விடுதலை, கட்டுரைத் தொகுப்பு, அன்ரன் பாலசிங்கம், பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), P.O.Box 2454, Mitcham, Surrey CR4 1WB, England, நவம்பர் 2003, பக். 256, விலை UKP 9.50
('அன்ரன்', 'பெயர்மக்ஸ்' போன்றவை புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளவை. அதுபோன்றே ஈழத்தமிழில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)
அண்டன் பாலசிங்கம் விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அக்கூட்டத்தின் தலைமைக் கருத்தியலாளர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நேரடியாக ஈடுபட்ட சில பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம் எப்பொழுதுமே பிரபாகரன் பக்கத்தில் இருந்திருக்கிறார். அதுதவிர இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வேயின் உதவியுடன் நடந்த, பிரபாகரன் ஈடுபடாத, அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாக தலைமையேற்றது பாலசிங்கமே.
விடுதலை என்னும் பாலசிங்கத்தின் கட்டுரைத்தொகுதி வெளியானபோது இந்திய செய்தித்தாள்கள் அனைத்திலும் இந்தப் புத்தகத்தின் முதலிரண்டு கட்டுரைகள் முதற்பக்கச் செய்திகளாயின. நானும் அப்பொழுது இந்த கட்டுரைத் தொகுதி, ஒரு பிரடெரிக் போர்சைத் நாவலின் வேகமான பகுதிகளைப் போன்று புலிகளின் வீரதீரச் செயல்கள், ஜெயிலுடைப்பு, ஆரம்ப காலத்தில் மற்ற போராளி இயக்கங்களுடன் சண்டை போட்டு, பின்னர் பிற இயக்கங்கள் அனைத்தையும் ஆயுத ரீதியாக செயலிழக்கச் செய்தது, எம்ஜியார், ராஜீவ் காந்தி போன்ற இந்தியத் தலைவர்களுடனான உறவுகள் என்ற மாதிரியே இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகம் மூன்று நாள்களுக்கு முன்னர்தான் எனக்கு படிக்கக் கிடைத்தது.
பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட 'வெளிச்சம்' எனும் ஏட்டில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளுடன் அவசர அவசரமாக எழுதிச்சேர்த்த இரண்டு அரசியல் கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு என்பது புரிந்தது. முதலிரண்டு அரசியல் கட்டுரைகளும் கையில் எடுத்தவுடன், கீழே வைக்க முடியாமல் படிக்க வைத்தன. முதலாவது "எம்.ஜி.ஆரும் புலிகளும்". விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர் தொடக்க காலத்திலிருந்து எவ்வளவு உதவிகளைச் செய்து வந்துள்ளார் என்று விவரிக்கிறது. எம்.ஜி.ஆர் தனது வீட்டின் சுரங்க அறையிலிருந்து கோடிக்கணக்கில் சூட்கேஸில் பணத்தை எடுத்து பாலசிங்கம் கையில் கொடுத்தது, புலிகள் வாங்கிய ஆயுதத் தளவாடங்களை சென்னைத் துறைமுகத்தில் உள்ளே எடுத்தவர முடியாது இந்திய இராணுவம் பாதுகாக்கும்போது எம்.ஜி.ஆர் தமிழகக் காவல்துறை மூலம் அந்தத் தளவாடங்களை வெளியே எடுத்துக்கொண்டு வந்து புலிகளிடம் கொடுத்தது, பிற ஈழப் போராளிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் புலிகளுக்குக் கொடுத்தது, புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 4.5 கோடிக்கு காசோலை கொடுத்து, பின்னர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு அதைத் தடுத்து நிறுத்த தன் பாதாளச் சுரங்க அறையிலிருந்து நேரடியாக காசாகவே எம்.ஜி.ஆர் அந்தத் தொகையைக் கொடுத்தது என்று பல செய்திகளைத் தெரிவிக்கிறார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழக உளவுத்துறையின் தலைவராக இருந்த மோகன்தாஸ் ஐ.பி.எஸ் மீது புலிகள் எதிர்ப்பாளர் என்றும், அவர் எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் புலிகளுக்கு எதிர்ப்பாக பல செயல்களைச் செய்தார் என்றும் (பிரபாகரனையும், பாலசிங்கத்தையும் வீட்டுக்காவலில் வைத்தது, காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டு போய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியது போன்றவை), எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் தானெழுதிய புத்தகத்தில் (M.G.R: The Man and the Myth, 1991இல் பிரசுரமானது. இப்பொழுது அச்சில் இல்லை) புலிகளைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் பொய்யாக எழுதியிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார். எம்.ஜி.ஆருடன் கருணாநிதியை ஒப்பிட்டு சிறு சாடல், இப்பொழுது இருக்கும் மத்திய அரசின் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் நட்வர் சிங், J.N.தீக்ஷித், M.K.நாராயண் ஆகியோர் மீதான விமரிசனம். ஆக இந்தியாவில் நண்பர்களைச் சேர்க்காவிட்டாலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்ளாமலாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதோ என்ற தோற்றத்தைத் தருகிறது. தொடர்ந்த 'ரஜீவ் - பிரபா சந்திப்பு' என்னும் கட்டுரையில் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தம், தொடர்ந்து பிரபாகரன் மீது கொடுத்த கடுமையான அழுத்தத்தினால் ராஜீவ் காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றையும் விளக்குகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமும் பல இந்திய செய்தித்தாள்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டு விட்டன.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் பிரபாகரனை வற்புறுத்தினர். இந்த ஒப்பந்தப்படி, (அ) வட கிழக்கு மாகாணங்கள் தமிழர், சிங்களர், முஸ்லிம் பகுதிகளாக வாக்கெடுப்பின் படி பிரிக்கப்படும், (ஆ) மாகாண அரசுகளைக் கலைக்கும் உரிமை இலங்கை அதிபருக்கு உண்டு, (இ) புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்பந்தம் கையெழுத்தான 72 மணி நேரங்களில் இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்து விட வேண்டும், (ஈ) புலிகள் வடகிழக்குப் பிராந்தியங்களில் வரியின் மூலம் பணம் சேர்ப்பதையும் விட்டுவிட வேண்டும். இவற்றை பிரபாகரன் எதிர்த்தார். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய காரணத்தால் ராஜீவும் மேற்படி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளன என்றும், அவற்றைக் களைய தான் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் வாய்வார்த்தையால் சொன்னாராம்: (அ) வட கிழக்கு மாகாணப் பிரிவுக்கான கருத்து வாக்கெடுப்பை நடக்கவிடாமல் ஒத்திப்போட வைப்பது, (ஆ) இடைக்கால அரசில் புலிகள் பெரும்பான்மையிலும், இதரப் போராளிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈரோஸ் போராளிகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்குமாறும் ஓர் இரகசிய ஒப்பந்தம், (இ) நல்லெண்ணச் சமிக்ஞையாக சில துருப்பிடித்த ஆயுதங்களை மட்டும் அமைதிப்படையிடம் ஒப்படைத்தால் போதும் ("இந்தியா [எங்களுக்குக்] கொடுத்த ஆயுதங்களெல்லாமே துருப்பிடித்தவைதான்" என்றாராம் பிரபாகரன்), (ஈ) புலிகளின் செலவுக்கென இந்திய அரசு அவர்களுக்கு மாதத்திற்கு இந்திய ரூ. 50 லட்சம் தருவது.
இப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டும், அதை தாளில் எழுதி கையெழுத்திட புலிகள் கேட்டதற்கு ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். Gentlemen agreement ஆக வாய் வார்த்தையோடு இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லிவிட்டனர். பிரபாகரன் பாலசிங்கத்திடம் "அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த இரகசிய ஒப்பந்தமும், வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு (sic) ஏமாற்று வித்தை." என்று விரக்தியோடு சொன்னாராம். அப்படியே நடந்தது என்று முடிக்கிறார் பாலசிங்கம்.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
3 hours ago
No comments:
Post a Comment