Friday, July 11, 2008

ஆங்கிலத் தாக்கம்

எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.

ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால் இந்தியாவுக்கு வந்தால் எப்படிப் பொருள் ஈட்டுவது? இந்தியாவில் யாரும் இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டிய தேவையில்லையே?

ஆனால் சென்னையில் ஹுண்டாய் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கொரியர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் கொள்ளை விருப்பம். எனவே கொரியாவிலிருந்து நேராக சென்னை வந்துவிட்டார் இந்த பிரிட்டிஷ்காரர். சென்னை கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து இன்று சந்தோஷமாக சென்னையில் வாழ்க்கை நடத்துகிறார் இவர்!

***

Veta என்னும் பேச்சுவழக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் அமைப்பு வெகுவேகமாக வளரும் ஒரு நிறுவனம். இன்று இந்தியா முழுவதிலும் பல இடங்களில் ஆங்கிலத்தில் பேச வகுப்புகளை நடத்துகிறார்கள். இப்போது சிங்கப்பூரிலும் இந்த வகுப்புகளை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் உலகெங்கிலும் தொடங்கப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவுக்கும் செல்ல இருக்கிறார்கள்.

சீனாவில் பலர் போட்டிபோட்டுக்கொண்டு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். பல ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகள் தோன்றியுள்ளன.

ஜப்பான் முதற்கொண்டு ஆசியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலம் கற்பதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

***

சென்ற வாரம், கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தின் பல பள்ளிகள் ஆங்கில-வழிக் கல்வி பயிற்றுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அம்மாநிலத்தில் பல பள்ளிகள், கன்னட மீடியத்தில் பாடம் நடத்துவதாகச் சொல்லி அரசிடம் அனுமதி பெற்றன. ஆனால் பெற்றோர்களின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சத்தமே போடாமல் ஆங்கில மீடியத்துக்கு மாறிவிட்டன.

விஷயம் கேள்விப்பட்ட மாநில அரசு, கன்னட மீடியத்துக்கு மாறாவிட்டால் பள்ளிகளின் உரிமையை ரத்துசெய்துவிடுவதாக அறிவித்தது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்ல, இந்த ரவுண்டில் பள்ளிகளின் ஆங்கில மீடிய உரிமையின் பக்கம் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்படியும் அடுத்து உச்ச நீதிமன்றத்துக்குப் போகும்.

***

சென்ற வாரம் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயமூட்டும் ஒரு தகவல் கிடைத்தது. தமிழகத்தில் 70% மேலான (கலை, அறிவியல், நிர்வாகவியல்) கல்லூரிகளில் பாடங்கள் ஒன்று தமிழில் நடைபெறுகின்றன, அல்லது ஆங்கில மீடியமாக இருந்தாலும் பரீட்சையில் எழுதும்போது மாணவர்கள் தமிழிலேயே எழுதுகிறார்கள்.

பயம் அதைப்பற்றியல்ல. இந்த மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்களே கிடையாது என்பதுதான் பயமூட்டும் விஷயம். பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில்லை. எப்போதோ தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிப்பித்த சில புத்தகங்களும் இன்று அச்சில் இல்லை. தனியார் பாடப்புத்தக பதிப்பகங்களோ ஆங்கிலத்தில்மட்டுமே புத்தகங்கள் போடுகின்றனர்.

அப்படியென்றால் தமிழ் மாணவர்கள் எதைப் படிக்கிறார்கள்? எப்படி பரீட்சை எழுதுகிறார்கள்? எதைப் புரிந்துகொள்கிறார்கள்? எப்படி பட்டம் வாங்கியதும் வெளியே வந்து உருப்படுகிறார்கள்?

இந்த விஷயம் உண்மைதானா என்பதை அறிய சமீபத்தில் தமிழகக் கல்லூரிகளுடன் பரிச்சயம்கொண்ட சிலரைக் கேட்டேன். அவர்கள் உண்மைதான் என்கிறார்கள்.

தமிழ், தமிழ் என்று நாளுக்கு முந்நூறுமுறை மூச்சுவிடும் கட்சிகள் பதவியில் இருக்கும் தமிழகத்துக்கு இதுதான் கதியா? பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், இலக்கியக் கோட்பாடுகள், இயல்பியல், வேதியியல், கணிதம், புள்ளிவிவரவியல், விலங்கியல், தாவரவியல், மரபியல், நிர்வாகவியல் என எதற்கும் இளநிலை, முதுநிலைப் பாடங்களுக்கு தமிழில் உருப்படியான பாடப்புத்தகங்கள் இல்லை என்றால் மாணவர்களின் படிப்பு என்னாவது?

பேசாமல் அனைவரும் ஆங்கிலம் கற்று, அதிலேயே பாடங்களைப் படித்துவிடலாமா?

***

ஆங்கிலம்தான் இந்தியாவின், தமிழகத்தின் எதிர்கால மொழியா?

10 comments:

 1. eye opening post...
  it shud reach the bureaucracy n vcs ears...
  some thing shud be done b4 ev one switch 2 eng medium....

  ReplyDelete
 2. Aangilam Indhiyargalin podhu mozhi aanadhu pazhaya kadhai, adhil ondurm thavarilai.. thamizhargazhin thaaimozhi aaguma yendru nenaikumbodhu miga varuthamaai irukindradhu :-(

  ReplyDelete
 3. புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் என்ன, குறைந்த பட்சம் பரீட்சையையாவது தமிழில் எழுதும் வகையில் இருந்தால் தமிழ் மீடியம் மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவர். பல ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்கள் கொண்டிருந்தாலும் அவரவர் தாய் மொழியிலேயே தேர்வுகள் எழுதும் வண்ணம் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்கள் உள்ளன.

  தமிழ் என்று சொல்லி மற்ற மொழிகளைக் கற்கவிடாமல் தமிழர்களை இழிச்சவாயன் ஆக்கிய கொள்கைப் போராளிகள் ஆளும் நாட்டில் தமிழ் இனி மெல்லச் சாகும்.

  ReplyDelete
 4. தமிழில் பாட நூல்களை பாட நூல் நிறுவனம் வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது.பல்கலைகழகங்களின் பாடத்திட்டங்கள் வேறுபடும்.அதற்கு
  தகுந்தாற் போல் நூல்கள் எழுதுவது
  கடினம். பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட நூல்களை யாரும்
  படிப்பதில்லை.படிப்பதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு நூல்கள், அதுவும்
  பல சமயங்கள் கோனார் உரை போன்ற னோட்ஸ்களை.
  இவை தமிழில் இருந்தாலும்
  இல்லாவிட்டாலும் மாணவர்களும்,
  பாடம் நடத்துபவர்களும் கவலைப்
  படுவதில்லை. பாடப்புத்தகம் தேவையில்லை, நோட்ஸ்கள்
  போதும் என்பதே உண்மை.
  எனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும்
  ஒரிரு நூல்கள் அனைத்து பல்கலை
  மாணவர்களுக்கும் ‘பொதுவாக'
  உள்ளன.

  ReplyDelete
 5. மாணவர்கள் அனைவரும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி அடைவதே அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இங்கு தமிழ் ஏன் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் மொழி அறிஞர்களிடையே கலைச்சொற்கள், எழுத்துச் சீர்திருத்தம், பாடநூல் தயாரிப்பு ஆகியவற்றில் கருத்து உடன்பாடு, கருத்தொற்றுமை இல்லாமல் இருக்கிறது. நீ பெரியவனா, நான் பெரியவனா என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை யாரோ ஒருசிலர் விழுங்கி ஏப்பம் விடுகிறார்கள். மேலும் மக்களுக்கும் இது நம் மொழி, அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இருக்க வேண்டும். ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும்போது தமிழ்நாட்டில் ஏன் தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படக் கூடாது? தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மொழிகளை நல்ல முறையில் சொல்லிக்கொடுக்காததாலேயெ பிற்பாடு அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மொழித் திறன் இல்லாமல் போய்விடுகிறது.

  ReplyDelete
 6. நல்ல பதிவு.
  இந்த சிக்கலுக்கு அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்குமன்றி மக்களின் மனத்தடையும் காரணமாக உள்ளது. இதனால் தமிழ்-ஆங்கிலம் இரண்டையும் அரை குறையாகக் கற்றுக் கொண்டு பாடங்களில் தெளிவில்லாமல் குழம்புகின்றனர்.

  ReplyDelete
 7. //இவை தமிழில் இருந்தாலும்
  இல்லாவிட்டாலும் மாணவர்களும்,
  பாடம் நடத்துபவர்களும் கவலைப்
  படுவதில்லை. பாடப்புத்தகம் தேவையில்லை, நோட்ஸ்கள்
  போதும் என்பதே உண்மை.
  //

  கசப்பான உண்மை :( :(

  ReplyDelete
 8. ஆங்கில புத்தகத்தை படித்து தமிழில் தேர்வெழுதுவது என்பது ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்தில் எழுதுவதை விட நல்லது தானே.

  குறைந்த பட்சம் மனப்பாடம் செய்து எழுதாமல் புரிந்து கொண்டு எழுதுகிறார்கள் என்று சந்தோஷப்படுவோமே

  ReplyDelete
 9. புருனோ: பாடப்புத்தகங்கள் மிக முக்கியமானவை. நாம் நோட்ஸ் கலாசாரத்தில் 10வது, 12வது பாஸ் செய்யலாம். ஆனால் மேற்படிப்பில் விஷயத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஆங்கிலத்தில் படித்து, அதைப் புரிந்துகொண்டு தமிழில் எழுதுவது என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால், ஆங்கிலத்தில் அரைகுறையாகப் படித்து, அதையும் அப்படியே ஆங்கிலத்தில் எழுதத் தகுதியில்லாததால் ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித் தெளித்து, தெரியாத வார்த்தைகளைத் தமிழில் எழுதுவதுதான் நடக்கிறது.

  அதுதான் பிரச்னையே. ஒன்று ஆங்கிலத்தில் சுத்தமாக எழுதவேண்டும். அல்லது தமிழில் சுத்தமாக எழுதவேண்டும். இரண்டுக்கும் மேலாக புரிந்துகொண்டு, எழுதவேண்டும்.

  அது நடக்கிறதா?

  தமிழில் நல்ல பாடப்புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள், தமிழிலேயே படித்து, நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழிலேயே பதில் எழுதுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனதானே?

  ReplyDelete
 10. பத்ரி சார்,

  நான் அப்படி கூறவில்லை :) :)

  //தமிழில் நல்ல பாடப்புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள், தமிழிலேயே படித்து, நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழிலேயே பதில் எழுதுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனதானே?//

  சிறந்த முறை : தமிழில் கற்று தமிழில் எழுதுவது

  அப்படி இயலாதவரை : ஆங்கில புத்தகத்தில் கற்று தமிழில் எழுதுவது என்பது

  ஆங்கில புத்தகத்தை மனப்பாடம் செய்து (அல்லது பிட் அடித்து) ஆங்கிலத்தில் எழுதுவதை விட பரவாயில்லை என்று தான் கூறினேன்.

  தமிழ் புத்தகத்தில் தமிழில் கற்று தமிழில் தேர்வு எழுதுவது தான் சிறந்த முறை என்பதில் சந்தேகம் இல்லை

  ReplyDelete