Tuesday, July 13, 2004

நிதிநிலை அறிக்கை 2004 - 3

[முதலாவது | இரண்டாவது]

மாதச் சம்பளக் காரர்கள் முக்கியமாக கவனிப்பது வருமான வரிகள் பற்றித்தான். இந்த பட்ஜெட்டில் வருமான வரிகள் பற்றிய திட்டங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் வருமான வரி ஏய்ப்பு என்பது சர்வசாதாரணமாக இருந்து வருவது. இதில் இரண்டு வகை: ஒன்று - வருமான வரி கட்டும் ஒருவர் முழு வருமானத்தையும் கணக்குக் காட்டாமல், கொஞ்சத்தை மட்டும் காட்டி அதற்கு மட்டும் வரி கட்டுவது. இரண்டாவது - வருமானத்தைக் கணக்குக் காட்டாமல் வரியே கட்டாமல் இருப்பது. இதைத்தவிர வருமான வரி இன்னதென்று ஒத்துக்கொண்டும், அதைக் கட்டாமல் இழுத்தடிப்பது. இப்படி இழுத்தடிப்பவர்களில் பலர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், பெரும் புள்ளிகள். அவ்வப்போது நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் மிக அதிக வரி பாக்கி வைத்திருப்பவர்களில் பட்டியலாக ஒரு நூறு பெயர்களை வெளியிடுவார். அதில் வருபவர்கள் அத்தனை பேருமே மிகவும் பிரபலமானவர்கள்தான். இம்முறை பட்ஜெட்டில் இப்படி 'இழுத்தடிப்பவர்களிடமிருந்து' வசூல் பண்ணியே தீருவது என்று சூளுரைத்துள்ளார் சிதம்பரம்.

ஆனால் மாதச்சம்பளக்காரர்களால் வரியிலிருந்து தப்புவது கடினம். Tax deducted at source (TDS) முறைப்படி, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே சம்பளத்திலிருந்து வரியைப் பிடித்து மாதாமாதம் வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

இந்தியாவில் தனி மனிதர்கள், ஹிந்து கூட்டுக்குடும்பங்கள் ஆகியவற்றுக்கான வரி மிகவும் எளிதானது. சம்பளக்காரர்கள், மொத்தச் சம்பளத்திலிருந்து, கழித்தல்கள் (deductions) போக, வரிக்கான சம்பளத்தைத் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் இதர வருமானத்தைச் (வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டி, சொந்த வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை, பங்குச்சந்தை கேபிடல் கெயின்ஸ் போன்றவை) சேர்க்க வேண்டும். கழிக்க வேண்டிய 'நஷ்டங்களைக்' கழிக்க வேண்டும். இவ்வாறு நஷ்டங்களைக் கழிக்கும்போது மாதச்சம்பளத்திலிருந்து பங்குச்சந்தையில் கிடைத்த நஷ்டத்தைக் கழித்து குறைத்த பணத்தில் வரி கட்ட முடியாது. பங்குச்சந்தை நஷ்டத்தை பங்குச்சந்தை லாபத்திலிருந்து மட்டுமே கழித்துக் கொள்ள முடியும்.

அதன் பின்னர், 10%, 20%, 30% என்று மூன்றே வரி விகிதங்கள். போன வருடம் வரை வரி வருமானம் (taxable income) ரூ. 50,000 வரை இருந்தால் வரி ஏதும் கிடையாது. ரூ. 50,000-60,000 க்கு 10% வரி. ரூ. 60,000-1,50,000 க்கு 20% வரி. ரூ. 1,50,000க்கு மேலுள்ளதற்கு 30% வரி. வருட வரி வருமானம் ரூ. 8,50,000 க்கு மேலிருந்தால் கட்ட வேண்டிய வரியின் மேல் 10% சர்சார்ஜ் அதிகமாகக் கட்ட வேண்டும்.

இந்த பட்ஜெட்டில், இந்த வரம்புகள் தளர்த்தப்படவில்லை. அதாவது ரூ. 50,000 வரை வரி வருமானம் இருந்தால் வரிகள் கிடையாது என்பதில், 50,000 உயர்த்தப்படவில்லை. மாறாக வரம்புகளை மாற்றாமல், வரி வருமானம் ரூ. 1,00,000 வரைக்கும் இருப்பவர்கள் தங்கள் வரிகளைக் கணக்கிட்டபின்னர், அதனை automatic rebate ஆக எடுத்துக்கொண்டு அதைக் கட்டவேண்டியதில்லை. மற்றபடி வரி வருமானம் ரூ. 1,00,000 க்கு மேலிருப்பவர்கள் அனைவரும் போன வருடம் என்ன வரி வந்ததோ அதனையே கட்ட வேண்டும். அதற்கு மேல் இந்த வருடம் 2% கல்வி செஸ் (education cess) சேர்க்கப்படுகிறது.

மற்ற அனைவருக்கும் - கூட்டுறவு நிறுவனங்கள், கம்பெனிகள் - வரி விகிதத்தில் மாற்றமேதுமில்லை. இவர்களுக்கும் education cess உண்டு.

இப்படியாக இந்த கல்வி அதிக வரி மூலம் ரூ. 5,000 கோடிகள் சேரும் என்று சிதம்பரம் எதிர்பார்க்கிறார். இந்தப் பணம் முழுதுமாக தொடக்கக் கல்விக்குப் (மதிய உணவுடன் சேர்த்து) போய்ச்சேரும் என்கிறார். தொடக்கக் கல்வியைக் கொடுப்பது மாநில அரசுகளும், உள்ளாட்சிகளும். எனவே இந்தப் பணம் முழுமையாக மாநில, உள்ளாட்சி அரசுகளுக்குப் போய்ச்சேர வேண்டும்.

இந்த வரித்திட்டத்தில் ஒரேயொரு குளறுபடி உள்ளது. வரி வருமானம் ரூ. 1,00,000 இருந்தால் வரியே கிடையாது. ஆனால் ரூ. 1 அதிகமானாலும் (ரூ. 1,00,001), அவருக்கு ரூ. 9,180 வருமான வரி உண்டு. இதனால் அவர்கள் அந்த ஒரு ரூபாயை எப்பாடுபட்டாவது வரிவிலக்குள்ள ஏதாவது அறக்கட்டளைக்கு நன்கொடையாகக் கொடுத்து விட முற்பட வேண்டும்:-)

இதர வருமானங்களில், பங்குகள் மீதான லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரி இனிமேல் கிடையாது. அதுபற்றியும், பங்குச்சந்தை டர்னோவர் வரி பற்றியும் அடுத்து பார்ப்போம்.

4 comments:

  1. Dear Badri

    Thanks for your clear and simplified overview of the budget facts. Do you have any info on tax on NRE deposits. So far I am seeing only conflicting info on that aspect. With the addition of education cess, let us hope our village schools will atlease see a black board and a roof over. Again it has to be seen how effectively this $1 billion cess is going to be used. What happened to the previous Govt's golden quadrilateral project?

    Regards
    S.Thirumalai

    ReplyDelete
  2. ஒரு லட்சத்திற்கு அங்கே இங்கே கொஞ்சம் தள்ளி இருந்தால் ஜூட் விட்டுக்கலாம்ன்னு பசி சொல்லி இருக்காரே...

    ReplyDelete
  3. திருமலை: NRE டெபாசிட் மேல் வரி உண்டு என்று மட்டும் தெரிகிறது. மேலதிக விவரங்கள் கேட்டுள்ளேன். எனக்கு விவரம் தெரிந்தவுடன் அதுபற்றி எழுதுகிறேன். கல்வி செஸ் - எப்படி பயன்படப்போகிறது என்று பட்ஜெட்டில் சொல்லமுடியாது. ஆனால் எல்லாத்தரப்பிலுமே அரசின் 'delivery'யில் முன்னேற்றம் வேண்டும். 5000 கோடி ரூபாயில் பாதியாவது குழந்தைகளின் கல்விக்குப் போய்ச்சேர்ந்தால் நலமே.

    தங்க நாற்கரத் திட்டத்தில் ஒரு மாறுபாடும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக முடிந்தவரை அந்தப் பெயரை வெளியே இழுக்க மாட்டார்கள். வாஜ்பாயியின் பெயர் மறந்துபோனதும் 'ராஜீவ் காந்தி யோஜனா' என்ற பெயரில் இரண்டு வருடங்கள் கழித்து அதற்கு மறுபெயர் சூட்டப்படும். அதிகமாக நிதி ஒதுக்கீடும் நடக்கும்.

    ReplyDelete
  4. KVR: அதெப்படி அங்கே இங்கே தள்ளி இருந்தால் ஜூட் விடமுடியும். குறைந்திருந்தால் ஒரு தொல்லையும் இல்லை. அதிகமாக இருந்தால் வரி கட்டுவதைத்தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் சிதம்பரம் The Finance (No. 2) Bill, 2004 இல் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

    ReplyDelete