முதலில் போன வருடம் வரவு செலவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கிடைத்த ஒவ்வொரு ரூபாயிலும்,
* நிறுவனங்கள் மீதான வரி: 16 பைசாஅதாவது செலவுகளை சரிக்கட்ட 24% அளவிற்கு கடன் வாங்க வேண்டிய நிலைமை.
* வருமான வரி: 9 பைசா
* சுங்க வரி: 10 பைசா
* கலால்: 19 பைசா
* மற்ற வரிகள்: 3 பைசா
* வரியல்லா வரவுகள்: 13 பைசா (இதில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பெற்ற டிவிடெண்டுகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே ஆகியவை மத்திய அரசிடம் வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் வட்டி போன்றவை அடங்கும்)
* கடனல்லாது சொத்துக்களை விற்றுக் கிடைத்த பணம் (disinvestment proceeds etc.): 6 பைசா
* வாங்கிய கடன்: 24 பைசா
செலவாக, ஒவ்வொரு ரூபாயிலும் இப்படி ஆகியுள்ளது:
* மத்திய அரசின் திட்டச்செலவு: 16 பைசாபோனவருடம் (2003-04)இல் எங்கெல்லாம் பணம் செலவாகியுள்ளது, எங்கிருந்தெல்லாம் பணம் கிடைத்துள்ளது என்பதற்கான முழு விவரமும் உண்டு. அதை இப்பொழுது தீவிரமாக கவனிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
* இராணுவத்திற்கு: 14 பைசா
* மான்யம் (உதவித்தொகை): 8 பைசா
* திட்டமிடாத செலவுகள்: 11 பைசா
* மாநிலங்களுக்குக் கொடுத்த பங்கு: 15 பைசா (மத்திய அரசு வசூலிக்கும் ஒருசில வரிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கை மாநிலங்களுக்குக் கொடுத்து விடும்)
* திட்டக் கமிஷன் வழியாக அல்லாது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குக் கொடுத்த உதவி: 3 பைசா (சாதாரணமாக வறட்சி நிவாரணம் போன்ற உதவிகள்)
* திட்டக் கமிஷன் வழியாக மாநிலங்களுக்குக் கொடுத்தது: 10 பைசா
* மத்திய அரசு வாங்கிய கடன்களுக்குக் கொடுத்த வட்டி: 23 பைசா
மேலே சொன்னவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது: இப்பொழுது மத்திய அரசு வாங்கும் கடன், ஏற்கனவே வாங்கியிருக்கும் கடனுக்குக் கொடுக்க வேண்டிய வட்டி இரண்டும். கவனமாகப் பார்த்தால், புதிதாக வாங்கும் கடன் ஏற்கனவே வாங்கியிருக்கும் கடன் சுமைக்கு வட்டி கட்டவே சரியாகப் போய்விடுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
மேலோட்டமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்: இப்பொழுது மத்திய, மாநில அரசுகள் போடும் பட்ஜெட்டுகள் எல்லாமே பற்றாக்குறை பட்ஜெட்டுகள்தான். இந்த ஊதாரித்தனம் ஆரம்பமானது 1980களில். பற்றாக்குறை இரண்டு வகைப்படும்: வருவாய்ப் பற்றாக்குறை (Revenue deficit), மொத்த நிதிப் பற்றாக்குறை (fiscal deficit). வருவாய்ப் பற்றாக்குறை என்பது இந்த வருடத்திற்கான செலவுகளை இந்த வருடத்தின் வரவுகளால் சரிக்கட்ட முடியாமல் போவது. எனவே கடன் வாங்கினால்தான் மாதச் செலவுகளையே சரிக்கட்ட முடியும் என்னும் நிலைமை. நிதிப் பற்றாக்குறை என்பது மொத்தச் செலவுகள் - சாதாரண மாதச் செலவுகள், உள்கட்டுமானத்திற்குத் தேவையான செலவுகள் (capital expenditure), திடீரென்று ஏற்படும் அத்தியாவசியச் செலவுகள் - எந்த அளவிற்கு வருமானத்தை விட அதிகமாக உள்ளது என்பது.
உதாரணமாக நம் வாழ்க்கையையே எடுத்துக் கொள்வோம். நம் அன்றாடச் செலவுகளை நம் வருவாய்க்குள் அடக்கவே நாம் முயற்சி செய்கிறோம். அன்றாடச் செலவுகள் என்பது, வீட்டு வாடகை, உணவிற்கான செலவு, பெட்ரோல் செலவு, செய்தித்தாள், தொலைக்காட்சிக்கான கட்டணம், மாத சினிமா பார்க்கும் செலவு, புத்தகங்கள் வாங்கும் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு என்பவை. இவையெல்லாம் revenue expenditure எனப்படும். நம் மாத வருவாய் இந்த அன்றாடச் செலவுகளை விட அதிகமாக இருப்பது revenue surplus. ஆனாலும், வீடு கட்ட, வாகனம் வாங்க என்று பார்த்தால் நம் வருவாய்க்குள் மிச்சம் செய்து சேமித்து வைத்திருக்கும் பணத்தால் முடிவதில்லை. எனவே வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். இது fiscal deficit. இந்த fiscal deficitஐ எப்படி சரிக்கட்டுகிறோம்? நம்மிடம் இருக்கும் revenue surplus மூலமாக மாதாமாதம் கடனை அடைத்து வருகிறோம். இப்படி வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் தவிர வேறு வழியின்றி பிற அத்தியாவசியத்திற்கும் கடன் வாங்க வேண்டியுள்ளது. உதாரணம் உடல்நலக் குறைவு காரணமான மருத்துவச் செலவு, பெண்/பிள்ளை கல்யாணச் செலவு, உலகக்கோப்பை கிரிக்கெட் பார்க்க தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டிய செலவு (:-) என்று பல. இம்மாதிரியான சொத்து சேரா இடங்களிலும் சிலசமயங்களில் fiscal deficit அதிகமாகுமாறு கடன் வாங்க வேண்டியுள்ளது. ஆனால் இந்தக் கடன்களையெல்லாம் அடைக்கக் கூடிய அளவிற்கு revenue surplus இருந்தாக வேண்டும்.
இதையே விடுத்து அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே - அதாவது வீட்டு வாடகையைக் கொடுப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிலைமை என்றால்? திண்டாட்டம்தான். இதுதான் revenue deficit - அதாவது வருவாய்ப் பற்றாக்குறை. இதில் அதிகக் கொடுமை, போன மாதம் வரை வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டவே இந்த மாதம் இன்னமும் கடன் வாங்க வேண்டிய நிலைமை. இந்த நிலைமையில்தான் மத்திய அரசு இருக்கிறது. இதனால்தான் 2003இல் Fiscal Responsibility and Budget Management Act, 2003 என்றொரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மார்ச் 2008இற்குள் (இன்னமும் மூன்று வருடங்களில்) வருவாய்ப் பற்றாக்குறையை பூஜ்யமாக்கவேண்டும். 2002-03 வருடத்தில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 109,765 கோடிகளாக இருந்தது. 2003-04இல், வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 103,710 கோடிகளாக இருந்தது. நடப்பு பட்ஜெட்டில் (2004-05) சிதம்பரம் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 76,380 கோடிகளாக இருக்கும் என்று கணிக்கிறார். போன வருடத்தை விட இந்த வருடத்தில் கிட்டத்தட்ட ரூ. 62,000 கோடிகள் அதிகமாக வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார். அடுத்த வருடம்தான் இந்த "அதிக" வரிகள் வசூலானதா, இல்லையா என்று தெரியவரும்.
மிகவும் பயனுள்ள முறையில் செல்கிறது இந்தத் தொடர். ஆர்வமாகப் படிக்கிறேன்.
ReplyDelete1. முதன் முறையாக இரண்டு பற்றாக்குறைகளுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொண்டேன்.
ReplyDelete2. இந்த எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்று பணம் பார்க்கும் அமைச்சர்களை/அதிகாரிகளை நினைக்கிறேன்.
3. பெரும் தொகையான 28 காசுகளை மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையை மாற்ற மைய அரசு என்ன செய்கிறது?
4. உடனடி நிவாரணம் தவிர மீதி இருக்கும் காசுகள் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவாகப் பகிர்ந்தளிக்கப் படுகின்றனவா?
மத்திய அரசிடமிருந்து மாநில அரசு வாங்கிய கடனுக்கான வட்டி முன்பு எத்தனை சதவீதம் இருந்தது? தற்போது வட்டி எதுவும் தரவேண்டியதில்லைதானே?
ReplyDeleteசுந்தரவடிவேல்: உங்கள் கேள்வி - "பெரும் தொகையான 28 காசுகளை மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையை மாற்ற மைய அரசு என்ன செய்கிறது?"
ReplyDeleteஇதை மாற்ற முடியாது. கூடாது. மத்திய அரசு மாநில அரசுக்குக் கொடுக்கும் தொகை இன்னமும் அதிகமாக வேண்டும். ஏனெனில் மத்திய அரசின் வருமானம் - சுங்கம், கலால், வருமான வரி என்று அதிகமானதாக உள்ளது. ஆனால் செலவுகளைப் பார்க்கையில் - கல்வி, அடிப்படைச் சுகாதாரம், நகரப் பராமரிப்பு என்று மாநிலங்களுக்குத்தான் அதிகச் செலவுகள் உள்ளது. மாநிலங்கள் பெறும் வரியோ சொத்து வரி, விற்பனை வரி என, குறைவானதாக உள்ளது. இதனால் மத்திய அரசு பணத்தை வசூலித்து மாநில அரசுகளுக்குத் தந்தால் ஒழிய மாநில அரசுகளால் குடும்பத்தை நடத்த முடியாது.
ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கும் மேற்படி வரிகளிலிருந்து கிட்டத்தட்ட 29% பங்கை அந்தந்த மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கிறது. (Finance Commissionஇல் முடிவு செய்த விகிதம் இது.) அதைத் தவிர திட்டக் கமிஷன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட அளவு பணம் கிடைக்கிறது.
திட்டக் கமிஷன் பணம் தவிர இந்த பட்ஜெட்டில் சிதம்பரம் 'பின்தங்கிய மாநிலங்களுக்காக' ரூ. 25,000 கோடிகள் கொண்ட புதிய நிதி ஒன்றை உருவாக்கியுள்ளார். எப்படி பின்தங்கிய வகுப்பு மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு உள்ளதோ, அதுபோல பீஹார், வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு & காஷ்மீர் ஆகியவற்றுக்காக அதிக நிதி இந்த பட்ஜெட்டிலிருந்து ஒதுக்கப்படுகிறது.
ரஜினி ராம்கி: மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகள் வாங்கிய கடனுக்கு 'மரியாதையாக' வட்டியும், முதலுமாகத் திருப்பித் தரவேண்டும்:-) இந்த வட்டி விகிதம் கிட்டத்தட்ட சந்தை விகிதத்தை ஒத்துள்ளது. 2002-03 வரை இந்த வட்டி விகிதம் 12.5% ஆக இருந்தது. 2003-04இல் 10.5% ஆகக் குறைந்தது. இந்த பட்ஜெட்டில் - ஏப்ரல் 2004இலிருந்து இந்த விகிதத்தை 9% ஆகக் குறைத்துள்ளார் சிதம்பரம்.
ReplyDeleteமத்திய அரசைப் போலவே கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுமே பற்றாக்குறை பட்ஜெட்டில்தான் ஓடிக்கொண்டுள்ளன. எனவே தன் வருவாய்ச் செலவுகளை கவனிக்கவே (ஊழியர்கள் ஊதியம், பென்ஷன்...) கடன் வாங்க வேண்டிய நிலைமை பல மாநிலங்களுக்கு. இந்த வருடம் 9% வட்டிக்குக் கடன் கிடைக்கும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteரூ. 109,765 கடனை, மக்களிடமிருந்துப்பெற்று, உடனே கடனை அடைத்துவிட்டு, அத்ற்கீடான வட்டியையோ அல்லது சற்று குறைவான வட்டியையோ, மக்களுக்கு லாபமாக வரும் வருடங்களில் கொடுக்க முடியாதா?இது முட்டாள்த்தனமான கேள்வியா என தெரியவில்லை.
கார்திக்: இப்பொழுதுள்ள கடனே மக்களிடம் (தனி மக்களிடமோ, அல்லது இந்திய நிறுவனங்களிடமோ) வாங்கியதுதான்! அதனால் இந்தக் கடனை மீண்டும் மக்களிடம் வாங்கி அடைத்துப் பிரயோசனமில்லை. மத்திய அரசு (1) தன் வருவாயைப் பெருக்க வேண்டும்; (2) தன் அநாவசியச் செலவைக் குறைக்க வேண்டும். அதைச் செய்யும் வரையில் கடன் சுமை ஏறிக்கொண்டேதான் இருக்கும்.
ReplyDeleteஅதைத்தவிர அரசு தொடர்ந்து ஓரளவிற்கு கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்! அரசு வாங்கும் கடன்தான் மிகவும் நம்பகமான கடன். வயதானவர்கள், தன்னிடம் இருக்கும் பணத்தை அரசிடம் வட்டிக்குக் கொடுத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்துப் பிழைக்க நினைக்கிறார்கள். இதற்கெனவே இந்த பட்ஜெட்டில் Senior Citizens Savings Scheme என்றதொரு திட்டத்தை சிதம்பரம் கொண்டுவந்துள்ளார். இன்றைக்கு தேசிய வங்கிகளில் வைப்புக்கு 5.5% வட்டி மட்டுமே கிடைக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் அதிக பட்சமாக 6.5% வரை கிடைக்கலாம். ஆனால் இந்த Senior Citizens Savings Schemeஇல் அரசு வயதானோருக்கு 9% வட்டி கொடுக்கும்.
கடன் வாங்குவது தப்பில்லை. (மேலே சொன்னபடி, சில சமயம் தன் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவாவது கடன் வாங்க வேண்டிய நிலை!) ஆனால் தன் வரவுக்குள் அந்தக் கடனை அடைக்கக்கூடிய நிலைமை வேண்டும்.
பத்ரி, நிதிநிலை அறிக்கை குறித்த உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. சென்ற ஆண்டுகளில் நனி பல்கிவாலாவின் பட்ஜெட் குறித்த விரிவான அறிக்கைகளைப் படித்திருக்கிறீர்களா ? இப்போது அது போல் யாரேனும் விரிவாய் அலசுகிறார்களா என்று தெரியவில்லை.
ReplyDeleteDear Badri, I am sorry. Just found that the comment I posted yesterday was by mistake removed by something I clicked on. This is what I posted yesterday. The series on budget is very good. When I requested you to write about the Union Budget I did not expect you would do it with such devotion and details. You describe everything in a simple language. I have read it many times. Kudos and Keep it up. I am for the transaction tax for securities and stocks. However, Mr.PC told today that he will relook into it. I hope he does not change it. Thanks, PK Sivakumar
ReplyDeleteசெல்வராஜ்: பால்கிவாலா போல வேறு யாராவது செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் பட்ஜெட்டைத் தொடர்ந்து பலர் தங்களால் முடிந்த அளவிற்கு விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சென்னையில், வியாழன் அன்று Tamil Nadu Small Investors Forum ஒரு கூட்டத்தை ஏற்பாடி செய்துள்ளது. அதற்குப் போய்விட்டு வந்து அங்கு என்ன சொல்கிறார்கள் என்று எழுதுகிறேன். மற்றபடி பொதுச்செலவுகள் வட்ட மேசையிலிருந்து ஏதாவது கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் அதற்கும் முடிந்தவரை போவேன்.
ReplyDeleteசிவா: சிதம்பரம் எதையும் விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். டர்னோவர் டாக்ஸ் ஒருவேளை 0.15% என்பதிலிருந்து குறைந்து 0.1% ஆகலாம். அவ்வளவே. மற்றபடி பங்குகளுக்கும், கடன்பத்திரங்கள், டெரிவேடிவ்ஸ் ஆகியவற்றுக்கும் வேறுபாட்டைக் கொண்டுவந்து பங்குகளுக்கு அதிகமாகவும், மற்றவற்றுக்குக் குறைவாகவும் டர்னோவர் வரியை வசூலிக்கலாம். விவரங்களில் வித்தியாசம் இருக்கலாமே ஒழிய கொள்கையளவில் டர்னோவர் வரி சரியாகத்தான் தோன்றுகிறது.
ReplyDelete