நேற்று இரவு (21 பெப்ரவரி 2004) கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா, சென்னை ஆதரவில் "The World After Open Source" என்னும் தலைப்பில் பிரையன் பெலிண்டார் (Brian Behlendorf) பேசினார். இந்நிகழ்ச்சி பசுல்லா சாலை, ஹோட்டல் ஸ்டார் சிடியில் நடைபெற்றது. 17.30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி இந்திய கால நிர்ணயப்படி 18.30க்குத் தொடங்கியது.
பிரையன் பற்றிய பல விவரங்கள் இணையத்தில் உங்களுக்குக் கிடைக்கும். வயர்ட் அச்சு இதழ் இணையத்தில் தன் பின்னிதழ்களைப் போட நினைக்கையில் அங்கு இணையத்தள நிர்வாகியாகப் பணிபுரியச் சேர்ந்தவர் பிரையன். பின்னர், அந்நிறுவனம் இணையத்திற்கெனப் பிரத்தியேகமாக ஹாட் வயர்ட் இணைய இதழை ஆரம்பிக்க, அதற்கான தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். அப்பொழுது வலைப்பதிவுத் தளங்கள் அனைத்தும் CERN அல்லது NCSA உருவாக்கிய சேவையகச் செயலிகளைப் (webserver software) பயன்படுத்திக்கொண்டிருந்தன. NCSAஏவில் வேலை பார்த்து, மொசாயிக் என்னும் உலாவி மென்பொருளை உருவாக்கிய மார்க் ஆன்றீசன் போன்றோர் அப்பொழுது நெட்ஸ்கேப் நிறுவனத்திற்கு வேலை செய்யக் கிளம்பிக் கொண்டிருந்தனர். [பிற்காலத்தில் நெட்ஸ்கேப்பினை ஏ.ஓ.எல் முழுதாக வாங்கியது, அதன்வழியேதான் இன்றைய மொசில்லா உலாவி நமக்குக் கிடைத்துள்ளது.] பிரையன் NSCA httpd மென்பொருளில் உள்ள ஒருசில பிழைகளைக் கண்டறிந்து (bug fixing) அதனை NCSAவுக்கு அனுப்பியும் அங்கிருந்து சரியான பதில்கள் வரவில்லை, பிழைதிருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால் பிரையனும், மற்ற சில ஒத்த கருத்துள்ளவர்களும் ஒன்றிணைந்து அபாச்சி என்ற இணையத்தள வழங்கி மென்பொருளை உருவாக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் மைக்ரோசாஃப்ட் இணையத்தின் பக்கம் தன் கருத்தைச் சரியாகச் செலுத்தவில்லை. ஆனாலும் மேசைக்கணினிகளில் மீதான் மைக்ரோசாஃப்டின் கட்டுப்பாடு 90% மேல் இருக்கையில், இதுவே சேவையகக் கணினிகளிலும் (servers) சேர்ந்து இருந்தால் உலகை யாராலும் மைக்ரோசாஃப்டிடமிருந்து காக்க முடியாது என்னும் ஒரு ஆதர்சமும் அபாச்சி மென்பொருள் அறக்கட்டளையை முன் நடத்தியது.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
18 hours ago
No comments:
Post a Comment