Sunday, July 04, 2004

குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி

நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் நடத்திய குறும்பட/ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (4-7-2004, ஞாயிறு) சென்னை நடிகர் சங்க வளாகம் மினி தியேட்டர், ஹபிபுல்லா ரோடில் நடைபெற்றது. மாலை 6.00 மணிக்குத் துவங்க வேண்டிய கூட்டம் 6.30 மணியளவில் தொடங்கி மிகச்சுருக்கமாக, ஆனால் நிறைவாக 7.15 மணியளவில் நடந்து முடிந்தது.

சிறிய அரங்கம். கிட்டத்தட்ட 150 பேர்கள் உள்ளே உட்கார முடியும் என்று நினைக்கிறேன். பாதியாவது நிரம்புமா என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே உட்கார முடியாத அளவிற்குக் கூட்டம் இருந்தது. விழா அமைப்பாளர்கள் கிடைத்த இடத்திலெல்லாம் நாற்காலிகளைப் போட்டும், கூட்டம் கட்டுக்கடங்காமல் வாசல் கதவைத் திறந்து கொண்டு நின்றிருந்தது.

வெளி ரங்கராஜன்
வெளி ரங்கராஜன்
குறும்பட/ஆவணப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்கள் அனைத்தையும் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுப்பதில் உதவி செய்த வெளி ரங்கராஜனும், 'நிழல்' திருநாவுக்கரசும் இந்த பரிசளிப்பு விழாவினை திறம்பட நடத்தினர். நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் சார்பில் முருகானந்தம் வந்திருந்தார். ரங்கராஜனது மிகச் சுருக்கமான முன்னுரைக்குப் பின்னர், முருகானந்தம் நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் பற்றிப் பேசினார்.
முருகானந்தம்
முருகானந்தம்
சிந்தனை வட்டம் வெறும் கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்கு மட்டும் இடம் தராமல் தீர்க்கமாக ஏதேனும் செய்ய விரும்பியது என்று சொன்னவர் தாங்கள் செய்தவற்றில் முக்கியமானவையாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டார்: ஜெயகாந்தனது சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது (எஸ்.ராமகிருஷ்ணன் அதற்கு உதவியதாகக் குறிப்பிட்டார்), அம்ஷன் குமார் இயக்கத்தில் சுப்ரமண்ய பாரதியைப் பற்றிய ஓர் ஆவணப்படம் தயாரித்தது, மேற்சொன்ன குறும்பட/ஆவணப்பட விழாவினை நடத்தியது.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்
சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் 'ஊரெங்கும் இப்படி ஒரு வட்டம் இருக்கலாமே என்று தோன்றுகிறது' என்றார். "குறும்படங்கள் பார்ப்பதற்கு ரசனையோடு கூட, திறமையும் வேண்டும். முழுநீள கேளிக்கைப் படங்கள் பார்ப்பதற்கு வெறும் ரசனை மட்டுமே போதுமானது. குறும்படங்கள் சிறியவையாயிருக்கின்றதே என்று அதில் விஷயம் அதிகமிருக்காது என்று நினைத்துவிடக் கூடாது. சிறுகதைகள் போலவே, குறும்படங்களில்தான் மிக ஆழமான விஷயங்களும் இருக்கின்றன. நான் பார்த்த பல சிறந்த இந்திய மொழிக் குறும்படங்கள் போல தமிழிலும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். இது குற்றம் சொல்வதல்ல, ஆர்வத்தினால் சொல்வது. இந்த விழாவில் திரையிடப்பட்ட படங்கள் அனைத்தையும் - ஒன்றிரண்டு தவிர - பார்த்திருக்கிறேன். அவை மீது எனக்கு நிறையக் கருத்துகள் உள்ளன. ஆனால் அவற்றை இங்கு விமரிசனம் செய்வது என் நோக்கமல்ல. இந்தக் குறும்படங்களை எடுத்தவர்களே தங்கள் படைப்புகளை விமரிசித்துக் கொண்டு, இப்பொழுது செய்வதை விடத் திறமையாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். மற்றபடி இங்கு நான் வந்திருப்பது உங்களுடன் கூட நான் இருக்கிறேன், ஆதரவாக, சார்பாக, நீங்கள் மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ஒரு சஹ்ருதயனாய் சொல்ல வந்திருக்கிறேன்." என்று சுருக்கமாகவும், ஆழமாகவும் பேசி முடித்தார் ஜெயகாந்தன்.

தொடர்ந்து தமிழில் புதிய படங்களுக்கான சூழல் என்ற தலைப்பில் தியோடர் பாஸ்கரன், அம்ஷன் குமார், புவனா ஆகியோர் பேசினர்.

தியோடர் பாஸ்கரன்
தியோடர் பாஸ்கரன்
தியோடர் பாஸ்கரன் பேசுகையில் 'உன்னதமான படைப்பு உருவாக வேண்டுமானால் உன்னதமான பார்வையாளர்கள் தேவை' என்று ஒரு பிரெஞ்சு அறிஞர் சொன்னதை எடுத்துக்காட்டினார். குறும்படம் எடுப்பது, அடுத்து முழுநீளப்படம் எடுப்பதற்கான முதல் படி என்று எண்ணக் கூடாது. குறும்படங்களை வெறும் புலனளவில் மட்டும் அணுகாது சிந்தனை அளவிலும் அணுக வேண்டும். சினிமாவை வெறும் கேளிக்கைதானே என்று நினைக்கும் அணுகுமுறைதான் கீழ்த்தரமான, சிந்தனையைத் தூண்டாத படங்களை முன்னுக்கு வைக்கிறது. அந்த அணுகுமுறை மாற வேண்டும் என்றார்.

அம்ஷன் குமார்
அம்ஷன் குமார்
அடுத்து பேசிய அம்ஷன் குமார் இப்பொழுது நிறைய ஆவணப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடக்கின்றன என்றார். இவற்றைப் பற்றி பத்திரிகைகளும் எழுத ஆரம்பித்து விட்டன. ஆனால் முக்கியமாக தொலைக்காட்சி சானல்கள் கண்டு கொள்வதேயில்லை. அவ்வப்போது அதையும் மீறி ஓரிரு ஆவணப்படங்களோ, குறும்படங்களோ தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அதுவும் வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதில்லை என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் உண்மையில் வர்த்தக ரீதியில் இவை வெற்றிபெறுவதை தொலைக்காட்சிகள் விரும்புவதில்லை. இரண்டு நாண்களுக்கு முன்னர் செய்தித்தாள்களில் ஒரு சிறிய செய்தி வந்திருந்தது. சீனாவில், பீஜிங்கில் நடக்க இருக்கும் ஒரு திரைப்பட விழாவில் தமிழிலிருந்து ஆறு படங்கள் அனுப்பப்படுகின்றனவாம். என்ன படங்கள்? திருடா திருடி, தூள், கில்லி, இன்னமும் வேறெதோ படங்கள். வர்த்தக ரீதியில் உள்ள படங்களைத்தான் அனுப்புகின்றனராம். அனுப்பிவிட்டுப் போகட்டும்.... 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்று அனைவர் மீதும் நாம் பார்க்கும் படங்களையே திணிக்கின்றனர். ஆனால் சீனாவில் உள்ளவர்கள் இந்தப் படங்களை விரும்புவாரா? அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. நேரு திரைப்படங்களுக்கான பரிசுகள்/விருதுகளைத் தொடங்கும்போது நல்ல படங்கள், யாராலும் கவனிக்கப்படாத படங்கள் ஆகியவற்றை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகச் செய்தார். ஆனால் இப்பொழுது வர்த்தகப் படங்களுக்குத்தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதல்ல நேருவின் நோக்கம். 1950களில் ரஷ்யாவிலிருந்து புடோகின்(?) என்றொரு ரஷ்ய திரைப்பட இயக்குனர் இந்தியா வந்திருந்தார். அவருக்கு இந்தியப் படங்களைப் பார்க்க ஆசையாயிருந்தது. பல படங்களை அவருக்குக் காண்பித்தனர். அவர் அத்தனை படங்களையும் பார்த்து விட்டு, இவையெல்லாம் இந்தியாவில் எடுத்த படங்கள், ஆனால் இந்தியப் படங்கள் அல்ல என்றார். பின்னர் நிமாய் கோஷ் (Nemai Ghosh) என்ற வங்காளி எடுத்திருந்த 'சின்னாமுல்' (Chinnamul) என்ற படத்தை அவருக்குக் காண்பித்தனர். படம் பார்க்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே அவர் எழுந்திருந்து, இதுதான் இந்தியப் படம் என்று கோஷைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். பின்னர், ரஷ்யா சென்றதும், சின்னாமுல்லை அங்கு திரையிட வைத்தார். இந்தியாவில் எத்தனை பிரிண்டுகள் போனதோ தெரியாது, ஆனால் ரஷ்யாவில் 140 பிரிண்டுகள் போட்டனர்.

நல்ல தரமான படங்களுக்கு இந்தியாவில் சந்தையை ஏற்படுத்த வேண்டும் என்று முடித்தார் அம்ஷன் குமார். சிந்தனை வட்டத்துடன் தனக்குள்ள தொடர்பு, சுப்ரமண்ய பாரதி பற்றி தான் இயக்கிய குறும்படம் பற்றியும் பேசினார்.

புவனா
புவனா
புவனா - ஆயிஷா என்னும் படத்தின் தயாரிப்பாளர் - அடுத்து பேசினார். தான் படம் தயாரிக்க வந்தபோது ஒழுங்காக நல்ல பணம் பண்ணுவதை விட்டுவிட்டு குறும்படம் தயாரிக்கிறேன் என்று போகாதே என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் ஒன்றைச் செய்யாதே எனும்போதுதான் அதைச் செய்வேன் என்ற எண்ணம் கொண்டவள் நான். ஆயிஷாவுக்குப் பிறகு இப்பொழுது இன்னுமொரு குறும்படம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளேன். [ஆயிஷா கணையாழியில் வந்த ஆர்.நடராஜன் என்பவர் எழுதிய சிறுகதையைப் படமாக்கியது. இயக்குநர் சிவகுமார்.] இப்பொழுது என்னுடைய முக்கிய நோக்கமே எப்படி நல்ல குறும்படங்கள் தயாரித்து, அதே நேரத்தில் போட்ட பணத்தை எடுப்பது என்பதே. குறும்படங்கள் எடுப்பவர்கள், நல்ல சினிமாவில் நாட்டம் கொண்டவர்கள் அனைவரும், ஈகோவை விடுத்து ஒன்றாக இணைந்து ஒரு சங்கம் உருவாக்கி நல்ல படங்கள் மக்களிடம் போகுமாறு - அதே நேரத்தில் போட்ட பணம் கிடைக்குமாறும் - செய்யவேண்டும். அரசிடமோ, அமைச்சகங்களிடமோ சென்று இதற்குத் தேவையான சலுகைகள் கிடைக்குமாறு போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்து நியூ ஜெர்சி படவிழாவில் காண்பிக்கப்பட்ட அனைத்துப் படங்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழா நிறைவாக மேடையில் அமர்ந்திருந்தோருக்கு முருகானந்தம் பரிசுகளை வழங்கினார்.

கூட்டம் அதிகமான காரணத்தால் நெரிசலாலும், வீடியோ எடுப்பவர்கள் பலர் வழியில் தங்கள் கருவிகளை வைத்திருந்ததாலும், சான்றிதழ்கள் அதிவேகமாக வழங்கப்பட்டதாலும் அவற்றைப் படமாகப் பிடிக்க முடியவில்லை.

3 comments:

  1. Hi Badri, Thanks a lot again for this post. :-) Regards, PK Sivakumar

    ReplyDelete
  2. Dear badri,
    Awesome work! Great coverage of the whole programme...
    Thanks a lot for a wonderful job.

    ReplyDelete