Saturday, July 03, 2004

இலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்

[முந்தைய பதிவு]

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்து வளர்ந்த கவிஞர் சு.வில்வரத்தினம் இப்பொழுது திருகோணமலையில் வசித்து வருகிறார். போன மாதம் நான் இலங்கை சென்றிருந்தபோது தமிழ்க் கல்வி, தமிழ்ப் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் ஒரு காலத்தில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலிருந்து சில ஆசிரியர்கள் இலங்கையில் பாடம் சொல்லிக்கொடுக்கப் போயிருந்தனர். அவர்களும், இலங்கையிலேயே இருந்த ஆசிரியர்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் உலகத்தரத்தில் தமிழில் புத்தகங்கள் எழுதியிருந்தனர்.

ஆனால் இடையிலே இலங்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன், இலவசச் சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள் என்று ஆரம்பித்தது தமிழுக்குக் கெடுதலாக அமைந்து விட்டது. அரசு வழங்கிய பாடப் புத்தகங்கள் அனைத்தும் சிங்களத்தில் சிங்கள ஆசிரியர்களால் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை ஆயின. [தமிழ் மொழி போதினி தவிர] ஒன்று கூட தமிழில் எழுதப்படவில்லை. இதனால் தமிழில் பாடப்புத்தகம் எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் பிழைப்பிலும் மண். புதிதாகத் தமிழில் கல்வி புகட்டும் புத்தகங்கள் எதுவும் வரவில்லை.

பரிட்சைக்கான வினாத்தாள்கள் கூட சிங்களத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையே.

உலகவங்கி தமிழ்ப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் தரம் மிகவும் தாழ்ந்துபோயிருப்பதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததாம். அதில் பெருங்காரணமாக தமிழிலேயே உருவாக்காத பாடங்களை - அரைகுறையாக மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை - படிப்பதன் மூலம்தான் என்று கண்டறிந்தனராம்.

இந்த மொழிபெயர்ப்புகளில் பலவகைக் குறைகள் உள்ளன. ஒன்று மொழிபெயர்ப்பில் இலக்கண, எழுத்துப் பிழைகள் இருப்பது. இரண்டாவது சமூகச் சிந்தனைகளை அனைத்திலும் புத்த/சிங்களப் பெரும்பான்மைக் கருத்துகளை முன்வைப்பது. மூன்றாவது, குறித்த நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்குப் போய்ச்சேராமை. நான்காவது தமிழில் சிந்தித்து நேரடியாக எழுதுவது முழுவதுமாகக் குறைந்து, முற்றிலுமாக இல்லாமல் போவது.

---

இதைத் தவிர தமிழ்வழிக் கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது என்று உலக வங்கி கண்டறிந்துள்ளது. பல இடங்களில் தேவையான ஆசிரியர்களில் 55% மட்டும்தான் கிடைக்கின்றனர். உள்நாட்டுப் போர், தேர்ந்த தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவது மட்டும் காரணமில்லை. தமிழில் சரியான உயர்கல்வி கற்பிக்கும் நிலையங்கள் இல்லாததும் காரணமாயிருக்க வேண்டும்.

4 comments:

 1. உண்மை உண்மை அவற்றை விட தமிழ் மொழிப்பாடவிதானக் குழுவில் அநேகம் பேர் முஸ்லிம்கள் இதனை ஒரு இனவாதக் கருத்தாகச் சொல்லவில்லை ஆனாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை தமிழ் இலக்கியத்துக்கு பணியாற்றிய பல தமிழறிஞர் வரலாறுகள் மறைக்கப்பட்டு முஸ்லிம் அறிஞர்களுடைய பெயர் முன்னிலைப்படுத்தப்படுகிறது அநேக கதைகளும் கட்டுரைகளும் முஸ்லிம்களுடைய தமிழ் வழக்குகளிலேயே எழுதப்படுகின்றன தமிழ்ப் பிரதேசத்து மாணவர்கள் நானா வுக்கும் காக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்

  ReplyDelete
 2. தமிழ் வழிக்கல்வியை ஒடுக்குவது இலங்கையரசின் இன அழிப்புக் கொள்கையில் ஒரு முக்கியமான கூறு.

  1.மீன்பிடித்தொழிலை தடைசெய்து தலைசிறந்த கடலோடிகளான ஈழத்தமிழர்களின் கடல் தொழிலையும், கடலின் மீதான அவர்களின் ஆளுமையையும் அழித்தல்

  2.ஏரி, குளங்களின் கரைகளையும், மதகுகளையும், வெடிவைத்து, குண்டுவீசியும் அவர்களது நீராதாரங்களை அழிப்பதன் மூலம் விவசாயத்தையும், குடிநீராதாரங்களையும் அழித்தல், இதன் மூலம் அவர்களை உள்நாட்டினுள்ளேயே நிலமற்றவர்களாக்கி இடம்பெயரச்செய்தல், பிறகு சிங்களக் குடியேற்றங்களைச் செய்தல்

  3. கழனிகளில் கண்ணி வெடிகளை விதைப்பதும், விவசாயத்தை தடை செய்வதன் மூலம் விவசாயத்தை முடக்குதல் (அச்சமயங்களில் மக்கள் தமது குடிசைகளைச் சுற்றி மரவள்ளிக் கிழங்குகளை பயிரிட்டு அதனையே முக்கிய உணவாகக் கொண்டனர்). மீறி வயல் வேளைகளைச் செய்பவர்களின் மீது குண்டுவீசித் தாக்குதல்

  4. பல்வேறு கட்டுப்பாடுகளின் மூலம் வணிக, தொழிற்சாலைகளை முடக்குதல்

  5. தரப்படுத்துதல், தமிழ் வழிக்கல்வியை கட்டுப்படுத்துதல் போன்றவைகள் மூலம் கல்வியை ஒழித்து தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்பட்டு வந்த கல்வியை நசுக்குதல். இதன் உச்சமாகவே யாழ் பல்கலைக்கழக நூலகம் எரியூட்டப்பட்டதும்.

  ReplyDelete
 3. பத்ரி, நான் துவக்கப்பள்ளியில் வாசிக்கும் பொழுது இலங்கையிலிருந்து வந்த "தமிழ் மலர்" என்று தலைப்பிடப்பட்ட தமிழ்ப் பாடப்புத்தகங்கள் என் அப்பாவிடம் இருந்தன (அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர், பிற மாநிலங்களில், இலங்கை, மலேஷியாவில் எப்படி ஆரம்பப்பள்ளிகள் நடக்கின்றன என்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது). அவை மிகவும் தடிமனாக இருக்கும், உள்ளடக்கமும் அச்சும் நேர்த்தியாக இருக்கும். அவற்றின் சில படங்களும் கதைகளும் இன்னும் எனக்கு நினைவிலிருக்கின்றன். - வெங்கட்

  ReplyDelete
 4. It is with the introduction of Tamil and Sinhala as the media of instruction, text books from kindergarten to University Entrance were produced in Tamil and Sinhala by the Education- al Publications Department. There were persons like R.Murigaiyan (Senior Tamil Poet) worked in the Publications Department. There were some good things as well. But, as pointed by Su.Vilvaratnam and Ramaneshan, most books were originally written in Sinhala and translated into Tamil. That, as pointed in onr of the earlier commnents, was a deliberate attempt at destroying Tamil. At the same time, my feeling is that there were educationists among Sinhalese, who were willing take education forward and prepared to change according to times rather than being orthodox/dogmatic in their outlook.

  One of the good things is glossaries in all subjects came into being in both Tamil and Sinhala. That way, Sri Lanka has produced a number of glossaries in Tamil in all the subjects taught in schools and Universitties. If one looks at Tamil glossaries, Sri Lanka has done pretty well compared to Tamil Nadu. I have seen a book on Mozhipeyarppukkalai where a list of Tamil glossaries were given wherein I found a long list Tamil glossaries from Sri Lanka to my delight.

  ReplyDelete