ஜான் ரைட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். [பயிற்சியாளர்களைப் பற்றி நான் தமிழோவியத்தில் எழுதிய கட்டுரை இங்கே]
நேற்று ஜான் ரைட்டின் பிறந்த நாள். ஆசியக் கோப்பைக்காக இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணி இப்பொழுது சென்னையில் பயிற்சி முகாமிட்டுள்ளது. ஜான் ரைட்டின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவருக்கு ஒரு விருந்து கொடுத்தனர். [அப்பொழுது அவர் கேக் வெட்டுமாறு எடுத்த புகைப்படம் இங்கே.]
பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். நியு ஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரராக பல வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய ரைட் பின்னர் நியு ஸிலாந்தின் அணித்தலைவராகவும் இருந்தார். ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இங்கிலாந்தின் கெண்ட் கவுண்டி அணிக்கான பயிற்சியாளராக இருந்தார். அப்பொழுதுதான் ராஹுல் திராவிட் கெண்ட் அணிக்காக விளையாடப் போயிருந்தார்.
பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் ஒருவரைத் தேட ஆரம்பித்தது. அதுவரையில் வடேகர், கபில் தேவ், மதன் லால் என்று உள்ளூர் ஆசாமிகள்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தனர். ஆனால் முதல்முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் தன் தேடுதலை உலக அளவில் நிகழ்த்தியது. ஜான் ரைட், கிரேக் சாப்பல் போன்றோர் விண்ணப்பித்தனர். ஜான் ரைட் தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இந்திய கிரிக்கெட் அணியை முழுவதுமாக மாற்றியமைத்த பெருமை அவருக்கே சேரும்.
சூப்பர் ஸ்டார்கள் பலர் நிறைந்துள்ள, ஆனால் எப்பொழுதுமே திறமைக்குத் தக்கவாறான வெற்றிகளைப் பெறாத இந்திய அணியிடம் பல குறைபாடுகள் இருந்தன. இந்திய ஆடுகளங்களில் ஓட்டங்களைக் குவிப்பார்கள், ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் - ஸிம்பாப்வேயில் கூட - ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறுவார்கள் நம் மட்டையாளர்கள். இந்தியாவிற்குள் சுழற்பந்தினாலும், நொறுங்கும் களத்தின் மேற்பகுதியினாலும் விக்கெட்டுகளைச் சாய்ப்பர், ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்களில் இருபது விக்கெட்டுகளை எடுக்கத் தடுமாறுவார்கள் நம் பந்து வீச்சாளர்கள். வெளிநாடுகளில் வெற்றி பெற என்ன செய்யவேண்டுமென்றே தெரியாத ஓர் உணர்வு நம் அணித்தலைவர்களிடம். வெளிநாடுகளில் வென்ற டெஸ்டுகளின் எண்ணிக்கையை இரண்டு கை விரல்களால் கணக்கிட்டு விடலாம்.
ஆனால் இப்பொழுது கடந்த சில வெளிநாட்டுப் பயணங்களை எடுத்துக் கொள்வோம். உலகக் கோப்பை 2003க்கு முன் சென்ற நியு ஸிலாந்துப் பயணத்தைத் தவிர, மற்ற அத்தனை பயணங்களிலும் ஓர் ஆட்டத்தையாவது வென்றுள்ளோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணங்கள் இரண்டிலும் தொடரைத் தோற்காமல் டிரா செய்துள்ளோம். பாகிஸ்தானுக்கே போய் அங்கு தொடரை வென்றுள்ளோம். இதற்கான முழுப் பெருமையும் ஜான் ரைட்டுக்கும், சவுரவ் கங்குலிக்கும் போய்ச் சேர வேண்டும்.
ஹேப்பி பர்த்டே ஜான் ரைட்!
Pac-Man வீடியோ கேம்
5 hours ago
The man who changed the way Cricket has been played by the Indian Team..Happy belated wishes John :)
ReplyDeleteHi Badri, where are you? waiting for your views on the union budget. :-) regards, PK Sivakumar
ReplyDelete