்தைக்கு கொஞ்சம் மாற்றி சொல்லி தரலாம். மனைவி என்றாலே நச்சரிப்பு, கணவன் என்றால் கையாலாகதவன், மனைவி நச்சரிப்பு தாங்காமல் முடிவு எடுப்பவன் போன்ற கருத்துக்களை உங்கள் மகனிடம்/ மகளிடம் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.

  இது போன்ற stereotypes சமூகத்தின் சிந்தனையில் இருந்து விடுபட வேண்டும்.

  கதையின் மையக்கருத்து குழந்தைகளிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய ஆழமான கருத்து.

  ReplyDelete
 2. நான் கதையை அவ்வளவாக மாற்றுவதில்லை. அப்படியே ஆங்கிலத்தில் மனத்துக்குள் படிப்பேன். உடனடியாக தமிழில் வரிக்கு வரி கதையாகச் சொல்லிவிடுவேன். அடுத்த நாளோ, அடுத்து எப்போது நேரம் இருக்குமோ அப்போது எழுதிவைக்கிறேன். எழுதக் காரணம், பின்னர் அனைத்தையும் மொழிமாற்றிவிட்டால் பதிப்பிக்க வசதியாக இருக்கும் என்பதே. பதிப்பிக்கும் கட்டத்திலும் “historical significance” கருதி மாற்றங்கள் செய்யவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்.

  எடிட்டர் ராகவனின் கருத்து இந்தக் கதைகள் எல்லாம் பொதுவாக நன்றாக இல்லை என்பது. ஆனால் இவையெல்லாம் ஜெர்மனியில் வாய்மொழியாகப் புழங்கிவந்தவை. கிரிம் சகோதரர்கள் பலரைப் பார்த்து, பேசி, தொகுத்து எழுத்தில் கொண்டுவந்தனர். கதைகளில் சில நூற்றாண்டுகளின் தாக்கம் உண்டு. ஜெர்மனிவாழ் மக்களின் கலாசாரம் உள்ளது. (மது உண்டு. இந்திய குழந்தைகள் கதைகளில் மது கூடாது.) கொலை உண்டு. (அமெரிக்க டிஸ்னி அனிமேஷன் கதைகளில் கொலையே இருக்காது, அல்லது கொலை காட்டப்படாது!)

  இன்று நம் ஊரில் அதிகம் தெரிந்துள்ள ஸ்னோ ஒயிட், சிண்டெரெல்லா, ராபுன்ஸேல் முதலான பல கதைகளும் கிரிம் சகோதரர்கள் தொகுப்பிலிருந்து வந்தவையே. ஆனால் நான் முதலில் செய்வது தெரியாத கதைகளை. அதனாலேயே அவை “மோசமான” கதைகளாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் நல்ல கதைகளையெல்லாம் படக்கதைகளாக நாம் பலமுறை படித்துவிட்டோம். டிஸ்னி அனிமேஷன்களாகப் பார்த்தும் விட்டோம்.

  ReplyDelete
 3. நன்றி பத்ரி. ஒரு வேலை நான் குழந்தைகளை குறைத்து மதிப்பீடு செய்கிறேனோ என்று சந்தேகமாக இருக்கிறது.

  ஆனால் இங்கு பள்ளிகளில் டாம் & ஜெர்ரி போன்ற கார்டூன்களை பார்க்ககூடாது என்றே அறிவுரை கூறுகிறார்கள். அதனால் "கொலை உண்டு" என்று சொல்லுவது சற்று நெருடுகிறது. கார்டூனின் டார்கெட் ஆடியன்ஸ் குழந்தைகள் மட்டும் கிடையாதோ என்னவோ ?

  ReplyDelete
 4. //கடல் நுரைத்துப் பொங்கி ஆரவாரத்துடன் கருமையாக இருந்தது. //

  இவ்வாறு ஒவ்வொரு முறையும் கடல் வெவ்வேறு நிறத்தில் / தன்மையில் உள்ளதற்கு காரணம் எதுவாவது உண்டா

  ReplyDelete
 5. புருனோ: ஆம். கடல் வண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது கேட்பது ரொம்ப ஜாஸ்தி என்ற அர்த்தத்தில்.

  ReplyDelete