Sunday, July 27, 2008

விலையனூர் ராமச்சந்திரனுடன் சந்திப்பு

யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா, சாண்டியாகோவில் உளவியல் மற்றும் நரம்பியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ள ராமச்சந்திரன் தற்போது சென்னையில் உள்ளார். அவரது நண்பர்கள் சிலர், இந்தியவியல் (Indology) பற்றிப் பேச, ஒரு பிரத்யேக சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ராமச்சந்திரன், மூளை, மனிதன், தன்னையறிதல், பொய் அவயங்கள் (phantom limbs), நியூரான்களின் இயக்கம் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசினார். இவை பற்றி அவர் ஏற்கெனவே பல பேச்சுகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் யூடியூப், பிபிசி ஒலிப்பதிவுகள், TED வீடியோ பதிவு ஆகியவை இணையத்தில் எக்கச்சக்கமாகக் கிடைக்கும்.

மூளையில் உள்ள 100 பில்லியன்களுக்கும் மேலான நரம்பணுக்கள் (neurons) உள்ளன. இவை கண், காது, மூக்கு, மேல்தோல் ஆகியவை உணரும் புற உலக சிக்னல்களை சேமித்து மூளையின் சில பாகங்களுக்கு அளிக்கின்றன. மூளை இந்த சிக்னல்களை ஆய்ந்து சில கருத்துகளை உருவாக்கிக்கொள்கிறது. இந்தக் கருத்துகளுக்கு இணங்க உடலின் சில பகுதிகளை சில வகைகளில் இயங்கவைக்கிறது.

சிலருக்கு ஏற்படும் விபத்துக்களால் அவர்களது பாகங்களை வெட்டவேண்டியிருக்கும். ஒருவருக்கு அவரது கையை வெட்டவேண்டியிருக்கும் என்று வைத்துக்கொள்வோம். கையே இல்லாதுபோனாலும் அவரது மூளையின் ஒரு பகுதி அந்த இடத்தில் கை இருப்பதாக நினைத்துக்கொள்கிறது. அதுவும் அந்தக் கை வளைந்து திருகியநிலையில் அவரது மூளையில் வலி என்ற உணர்ச்சி பதிவாகி இருக்கும்போது அந்தக் கை வெட்டப்பட்டிருந்தால் அவரது மூளையில் வலியும் சேர்ந்து பதிவாகி, கை இருப்பது போலவும், அந்தக் கை திருகிய நிலையில் இருப்பது போலவும், அந்த இடம் கடுமையாக வலிப்பது போலவுமான நினைவு இருந்தபடியே உள்ளது.

இப்படி ஒரு நோயாளி ராமச்சந்திரனிடம் வந்திருக்கிறார். உளவியல் மருத்துவர்களால் குணமாக்கமுடியாத இந்த நோயை ராமச்சந்திரன் ஒரு கண்ணாடியை வைத்து குணமாக்கியதைச் செய்து காட்டினார். இடடுகை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வலது கைக்கு முன் கண்ணாடியை வைத்து, கண்களால் இடது கை இருக்கும் இடத்தைப் பார்த்து வலது கையைத் திருப்பவதன், நகர்த்துவதன்மூலம் இடது கை நகர்வதைப் போன்ற தோற்றத்தை கண்ணுக்கும், அதன் வழியாக மூளைக்கும் அனுப்பி, திருகிய “பொய்க்கை”யை நேராக்கி, வலியை நிவர்த்தி செய்ததாக விளக்கினார் ராமச்சந்திரன். இவரது Phantoms in the Brain பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.

மனித உடலில் ஒரு சிறு பாகத்தில் குண்டூசி குத்தும்போது, அதுபற்றிய சிக்னல்கள் கண் பார்வை வழியாகவும் செல்கிறது; தோல் வழியாகவும் செல்கிறது. “வலி” என்ற உணர்ச்சி ஏற்படுகிறது. கையைச் சடாரென இழுக்க உதவுகிறது. அதேபோல பக்கத்தில் நிற்கும் ஒருவரது கையில் குண்டூசியால் குத்தும்போதும் நமது கண்கள் அதைப் பார்க்கும்போது வலியை உணர்ந்து பக்கத்தில் இருப்பவருடன் “empathaise" செய்யமுடிகிறது. பரிவு காட்ட முடிகிறது. ஆனால் தோல் உணர்ச்சி என்பது இல்லாததால் உடனடியாகக் கையை இழுக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கிறது.

“பார்வை என்பது மூளையை அது அடைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு வெளியே எடுத்துச் சென்று பிற உயிர்களுடன் ஒன்றானதாக ஆக்குகிறது. இது கீழைத்தேய மெய்யியல் சிந்தனைகளுடன் ஒத்துவருவது” என்றார் ராமச்சந்திரன். சிலர் வள்ளலாரின் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற பாடலை நினைவுகூர்ந்தனர்.

சிரிப்பு என்றால் என்ன என்று ஒரு கேள்வி எழுந்தது. சிரிப்பு என்பது வலிக்கு ஒத்த உறவுடையது என்று தான் கருதுவதாகச் சொன்னார் ராமச்சந்திரன். “ஒருவர் நடந்துவரும்போது வாழைப்பழத்தோல் வழுக்கிக் கீழே விழுகிறார். தலை அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது. பக்கத்தில் நிற்கும் சக மனிதன் உடனடியாகப் பரிவு காட்டி, கீழே விழுந்தவரைத் தூக்கி நிறுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். இங்கே வலியை இவனும் உணர்கிறான். ஆனால் அதே ஆள், கீழே விழுந்து அடிபடவில்லை என்றால் உடனே கெக்-கெக்-கெக் என்று சிரிக்கிறான். அதாவது கீழே விழுந்தவருக்கு அடி இல்லை, அதனால் பதறவேண்டிய அவசியம் இல்லை, பதற்றத்தைத் தணித்துக்கொள் என்பதற்கான நெர்வஸ் ரியாக்‌ஷன்தான் சிரிப்பு” என்றார் ராமச்சந்திரன்.

ESP, பார்வையான் ஸ்பூனை வளைப்பது, ஆன்ம சக்தியை வைத்து பொருள்களை உருவாக்குவது (materialisation) போன்றவை பற்றிப் பேச்சு வந்தது. அவையெல்லாம் “புருடாக்கள்” என்பது தன் எண்ணம் என்றார். எந்த சோதனைக்களத்திலும் இந்த வாய்ச்சவடால் வீரர்கள் தங்களது சோதனைகளைச் செய்துகாட்ட ஒப்புக்கொள்வதில்லை. அறிவியல் என்பது சோதனைகளை மீண்டும், மீண்டும் செய்துகாட்ட விரும்புவது. ஆனால் இந்தத் திறமைகள் இருப்பதாகச் சொல்பவர்கள் இவற்றைச் செயல்படுத்திக் காட்டுவதில்லை. தங்களை ஏற்கெனவே நம்புவோர்களிடம்மட்டுமே “காட்டுகிறார்கள்”.

ஆனால் near-death experience, deja-vu போன்றவை அறிவியல்பூர்வமாக விளக்கக்கூடியவையே என்றார். தன்னுடைய நோயாளி ஒருவரைப்பற்றிச் சொன்னார். அவருக்கு மூளையின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அடிபட்டு, கொஞ்சம் பழுதாகிவிட்டது. தனது தாயின் குரலைக் கேட்டால் அவரால் அது தன் தாய் என்று சரியாகச் சொல்லிவிடமுடியும். ஆனால் தாய் முன்னர் வந்து நின்றால், “இந்த அம்மா, என் தாயைப் போல இருக்கிறார்கள், ஆனால் தாயில்லை, வேறு யாரோ ஓர் ஏமாற்றுக்காரி” என்றாராம். சில ஏற்கெனவே பார்த்த பொருள்களை ஓரளவுக்கு ஞாபகம் வைத்திருக்கும் மூளைப் பகுதி, அதே நேரம், “recall” என்ற சக்தியை ஒரு மாதிரியாக இழந்துவிடுகிறது. பார்க்கும் பொருள் எங்கேயோ பார்த்ததுபோலத் தோறுகிறது. ஆனால் அதன் உறவு, எப்போது, எதற்காகப் பார்த்தோம் என்ற தகவல் எல்லாம் போய்விடுகிறது. இதன் காரணமாகவே சிலர் “இதை என் முன் ஜன்மத்தில் பார்த்தேன்” என்று கதை விடுகிறார்கள்.

Near-death experience - சாவதைப் போன்ற ஒரு நிகழ்வில், (பஸ் மோதுகிறது; உயிர் போகவில்லை, ஆனால் போவதுபோன்ற நிலைமை), மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து நினைவு தப்பி, பல விஷயங்கள் மூளையில் குழம்பிவிடுகின்றன. மீண்டும் போராட்டத்துக்குப் பிறகு நினைவு வரும்போது “எமன் உலகுக்கே சென்று திரும்பிவந்தது” போன்ற சிந்தனை இருக்கும். பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றும்.

(என் தந்தைக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்தமுடித்த மறுநாள் தீவிர ஐ.சி.யுவில் வெண்டிலேட்டரில் இருந்தார். அந்த நாள் அவரது நினைவில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அடுத்த நாளிலிருந்து அவர் கணக்கு வைத்திருந்தார். எப்போது பார்க்கப் போகும்போதும் தான் மருத்துவமனைக்கு வந்து இத்தனை நாள்கள் ஆகியுள்ளன என்று ஒரு நாள் குறைத்தே சொல்வார். செவ்வாய் அன்று, “இன்று திங்கள்தானே” என்று சொல்லி நர்ஸ்களிடம் சண்டை போடுவார். அவர்களும் கிழவரிடம் எதற்கு சண்டை என்று விட்டுவிடுவார்கள். வீட்டுக்கு வந்தும் அவருக்கு எப்படி ஒரு நாள் காணாமல் போனது என்று ஒரே குழப்பம். பின் அவருக்கு விளக்கமாக இதனைச் சொல்லிப் புரியவைத்தேன்.)

***

மூளையிலிருந்து இந்தியவியல், இந்திய மொழிகளின் வரிவடிவங்கள், இந்திய கலாசாரம், சிற்பம், ஓவியம், இந்தியர்கள் ஏன் தங்களது கலைகளை, வரலாற்றை, இதிஹாசத்தை காப்பாற்றி வைக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது பற்றிப் பேச்சு வந்தது.

தன்னை ஒரு “லெஃப்ட் ஆஃப் தெ செண்டர்” (இடது பக்கம் சாய்பவர்) என்று சொல்லிக்கொண்ட ராமச்சந்திரன், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினால் ஹிந்துத்வா என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பதாலேயே இடதுசாரி அறிவுஜீவிகள் இந்த இதிஹாசங்களின் வரலாற்றுத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள் என்றார்.

டிராய், அலெக்சாண்ட்ரியா அகழ்வாராய்ச்சி பற்றிய பேச்சுகளைத் தொடர்ந்து, துவாரகா, சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி, பூம்புகார், லெமூரியா ஆகியவற்றைப் பற்றியும் பேச்சு வந்தது. சேதுக்கால்வாய் பற்றியும் பேச்சு வந்தது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, இன்னபிற தமிழக அகழ்வாராய்ச்சிகள் பற்றியும் அவை எவ்வளவு மோசமாக உள்ள தலங்கள் (ஒரு பெயர்ப்பலகைகூடக் கிடையாது) என்பது பற்றிப் பேச்சு வந்தது.

மவுரியன் பிராமி, தமிழ் பிராமி வரி வடிவம், தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவு (ஃபின்லாந்து மொழிக்கும் உள்ள உறவு) ஆகியவை பற்றி மேலோட்டமான பேச்சு இருந்தது.

ஒரு கட்டத்தில் அனைவருக்கும் கிளம்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதால் கூட்டம் திடீரெனக் கலைந்து அவரவர் கிளம்பிவிட்டனர்.

7 comments:

  1. Very very interesting Post.

    Thanks a lot for sharing.

    ReplyDelete
  2. செம்மங்குடி பற்றிய கட்டுரையை படித்தீர்களா? இசையின் வடிவம் மனதினுள் எழுப்பும் உணர்வுகள், படிமங்கள் குறித்து சொல்லியிருக்கிறார்.Infact he did dedicate his 'phatoms in the brain' to semmangudi.


    “Whenever I travel to give a lecture, I listen to a song by Semmangudi in my car. It elevates you to another plane and then the lecture goes off very smoothly. If you ask me why or what is going on in the brain, I still don’t know.”

    "Artistry, I persist, cannot be explained by science. But does science acknowledge that different faculties of the brain manifest themselves in different aspects of music?

    “Undoubtedly, yes,” exclaims Dr. Ramachandran. “There is clearly something going on in the brain. But it may not merely be that. I adopt a point of view which is called being a Platonist in philosophy, which is very unfashionable because modern philosophers are realists. They believe that there are atoms and molecules, and everything else follows. The fallacy here is to argue that because you have explained something, you have explained it away. Contrary to this view, Plato insisted that there are other realms of reality. Each realm has its own laws and acquires its own beauty once it has emerged. "

    ReplyDelete
  3. //தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவு//

    நானும் இது குறித்து சில கட்டுரைகளை படித்திருக்கிறேன்.

    //கீழே விழுந்து அடிபடவில்லை என்றால் உடனே கெக்-கெக்-கெக் என்று சிரிக்கிறான். அதாவது கீழே விழுந்தவருக்கு அடி இல்லை, அதனால் பதறவேண்டிய அவசியம் இல்லை, பதற்றத்தைத் தணித்துக்கொள் என்பதற்கான நெர்வஸ் ரியாக்‌ஷன்தான் சிரிப்பு”//

    கவுண்டமனி - செந்தில் இணை ஏன் வெற்றி பெற்றது என்று இப்பொழுதுதான் புரிகிறது :) :)

    ReplyDelete
  4. சொல்ல மறந்து விட்டேன்

    அந்த புகைப்படத்தை சரியான கோனத்திலிருந்து எடுத்திருக்கிறீர்கள்

    :) :)

    ReplyDelete
  5. http://en.wikipedia.org/wiki/Vilayanur_S._Ramachandran

    ReplyDelete
  6. It will be really interesting if you could share more of ramachandran's ideas on the Indology subject.

    What he said is completely true. Anything that is indian in origin is Hindutva for the leftists.

    ReplyDelete
  7. Check TED web site for his speech on this topic..very interesting.

    ReplyDelete