லூயிஸ் கரோல் (என்னும் புனைபெயரில் எழுதிய சார்ல்ஸ் டாட்சன்) இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒன்று “அற்புத உலகத்தில் ஆலிஸின் சாகசப் பயணம்”. இரண்டாவது “காணும் கண்ணாடிக்கு உள்ளாக”.
காணும் கண்ணாடியில் எல்லாம் இடம் வலமாக மாறித் தெரியும். ஆனால் இந்த உலகத்தில் புகும் ஆலீஸ் மேலும் பல விசித்திரங்களைப் பார்ப்பாள். அதில் காலம் பின்னோக்கிச் செல்லும் (சில இடங்களில் மட்டும்). அதாவது கேக்கை முதலில் கொடுத்துவிட்டு, பிறகு வெட்டவேண்டும். சிகப்பு ராணிக்கு கையில் வலிக்கும், பிறகு ரத்தம் வரும், பிறகுதான் ஊசி குத்தும். இங்குதான் ஆலீஸ் ஜாபர்வோக்கி என்னும் அற்புத உளறல் பாட்டைப் படிப்பாள். ட்வீடில்டம், ட்வீடில்டீயுடன் உரையாடுவாள். ஹம்ப்டி டம்ப்டியுடன் விவாதிப்பாள்.
சதுரங்கக் களத்தில் எதிரெதிர் அணிகளில் சிகப்பும் வெள்ளையுமான வண்ணங்கள் கொண்ட அணிகள். (கறுப்புக்கு பதில் சிகப்பு.) அந்தச் சிகப்பு ராணியுடன்தான் ஆலீஸ் உரையாடுவாள். ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியின்கீழ் இருக்கும் சிகப்பு ராணி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்குவாள். அவளைப் பற்றிக்கொண்டு ஆலீஸும் செல்வாள். வேகம், வேகம், வேகம், வேகம். இன்னும் வேகம். காதுகளில் காற்று விஷ்ஷென்று ஓசையிட, மூச்சு முட்ட, பறந்துமுடித்து அவர்கள் கீழே இறங்கும்போது அதே மரத்தடியின்கீழே இருப்பார்கள்.
அதிர்ச்சியுற்ற ஆலீஸ் கேட்பாள்: “அதெப்படி, இவ்வளவு வேகமாகச் சென்றும் கிளம்பிய அதே இடத்திலேயே இருக்கிறோம்? எப்படித்தான் முன்னோக்கிச் செல்வது?”
சிகப்பு ராணி சொல்வாள்: “அதே இடத்திலேயே இருப்பதற்கே இவ்வளவு வேகமாகச் செல்லவேண்டும். முன்னோக்கிச் செல்லவேண்டுமானால், இதைவிட இரண்டு மடங்கு வேகம் தேவை!”
பரிணாம வளர்ச்சியிலும் அதே இடத்திலேயே இருக்க (அதே நன்மையைப் பெற), ஓர் உயிரினம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மற்ற உயிரினங்கள் முன்னேறிச் சென்றுவிடும். இருக்கும் இடத்திலேயே இருப்பது என்பது பின்தங்கிவிடுவதாகும்.
இதைத் தலைப்பாகக் கொண்டு “The Red Queen: Sex and the Evolution of Human Nature” என்ற அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளார் மேட் ரிட்லி.
பரிணாம வளர்ச்சியின்போது, பல உயிரினங்கள் ஏன் பாலுறவைத் தேர்ந்தெடுத்தன? பல உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உடலுறவு ஏன் தேவை? அப்படி இல்லாமலேயே இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் இருக்கின்றனவே? எது சிறந்தது? உடலுறவுமூலம் இனப்பெருக்கம் செய்தலா, உறவே இல்லாமல் தானே இரண்டாகப் பிளப்பதன்மூலம் (அல்லது அதுபோன்ற சில செயல்பாடுகளின்மூலம்) இனப்பெருக்கம் செய்தலா?
பால் வேறுபாடு தோன்றி, பாலினப்பெருக்கம் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம் உயிரினங்களைத் தாக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவே என்கிறார் ரிட்லி. அ-பால் இனப்பெருக்கத்தில் ஒவ்வொரு குழந்தையும் தாயை (தந்தையை) போன்றது. அச்சாக அதே மரபணுவைக் கொண்டது. இப்படிப்பட்ட உயிரினத்தை ஒட்டுண்ணி ஒன்று தாக்கி வெற்றிகண்டால், அந்த உயிரினத்தின் உறுப்பினர்களால் எளிதில் ஒட்டுண்ணியை எதிர்த்து தப்பிக்கமுடியாது. ஆனால் பாலினப்பெருக்கத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தன்மை வாய்ந்த மரபணு டி.என்.ஏ கிடைத்துவிடுகிறது. இரண்டு சீட்டுக்கட்டுகளைக் குலுக்கிப்போட்டு கலைத்து அவற்றில், இதிலிருந்து ஒன்றும் அதிலிருந்து ஒன்றுமாக எடுத்து (ஆனால் ஒரு ஹார்ட் 7, ஒரு கிளப் 3 என்றுதான் இருக்கமுடியும், அதன் பின்னுள்ள பேட்டர்ன்தான் மாறியிருக்கும்) ஒரு புது பேட்டர்னை உருவாக்குவதுதான் பாலினப்பெருக்கத்தின் நோக்கம்.
இப்படி மாறும் டி.என்.ஏக்கள் இருக்கும் இடத்தில் ஒட்டுண்ணிகள் அவற்றைத் தாக்க புதுப்புது யுத்திகளை உருவாக்கவேண்டியுள்ளது. அவற்றில் எப்போதும் இந்த ஒட்டுண்ணிகளால் வெற்றிபெறமுடிவதில்லை.
எவ்வளவு பால்கள் இருக்கலாம். பொதுவாக நம் கண்ணில் படும் உயிரினங்களில் இரண்டு பால்கள்தான் உள்ளன. சில உயிரினங்கள் இருபாலினத்தவை. அதாவது அவை ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே நேரத்தில் உள்ளன. மண்புழு போன்றவை இப்படித்தான். ஒரே மண்புழுவே ஆணாக விந்துகளையும், பின் மற்றொரு நேரம் பெண்ணாக முட்டைகளையும் உருவாக்கும். இரண்டு தனித்தனி பாலுறுப்புகள் இவற்றுக்கு உண்டு. ஆண் உறுப்புடன் மற்றொரு புழுவின் பெண்ணுறுப்புடனும், பின்னர் பெண் உறுப்புடன் மற்றொரு புழுவின் ஆணுறுப்புடனும் உறவு கொள்ளும். இவற்றுக்கு ஹெர்மாஃப்ராடைட் என்று பெயர். சில உயிரினங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட பால்களும் உண்டாம். ஆனால் மொத்தத்தில் பரிணாம வளர்ச்சியில் பால்கள் இரண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தை எந்தப் பால் என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? பல உயிரினங்களில் செக்ஸ் குரோமோசோம்கள் இதனைத் தீர்மானிக்கின்றன. மனிதர்களில் XX குரோமோசோம் என்றால் பெண். XY என்றால் ஆண். விந்தும் முட்டையும் இணையும்போதே இது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் எல்லா உயிரினங்களிலும் இப்படியில்லை. சில உயிரினங்கள் ஒரு பாலாக இருந்து, சூழலுக்குத் தக்கவாறு மற்றொரு பாலாக மாறுகின்றன. வேறு சில உயிரினங்களில் முட்டை எந்த வெப்பத்தில் பொறிகிறது என்பதிலிருந்து பிறக்கும் குழந்தையின் பால் தீர்மானிக்கப்படுகிறது. ஹாப்லோடிப்லாய்ட் என்ற வம்சத்தில் வரும் உயிரினங்களில் (எறும்பு, தேனீ போன்றவை) முட்டை, விந்துடன் சேர்ந்தால் பெண், சேராவிட்டால் ஆண். அதாவது பெண்ணுக்கு ஆணைவிட இரண்டுமடங்கு குரோமோசோம்கள்.
ஆனாலும் ஓர் உயிரினத்தில் பெண்ணாகவே வேண்டும், அல்லது ஆணாகவே வேண்டும் என்று சிலர் முடிவெடுக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பெண்ணும் ஆணும் இருந்தாகவேண்டும். இல்லாவிட்டால் அதை நோக்கி சமூகம் உந்தித் தள்ளப்படும். குறுகிய காலகட்டத்தில் ஒரு பாலுக்கு “மவுஸ்” இருந்தாலும் (உதாரணத்துக்கு இப்போது இந்தியாவில் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வம்) நெடும் காலகட்டத்தில் இது சமத்தன்மையை அடைந்துவிடும்.
ரிட்லி, அடுத்து பல உயிரினங்களில் ஆண்கள் ஏன் சிறப்பு உடலமைப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதை விளக்குகிறார். அதாவது மயிலின் தோகை, சேவலின் கொண்டை போன்றவை. இத்தனைக்கும் இந்த உடலமைப்புகளின் காரணமாக அந்த உறுப்பினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆனாலும் எதிர் பாலினத்தைக் கவர இப்படியான சிறப்பு உறுப்புகள் அல்லது இருக்கும் உறுப்பின் தன்மை மாறி “மேலும் மேலும் அழகாக” உருமாறுகிறது. இந்த விவாதத்தில் நம் வாசகர்களுக்கு மிகவும் முக்கியமான மனிதப் பெண்களின் உருவத் தோற்றம் பற்றியும் வருகிறது. மனித ஆண் ஏன் 35-22-35 என்ற மனிதப் பெண் தோற்றத்தை விரும்புகிறான்? பெருத்த மார்பகம், குறுகிய இடை, அகலமான கீழ்ப்பக்கம் ஏன் முக்கியம் என்று மனித ஆணின் மூளையில் பதிந்துள்ளது? (விடை பின்னர் மற்றொரு சமயம்!)
ரிட்லி அடுத்ததாக, ஆண் ஏன் எப்போதும் பல பெண்களுடன் (மனித இனத்தில் மட்டுமல்ல, பிற இனங்களிலும்) பாலுறவை நாடுகிறான்; பெண் ஏன் முடிந்தவரை ஓர் ஆணுடன் மட்டுமே உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்ற கேள்வியை ஆராய்கிறார். (பல ஆராய்ச்சியாளர்களும் பரிணாம வளர்ச்சிக் கொள்கைமூலம் இதனை நன்றாகவே விளக்கியுள்ளனர்.) இரு பால்களுக்குமே இப்படி நடந்துகொள்வதில்தான் அவரவரது மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு அனுப்புவதில் அதிக வெற்றியைப் பெறமுடிகிறது.
ஆண், பெண் என்ற இரண்டு பால்கள் பிரிந்துவிட்டன என்றால் இரண்டின் உருவங்களும் அவற்றின் உடல் பாகங்களும் அவரவரது வேலைகளுக்கு ஏற்ப மாறவேண்டும். அப்படியானால் மனிதப் பெண்களின் மூளையும் மனித ஆண்களின் மூளையும் எப்படி வளர்ந்துள்ளன என்பதை ரிட்லி அடுத்து விளக்குகிறார். ஒருபால் உறவின்மீது (homosexuality) ஏன் ஆண்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு கொஞ்சம் பதில் கிடைக்கிறது.
கடைசியாக, எப்படி பிற உயிரினங்கள் தங்களது உடலின் பாகங்களை தங்களது எதிர்-பாலை ஈர்க்கப் பயன்படுத்திகின்றனவோ, அதைப்போல மனித இனத்தில் மூளையையும் அதன் சக்தியையும் எதிர்-பாலை ஈர்க்கப் பயன்படுத்துகிறோம் என்று விளக்குகிறார் ரிட்லி. சொல்லப்போனால் மனித மூளையின் வளர்ச்சியே செக்ஸ் என்பதற்காகத்தான் என்பது இவரது வாதம். இந்த உலகில் பிற உயிரினங்களை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தவேண்டுமானால் மனித மூளை இந்த அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருக்கவேண்டியதில்லை. ஆனால் ஓர் ஆண் பிற ஆண்களுடன் போட்டிபோட்டு, ஒரு பெண்ணை அடைய; ஒரு பெண் பிற பெண்களுடன் போட்டிபோட்டு தன் ஆணைத் தக்கவைத்துக்கொள்ள மூளை பெரிதாக வளரவேண்டியதாயிற்று என்கிறார்.
ஆக, மனித மூளை வளர்ச்சி என்பதே “அதற்காக” மட்டும்தானா? :-)
The Red Queen, Sex and the Evolution of Human Nature, Matt Ridley, Penguin.
(புத்தகம் இரவல் கொடுத்த டாக்டர் ஷாலினிக்கு நன்றி.)
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
Evolution is for 'that' only, so Adam and Eve theory works! (some words are still tough for me to understand)
ReplyDeleteOne Guruji famously told, that life is for procreation only!
Moves generation after generation.
So where does Dr Shalini practice? US?
(I am not sure the Ridley character in Bee Movie, is associated with this author)
//35-22-35 //
ReplyDelete36-28-36 !!!
அப்படியா சங்கதி, ஷாலினியின் அரைவேக்காட்டு கட்டுரைகளுக்கு
ReplyDelete'அடிப்படை' இது போன்ற
நூல்களா?
பாலுறவு அற்ற இனப்பெருக்கம் (eg. self-replication) என்பதை பார்க்கும் போது, மரணம் என்ற வார்த்தையே சுவாரசியமான பொருள் படும்! நானே இரண்டாகப் பிளந்துப் பெருகினால், நான் எங்கே சாகிறேன்? மரணம் என்பதே இல்லை!
ReplyDelete// ஆக, மனித மூளை வளர்ச்சி என்பதே “அதற்காக” மட்டும்தானா? :-)
அது மட்டுமில்லை பத்ரி! சாவே “அது”னால தான் வந்தது! :-)
உங்களின் (கடந்த சில மாதங்களாக)புது வாசகன்,
விகடகவி
//அப்படியா சங்கதி, ஷாலினியின் அரைவேக்காட்டு கட்டுரைகளுக்கு
ReplyDelete'அடிப்படை' இது போன்ற
நூல்களா?//
நீங்கள் எழுதிய முழுதும் வெந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பை அளித்தீர்களென்றால் என் போன்றவர்கள் அதையும் படித்து பேறு பெறுவோம் :) :)
wow, that's a good translation!
ReplyDeleteBut the philosophy of the Red Queen (viz; the more that the things change, the more they are the same...)would require further explanations perhaps? on second thoughts, let's save it up for our book:)