Sunday, July 13, 2008

பாபா ஆம்டே (ஆம்தே)

(Baba Amte, Anita Kainthla, Viva Books, 2005, Rs. 195)

முரளிதர் ஆம்டே கடந்த சில மாதங்களுக்குமுன் காலமானார். இவரைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாளில் படித்திருக்கிறேன். நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மேற்கண்ட புத்தகத்தை எழுதிய ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.

***

முரளி ஆம்டே மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தில் 26 டிசம்பர் 1914-ல் பிறந்தவர். நல்ல வசதியான பின்னணி. வக்கீலுக்குப் படித்து, வார்தாவில் அந்தத் தொழிலில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் மஹாத்மா காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டு, காந்தியவாதியாக மாறினார்.

சுதந்தரத்துக்குப் பிறகு, வாரோரா நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நகராட்சி “எடுப்பு கக்கூஸ்” சுத்திகரிப்பு ஊழியர்கள் சம்பளம் உயர்த்தச் சொல்லிக் கேட்டனர். முரளி ஆம்டே நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். அவர்கள், கக்கூஸ் சுத்திகரிப்பது என்பது மிகவும் கடுமையான வேலை, யாராலும் இதனைச் செய்யமுடியாது என்றனர். “ஏன்? நான் செய்து காட்டுகிறேன்” என்று இறங்கினார் ஆம்டே. முதல் நாள், முதல் கக்கூஸை சுத்தம் செய்வதற்குள் உயிர் போய்விட்டது. அப்போதுதான் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எந்த மோசமான நிலையில் வேலையில் ஈடுபடுகின்றனர் என்பதைப் புரிந்துகொண்டார். அடுத்த 9 மாதங்கள், நாளைக்கு 40 கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலையை, பிற சுத்திகரிப்புத் தொழிலாளர்களுடன் சேர்ந்து செய்தார்.

ஆம்டே, சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் யூனியனின் தலைவராகவும் இருந்தார். எனவே “தீண்டத்தகாதவர்கள்” வீடுகளுக்குப் போய்வந்தார். இதனால் அவரது பெற்றோரும் கிராமத்தவரும் அவரிடம் இருந்து விலகியே இருந்தனர்.

ஆம்டே, இந்தியாவில் நிலவிவந்த கடுமையான சாதிப் பிரிவினைகளை எதிர்க்கத் தொடங்கியது அப்போதுதான். தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு டீக்கடைக்கு வருவார். அவர்களுக்கு தனி டீ கிளாஸ் கொடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பார். இந்து மதத்தின் மீதான நம்பிக்கை அவருக்குப் போக ஆரம்பித்ததும் அப்போதாகத்தான் இருக்கவேண்டும். அப்போது நாத்திகராக மாறிய ஆம்டே தன் உயிர் போகும் வரையில் நாத்திகராகவே இருந்திருக்கிறார்.

இந்து மதத்திலிருந்து விலகினாலும், இந்து என்ற பெயர்கொண்ட பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். அதுவும் சுவாரசியமான கதை. ஒரு மாதிரியான சாமியாராக, தாடி மீசையுடன், கதராடையுடன் அவர் அலைந்துகொண்டிருந்தார். திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என்ற உறுதியில் இருந்தார். ஆனால் உறவினர் திருமணம் ஒன்றில் இந்து என்ற தூரத்து உறவுப் பெண்ணைப் பார்த்தார். வயது மிகவும் குறைந்த பெண் அவர். இருந்தாலும் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்பட்டது. காதல் கடிதங்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். பெற்றோர்களின் எதிர்ப்பைமீறி அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தது.

கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை பிறந்தபிறகுதான் ஆம்டேக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஒன்று ஏற்பட்டது.

***

ஒரு நாள் கொட்டும் மழையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆம்டே, தெருவில் ஒரு தொழுநோய் ரோகியைக் கண்டார். கை, கால் விரல்கள், மூக்கு, காது ஆகியவை இல்லாத, உடல் அழுகி நாற்றம் எடுக்கும், விரைவில் உயிர் பிரியப்போகும் ஒரு மாமிச மூட்டையாகத் தெருவில் கிடந்த ஓர் உருவத்தை நடைபாதையில் கண்டார். முதலில் அருவெறுப்பு. கிட்டத்தட்ட வாந்தியே வர, அங்கிருந்து ஓடி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அன்று இரவு முழுதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சக மனிதன், நோயால் திண்டாடும் ஒருவன், என் தனக்கு அருவெறுப்பைத் தரவேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருந்தார். அடுத்த நாள், வீட்டிலிருந்து ஒரு போர்வையைக் கொண்டுபோய் அந்த சாகும் உருவத்தின்மீது போர்த்தி, அதன் பக்கத்திலேயே இருந்தார். உடலின் புண்களைத் துடைத்து மருந்திட்டு பார்த்துக்கொண்டார். இரண்டு மூன்று நாள்களில் அந்தத் தொழுநோயாளி இறந்துபோனார். ஆனால் தொழுநோயாளிகளுக்கு ஒரு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற புத்துணர்ச்சி ஆம்டேக்குள் பிறந்தது.

தொழுநோயாளிகளுக்கு மருந்துகொடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள் யாருக்கும் விரும்ப்பம் இல்லை. அது தொற்றுநோய் என்று பயந்தனர். (உண்மையில் தொற்றுநோய்களுக்குள்ளாக, மிகக் குறைவாக அடுத்தவரைப் பிடித்துக்கொள்ளக்கூடிய நோய் இது.) எனவே தானே தொழுநோய்க்கு மருத்துவம் செய்யும் படிப்பைப் படிக்க முடிவுசெய்தார். இவரது பின்னணியோ சட்டப்படிப்பு. ஆனால் அப்போது ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். அவரது சிபாரிசில், ஆம்டே கொல்கத்தாவில் இருந்த Tropical School of Medicine-ல் 1949-ல் சேர்ந்தார். அங்கு தொழுநோய்க்கான அடிப்படை சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார்.

1951-ல் மத்தியப் பிரதேச அரசு, தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைக் கட்ட ஆம்டேக்கு 50 ஏக்கர் நிலத்தை அளித்தது. சரியான காட்டு நிலம். பாறைகள். காட்டு விலங்குகள். தண்ணீர் கிடையாது. அந்த இடத்துக்கு தன் மனைவி, சிறு குழந்தை, சில தொழுநோயாளிகள், ஒரு நொண்டிப் பசு, 4 நாய்கள், கையில் ரூ. 14 ஆகியவற்றுடன் ஆம்டே சென்று சேர்ந்தார். அந்த இடத்துக்கு ஆனந்தவனம் என்று பெயரிட்டார்.

முதலில் தொழுநோயாளிகள் உதவியுடன் கிணறு தோண்டினார். குடில்கள் அமைத்துக்கொண்டார். அவர்கள் கொண்டுசென்ற நான்கு நாய்களையும் சிறுத்தைகள் பிடித்துச் சென்று தின்றுவிட்டன. மாடு தப்பித்தது. சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு மேலும் சில மாடுகளை தானமாக அளித்தன. அந்த மாடுகளின் பாலை விற்று பணம் சேர்த்து அதில் பிழைக்க அவர்கள் எண்ணினர். ஆனால் தொழு நோயாளிகள் கை பட்ட பாலாக இருக்குமோ என்ற பயத்தில் பக்கத்தில் உள்ள கிராமவாசிகள் பாலை வாங்கவில்லை. பின் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டுவந்து காண்பித்து, ஆம்டேயின் மனைவிதான் பால் கறக்கிறார் என்று சொன்னபிறகுதான் பாலை விற்கமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக தொழுநோயாளிகள் உதவியுடன் சுற்றுப்புறத்தில் காய்கறிகள் பயிரிடுதல், தானியங்கள் பயிரிடுதல் ஆரம்பித்தது. விரைவில் அவர்கள் அந்தக் காட்டை பசுமை பொங்கும் நிலமாக மாற்றிவிட்டனர். மேலும் பல தொழுநோயாளிகள் அங்கு வர ஆரம்பித்தனர். வெளிநாட்டு நிதி உதவியுடன் அங்கே தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.

ஆனந்தவனத்தில் தொழுநோய் குணமாக ஆரம்பித்தது. ஆனால் குணமான தொழுநோயாளிகளும் சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தனித்தே இருக்கவேண்டி இருந்தது. எனவே தொழுநோயாளிகள், குணமானவர்கள், பிறர் என அனைவரும் அங்கேயே வசிக்குமாறு அவர்கள் அனைவருக்கும் வசிக்குமிடங்கள் கட்டப்பட்டன. அனைவரும் தத்தம் சக்திக்கு ஏற்ப உழைக்குமாறு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. விவசாயம், பொருள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு, உழைப்பில் நோயை மறந்து தொழு நோயாளிகள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தொடங்கினர்.

தொழுநோயை எதிர்கொள்ள சுற்று வட்டாரத்தில் பல இடங்களில் 1950களில் கிளினிக்குகள் பலவற்றை ஆம்டே கட்டத்தொடங்கினார். 1970களில் தொழுநோயை எதிர்கொள்ள நல்ல மருந்துகள் வர ஆரம்பித்தன. அந்தக் கட்டத்தில் ஆம்டேயின் இரு மகன்களும் டாக்டர் படிப்பை முடிந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு டாக்டருக்குப் படித்த பெண்களை மணம் செய்துகொண்டனர். ஆம்டேக்கு மஹாராஷ்டிர அரசும் பல ஏக்கர் நிலங்களைக் கொடுத்தது. அதில் மேலும் சில இடங்களில் ஆனந்தவனம் போல தொழுநோய் ஒழிப்பில் ஈடுபடும் இல்லங்களைக் கட்ட ஆம்டே முற்பட்டார்.

ஆனால் சில இடங்களில் உள்ளூர் கிராமவாசிகளுக்கும் ஆம்டேக்கும் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

ஒரு கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக் கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.

***

1990களின் ஆரம்பத்தில் பாபா ஆம்டே நர்மதா பச்சாவோ ஆந்தோலனில் ஈடுபடத் தொடங்கினார். நர்மதா அணை கட்டப்பட்டால் பல லட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும் என்பது அணை எதிர்ப்பாளர்களின் கருத்து. ஆனால் அந்தப் போராட்டத்தில் இருக்கும்போது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையில் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்து பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். காந்தி நோவாகாளியில் செய்ததுபோல, ஆம்டே தன் மனைவியுடன் மும்பை சென்று மத ஒற்றுமை பற்றிப் பேசினார். சில மாதங்கள் அங்கே தங்கியிருந்தார்.

ஆனால் காந்திக்குக் கிடைத்த வெற்றி, ஆதரவு, ஆம்டேக்குக் கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம், நர்மதா அணை கட்டப்படுவதிலும் ஆம்டேக்குத் தோல்வியே கிடைத்தது. அவரையும் மேதா பட்கரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து ஜெயிலில் எறிந்தபிறகு அணைப் பகுதியில் நீர் நிரப்பப்பட்டது.

கரடுமுரடான நிலப்பரப்பில் வண்டிகளில் பயணம் செய்தது, ஓயாமல் ஓடியாடி உழைத்தது ஆகிய காரணங்களால், ஆம்டேக்கு 1970களிலேயே முதுகெலும்பில் இரண்டு மூன்று துண்டுகளை எடுக்கவேண்டியிருந்தது. அதனால் இடுப்பிலும் முதுகிலும் பிரேஸ் அணிந்தே அவர் இயங்கிவந்தார். அவரால் உட்கார முடியாது. நிற்கலாம் அல்லது படுக்கலாம். தனது கடைசி 40 வருடங்கள் முழுக்க முழுக்க இப்படியே இயங்கினார் அவர்.

2007-ல் லூகேமியா என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆம்டே பிப்ரவரி 9, 2008-ல் ஆனந்தவனத்தில் உயிர் நீத்தார்.

ராமோன் மாக்சேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் முதற்கொண்டு பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர்.

3 comments:

  1. மிக்க நன்றி பத்ரி. இதை பதிவாக போட்டதற்கு.

    ReplyDelete
  2. Hi Badri,

    Nice post.
    Baba Amte was a true gandian.
    He lived for his principles without any compromise.
    We need many more of them in this period for india's growth and indians' self-awareness.
    Incredible life story of a true service oriented soul.
    Thanks for sharing.

    Best Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete
  3. It is a good informative article. In our country, cini starts, cricket players, politicians are projected as heros and all TV's, papers are giving importance to them.Nobody appreciates the efforts of social workers, army soldiers, eminent docter's engineers etc. Their works are unheeded.

    ReplyDelete