Wednesday, February 11, 2004

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி

வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் (999 பேரும்) கடைசியாக அம்மாவின் தயவால் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். உங்களின் ஞாபகத்தைக் கிளறும் வகையில் என்ன தேதிகளில் என்ன நடந்தது என்று இதோ கீழே:

மார்ச் 2003: தமிழக அரசு மார்ச் 2003க்குப் பிறகு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் ஒருசில ஓய்வு வசதிகளைக் குறைக்கும் வகையில் நான்கு ஆணைகளைப் பிறப்பிக்கிறது.

ஜூன் 2003: 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியத்தில் கை வைப்பதைக் கண்டித்து ஜூலை முதல் வாரம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவிக்கின்றனர்.

29 ஜூன் 2003: அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைக்காவிட்டால் 2 ஜூலை 2003 முதல் வேலை நிறுத்தம் செய்தே தீருவோம் என்று ஊழியர் சங்கங்கள் அறிவிக்கின்றன.

30 ஜூன் 2003: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் பயமுறுத்துகிறார்.

1 ஜூலை 2003: தமிழக அரசு, அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்களை 30 ஜூன் 2003 நள்ளிரவில் கைது செய்கிறது. உடனே அரசு ஊழியர்களும் 2 ஜூலை 2003இல் நடத்தவிருந்த வேலை நிறுத்தத்தை 1 ஜூலையிலேயே ஆரம்பித்து விடுகின்றனர்.

2 ஜூலை 2003: தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைக்கிறது.

3 ஜூலை 2003: எஸ்மா அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தொடுக்கப்படுகிறது.

4 ஜூலை 2003: தமிழக அரசு எஸ்மா சட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து ஒரு அவசரச் சட்டத்தை இயற்றுகிறது. இந்த அவசரச் சட்டம், அரசுக்கு அதிகப்படியாக ஒட்டுமொத்த வேலை நீக்கல் அதிகாரங்களை வழங்குகிறது.

அரசும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களை ஒட்டுமொத்தமாக நீக்கி விட்டு, புதிய, வேலையில்லாதவர்களை வேலைக்கு எடுப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவை விசாரிக்கும் நீதிபதி P.T.தினகரன், அரசு வீடு புகுந்து கைதுகள் செய்திருப்பதைக் கண்டிக்கிறார். அதே சமயம் வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களையும் கடிந்து கொள்கிறார்.

5 ஜூலை 2003: 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். 2000க்கும் மேற்பட்டவர்கள் (பெண்களும் சேர்த்து) சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

நீதிபதி தினகரன் அரசு ஊழியர் சங்கங்களை வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு எழுதி வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாகச் சொல்கிறார்.

6 ஜூலை 2003: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன், அரசின் வேலை நீக்க ஆணையைத் தடை செய்து உத்தரவிடுகிறார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சைக் கூட்டுகின்றனர். தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி N.தினகர் இருவரும் நீதிபதி P.T.தினகரனின் ஆணையை நிறுத்துகின்றனர்.

அரசு ஊழியர்களிடையே குழப்பமே நிலவுகிறது.

11 ஜூலை 2003: உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு தீர்ப்பில் வேலை நீக்கம் செய்திருப்பது அடிப்படை உரிமைகளை எவ்விதமும் பாதிக்கவில்லை என்றும், அரசு ஊழியர்கள் முதலில் இந்த சச்சரவுகளை தீர்ப்பாயத்தில் (employment tribunal) முறையிட்ட பின்னரே உயர் நீதிமன்றத்துக்கு வரமுடியும் என்றும் சொல்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுவிக்கலாம் என்றும் உத்தரவிடுகின்றனர். ஆனால் நீதிபதிகளோ, 11 வரையிலான ஒவ்வொரு நாள் விசாரணையிலும் தமிழக அரசின் செயலை வன்மையாகக் கண்டித்து வந்திருக்கின்றனர்.

12 ஜூலை 2003: சிறையில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

17 ஜூலை 2003: அரசு ஊழியர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை எடுத்துச் செல்கின்றனர். வழக்கு 21 ஜூலை விவாதத்துக்கு வரும் என்று தலைமை நீதிபதி கரே, நீதிபதிகள் பிரிஜேஷ் குமார், S.B.சின்ஹா ஆகியோர் தீர்மானிக்கின்றனர்.

24 ஜூலை 2003: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் A.R.லக்ஷ்மணன், M.B.ஷா இருவரும் விசாரித்து சமரசம் செய்து வைக்க, தமிழக அரசு வேலை நீக்கம் செய்யப்பட்ட 1.7 லட்சம் அரசு ஊழியர்களையும் 25 ஜூலை முதல் வேலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ள சம்மதிக்கிறது. ஆனால் இந்த ஊழியர்கள் அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் யார் மீதெல்லாம் கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டார்களோ, அவர்கள் மீதான வேலை நீக்கம் நடைமுறையில் இருக்கும்.

25 ஜூலை 2003: 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் வேலைக்குத் திரும்புகிறார்கள். இந்த 12,000 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

26 ஜூலை 2003: வேலைக்குத் திரும்ப அனுமதிக்கப்படாதவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்கிறார்கள்.

31 ஜூலை 2003: எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது. 30,000க்கு மேல் என்கிறது தமிழக அரசு. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் A.R.லக்ஷ்மணன், M.B.ஷா இருவரும் 5,000 பேர்கள் தவிர மீதி அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு சொல்கின்றனர்.

5 ஆகஸ்டு 2003: 6,072 பேர்கள் தவிர மீதி அனைவரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ள தமிழக அரசு சம்மதிக்கிறது. இந்த 6,072 பேர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினால் விசாரிக்கப்படுவர் என்றும், இந்த மூவர் எடுக்கும் முடிவு அரசினைக் கட்டுப்படுத்தும் என்றும், ஊழியர்களுக்கு இந்த முடிவில் குறை இருந்தால் மேற்கொண்டு நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் தீர்ப்பாகிறது.

6 ஆகஸ்டு 2003: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் A.R.லக்ஷ்மணன், M.B.ஷா அரசி ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய எந்த விதமான அனுமதியும் இல்லை என்று தீர்ப்பளிக்கின்றனர். அத்துடன் தமிழக அரசின் பெருந்தன்மையை மிகவும் மெச்சுகின்றனர்.

12 ஆகஸ்டு 2003: தமிழக அரசு ஊழியர் சங்களுக்குக் கொடுத்திருந்த அங்கீகாரத்தை விலக்கிக்கொள்கிறது.

13 ஆகஸ்டு 2003: ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் K.சம்பத், P.தங்கவேல், மலை.சுப்ரமணியன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, வேலை நீக்கப்பட்ட 6,072 அரசு ஊழியர்களின் வழக்கை விசாரிக்க நியமிக்கிறார்.

23 அக்டோபர் 2003: அரசின் மார்ச் 2003 ஆணைகள் நான்கில் இரண்டு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் மற்ற இரண்டும் செல்லும் என்றும் தீர்ப்பு கூறுகிறது. இந்த நான்கு ஆணைகளை எதிர்த்துதான் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

15 நவம்பர் 2003: சென்னையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 2,937 ஊழியர்களில், 587 பேர்களைத் தவிர மீதி அனைவரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லி ஓய்வு பெற்ற நீதிபதிகள் கமிஷன் உத்தரவிடுகிறது.

31 டிசம்பர் 2003: மொத்தமாக 999 பேர்கள் தவிர்த்து, மற்ற அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லி மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உத்தரவுகளை வழங்குகின்றனர்.

8 ஜனவரி 2004: 999 பேர்களும் மேற்கொண்டு நீதிமன்றத்தை அணுகி முறையிட முடிவு செய்கின்றனர்.

9 ஜனவரி 2004: அரசு ஊழியர்கள் ரூ. 1,000க்கு மேற்பட்டு அன்பளிப்பு எதனையும் அனுமதியின்றிப் பெறக்கூடாது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ரூ. 5,000 வரை அன்பளிப்பு பெறலாம்; அதற்கு மேலிருந்தால் அரசிடம் தெரிவிக்க வேண்டும்; அரசின் கொள்கைகளை விமரிசிக்கக் கூடாது; புத்தகங்கள் எழுதக்கூடாது, இதழ்களுக்குக் கட்டுரைகள், கதைகள் எழுதக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்கிறது.

10 பெப்ரவரி 2004: தமிழக முதல்வர் ஜெயலலிதா வேலை நீக்கம் செய்யப்பட்ட 999 பேர்களையும் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஆனால் இவர்களுக்கு நான்கு வருடாந்திர ஊதிய உயர்வுகள் அளிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கிறார்.

No comments:

Post a Comment